ஸ்பெஷல் -1
Published:Updated:

மாயண்ணன் வந்திருக்காக... மலைப்பாம்பு வந்திருக்காக..!

செ.சல்மான், படங்கள்: பா.காளிமுத்து

ஒரு கிராமத்துக்கு அங்காளி - பங்காளி, மாமன் - மச்சான் என உறவினர்கள் விசிட் அடித்தால் பரவாயில்லை. கூட்டம் கூட்டமாக மலைப்பாம்புகள் படையெடுத்தால்..?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டியைச் சுற்றி மலைகளின் கீழே கிடக்கும் கிராம மக்கள் தினமும் மலைப்பாம்புகளோடு மல்லுக்கட்டுகிறார்கள்.  

சில நாட்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் மணப்பசேரி விலக்கு பகுதிக்குள் மூன்று மலைப்பாம்புகள் ஊர்ந்துசெல்வதை பொதுமக்கள் பார்த்திருக்கிறார்கள். தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் சொல்லி அவர்கள் வருவதற்குள், ஒரு குட்டி மலைப்பாம்பு எங்கேயோ ஒளிந்துகொண்டது. பொதுமக்களே திரண்டு இரண்டு பாம்புகளைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கொட்டாம்பட்டியில் இருந்து உதினிப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைய, அதைப் பிடித்து போலீஸிடம் (!) ஒப்படைத்திருக்கிறார்கள். பிடிபட்ட பாம்புகளை அடர்ந்த மலைப்பகுதிக்குள் கொண்டுபோய் விடுவது வனத் துறையினர் வழக்கம்.

மதுரையில் இருந்து சென்னை செல்லும் நான்கு வழிச் சாலையில், தும்பைப்பட்டி வழியாகப் பிரிந்துசெல்லும் கிராமச்சாலையில் சென்றால், அட்டபட்டி, பூதமங்கலம், கச்சிராயன்பட்டி, வஞ்சிநகரம், குன்னங்குடிபட்டி, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, நாகமங்கலம் என அடுத்தடுத்து வருகின்றன பல கிராமங்கள். கொட்டாம்பட்டியைச் சுற்றி 2,000 ஹெக்டேர் பரப்பளவில் எங்கெங்கும் காடு. தூரத்தில் மலைத்தொடரும், வயலும், கண்மாய்களுமாக பிரதேசமே குளிருக்கு இதமாய் பச்சைப் போர்வை போத்திப் படுத்திருக்கிறது.  

மாயண்ணன் வந்திருக்காக... மலைப்பாம்பு வந்திருக்காக..!

பாம்புகளின் படையெடுப்பு பற்றி பூதமங்கலம் ஊராட்சித் தலைவர் ஜரீனாவின் கணவர் சிக்கந்தர் பேசினார்... ''சுத்தி இருக்கிறது எல்லாமே வறண்ட மலைகள். அங்க எலி, முயல்னு பாம்புகளுக்குத் தீனி கிடைக்கிறது இல்லை. பசி வந்தா பாவம் அதுங்க என்னதான் பண்ணும்? ஊருக்குள் வந்து கோழி, பூனை, ஆட்டுக்குட்டியைச் சாப்பிடுதுங்க. அதனால நாங்க யாரும் அதுங்களை அடிக்கிறது இல்லை. இதுல கொடுமை என்னன்னா, சில பாம்புங்க தன்னைவிட பல மடங்கு பெரிய ஆடு ஒண்ணை முழுங்கிட்டு, செரிக்க முடியாம திக்கித் திணறிட்டு இருக்கும். அப்போ நாங்க அந்த ஆட்டைப் பிடிச்சு வெளியே இழுத்துப்போட்டு பாம்பு உசிரைக் காப்பாத்துவோம். ஆனா, இதுவரை மனுஷங்களை, குழந்தைகளை பாம்பு எந்தத் தொந்தரவும் பண்ணலை. மழைக் காலத்துல நிறையப் பாம்புங்க வரும். மலை மேல இருந்து அடிச்சுட்டு வர்ற தண்ணியில வந்து புதரில் ஒதுங்கும். அப்புறம் மெதுவா ஊருக்குள் வரும். விஷப் பாம்புன்னா கொத்தும்னு பயப்படலாம். இந்தப் பாம்புங்க அப்புராணி. ஒரு இடத்துல சாதுவா சுருண்டுகிடக்கும். இல்லேனா, ஏதாவது ஆடு கோழியை முழுங்கி ஜீரணம் ஆகாமக் கிடக்கும். முதலில் பாம்புகளைப் பார்த்ததும் பயமா இருந்துச்சு. ஆனா, இப்போ பரிதாபம் வருது. ஆரம்பத்தில் ஃபாரஸ்ட்காரங்க வந்து பாம்புகளைப் பிடிச்சுட்டுப்போவாங்க. இப்போ நாங்களே பாம்பு பிடிக்கப் பழகிட்டோம். மறுநாள் வந்து ஃபாரஸ்ட்காரங்க வாங்கிக் கொண்டுபோய் மலையில் விட்ருவாங்க!'' என்கிறார் சகஜமாக.

மாயண்ணன் வந்திருக்காக... மலைப்பாம்பு வந்திருக்காக..!

குன்னங்குடிபட்டியில் ஆடு மேய்க்கும் சின்னத்தம்பி, கிராமத்தினருக்கே உரித்தான குபீர் கதை சொல்கிறார்... ''மலை மேலே மலையாண்டி சாமி இருக்கார்ங்கிறது ஊர் மக்கள் நம்பிக்கை. அவர்தான் இப்படி மலைப்பாம்பு வடிவத்தில் ஊருக்குள் வர்றாருங்க. இது அந்தக் காலத்தில் ஊர் மக்களுக்கு முனிவர் கொடுத்த சாபம்னு சொல்றாங்க. அதனால 'ஊரைக் காப்பாத்து சாமி’னு அவருக்கு பொங்கல் வெச்சு வேண்டிக்கிட்டோம். என்ன ஒரே கஷ்டம்... மத்த ஊர்க்காரங்க மாதிரி ஆடுகளை மேயவிட்டு நாம ஓரமா ஒதுங்கி உக்காந்துட முடியாது. சுத்திச் சுத்தி வந்து கவனமாப் பார்க்கணும். இல்லைனா, மலையாண்டி ஆட்டை ஆட்டையைப் போட்ருவார்!'' என்கிறார்

அதே ஊரைச் சேர்ந்த சுகந்தி 'அம்மா’க்களின் அவஸ்தையைச் சொல்கிறார்... ''பாம்பு மனுஷங்களை ஒண்ணும் பண்றது இல்லைதான். ஆனா, குழந்தைகளைப் பிடிச்சுக்கிட்டா என்ன பண்றது? வேலையை முடிச்சுட்டு காட்டு வழியா வீட்டுக்கு வரும்போது திக்திக்னு இருக்கும். வயல் வேலை பார்க்கும்போது மரத்தில் தொட்டில் கட்டி குழந்தைகளைத் தூங்கவைக்கப் பயமா இருக்கு. ராத்திரி எங்கேயும் தனியாப் போயிட்டு வர முடியலை. ஆனா, இதுக்கு யாரை நொந்துக்கிட்டு என்ன பண்ண? பாம்புங்க மலையைவிட்டு இறங்கி வர்றதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும்? அதான் நாங்க அதுங்களை அனுசரிச்சு வாழப் பழகிட்டோம்!'' என்கிறார் சலிப்பும் பரிவுமான குரலில்.

அந்த 'மலையாண்டி’தான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்!

மாயண்ணன் வந்திருக்காக... மலைப்பாம்பு வந்திருக்காக..!

''மலைப் பாம்புகளுக்கு பயப்பட வேண்டாம்!''

இந்தப் பிரச்னை குறித்து 'நேதாஜி பாம்பு பாதுகாப்பு அறக்கட்டளை’யைச் சேர்ந்த ரமேஷிடம் பேசினோம்...

''பாம்புகள் மனிதர்களுக்குத் தீங்கு செய்யாது. அது ஒதுங்கிச் செல்லுமே தவிர, தேடி வந்து கடிக்காது. நாமதான் பயந்துட்டு பாம்புகளை அடிச்சுக் கொல்றோம். மேலூர் வட்டாரத்தில் மலைப்பாம்புகள் மழைக் காலத்தில்தான் ஊருக்குள் வருது. அதுக்குக் காரணம் தட்பவெப்ப மாறுதல்தான். வயல் எலி, முயல்னு பிடிச்சுச் சாப்பிட்டு அந்தப் பாம்புகள் விவசாயி களுக்கு நல்லதுதான் பண்ணுது. இதுல முக்கியமான விஷயம்... மலைப்பாம்பு எப்பவும் ஓர் உயிரினத்தை முழுங்கினதும் சாப்பிடாது. சின்னச் சின்ன உயிரினங் களை முழுங்கி, அப்படியே வெச்சிருக்கும். அந்த உயிரின் இதயத் துடிப்பு நின்ன பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்கும். அதுக்குள்ள அவசரப்பட்டு பாம்பு வயித்துக்குள்ள இருந்து எதையும் இழுத்துப் போட்டுர வேண்டாம். அடர்ந்த வனம், மலைப் பகுதிகளில்தான் மலைப்பாம்புகள் வாழும்னு நினைக்கிறது தப்பு. தட்பவெப்பம் செட் ஆச்சுன்னா, எந்த இடத்திலும் அவை வசிக்கும். அந்தப் பாம்புகளால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை'' என்கிறார்!