Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

சோனியாவுக்குத் தெரியாத ரகசியம்!

##~##

''கருணாநிதி ஆட்சிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?''

 ''கருணாநிதி ஆட்சியில், ஜெயேந்திரர் சுதந்திரமாக இருப்பார். ஜெயலலிதா ஆட்சியில், நித்யானந்தா சுதந்திரமாக இருப்பார்!''

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

''புரிந்துணர்வு ஒப்பந்தம், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் என்ன?''

''முதலாவது, நேரடியாக 6,000 பேருக்கும் மறைமுகமாக 3,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி, பல பேர் வேலைவாய்ப்புகளுக்கு ஆப்பு வைப்பது. இரண்டாவது, தனக்கு வேண்டாதவர்கள் யாரோ அடித்த ஆப்பைப் பிடுங்கிவிடக் கோரி மன்றாடுவது!''

- பாலசுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

 ''காங்கிரஸின் பலம் என்ன என்று உள்ளாட்சித் தேர்தலில் தெரிந்துவிடுமா?''

''காங்கிரஸின் பலம் என்ன என்று எப்போதோ மக்களுக்குத் தெரியும். சென்ற தேர்தலிலேயே தங்கபாலுவுக்கு, காங்கிரஸின் பலம் தெரிந்திருக்கும். தெரிய வேண்டியது  சோனியாவுக்கும் ராகுலுக்கும் மட்டும்தான். உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் அதுவும் தெரிந்துவிடும்!''

- எஸ்.அமுதராஜ், பட்டுக்கோட்டை.

நானே கேள்வி... நானே பதில்!

 ''இந்த உள்ளாட்சித் தேர்தலில் விசித்திரம் என்ன?''

'' 'எந்த அரசியல் கட்சியும் கூட்டணி அமைக்கக் கூடாது. தனித்தனியாக நின்றால் தான் அதன் பலன் தெரியும்’ என்று கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து சொல்லி வருபவர் விஜயகாந்த். இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் என்று பெரும்பாலான கட்சிகள் தனித்து நிற்கின்றன. ஆனால், 'தனியே... தன்னந்தனியே’ ராகம் பாடிய விஜயகாந்த் மட்டும், சி.பி.எம். உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதுதான் விசித்திரம்!''

- ஃபாத்திமா, சேலம்.

''கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் கருணாநிதி - ஜெயலலிதா இருவருக்கும் என்ன வித்தியாசம்?''

''தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்களுக்கு கலைஞரின் இதயத்திலாவது இடம் கிடைக்கும். ஜெயலலிதாவிடம் அதுவும் கிடைக்காது!''

- பிருந்தா சுந்தரம், சென்னை-26.

'' 'எதிர்காலத்தில்கூட தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எகிறிக் குதிக்கிறாரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?''

''முதலில் காங்கிரஸுக்கு எதிர்காலம் என்று ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன?''

- தீ.அசோகன், சென்னை-19.

நானே கேள்வி... நானே பதில்!