வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:37 (12/07/2018)

விருப்பப் பாடத்தை தேர்வு செய்ய 3 வழிகள்! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

மெயின் தேர்வுகள் ஸ்பெஷல் - (பகுதி 4)  

விருப்பப் பாடங்கள் (Optional subjects):  

டி.என்.பி.எஸ்.சி

பொதுப் பாடங்களுக்கு அடுத்தபடியாக, யு.பி.எஸ்.சி தேர்வில் 500 மதிப்பெண்களுடன் முக்கிய அங்கம் வகிக்கிறது விருப்பப் பாடங்கள். இந்த விருப்பப்பாடங்களை 'விருப்பத்துக்கு' தேர்ந்தெடுத்துவிட்டு, அதனாலேயே வீழ்ந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். உரிய கவனமின்றி விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் காரணமாகவே தேர்வில் பின்னடைவை சந்தித்தவர்களின் வரிசையில் எனக்கும் இடமுண்டு. யு.பி.எஸ்.சி தேர்வில் என்னுடைய முதல் முயற்சியில் மருத்துவம் படித்த ஒரே காரணத்தால் மருத்துவத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அனாட்டமி, பயோ கெமிஸ்ட்ரி, ஃபிஸியாலஜி, பாத்தாலஜி, ஃபார்மகாலஜி, மைக்ரோ பையாலஜி உள்ளிட்ட 15 மிகப் பெரிய பாடங்களைக் கொண்டது மருத்துவம். அதை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துவிட்டு தேர்வுக்குப் படிக்கும் பெரும்பாலான நேரத்தை இந்தப் பாடங்களை படிக்கவே செலவிட நேர்ந்தது. பொதுப் பாடங்களைப் படிக்க சரியான முறையில் நேரத்தினை ஒதுக்க முடியவில்லை. முதல் முயற்சியில் எழுதிய தேர்வில் தோற்றும் போனேன். தோற்ற பிறகுதான் சிந்திக்க முடிந்தது. `` இந்தத் தேர்வு சோதனைக்கான தேர்வு அல்ல, இருக்கும் வாய்ப்புகளை யார் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அதிகம் சோதிக்கும் தேர்வு" என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பொது நிர்வாகம்  (public administration) என்று ஒரு விருப்பப் பாடம் உள்ளது. முதல் தாளில் 12 சிறிய தலைப்புகள், இரண்டாம் தாளில் 12 சிறிய தலைப்புகள். அடுத்த முயற்சியில் அதை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்தேன். மொத்த பாடங்களையும் மூன்றே மாதத்தில் படித்தும் முடித்தேன். மருத்துவம் போன்ற மிகப் பெரிய பாடத்தைத் தேர்வு செய்துவிட்டு, பிற மருத்துவர்கள் அதுவும் முதுகலைப் பட்டம் பெற்ற மருத்துவர்களோடு போட்டி போட்டு அந்தப் பாடத்துக்கு அதிக நேரம் ஒதுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதைவிட எளிதான ஒரு பாடத்தைத் தேர்வு செய்து நேரத்தை மிச்சம் பிடித்து, மற்ற பாடங்களில் அதிகக் கவனம் செலுத்தி, விருப்பப்பாடத்தையும் பலமுறை ரிவைஸ் செய்து வெற்றி பெறுவதே புத்திசாலித்தனம். 

விருப்பப்பாடத்தைத் தேர்ந்தெடுக்க 3 எளிய கேள்விகள்: 

தேர்ந்தெடுக்கும் விருப்பப்பாடம் எளிதானதாக, குறைந்த பகுதிகளைக் கொண்டதாக உள்ளதா ?
அந்த பாடம் நமக்கு பிடித்ததாக , விருப்பமுள்ளதாக இருக்கிறதா ?
விருப்பப் பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் வழிகாட்டல்கள் எளிதில் கிடைக்கக்கூடியதாக உள்ளனவா? 

இந்த மூன்று கேள்விகளுக்கும் 'ஆம்'  என்று எந்தப் பாடம் உங்களைச் சொல்ல வைக்கிறதோ, அதுதான் உங்கள் விருப்பப்பாடம். 
விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்தபின், முதலில் அதன் பாடத் திட்டத்தை (Syllabus) நன்றாகப் பார்க்க வேண்டும். முதல் தாள், இரண்டாம் தாள் என எடுத்து ஆராய்ந்துப் பார்த்தால் பெரும்பாலான விருப்பப் பாடங்களில் ஒவ்வொரு தாளுக்கும் சுமார் 120 முதல் 150 தலைப்புகள்தான் இருக்கும். அந்த 120- 150 வரை உள்ள தலைப்புகளை ஒவ்வொன்றாக ஒரு பேப்பர் எடுத்து பட்டியலிட்டு முதலில் தலைப்புகள் அனைத்தையும் மனதில் பதியவைத்துக் கொள்வது நல்ல பயன்களைத் தரும். அதன்பின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு தலைப்பாக எடுத்து ஒவ்வொரு தலைப்புக்கும் 15-20 முக்கிய பாயிண்டுகளாக எடுத்துக்கொள்ளுங்கள். மெயின் தேர்வில் 20, 50, 75, 100, 150, 200, 250, 300 என எவ்வளவு வார்த்தைகளில் கேள்விகள் அமைந்தாலும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த 15-20 பாயிண்டுகளில் இருந்து சமாளிக்கும் வண்ணம் அந்தத் தலைப்பைப் பற்றி நன்கு படித்து குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் தலைப்புக்குப் படங்கள் தேவை என்றால் அதையும் குறிப்புகளுடன் வரைந்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படியே 120-150 தலைப்புகளுக்கும் முதல் தாளுக்கு ஒரு நோட், இரண்டாவது தாளுக்கு ஒரு நோட் என்று குறிப்பெடுத்து தயாராக வேண்டும். அப்படிச் செய்து வந்தால் மெயின் தேர்வுக்கு முன்தினம் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் குறிப்புகள் உள்ள இரண்டு நோட்டுகளை மட்டும் தொடர்ந்து நினைவூட்டல் (revision) செய்து தேர்வில் மதிப்பெண்களை அள்ளலாம். 

மெயின் தேர்வில் வெற்றி பெறுவதற்கு மேலே குறிப்பிட்டதுபோல படிக்கும் முறை எவ்வளவு முக்கியமோ அதேபோல், எழுத்துப்பயிற்சி மிக முக்கியம். அந்த எழுத்துப் பயிற்சியினைப் பெறுவதற்குக் குறிப்புகள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. அதாவது 50 வார்த்தைகளில் ஒரு பத்தி என 150 வார்த்தைகளில் பதிலளிக்கும் கேள்விகளுக்கு 3 பாராக்களில் பதிலளிக்க வேண்டும். அதில், முதல் பாரா என்பது அறிமுகம், இரண்டாவது பாராவில் முக்கிய சாராம்சத்தைத் தொகுத்து வழங்க வேண்டும். மூன்றாவது பாரா என்பது நிறைவுப் பகுதி எனப் பிரித்து எழுத சரியான எழுத்துப் பயிற்சி இருந்தால் மட்டுமே முடியும். ஆக, உங்கள் குறிப்புகளின் எண்ணிக்கை வளர வளர உங்கள் எழுத்து முறையும் முன்னேற்றம் அடையும். அதேபோல் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தாளினை முடிக்க வேண்டுமானால், 3 மணி நேரத்தில் சுமார் 3000- 3500 வார்த்தைகளை எழுத வேண்டியிருக்கும். இதையெல்லாம் கணக்கிட்டு வீட்டிலேயே விடைகளை எழுதிப்பார்த்தால் தேர்வில் குழப்பமின்றி வார்த்தை விதிகளையும் கடைப்பிடித்து சரியான விடைகளை சிறப்பாக எழுதலாம். ஆக, முதன்மைத் தேர்வைவிட மெயின் தேர்வு சுலபமானது, மெயின் தேர்வைவிட நேர்முகத்தேர்வு எளிமையானது. நேர்முகத் தேர்வு பற்றிய விளக்கங்கள், தயாராகும் வழிமுறைகள் குறித்து அடுத்தப் பகுதியில் பார்க்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க