பிரீமியம் ஸ்டோரி
மெஸ்ஸியின் கடைசி கிக்!

`என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டேன். சாம்பியன் ஆக முடியாதது என்னை வேதனைக்கு உள்ளாக்குகிறது. விடைபெறுகிறேன்' என்ற மெஸ்ஸியின் அறிவிப்பு, அர்ஜென்டினாவை மட்டும் அல்ல... உலகின் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் கண்ணீரில் நனைத்திருக்கிறது.

உலகுக்கே கால்பந்து வீரர்களை சப்ளை செய்யும் இரண்டு நாடுகளில் ஒன்று, அர்ஜென்டினா.  இரண்டு முறை உலகக்கோப்பை, 14 முறை கோபா அமெரிக்காவைக் கைப்பற்றிய கால்பந்து கடவுள்களின் தேசம். ஆனால், 1993-ம் ஆண்டு கோபா அமெரிக்காவில் சாம்பியன் ஆன பிறகு, எந்த ஒரு முக்கியத் தொடரிலும் அர்ஜென்டினா அணியால் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை.
23 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக்கூட வெல்ல முடியாமல் இன்று வரை தோல்வியுடன் தொடர்கிறது அர்ஜென்டினா அணி.

கடந்த உலகக்கோப்பையில், அர்ஜென்டினா அணி லியோனல் மெஸ்ஸி தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. `இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்' என அர்ஜென்டினாவே நம்பிக்கை வைத்திருந்தது. எதிர் அணியான ஜெர்மனியில் நட்சத்திர வீரர்கள் குவிந்து கிடந்தனர். அர்ஜென்டினாவின் ஒரே நம்பிக்கை மெஸ்ஸி மட்டுமே. போராட்டக் களத்தின் முடிவில், ஜெர்மனியின் மரியோ கோட்ஸே அடித்த ஒரே ஒரு கோல், மெஸ்ஸியின் இதயத்தைச் சுக்குநூறாக்கியது.

உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு, இப்போது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்துக்கு அர்ஜென்டினா முன்னேறியது. மீண்டும் ஒரு தேசத்தின் அதே எதிர்பார்ப்பு. ஆனால் இந்த முறையும் அர்ஜென்டினாவின் கோபா அமெரிக்கா கனவு இறுதிப்போட்டியில் தகர்ந்துபோனது. மெஸ்ஸியே அதற்கு முதல் காரணமாகிப்போனார் என்பதே, அவரை ஓய்வு முடிவுக்குக் கொண்டுசென்றிருக்க வேண்டும்.

கால்பந்து களத்தில் மெஸ்ஸி சாதித்தது அதிகம். ஆனால், அதற்காக அவர் சந்தித்த சவால்கள் இன்னும் பல மடங்கு அதிகம். அர்ஜென்டினாவின் ரோசாரியோ நகரத்தில் 1987-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்தவர் மெஸ்ஸி. தந்தைக்கு இரும்பு ஆலையில் பணி. இவருக்கு மூன்று சகோதரர்கள். வீட்டிலேயே குட்டிக் கால்பந்து அணி இருந்தது. மெஸ்ஸியின் கையில்... ஸாரி கால்களில் 24 மணி நேரமும் அந்தக் கால்பந்துதான் இருக்கும். உறங்குவது, சாப்பிடுவது எல்லாமே கால்பந்துடன்தான். ரோசாரியோ நகரில்தான் அர்ஜென்டினாவில் `நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ்' என்ற புகழ்பெற்ற கால்பந்து அணி விளையாடிக்கொண்டிருந்தது. ஆறாவது வயதிலேயே அந்த அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் மெஸ்ஸி.

குட்டி மெஸ்ஸியின் திறமை, அத்தனை பேரையும் ஈர்த்தது. கோல் போஸ்ட் நோக்கிய அவரின் லெஃப்ட் ஃபுட் உதை, எதிர் அணியினரை மிரளவைத்தது. இதனால் அந்த வயதிலேயே ரோசாரியோ நகரம் முழுக்க மெஸ்ஸி பாப்புலர். மெஸ்ஸி 10 வயதை எட்டியபோது உடல்ரீதியான தடையைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்கு ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. மெஸ்ஸிக்கு ஏற்பட்ட ஹார்மோன் குறைபாட்டைச் சரிசெய்ய, சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 1,000 டாலர் செலவு செய்யவேண்டிய கட்டாயம்.

குடும்பம், வறுமையில் தத்தளிக்கத் தொடங்கியது. முதலில் சிகிச்சைக்கு உதவுதாகச் சொன்ன நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் அணி, பிறகு கைவிரித்துவிட்டது. ஆனால், குட்டி மெஸ்ஸியின் கால்பந்து திறமையை, அர்ஜென்டினாவில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு தள்ளியிருந்த ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணி கண்காணித்துக்கொண்டிருந்தது. மெஸ்ஸிக்கு இப்படி ஒரு நிலை என்றதும், `ஸ்பெயினுக்கு வர விருப்பமா?' என்ற ஒரே கேள்வியுடன் 13 வயதிலேயே மெஸ்ஸியை ஸ்பெயினுக்குள் அழைத்துக்கொண்டது பார்சிலோனா அணி நிர்வாகம். மெஸ்ஸியின் மருத்துவச் செலவுகளை அந்த அணி நிர்வாகமே ஏற்றுக்கொண்டது. ஹார்மோன் குறைபாட்டினால்தான் மெஸ்ஸியிடம் ஒரு கால்பந்து வீரருக்கு உரிய வலுவான உடல் அமைப்போ, இறுக்கமான தொடைத் தசைகளோ இருக்காது.

பார்சிலோனா யூத் அணியில் சேர்க்கப்பட்டார் மெஸ்ஸி. புதிய நாடு, புதிய அணி என ஏற்கெனவே ரிசர்வ் டைப் ஆளான மெஸ்ஸி, அங்கே தடுமாறினார். தாய்நாட்டை விட்டுப் பிரிந்துவந்தது அவரை என்னவோ செய்தது. நாளடைவில் அதில் இருந்து மீண்டு, கால்பந்தில் கவனம்செலுத்தத் தொடங்கினார். பார்சிலோனா அணி, கொஞ்சம் கொஞ்சமாக மெஸ்ஸியைப் பட்டை தீட்டியது. 2002-ம் ஆண்டு ராயல் ஸ்பானீஷ் ஃபுட்பால் ஃபெடரேஷன், மெஸ்ஸிக்கு தொழில்முறை கால்பந்து வீரருக்கான அங்கீகாரத்தை வழங்கியது.

மெஸ்ஸியின் கடைசி கிக்!

யூத் அணிக்காக மெஸ்ஸி விளையாடிய காலகட்டத்தில், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ, பார்சிலோனா சீனியர் அணியில் இருந்தார். மெஸ்ஸியின் ஆட்டம் அவரைக் கவர,   `வரும் காலத்தில் என்னைவிட இந்தப் பையன் சூப்பரா வருவான்' என வெளிப்படையாகவே ரொனால்டினோ  சொன்னார். அந்த வார்த்தை    ரொனால்டினோ பார்சிலோனா அணிக்காக விளையாடிய  காலகட்டத்திலேயே உண்மையானது. பார்சிலோனாவின் முன்களத்தில் ரொனால்டினோ, சாமுவேல் ஈடோ ஆகிய இருவர் கலக்கிவந்தனர். அவர்களுடன் சேர்ந்து மெஸ்ஸியும் வலதுபுற விங்கராகக் களம் இறக்கப்பட்டார். மெஸ்ஸி தன் அதிரடி ஆட்டத்தால் பார்சிலோனா அணிக்கு தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தார். அடுத்த சில வருடங்களில் பார்சிலோனாவைவிட்டு ரொனால்டினோ வெளியேற, அவரது 10-ம் எண் ஜெர்சி, மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அ

பார்சிலோனா அணிக்காக இதுவரை 453 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்குத்தான் முதல் இடம். கிளப் கால்பந்தின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படுவது `எல்கிளாஸிகோ' என அழைக்கப்படும் பார்சிலோனா - ரியல்மாட்ரிட் அணிகளின் மோதல்தான். உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு இணையாகக் கருதப்படும் போட்டி இது. இதில் ரியல்மாட்ரிட் அணிக்கு எதிராக மெஸ்ஸி 23 கோல்களை அடித்துள்ளார்.

கால்பந்தில், மெஸ்ஸி படைக்காத சாதனைகளும் இல்லை; வெல்லாத விருதுகளும் இல்லை. கால்பந்து உலகின் உயரிய விருதான `பல்லாண் டி'ஓர்' விருதை 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார் மெஸ்ஸி.

விருதுகள் ஆயிரம் வென்றாலும் தாய்நாட்டுக்காக வெற்றி பெறும்போதுதானே ஒரு வீரன் மகிழ்வான். பார்சிலோனா அணியில், ஸ்பெயினின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் விளையாடுகின்றனர். அவர்களது ஒத்துழைப்பு மெஸ்ஸிக்குக் கூடுதல் பலமாக இருந்தது. ஆனால், அந்த நிலை அர்ஜென்டினா கால்பந்து அணியில் இல்லை.  அணியின் மொத்த வெயிட்டும் மெஸ்ஸி மீதுதான் இறங்கும். அப்படி இருந்தும் பிரஷர் எதையும் வெளிக்காட்டாமல் அர்ஜென்டினாவுக்காகத் தொடர்ந்து கோல்மழை பொழிந்துகொண்டிருந்தார் மெஸ்ஸி. ஆனால், இறுதிப்போட்டிகள் என்றால் மெஸ்ஸிக்கு எப்போதுமே அலர்ஜிதான்.

அர்ஜென்டினா அணியின் கேப்டனாக மெஸ்ஸி பொறுப்பேற்ற பின்னர், அர்ஜென்டினா மூன்று முக்கியப் போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பையைக் கோட்டை விட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோற்றது. அடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு இதே சிலி அணியிடம் 4-1 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டது. தற்போது நடந்த நூற்றாண்டு கோபா அமெரிக்கா தொடரில் டைபிரேக்கரில் மெஸ்ஸியே கோட்டை விட்டுள்ளார். மெஸ்ஸி இடது காலால் கோல் போஸ்ட்டை நோக்கி உதைத்தால், அது புல்லட் வேகத்தில் இலக்கை அடையும். அந்த `லெஃப்ட் ஃபுட்' கிக்கிற்கு பெயர்பெற்ற மெஸ்ஸி, டைபிரேக்கரில் இடது காலால்தான் பந்தை உதைத்தார். ஆனால், முதல்முறையாக மெஸ்ஸியின் இடது கால் கிக், கோல் போஸ்ட்டுக்கு வெளியே போய் விழுந்தது. தவறாக வெளியே போய் விழுந்த அந்த லெஃப்ட் ஃபுட் கிக்தான் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸியின் கடைசி கிக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு