பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

• தன்னுடைய ஒவ்வொரு படத்தின்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட் என ஸ்பாட்டில் தன்னை வியக்கவைப்பவர்களுக்கு க்யூட் பரிசுகள் உண்டு. உடன் நடிக்கும் ஹீரோக்களுக்கும் ஷூட்டிங்கின் கடைசி நாளில் வாட்ச், ஷூக்களைப் பரிசாகக் கொடுக்கிறார் நயன். கிஃப்டிங் லயன்!

•   மகள் சோனம் கபூரைத் தொடர்ந்து அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூரும் பாலிவுட்டில் என்டர் ஆகிறார். `ரங் தே பசந்தி', `பாக் மில்க்கா பாக்' படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் `மெர்ஸியா' படத்தின் ஹீரோ ஹர்ஷவர்தன்தான். லைலா-மஜ்னு, ரோமியோ -ஜூலியட் வரிசையில் புகழ்பெற்ற மீர்ஸா-ஷாகிபா வரலாற்றுக் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ரொமான்டிக் படம். அப்பாவைப் போலவே படத்தில் மீசையுடன் அறிமுகமாகிறார் ஹர்ஷவர்தன். ஆவோ பேட்டா!

•   மீண்டும் சீக்ரெட் லொக்கேஷனுக்குப் பறந்துவிட்டார் ராகுல் காந்தி. கடந்த 19-ம் தேதி `சில நாள் பயணமாக வெளிநாடு செல்கிறேன்'  என ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டவரிடம் இருந்து அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே தற்போது ராகுல் காந்தி எந்த நாட்டில் இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது பொதுமக்களோ கண்டுபிடித்து தகவல் சொன்னால், 1 லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்திருக்கிறது பா.ஜ.க. ராகுல் ரகசியங்கள்!

•   திரைப்படங்களில் ஹிட் அடிப்பதைப்போல தொடர்ந்து குறும்படங்களிலும் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் ராதிகா ஆப்தே. சமீபத்தில் இவர் நடித்த `க்ரித்தி' குறும்படம் வெளியான முதல் நாளிலேயே பத்து லட்சம் வியூஸ் குவித்திருக்கிறது. தன் தோழியும் மனநல மருத்துவருமான ராதிகா ஆப்தேவிடம், தன் காதலியைப் பற்றி சொல்கிறார் மனோஜ் பாஜ்பாய். கற்பனையான ஒரு பெண்ணை நிஜம் என நினைத்து அதில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்றுவந்த மனோஜிடம், இதுவும் கற்பனைதான் எனச் சொல்கிறார் ராதிகா. ஆனால், யார் சொல்வது உண்மை... யார் கற்பனை? என்ற ட்விஸ்ட்டோடு முடிகிறது இந்த 18 நிமிட த்ரில்லர். ஷாக்கிங் ஷார்ட் ஃபிலிம்!

•   57 பேர் விண்ணப்பித்து, அதில் இருந்து 21 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்து, ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான களேபரங்களுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு. மும்பையைச் சேர்ந்தவர்தான் பயிற்சியாளராக வருவார் என எல்லோரும் எதிர்பார்க்க, கும்ப்ளேவை டிக் அடித்தது கங்குலி, சச்சின் அடங்கிய தேர்வுக் குழு. `முதலில் டிராவிட்டைத்தான் பயிற்சியாளராக நியமிக்க விருப்பம் தெரிவித்தோம். ஆனால், அவர் `சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் ஆகும் விருப்பம் இல்லை. ஜூனியர் அணிக்கே தொடர்ந்து பயிற்சி அளிக்கிறேன்' எனச் சொல்லிவிட்டார்' என க்ளைமாக்ஸ் ரகசியத்தை உடைத்திருக்கிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர். இனி கும்ப்ளே காலம்!

இன்பாக்ஸ்

•   அமெரிக்க நடிகையும் பாடகியுமான செலினா கோமஸ், பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோதான் கடந்த வார வைரல் வீடியோ.  `ஆட்ரினா நெதரி' என்ற ஏழு வயது சிறுமி, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் பாடகி செலினா கோமஸின் ரசிகை. செலினாவின் பாடல் ஒன்றுக்கு ஆட்ரினா செம ஆட்டம்போட, அதை ஆன்லைனில் பார்த்த செலீனா, ஆட்ரினாவை நேரில் அழைத்து அவரோடு ஒரு பாடலுக்கு நடனமாட, உலகம் முழுவதும் வைரலானர் ஆட்ரினா. ரசிகைக்கு மரியாதை!

•   ஜூன் 22, 2016 இஸ்ரோவுக்கு மகிழ்ச்சியான நாள். அன்று காலை ஹரிகோட்டாவில் இருந்து, ஒரே ராக்கெட்டில், 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்திருக்கிறது இஸ்ரோ. 2008-ம் ஆண்டு, ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைகோள்களை அனுப்பியதே இந்தியாவின் முந்தைய சாதனை. இந்த முறை இந்தியா அனுப்பிய 20 செயற்கைகோள்களில், 17 செயற்கைகோள்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்டவை. `ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைகோள்களை அனுப்பியிருக்கும் ரஷ்யாவின் சாதனையை, விரைவில் முறியடிப்போம்' என்கிறது இஸ்ரோ. இஸ்ரோவின் 20/20!

•   கேரளாவில் எலெக்‌ஷன் ஃபீவர் முடிந்ததில் இருந்து ட்ரெண்டில் இருப்பது, கேரளா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனுக்கும் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கும் இடையேயான சண்டைதான். கேரளா மாநில விளையாட்டுத் துறையின் தலைவராகப் பணியாற்றிவந்தார் அஞ்சு ஜார்ஜ். தேர்தல் முடிந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் ஜெயராஜன் அஞ்சு பாபி ஜார்ஜ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்த, விளையாட்டுக் குழுவில் இருந்த அனைவருமே ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். `உங்களால் விளையாட்டை அழிக்க முடியும். ஆனால், விளையாட்டு வீரர்களை வீழ்த்த முடியாது' என அஞ்சு சொல்ல, `நான் அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. ஆனால், அவர்களாக ராஜினாமா செய்ததில் மகிழ்ச்சி' என கூலாக பேட்டி கொடுத்திருக்கிறார் அமைச்சர். அட்ராசிட்டி அமைச்சர்!

இன்பாக்ஸ்

•   அரசியல் தலைவரின் வாரிசாக இருந்தாலும், மக்கள் மனதில் இடம்பெற வேண்டுமானால் சினிமா நடிகராக வேண்டும் என்கிற லாஜிக்படி நடிகராகிறார் நர லோகேஷ். ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசக் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான 33 வயதான லோகேஷ்தான் ஆந்திராவின் அடுத்த ஸ்டார். ஆக்‌ஷன், எமோஷன், சென்டிமென்ட் கலந்த மாஸ் ஹீரோ கதைக்கான தேடலில் இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் குடும்பம். தாத்தா போட்ட ரூட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு