Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3

`எல்லாமே போட்டியில்தான் முடிவாகின்றன. ஆகவே, நீங்களும் போட்டிக்குத் தயாராகவே இருங்கள்’ என்ற குரல் எங்கும் ஒலிக்கிறது. `வளர்ச்சி அடைய வேண்டுமானால், முரண்பட்டுத்தான் ஆக வேண்டும். முரண்பாடுகளைக் கண்டு ஒருபோதும் கலங்காதீர்கள்’ என்பதும் நவீனக் கொள்கைகளின் பாடம்தான். போட்டி, முரண்பாடு ஆகிய இரண்டுக்கும் மாற்றாக ‘ஒத்திசைவு’ எனும் ஒரே ஒரு பண்பை நான் முன்வைக்கிறேன். இதுதான் நமது மரபின் கல்வி.

`முரண்பாடுகளின் மோதல்தான் வளர்ச்சி’ என்னும் வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப் பீர்கள். மின்சாரத்தின் நேர்மறையும் எதிர்மறையும் மோதினால்தான் மின் ஆற்றல் உருவாகும் என்ற உதாரணத்தையும் கேள்விப் பட்டிருப்பீர்கள். மேற்கண்ட வாசகத்தில் இருந்து `மோதல்’ என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, `ஒத்திசைவு’ எனும் சொல்லை நிரப்பிப்பாருங்கள்.

`முரண்பாடுகளின் ஒத்திசைவுதான் வளர்ச்சி’ என்ற புதிய கருத்து உங்களுக்குக் கிடைக்கும். உண்மையில் இது மிகப் பழமையான கருத்து. இதன்படிதான் பிரபஞ்சம் இயங்குகிறது. எல்லா உயிர்களும் இதே கருத்தைத்தான் பின்பற்றி வாழ்கின்றன. ஆணும் பெண்ணும் மோதினால் குழந்தை பிறக்கும் எனக் கூறினால், எவ்வளவு இழிவாக உள்ளது. ஆணும் பெண்ணும் இசைந்து உறவாடினால் கரு உண்டாகும் என்பதுதான் உண்மை. நேர்மறையும் எதிர்மறையும் எங்கும் மோதுவது இல்லை. மாறாக, அவை இரண்டும் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைதல்தான் புதிய ஒன்றை உருவாக்குகிறது.

`முரண்பாடுகளின் மோதல்தான் வளர்ச்சியாக மாறும்’ என்ற கொள்கையை, உங்கள் வாழ்க்கையில் நிராகரிக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்தக் கொள்கையின் வழியே உங்களை போட்டிபோடும் உயிரினமாக மாற்றி விட்டார்கள். இந்தச் சமூகத்துக்கு, ‘போட்டிச் சமூகம்’ என்ற பெயரையும் சூட்டியிருக்கிறார்கள்.

பிரபஞ்சத்தில், பல கோடி விண்மீன்களும் கோள்களும் போட்டி போடவில்லை. படைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, ஒத்திசைந்து இயங்குகின்றன.

பூமியும் சந்திரனும் போட்டியிட்டால், அரை நொடியில் புவியின் உயிர்கள் இருந்த தடம் தெரியாமல் அழிய நேரிடும். பூமியில் உள்ள கொசுக்களும் ஈக்களும் தமக்குள் போட்டி நடத்திக்கொண்டால், மனிதர்கள் உள்ளிட்ட பெரிய உயிரினங்கள் யாவும் சிதைந்து அழிய வேண்டியிருக்கும். காகங்கள் மனிதர்களுடன் போட்டிபோட்டால், பல கோடி மனிதர்கள் மரணமடையும் நிலை உருவாகும். உங்கள் காலடிச் சத்தம் கேட்டதும் பதுங்கி ஓடும் பூனைகள் திடீரென உங்களோடு போட்டியிட்டால், உங்கள் நிலைமை என்ன? கரப்பான், பல்லி, எலி, வெளவால் என வீட்டைச் சுற்றி வாழும் உயிரினங்கள், மனிதர்களுடன் போட்டியிடுவதைப் பற்றி கற்பனை செய்துபாருங்கள். சகிக்க இயலாத விளைவுகள் மனதில் உருவாகின்றன அல்லவா!

இங்கே போட்டி நடக்கவில்லை. அவரவர் பாதையில் அவரவருக்கான பயணம் நடக்கிறது. பாதை மாறிப் பார்ப்பதும், விதிகளை மீறி ஆடுவதும் நவீன மனிதர்களின் குணம்.

`இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்வது’ என்ற சிந்தனைதான் நாம் செல்லவேண்டிய பாதை. ரசாயன வேளாண் தொழில்நுட்பம், போட்டி களையும் முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. தோட்டத்தில் உள்ள பூச்சி, புழுக்களை விவசாயிகளின் எதிரிகளாகச் சிந்திக்கக் கற்றுத் தந்த முறை அது. ரசாயன வேளாண்மையில், பூச்சிகளை அழிக்க நஞ்சு தயாரிக்கிறார்கள்.

பிற உயிரினங்களுடன் போட்டியிட்டு அழிக்கச் சொன்ன பசுமைப் புரட்சி வழியாக, உணவே நஞ்சானது. நமது நிலங்கள் உயிரற்றவையாக மாற்றப்பட்டன. பலவகைப் பட்டாம்பூச்சிகளும் தும்பிகளும் அழிந்துபோயின. வயலில் வாழ்ந்த நண்டுகள்கூட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3

இந்தப் போட்டி தொடங்கும் இடம் எது தெரியுமா? வயல்களில் முளைக்கும் களைச் செடிகள்தான். சற்று சிந்தித்துப்பாருங்கள். பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் உணவும் வாழும் இடமும் தேவை. ஒரு தோட்டத்தில் இயற்கையாக முளைக்கும் களைச் செடிகளில்தான் அவை வாழ்ந்துவருகின்றன. அந்தக் களைச் செடிகளை அழிப்பது, நவீன வேளாண் நடைமுறை. அவ்வாறு அழிக்கப்பட்ட செடிகளில் வாழும் பூச்சிகளும் புழுக்களும் வேறு வழியின்றி பயிர்களுக்கு இடம்பெயர்கின்றன. களைகளை அழிக்கவும் நஞ்சு, பூச்சிகளுக்கும் நஞ்சு என்ற குரூரமான செயல்பாடு ரசாயன வேளாண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பூச்சி, புழுக்களுக்கு அதிகபட்சமாக மூன்றறிவு மட்டும்தான் உள்ளது. ஆறறிவும் வல்லாதிக்கப் பேரரசுகளின் துணையும் வாய்த்த நிறுவனங்களால் இன்று வரைக்கும் அவற்றோடு போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை. பூச்சுக்கொல்லிகளால் மனிதர்கள் நோயுற்றுச் சாகும் நிலைதான், அந்தப் போட்டியின் விளைவு.

நமது மரபில், களைகளை அழிப்பது இல்லை. மாறாக, களைகளைப் பறித்து வயலுக்கு வெளியே வீசுவார்கள். அந்தக் குவியலின் மீது சாணத்தைக் கொட்டி நீர் தெளிப்பார்கள். அது உரமாகும்; பல்லாயிரம் சிற்றுயிர்களுக்கு உணவாகவும் உறைவிடமாகவும் அமையும். தோட்டத்தில் ஆங்காங்கே தட்டை, மொச்சை, ஆமணக்கு போன்ற ஊடுபயிர்களை விதைப்பது நம் வழக்கம். இவை பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் விருப்பமானவை. தோட்டத்தின் முக்கியப் பயிரைச் சேதப்படுத்தாமல், துணைப்பயிர்களில் வாழும் வழியை சின்னஞ்சிறு உயிரினங்களுக்கும் அமைத்துக்கொடுக்கும் வேளாண் மரபு நம்முடையது.

இதுதான் முரண்பாட்டுக்கும் ஒத்திசைவுக்குமான வேறுபாடு. பூச்சிகளுடன் முரண்படாமல் ஒத்திசைந்து வாழ்ந்த வரைக்கும் நமது உணவு அமுதாக இருந்தது; நமது நிலங்கள் தெய்வங்களாக இருந்தன.

பூமியில் எல்லா உயிர்களும் கூட்டாகத்தான் வாழ்கின்றன. கூடுதல், தனித்திருத்தல் எனும் இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில் கடைப்பிடித்தல்தான் படைப்பின் சிறப்பு. மான்களும் வேங்கைகளும் ஒரே கானகத்தில் வாழ்கின்றன. முதலைகளும் மீன்களும் ஒரே ஆற்றில் நீந்துகின்றன. குருவிக்குஞ்சுகளும் பருந்துகளும் ஒரே வானில் பறக்கின்றன. ஒன்றை ஒன்று இரையாக உண்ணும் என்றாலும் உயிரினங்களால் ஓரிடத்தில் வாழ முடிகிறது.

மனித சமூகத்திலோ, பிள்ளைகளும் பெற்றோரும் ஒரு வீட்டில் வாழ இயலவில்லை; உடன்பிறந்தவர் களால் ஒன்றாக இருக்க முடியவில்லை. பசிக்காதபோது, கால் ஒடிந்த மானைக் கண்டாலும் ஒதுங்கிச் செல்லும் பக்குவம் சிங்கத்துக்கு உண்டு. முரண்பட்ட மனிதர்களைக் கண்டால் சீறிப்பாய்ந்து வாதிடும் சிறுமை மனித சமூகத்தில் இருக்கிறது.

முரண்பாடு என எதுவுமே இல்லை. காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நான்கும் வெவ்வேறானவை என்பது உண்மைதான். ஆனால், இவை நான்கும் முரண்பட்டவை அல்ல, வேறுபட்டவை. ஏனெனில், நீரிலும் நெருப்பு உண்டு; நிலத்தில் நீரும் நெருப்பும் உண்டு. காற்றோ அனைத்திலும் உண்டு. ஒன்றுக்குள் ஒன்று, ஒன்றன் மேல் ஒன்று என்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. ஆகாயம் உள்ளிட்ட ஐம்பூதங்களும் ஒத்திசைந்த கலவைதான் நாம் அனைவரும்.

ஓர் உடலில் உயிர் தங்கவேண்டுமானால், ஐம்பூதங்களும் ஒத்திசைந்து இயங்கவேண்டும். காற்றும் நீரும் போட்டிபோட்டால் சிறுநீரகம் செயலிழக்கும். நெருப்பும் காற்றும் முரண்பட்டால், இதயம் தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளும். நிலமும் நீரும் தமக்குள் முரண்பட்டால், உடல் மெலிந்து மூச்சு நிற்கும். `மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்றார் ஆசான் வள்ளுவர்.

முரண்பாடுகள் மோதினால், அழிவு; இசைந்தால் ஆக்கம்.

உங்களோடு முரண்படுவோரிடம் இருந்து நீங்கள் பெறவேண்டியவை உள்ளன. அவர்களுக்கு நீங்கள் வழங்கவேண்டியவையும் உள்ளன. இசைந்து வாழும்போது இயற்கையின் ஆசி கிடைக்கிறது. இசை என்றால் - ஒத்துப்போகும் தன்மை, புகழ், இசை எனும் கலை வடிவம் ஆகிய பொருட்கள் தமிழில் உள்ளன. இசை எனும் கலை வடிவமே, கருவிகளுக்கு இடையிலான ஒத்திசைவின் வெளிப்பாடுதானே. மத்தளமும் புல்லாங்குழலும் ஓசையினால் மாறுபட்டவைதான். ஆனால், இந்த இரண்டும் ஒத்திசைந்தால், உன்னதமான இசை உருவாகிறது.

நேர்மறை, எதிர்மறை என்பது எல்லாம் மனிதர்கள் சூட்டிக்கொண்ட பெயர்கள். படைப்பில் அப்படி எதுவும் இல்லை.

