பிரீமியம் ஸ்டோரி

இது பருவமழைக் காலம். மூணாறு, வால்பாறை, கொடைக்கானல், கொல்லிமலை என, தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் எல்லாம் ஈரத்தலையுடன் குளிரக் குளிர நம்மை வரவேற்கத் தொடங்கிவிட்டன. இங்கு மட்டும் அல்ல, இந்தியா முழுக்கச் சுற்றிப்பார்க்க நிறையவே இடங்கள் உண்டு. ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான மாரிக்காலத்தில் பயணிப்பதற்கான பெஸ்ட் இடங்கள்... 

விகடன் சாய்ஸ்

லடாக்: அதிகமான குளிரோ, அதிகமான வெயிலோ இல்லாமல் வெதுவெதுப்பான வெப்பநிலை இருக்கும் இங்கு, ஜூலை டு செப்டம்பர் வரை சீஸன். இது பல ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சுற்றுலாத் தலம் என்பதால், சுற்றுலா செல்வோர், எந்நேரமும் காற்றில் மிதப்பதைப்போல உணர்வர். மனமும் ஆழ்ந்த அமைதியில் நிலைத்திருக்கும்.

அமைதி விரும்பிகளுக்கு மட்டும் அல்ல, சாகச விரும்பிகளின் டார்லிங்கும் இதுவே. பைக் அல்லது சைக்கிளில் ஊர் சுற்றுபவர்களுக்கு மணாலி தொடங்கி லடாக் வரை போகும் நீண்ட மலைப்பாதை  ஜிலீர் அனுபவம் தரும். பேங்காங் ஏரி, சோமோரிரி ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, லமாயூரு, கார்கில் என லடாக்கில் சுற்றிப்பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.

விகடன் சாய்ஸ்

சோரா: `சோரா' என்றால் தெரியாது, `சீராபுஞ்சி' என்றதும் உடனே நினைவுக்கு வந்துவிடும். `உலகின் மிக ஈரமான இடம்', `மிக அதிக மழை பதிவுசெய்யப்படும் இடம்' எனப் பெயர் பெற்ற இங்கு, எந்நேரமும் மழை பெய்துகொண்டே இருக்கும். மழை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி தரும் இடம் சோரா. இதன் அழகை முழுமையாகத் தரிசிக்க, பருவமழைக் காலமான ஜூலையில் செல்வது நல்லது. மலைப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஊரைச் சுற்றி, எண்ணற்ற அருவிகள் உண்டு. ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழும் மவ்ஸ்மாய் அருவியை நாள் முழுக்க ரசிக்கலாம். தடுக்கி விழுந்தால் தண்ணீரில்தான் விழுவோம் எனும் அளவுக்கு, நன்னீர் அருவிகள் பாய்ந்தோடும் எழில் நகரம் சோரா.

விகடன் சாய்ஸ்

கோவா: பிகினியும் கடற்கரையையும் தாண்டி நம்மைப் பரவசப்படுத்தும் இடங்கள் இங்கு ஏராளம். சாவோ ஜோவா, பீட்டர் பால் போண்டரம் கொடி விழா என எண்ணற்ற உள்ளூர் திருவிழாக்கள் மழைக்காலத்தில்தான் நடைபெறும். சும்மாவே கொண்டாட்டத்தில் திளைக்கும் கோவா, திருவிழாக் காலங்களில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா குஷியில் துள்ளும்.  கடற்கரைகளைத் தாண்டி கோவாவைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளுக்குள் நுழைந்தால், இயற்கை அழகு நம்மைக் கொஞ்சி விளையாடும். மோலம் தேசிய வனவிலங்குப் பூங்கா, தூத்சாகர் அருவி, மண்டோவி ஆறு என, கோவாவில் பசுமை இடங்கள் பல. அம்போலி மலைத்தொடரில் ட்ரெக்கிங்கும், மண்டோவி ஆற்றில் ராஃப்டிங்கும் தவறவிடாதீர்கள். கோவா, தன் அழகை முழுமையாக வெளிப்படுத்துவது மழைக் காலத்தில்தான்!

விகடன் சாய்ஸ்

உதய்பூர்: ராஜஸ்தானில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். எண்ணற்ற அரண்மனைகள், எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் தெருக்கள், கண்கவரும் ஏரிகள் என மிஸ்பண்ணக் கூடாத நகரம். உதய்பூர் நகரம், மழைக்காலத்தில் `கிழக்கின் வெனிஸ்’ என அழைக்கப்படுகிறது. ராஜஸ்தானின் கலாசாரம், உணவு, உடை, நடனம் எனப் பல விஷயங்களையும் இங்கே அனுபவிக்கலாம். ஆரவள்ளி மலைத்தொடருக்கு மத்தியில் அமைந்திருக்கிறது இந்த நகரம். இங்கே மிகவும் புகழ்பெற்றது
1884-ம் ஆண்டில் சஜ்ஜன் என்கிற அரசரால் கட்டப்பட்ட ‘மான்சூன் பேலஸ்’. பருவமழையைக் கண்காணிப்பதற்காகவே இது கட்டப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. அந்தி வேளையில் பிச்சோலா ஏரியில் படகுசவாரி செய்வது அலாதியானது. இந்த ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள அரண்மனையில் மியூசியம் ஒன்றும் இருக்கிறது.

விகடன் சாய்ஸ்

அதிரப்பள்ளி: மழைக் காலத்தில் கேரளா ஈரம் சொட்டச் சொட்ட தன் அழகின் உச்ச நிலையை எட்டிவிடும். `இந்தியாவின் நயாகரா' என்று அழைக்கப்படுகிற அளவுக்கு மிகவும் புகழ்பெற்ற இடம் அதிரப்பள்ளி. இந்த அருவியை முழுமையாக அதன் வீச்சோடு ரசிக்க ஏற்ற காலம், பருவமழைக்காலம்தான். சில கிலோமீட்டர்கள் நடந்து சென்று அருவியை மேலே இருந்தும், அதிக நீர் பாய்ச்சல் இல்லாதபோது அருவிக்கு கீழே இருந்தும் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு