ஸ்பெஷல் -1
Published:Updated:

அவர் அப்படித்தான்!

செழியன்

திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகும் ஆசையுடன் நான் ஒரு கோடைகாலத்தில் சென்னைக்கு வந்தேன். வந்த புதிதில் நண்பர் குமாருடன் திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டியிருந்த அவரது வீட்டில் தங்கியிருந்தேன். குமார், எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்கான தனியார் அலுவலகத்தில் பணியில் இருந்தபடி, நடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தார். நானும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்ததால், இரவு வெகுநேரம் வரை இருவரும் சினிமாக்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.

அப்படி ஒருநாள் இரவுப் பேச்சின் நடுவே, 'செழியன்... உங்கள என் அங்கிள்கிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணிவைக்கிறேன்...’ என்று சொன்னார். அவர் சொன்ன அங்கிள் இயக்குநர் ருத்ரய்யா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த வாரத்தில் நான் அவசரமாக சிவகங்கைக்குக் கிளம்பவேண்டி இருந்தது. கிளம்பும்போது, 'எய்ட்ஸ் குறித்த விழிப்புஉணர்வுப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருகிறீர்களா?’ என்று குமார் கேட்டார். அது எனக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தியாக இருந்தது. ஊருக்கு வந்ததும் திரைக்கதையை ஒரு வாரத்தில் எழுதி ஷாட்டெல்லாம் பிரித்து ஒரு ஷூட்டிங் ஸ்கிரிப்ட்போல அனுப்பிவைத்தேன்.

அதற்கு அடுத்த வாரம் சென்னை திரும்பியதும் 'செழியன்... நீங்க அனுப்புன ஸ்கிரிப்ட்டை மாமாகிட்ட குடுத்தேன். படிச்சுட்டு நல்லாயிருக்குனு சொன்னார். உங்களைப் பாக்கணும்னு சொன்னார்.’

'சாரைப் பாக்கணுமே...'

'பொறுங்க ரெண்டு நாள்ல தலைவரே நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார்.'

அவர் அப்படித்தான்!

இரண்டு நாட்கள் கழித்து ஓர் இரவு. குமார், பைக்கில் அவரை வீட்டுக்கு அழைத்துவந்தார். வேட்டி கட்டி, கை மடித்துவிடப்பட்ட சட்டையுடன் அவர் வண்டியில் இருந்து இறங்குவதை பால்கனியில் இருந்து பார்த்தேன். திரைப்பட ஆசை வந்த பிறகு நான் பார்க்கப்போகிற முதல் திரைப்படப் பிரபலம். சிரித்துக்கொண்டே கைகொடுத்தார். கொஞ்ச நேரம் என்ன செய்வதெனத் தெரியாத மௌனம்.

' 'அவள் அப்படித்தான்’ ரொம்பப் பிரமாதமான படம் சார்.’

'தேங்க்ஸ்.’

படம் பற்றி மேலும் பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. அமைதியாக இருந்தேன்.

கடல் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது

'மாப்ள...’

குமார் இரண்டு பியர் பாட்டில்களை எடுத்து வைத்தார்.

'நீங்க குமாருக்கு எழுதி அனுப்பிச்ச கதையைப் படிச்சேன். ஒரு கதையா நீங்க எழுதுனது ஓ.கே. ஆனா அதை ஒரு நல்ல ஸ்கிரிப்ட்னு சொல்ல மாட்டேன். எதுக்கு அத்தனை க்ளோஸப். அத்தனை ட்ரக் இன்... ஜூம் இன். சினிமாங்கிறது காட்சி மொழி இல்லையா? வார்த்தை வார்த்தையா ஏன் கதை சொல்லணும்? காட்சி காட்சியாத்தான் சொல்லணும். போட்டோகிராபி உங்களுக்குத் தெரியுமா செழியன்?’

'போட்டோ எடுக்கத் தெரியும். அவ்வளவுதான் சார்.'

'முறையா போட்டோகிராபி கத்துக்கங்க... நாளைக்கு இன்ஸ்டிட்யூட் போவோம். நான் அப்ளிக்கேஷன் வாங்கித் தர்றேன். சினிமாட்டோகிராபி ஸீட் வாங்கிரலாம். புக்ஸ் எல்லாம் படிப்பீங்கனு குமார் சொன்னான். நிறையப் படிக்கணும்... படிங்க. சினிமா எங்கேயும் போயிறாது. இங்கதான் இருக்கும். லிட்ரேச்சர் படிச்சுட்டு சினிமாட்டோகிராபியும் கத்துட்டு வாங்க. அப்புறம் நீங்கதான் ராஜா... உங்களை யாரும் அசைக்க முடியாது.'

இரண்டு நாட்களில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் அழைத்துப்போய் ஒளிப்பதிவில் சேர்வதற்கான விண்ணப்பம் வாங்கிக் கொடுத்தார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்த சூழலில், திரும்பவும் படிப்பது சாத்தியமாகவில்லை. எனவே, என் திரைப்பட ஆசைகளை முறையான  தொழில்நுட்பத்துடன் சந்திப்பதுதான் சரி என்கிற தெளிவு  ருத்ரய்யாவின் சந்திப்புக்குப் பிறகுதான் எனக்குத் தோன்றியது. உதவி இயக்குநர் ஆசையை விட்டுவிட்டேன். அரைகுறையாகத் தெரிந்த போட்டோகிராபியை இன்னும் ஆழமாகக் கற்றுக்கொண்டு சென்னை வரலாம் என சிவகங்கை திரும்பினேன்.

திரும்பவும் ஐந்து வருடங்கள் கழித்துதான் சென்னை வந்தேன். ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமுடன் எனது முறையான திரைப்பட வாழ்க்கை தொடங்கிவிட்டது. அப்போது ஒருமுறை  சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குமாருடன் அவரைப் பார்த்தேன்.

'என்ன செழியன்... பி.சி-கிட்ட இருக்கீங்களாமே. வெரிகுட். நாம மீட் பண்ணுவோம்... கூப்பிடுறேன்'’ என தோளைத் தொட்டார்.

திரைப்படத்தின் டிஸ்ஸால்வ்போல வருடங்கள், சூழல்கள், பருவங்கள், நொடிகளில் கடந்துசெல்கின்றன. ஒருநாள் கைபேசியில் அழைத்தார்.

'செழியன், நாம மீட் பண்ணணுமே...'

இரவு 7 மணிக்கு சென்னை லைட்ஹவுஸ் அருகில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. அவர் சொன்ன இடத்துக்கு நான் வந்தபோது, கடந்து செல்லும் வாகனங்களின் மஞ்சள் ஒளியில் வெள்ளைச்சட்டையும் வேட்டியும் அணிந்த ருத்ரய்யா சாலையோரம் நின்று கைகாட்டினார்.

ஒன்பதாவது மாடியின் மேல்தளத்துக்கு வந்தோம். கடல் காற்றும் அந்த ஏகாந்தமும் அற்புதமாக இருந்தது. ஒரு நாற்காலி தனியே கிடந்தது. இன்னோர் இரும்பு நாற்காலியைத் தூக்கி வந்தார். 'சார் குடுங்க...’ என்று வாங்கி தனியே இருந்த நாற்காலியின் எதிரில் போட்டேன். 'இருங்க வந்துர்றேன்’ என்று சொல்லிவிட்டு இருளில் நடந்தார்.

நான் மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் ஓரம் நின்று, கடற்கரைச் சாலையைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான ஒளிப்புள்ளிகள் நகர்ந்துகொண்டிருந்தன. கலங்கரை விளக்கத்தின் ஒளி என்னைத் தொட்டு அந்தக் கட்டடத்தின் மேல்தளத்தைத் தடவிக் கடந்து சென்றது. முதல்முறையாக கலங்கரை விளக்கத்தின் ஒளி இவ்வளவு அருகில் கடந்துசெல்வதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். மாநகரத்தின் இருளை வாசிக்கும் ஒற்றைக்கண் போல, அந்த ஒளி வானத்தில் நகர்ந்து சென்றுகொண்டிருந்தது.

'இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு சார்...'

'பல நேரங்கள் இங்கதான் வந்து தனியா உக்காந்துருவேன்...' எனச் சொல்லும்போது ஒரு வேலைக்காரச் சிறுமி கையில் சில்வர் பாத்திரத்துடன் வந்தது. 'குடுப்பா' என வாங்கி அந்தச் சிறுமியை அனுப்பிவிட்டு தேநீரை ஊற்றினார்.

'சார் குடுங்க...' என்று சொல்கையில் 'இருக்கட்டும் செழியன்...' எனச் சொல்லி அவரே ஊற்றிக் கொடுத்தார். தேநீர் அருந்தும்போது தலை சாய்த்துக் கீழே பார்த்து கண்களை அடிக்கடி இமைத்துக்கொண்டிருந்தார். கதை சொல்லத் தயாராகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். கலங்கரை விளக்கத்தின் ஒளி, அவர் முகத்தின் ஒரு பாதியை மஞ்சளாக வெளிச்சமிட்டு நகர்ந்தது.

'ஒரு சப்ஜெக்ட் செழியன்...'

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கிற கதை. முதல் காட்சியை அவர் விவரிக்கிறபோது சில நொடிகளில் அது நிஜக் காட்சியாக மலரும் விதம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. களங்களும் நுட்பமான மனித உணர்வுகளும் மாறிச் செல்லும் கதை. கதையின் சில இடங்களைச் சொல்லும்போது அவர் கண்கள் பனிப்பதை, கடந்துசெல்லும் வெளிச்சத்தில் பார்த்தேன். 30 நிமிடங்களில் சொல்லி முடித்துவிட்டு, இன்னொரு ஐடியா என அதையும் அடுத்த 30 நிமிடங்களுக்குள் சொல்லி முடித்தார்.

'சப்ஜெக்ட் எப்படி இருக்கு செழியன்... ஓல்டா இல்லையே..?'

'இல்ல சார்.'

'இல்ல... இப்ப கரன்ட்ல இருக்கது மாதிரி இருக்கா? ஏன்னா நான் படம் பண்ணி 35 வருஷம் ஆச்சு.'

'கரன்ட் என்ன சார்... 'அவள் அப்படித்தான்’ இப்பவும் கரன்ட்ல இருக்கிறது மாதிரிதான் சார் இருக்கு. ரெண்டு கதைகளுமே ரொம்ப நல்லாயிருக்கு சார்.'

பிறகு பிரபலமான இளம் நடிகர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவர் இருந்தா நல்லா இருக்கும் என்றார். அவரை எப்படி அணுகுவது என்று பேசினோம்.

'திரும்பக் கேக்குறேன்னு நினைக்காதீங்க. இந்த சப்ஜெக்ட் ஓல்டா இல்லையே..?'

'நிச்சயமா இல்ல சார்.'

'நானும் 35 வருஷமாப் போராடுறேன் செழியன்.பிடிவாதமா இருந்துட்டேன். இனிமே பண்றதை சாதாரணமாப் பண்ண முடியாது. நிறையப் படிக்கிறேன்... எழுதுறேன். முதல்ல சொன்ன கதைக்கு ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. முதல்ல சொன்னதுக்கு மூணு கோடி போதும். ரெண்டாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன்கிறதால 3D-யில் பண்ணணும். பெரிய பட்ஜெட். அதுதான் கமல்கிட்ட பேசியிருக்கேன். பாசிட்டிவாதான் இருக்கு.'

'சார், முதல் கதையை உடனே பண்ணலாம் சார்.'

'நல்ல புரொடியூசர் வேணும் செழியன். உங்களுக்கு யாராவது தெரியுமா?'

'இருக்காங்க சார்... பேசலாம். ஆனா, அவங்களுக்கு இந்தக் கதை புரியணுமே சார். காமெடி கதைதான் எல்லாரும் கேக்குறாங்க.'

'ப்ச்... அதுதாங்க இங்க பிரச்னை.'

'உங்க மேல அபிமானம் இருக்கிற நண்பர்கள் யாராவது வந்தாங்கன்னா, ரொம்பக் கம்மியான பட்ஜெட்ல டிஜிட்டல்ல பண்ணிடலாம் சார்.'

'இருக்காங்க... பேசிட்டுத்தான் இருக்கேன். இந்த வருஷம் நாம எப்படியும் பண்ணிடணுங்க.'

'பண்ணிடலாம் சார்.’

அமைதியாக இருந்தார்.

'சார்... பசங்கல்லாம் நல்லா இருக்காங்களா சார்..?'

'நல்லா இருக்காங்க. பையன் ஒர்க் பண்றான்.பொண்ணு கனடால படிக்குறா. நல்ல பசங்க செழியன்... அவங்கதான் என்னை இப்ப சப்போர்ட் பண்றாங்க. டைவர்ஸ் ஆனது உங்களுக்குத் தெரியும்ல... குமார் சொன்னானா?'

'ஆமா சார்.'

அமைதியாக இருந்தார். தலை சாய்த்து கதை சொல்வதற்கு முன் இருந்ததைப் போன்ற மனநிலை.

அவர் அப்படித்தான்!

'இடையில நிறைய நடந்துருச்சு செழியன். என் மேல நிறையத் தவறுகள் இருக்கு. ஆனாக்கூட இருந்தவரைக்கும் என்னையை அப்படிப் பாத்துக்கிட்டாங்க. இத்தனை வருஷத்துல ஒரு வேலைகூட நான் செஞ்சது இல்ல; இங்க இருக்க டம்ளரைக்கூட நான் இப்படி நகர்த்திவெச்சது இல்ல.'

அமைதியாக இருந்தார். வெளிச்சம் அவர் முகத்தைக் கடந்துசெல்லும்போது, அவர் கண்களின் ஓரங்கள் மினுங்குவதைப் பார்த்தேன். கண்களைத் துடைத்துக்கொண்டார். எழுந்து இரண்டு அடிகள் நடந்து நின்றார்; நானும் நின்றேன்.

வெளிச்சம் வெற்று நாற்காலிகளின் மேல் கடந்துசென்றது.

'11.30 ஆயிருச்சுங்க...'

'ஆமா சார்.'

கீழ்த்தளம் வந்து காரில் அவரை அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.

'சார்... 'அவள் அப்படித்தான்’ படத்தை இப்ப இருக்க ரெண்டு பேரை வெச்சு ரீமேக் செய்யலாமா சார்..?' பிரபலமான இரண்டு இளம் நடிகர்களின்  பெயர்களையும் சொன்னேன்.

'ஏங்க அந்த ரெண்டு கதைகள் உங்களுக்குப் புடிக்கலையா..?'

'இல்ல சார்... நீங்க சொன்ன கதை ரொம்ப நல்லாயிருக்கு. 'கோடார்ட்’ படம் மாதிரி இருக்கு சார். ஆனா, இவங்க எல்லாருக்கும் காதல் கதைதானே சார் தேவைப்படுது... அதான்.'

அது குறித்து சில நிமிடங்கள் பேசினோம். 'இனிமே காதல் கதையெல்லாம் பண்ண முடியாதுங்க. லெஃப்ட்ல போங்க. இந்த ரெண்டு ஸ்க்ரிப்ட் இருக்குல்ல... இதைப் பண்ணினாப் போதும் செழியன்.'

நள்ளிரவின் அமைதி. இருவரும் பேசவில்லை.

'இங்க இறங்கிறேன்...’

காரை நிறுத்தினேன்.

'நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க... நானும் பாக்குறேன். கிடைச்சா பாக்கலாம். இல்லைன்னா அதுக்காக என்னங்க செய்ய முடியும்? சோத்தைத் தின்னே சாக வேண்டியதுதான்.'

சில நொடிகள் அமைதியாக இருந்தவர், காரைத் திறந்து இறங்கினார். நான் கைகாட்ட, அவரும் கைகாட்டினார்.

கண்ணாடியின் வழியே பின்நகர்ந்து மறையும் முகம். பிறகெல்லாம் இருள். ஆட்களற்ற சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு உடல் நடுங்கிவிட்டது. திரைப்பட வாழ்க்கை குறித்த பயமும் கடுமையான அவநம்பிக்கையும் முதல்முறையாக மனதை அழுத்த, என் கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன.

நல்ல சினிமாவே யாரும் எடுப்பது இல்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அதை நம் அருகில் இருந்து எடுத்த ஒருவரை, அடுத்த படம் எடுக்கவிடாமல் 35 வருடங்கள் காக்கவைக்கிறோம்.

'புதிய அலை’ சினிமா இயக்கம் தொடங்கியபோது பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல் ஜனரஞ்சகமான மர்மப் படங்களை எடுத்து, அதில் இருந்து வருகிற பணத்தை தனது சகாக்களான கோடார்ட், த்ரூபோவிடம் படம் தயாரிக்கக் கொடுத்திருக்கிறார். 'நான் இதுமாதிரிப் படங்கள் எடுத்துப் பணம் தருகிறேன். நீங்கள் எந்தச் சமரசமும் இல்லாமல் விரும்பிய மாதிரி படத்தை எடுங்கள்' என்று. நம்மில் ஒருவர்கூட அப்படி இல்லையே... ஏன்?

அதற்குப் பிறகு அவரிடம் பேசிய விஷயங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல குமாரும் நானும் சந்தித்தோம். மூன்று கோடிக்கான தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டே இருந்தோம். இந்த வாரம் ஒருநாள் இரவு கைபேசியில் குறுஞ்செய்தியை குமார்தான் அனுப்பியிருந்தார்.

uncle is no more..

தமிழில் முக்கியமான கலை ஆளுமைகள் யார் மறைந்தாலும், அது இயற்கையான மரணமாக எனக்குத் தெரியாது. அது ஒரு கொலையாகத்தான் தெரியும். வாழும் காலத்தில் எந்தக் கவனிப்பும் இருக்காது. அவர்களது பங்களிப்பு குறித்து குறைந்தபட்சக் கவனிப்புகள்கூட இருக்காது. மலினமான விஷயங்கள் தொடர்ந்து வெளிச்சம் பெறுவதையும் வெற்றி அடைவதையும் அவர்கள் பார்க்கவேண்டியிருக்கும். புறக்கணிப்பின் வலியும், லௌகீக வாழ்க்கையின் தோல்விகளும் மௌனமாகப் பின்தொடரும். தன் படைப்புக்காக அடைந்த பெருமையெல்லாம் போய், 'ஏன்டா இதைச் செய்தோம்... செய்திருக்கக் கூடாதோ?’ என்று வருந்தவைக்கும்.

அந்த வகையில் தமிழின் பெருமைக்குரிய இன்னோர் ஆசிரியரைக் கொலைசெய்து விட்டோம்!