போட்டிச் சமூகம் என்ற பேரில் சக மனிதர்கள் எதிரிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இங்கே எல்லா நடைமுறைகளும் போட்டியின் அடிப்படையில் இருக்கின்றன. கல்விக்கூடங்கள், பிள்ளைகளைப் போட்டியாளர்களாக மாற்றி விடுகின்றன. தொழிற்கூடங்கள், பணியாளர்களைப் போட்டியிடச் செய்கின்றன. குடும்பங்களில் பொருளாதாரப் போட்டி நடக்கிறது.

கூட்டு வாழ்க்கைமுறையைக் கைவிடாத காலத்தில், நம் சமூகத்தில் போட்டிகள் இல்லை; நிலம் பங்கிடப் படவில்லை, பொதுவானதாக இருந்தது; குடும்பத்தினர் அனைவரும் கூடி உழைத்தனர். விளைச்சலை தம் தேவைக்கு ஏற்ப பிரித்துக்கொண்டனர்.

காளைகளை அடக்கும் விளையாட்டுக்கு இப்போது ‘ஜல்லிக்கட்டுப் போட்டி’ எனப் பெயர். சங்க காலத்தில் அதற்கும் ‘ஏறுதழுவல்’ எனப் பெயர். காளையை அடக்குவதை ஒரு போட்டியாகக் கருதாமல், `தழுவுதல்' என்றார்கள் நம் முன்னோர்.

அந்தச் சமூகத்தைவிட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனாலும், கூட்டு வாழ்க்கை எனும் கருத்தைவிட்டு விலகவேண்டாம். ஏனெனில், எந்தக் காலத்திலும் அழியாத அறம், கூட்டு வாழ்க்கைதான். மனிதர்கள் மட்டும் அல்ல, கால்நடைகளும் இணைந்து வாழும் அமைப்புக்குத்தான் நமது மரபில் `குடும்பம்' எனப் பெயர்.

காகத்துக்குச் சோறிடும் வழக்கத்தின் மீது பல்வேறு நம்பிக்கைகள் திணிக்கப் பட்டிருக் கலாம். ஆனாலும் காகத்தின் பசி தணிக்க வேண்டும் என்ற சிந்தனை சிறப்பானது அல்லவா!

அகநானூற்றுப் பாடல் காட்சி. காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன். அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், ‘தலைவா, இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால் உன்னைத் தழுவ இயலாது. ஆகவே, வேறு இடம் செல்வோம்.’

மரத்தையும் தன் குடும்ப உறுப்பினராகக் கருதும் சிந்தனை மரபு நமக்கு உண்டு. காலம் காலமாக நாம் கூடித்தான் வாழ்ந்தோம். பிறப்பினால் பேதங்கள் கண்டபோது நமது அரசுகள் வீழ்ந்தன. பொருளாதாரத்துக்காக இயற்கையுடனும் உறவுகளுடனும் முரண்பட்ட போது நமது ஊர்களைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. நவீன நாகரிகம் எனும் மாயவலையின் ஒவ்வொரு கண்ணியும் நமது மதிப்பீடுகளுடன் முரண்படுகின்றன. இந்தக் கண்ணியில் இருந்து விடுபட வேண்டும்.

கூட்டுச் சமூகமாக வாழ்வது சாத்தியமே இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் கூடி வாழ்வதுகூடவா சாத்தியமற்றது? வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்கள் அடங்கியதுதான் குடும்பம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3

ஒரு குடும்பத்தில் முதியோர் முதல் சிறுவர் வரை மூன்று தலைமுறைகள் இருக்க வேண்டும். இந்த மூன்று தலைமுறையினரும் கூடி வாழ வேண்டும். இந்தக் குடும்பம், ஏறத்தாழ 80 ஆண்டுகால அனுபவங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும். உணவு, மருத்துவம், பொருளாதாரம், உறவுகளைப் பேணுதல் ஆகிய அனைத்து வாழ்வியல் கூறுகளிலும் இந்த 80 ஆண்டுகால அனுபவம் துணை நிற்கும்.

ஒரு குடும்பத்தில் உள்ளோர், சக மனிதர்களின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளவேண்டியது இல்லை; முரண்பட்டு மோதாமல் இருந்தால் போதும். ஏனெனில், முரண்பாடுகளின் இணைவுதான் உண்மையான வளர்ச்சி.

- திரும்புவோம்...