ஸ்பெஷல் -1
Published:Updated:

பாண்டிய நாட்டில் பான் கேக்!

அ.பார்வதி, படங்கள்: பா.காளிமுத்து.

துரை பை பாஸ் ரோடு, வெள்ளிக்கிழமை சந்தை. 'தக்காளி... வெண்டைக்காய்... கீரேய்ய்ய்...’ குரல்களுக்கு இடையே, 'பான் கேக்ஸ்... பான் கேக்ஸ்... ஜஸ்ட் ட்வென்ட்டீ ருப்பீஸ்... பான் கேக்ஸ்!’ எனக் குரல்கள். நாலு 'அந்நியர்’கள் ஒரு டப்பாவைக் கவிழ்த்து போளி போன்ற ஒரு வஸ்துவை விற்றுக்கொண்டிருந்தார்கள். விசாரித்தால், ''நாங்க குரோஷியாவில் இருந்து இந்தியாவுக்கு டூர் வந்தோம். மதுரையில் ரெண்டு மாசம் தங்கியிருந்து, சின்ன சந்துகூட விடாம சுத்திப் பார்த்தோம். இந்த ஊரும் மக்களும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. திரும்பிப் போறதுக்கு முன்னாடி மதுரைக்கு 'தேங்க்ஸ் கிவ்விங்’ பண்ணணும்னு நினைச்சோம். மதுரையில் இட்லி எப்படி பிரபலமோ, அதேமாதிரி எங்க நாட்டில் பான் கேக் பிரபலம். அதான் ஒருநாள் மதுரை மக்களுக்கு பான் கேக் வித்து எங்க நன்றியை வெளிப்படுத்தினோம்!'' எனச் சிரிக்கிறார் ஹன்னா.

வெவ்வேறு பின்னணிகொண்ட அந்த நால்வரும், இந்தியச் சுற்றுலாவுக்காக இணைந்திருக்கிறார்கள். மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துத் தங்கியிருக்கிறார்கள்.  

பாண்டிய நாட்டில் பான் கேக்!

''மதுரையில் எல்லா கோயிலுக்கும் போயிட்டோம். அடுத்து பெங்களூரு, கேரளா, கோவானு பிளான். எங்க நாட்டில் ஆறு மாசம் வேலைபார்ப்போம். அப்போ சேர்த்த பணத்தை வெச்சுக்கிட்டு மிச்ச ஆறு மாசம் செலவு  செய்வோம். ஆசைப்பட்ட ஊருக்கு, நாட்டுக்குப் போவோம். அப்படித்தான் இந்தியா வந்தோம். ஆனா, இந்த ஊர்ல எல்லாரும் வருஷம் முழுக்க உழைக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கு!'' என்கிறார் ஆண்ட்ரியா. குரோஷியாவில் மொழிபெயர்ப்பாளராக வேலைபார்க்கும் இவருக்கு டர்கிஷ், ரஷ்யன், ஆங்கிலம்... மூன்று மொழிகளும் அத்துபடி.

'ஆறு மாசம் வேலை... ஆறு மாசம் லீவா!’ என்ற நமது ஆச்சர்யம் அவர்களுக்குப் புரியவே இல்லை. ''எதுக்கு வேலைபார்க்கிறோம்... சம்பாதிச்சு ஆசைப்பட்ட மாதிரி வாழத்தானே. நாங்க வாழ்றோம்!'' என்கிறார் ஜென் தத்துவம்போல, ஆண்ட்ரியா.  

''குரோஷியா ரொம்பச் சின்ன நாடு. ஆனா, அங்கே ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் இருக்கு. உலகத்தின் சுவையான காபி, குரோஷியாவில்தான் கிடைக்கும். இந்தியாவில் டீக்கடை மாதிரி அங்கே காபி பார்கள். அப்புறம் சாக்லேட் ரொம்ப விசேஷம். உருளைக்கிழங்கை விதவிதமா சமைப்போம். மத்தி மீன் எங்க நாட்டுல அட்டகாசமா இருக்கும். அங்கே வந்தா நீங்க இதெல்லாம் நிச்சயமா சாப்பிடணும்'' என குரோஷியா புகழ் பாடும் டின், பொருளாதார வல்லுநர்.

பாண்டிய நாட்டில் பான் கேக்!

''இந்தியா பத்தி என்ன நினைக்கிறீங்க?'' என்று கேட்டதும் நால்வரும் தங்களுக்குள் விவாதித்தனர். பிறகு, நால்வரின் சார்பாக பேசினார் டீ பென்ஸ்.

''இந்திய மக்கள் கடினமான உழைப்பாளிகள். இடைவேளையே இல்லாமல் உழைச்சுட்டே இருக்காங்க. ஒரே ஒரு இட்லி கடை நடத்தி மொத்தக் குடும்பத்தையும் காப்பாத்துறாங்க. பெரிய கூட்டுக்குடும்பம், ஒருவனுக்கு ஒருத்தி, குடும்ப சென்டிமென்ட்... இதெல்லாம் எங்க நாட்டுல நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. கேட்டா சிரிப்பீங்க... இந்தியாவின் டிராஃபிக் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன்னா, பார்க்க ரொம்ப கிரேஸியா இருக்கு. குறுக்கும் நெடுக்கும் வண்டி போயிட்டே இருக்கு. கார்ல போனா ஏதோ வீடியோ கேம் விளையாடுற மாதிரி த்ரில்லிங் கிடைக்குது. அப்புறம் இந்தியர்கள் யார்கிட்டபேசினாலும் தலையை ஆட்டி ஆட்டிப் பேசுறாங்க. ஒவ்வொருத் தரும் எப்படி தலை யாட்டிப் பேசுறாங்கனு பார்க்கிறது எங்களுக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. இந்தியப் பெண்கள் அவங்களுக்குள் நிறைய உதவி பண்ணிக்கிறாங்க. பெண்கள் இவ்ளோ பாசமா இருக்கிறது எங்களுக்கு ரொம்பவே ஆச்சர்யம்.

பாண்டிய நாட்டில் பான் கேக்!

சினிமா ஹீரோக்களை தெய்வம் மாதிரி கொண்டாடுறீங்க. அது என்ன படம்? 'கத்தி... கத்தி’. அந்தப் பட ஹீரோ கட்-அவுட்டுக்கு  பாலாபிஷேகம், பட்டாசுனு கலாட்டா பண்ணிட்டாங்க. நேரடிப் பழக்கம் இல்லாத ஒருத்தர் மேல அந்த அளவுக்குப் பாசம் காட்ட முடியும்னு எங்களால யோசிக்கக்கூட முடியலை.

ஓ.கே... நல்லது நிறைய சொல்லிட்டோம். இப்போ கொஞ்சம் நெகட்டிவ்ஸ். ஊருக்குள்ள எங்கே பார்த்தாலும் ஆடு, மாடு, நாய்கள் சுத்திட்டே இருக்கு. அதிகாலையில் தெரு ஸ்பீக்கர்ல சாமி பாட்டு போட்டு எழுப்பிவிட்டுர்றாங்க. கொசு, தூசி, ரோட்டுல மழைத்தண்ணி, குப்பை... இதுக்கு மத்தியில் எப்படி வாழ்றாங்கனு எங்களுக்கு செம ஷாக். இதுதான் எங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது. ஆனா, இதெல்லாம் ஈஸியா மாத்தக்கூடிய பிரச்னைகள். இந்திய மக்களின் அன்பை வேற எந்த நாட்டுலயும் பார்க்க முடியாது. அதனால இவ்ளோ பிரச்னைகள் இருந்தாலும், வீ லவ் இந்தியா!''