என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

பாண்டிபஜார் சாட் காம்!

இர.ப்ரீத்திபடங்கள் : என்.விவேக்

##~##

சின்னத்திரை நட்சத்திரங்களின்  தீபாவளி ஷாப்பிங்?! தென்றல் சீரியலின் 'புஜ்ஜிமா’ தேவி கிருபாவிடம் விசாரித்தால், ''ஆயுசு ஐநூறு... நாளைக்குத்தான் எங்க குரூப் மொத்தமும்  தீபாவளி பர்ச்சேஸுக்குப் போறோம்! நீங்களும் ஜோதியில ஐக்கியமாகுங்க!'' என்று அழைப்பு விடுத்தார்.

 'இதயம்’ சுதா, 'தங்கம்’ ஸ்ரீதேவி, 'சன் மியூஸிக்’ அஞ்சனா, மணிமேகலை அண்ட் தேவி கிருபாதான் அந்த ஜோதி! இவர்கள் சென்று இறங்கிய இடம்... பரபர பாண்டி பஜார்!

ஸ்ரீதேவியைப் பார்த்ததும் ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து, ''அக்கா நீங்க தங்கம் சீரியல்ல நடிக்கிற ரமாதானே... ரொம்ப அழகா இருக்கீங்க!'' என்றதும் ஸ்ரீதேவி முகத்தில் ஜில் ஜிலீர் பரவசம். அந்தச் சிறுவன் முதுகில் ஸ்ரீதேவி பெருமிதமாகத் தட்டிக்கொடுக்க, ''அடப்போக்கா... உன்னைப் பத்தி இவ்ளோ சொல்றேன். துட்டு வெட்ட மாட்டேங்குறியே?'' என்று அதட்டலாகக் கேட்க, ''என்ன பேசணும்னு சொல்லிக் கொடுத்தவ... நாலு பேர் முன்னாடி துட்டு கேட்கக் கூடாதுனு சொல்லித் தரலையா?'' என்று சுதா செமத்தியாக வாரிவிட, ஆயிரம் வாட்ஸ் பல்பு அணைந்த பிரதேசம் போல இருண்டுபோனது ஸ்ரீதேவி முகம்.

பாண்டிபஜார் சாட் காம்!
பாண்டிபஜார் சாட் காம்!

''ஹே... பாசீசீசீசீ!'' என்று பாசி விற்றுக்கொண்டு இருந்தவரை நோக்கி உற்சாகமாக ஓடினார் அஞ்சனா. பாசி விலையைக் கேட்டதும், ''அண்ணா, இதுக்கு பதினஞ்சு ரூபாய்க்கு மேல கொடுக்க முடியாது. கம்மி பண்ணிச் சொல்லுங்க'' என்று பேரத்தை ஆரம்பித்தார். ''ண்ணா... அதான் அந்தப் பிள்ள கெஞ்சுதுல. பார்த்து போட்டுக்கொடேன். ரொம்பத்தான் ஸீன் போடுற'' என்று தேவி கிருபா லோக்கல் ஸ்லாங்கில் எகிற, ''பாக்க ஷோக்காகீற... ஆனா, சொர்ணாக்கா கணக்கா டபாய்க்கிறியேம்மா!'' என்று அரண்டு மிரண்டு பாசியைக் கொடுத்தார் பார்ட்டி.

''இது பரவாயில்லை. போன தடவை நானும் தேவி கிருபாவும் பர்ச்சேஸ் பண்ணப் போயிருந்தோம்.  இவங் களைப் பார்த்துட்டு வளையல் கடைக்கார அக்கா 'புஜ்ஜிமா எப்படிமா இருக்க’னு பாசமா கேட்டாங்க. இவங்க 'அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. அந்த மயில் கழுத்து கலர் வளையல் எடுத்துக் கொடேன்’னு அசால்ட்டா  சொன்னதும் அவங்க மிரண்டுட் டாங்க!'' என்று மணிமேகலை சொன்னதும், ''ஐய்யே... அதுக்கு இப்ப இன்னான்றே?'' என்று இன்னும் லோக்கல் பாஷையில் கவுன்டர் கொடுத்துக் கலகலக்க வைத்தார் தேவி கிருபா.

பாண்டிபஜார் சாட் காம்!

டாப்ஸ் விற்கும் கடைக்கு ஷிஃப்ட் ஆனது கூட்டம். ''நீங்கதானே போன் பண்ணி எல்லாத்தையும் கலாய்ப்பீங்க. ஒரே விலை 420. உங்க தெய்வாம்சமான முகத் துக்காக 200-க்குத் தர்றேன்'' என்று கடைக்காரர் அஞ்சனா விடம் டாப்ஸை நீட்ட, ''என்னை நீங்க கலாய்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங்... அப்படி இல்லைதானே?'' என்று அஞ்சனா கெஞ்சும் குரலில் கேட்க, ''கண்டுபிடிச்சிட்டிங்களே... புத்திசாலி மேடம் நீங்க!'' என்று சிரித்தார் கடைக்காரர். ''ஹே... ஆக்சுவலா அவர் முதல்ல கலாய்க்கலை. இப்பதான் புத்திசாலின்னு சொல்லிக் கலாய்க்கிறார்!'' என்று சுதா சொல்ல, ''ஹே... தொப்பி தொப்பி!'' என்று கோரஸ் பாடினார்கள் மற்றவர்கள்.

பாண்டிபஜார் சாட் காம்!
பாண்டிபஜார் சாட் காம்!

அலம்பலும் சலம்பலுமாக பர்ச்சேஸ் படலம் ஒரு வழியாக நிறைவுக் கட்டத்தை நெருங்கியது. அந்தச் சமயம், ''யம்மா ஆட்டோ வேணுமா?'' என்று வாலன்டரி யாக வந்து சிக்கினார் ஆட்டோ டிரைவர் ஒருவர். பர்ஸைத் திறந்து பார்த்து தேடுவது மாதிரி பாவ்லா காட்டிய அஞ்சனா, ''ஆட்டோ வாங்குற அளவுக்குப் பணம் எடுத்துட்டு வரலையே? ஃபர்ஸ்ட் டெஸ்ட் டிரைவ் பார்த்துடலாம்!'' என்று ஆட்டோ வில் தாவி ஏற, தடதடவென ஃபுட்போர்ட் அடித்தார்கள் மற்றவர்கள். ''இது ரேஸ் ஆட்டோ... சும்மா 100-ல பறக்கும். பார்க்குறீங்களா?'' என்று ஆட்டோக்காரர் உதார் விட்டுக் கிளப்ப, ''அண்ணா... அவரா நீங்க?'' என்றபடியே மணிமேகலை எகிறிக் குதிக்க, மற்றவர்களும் எஸ்கேப்ப்ப்!