Published:Updated:

ஃபேன்சி நம்பர்... ப்ளாக் கரன்சி... கிடுகிடுக்கும் நம்பர் பிசினஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபேன்சி நம்பர்... ப்ளாக் கரன்சி... கிடுகிடுக்கும் நம்பர் பிசினஸ்!
ஃபேன்சி நம்பர்... ப்ளாக் கரன்சி... கிடுகிடுக்கும் நம்பர் பிசினஸ்!

ஜோ.ஸ்டாலின்

பிரீமியம் ஸ்டோரி
ஃபேன்சி நம்பர்... ப்ளாக் கரன்சி... கிடுகிடுக்கும் நம்பர் பிசினஸ்!

லகத்தின் ஒவ்வொரு நகர்வும், மனிதனின் ஒவ்வோர் அசைவும் எண்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எண்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு நொடியைக்கூட உலகம் இன்று கடத்திடவோ, கடந்திடவோ முடியாது. மொபைல் போன்களின் வருகை, எண்களுக்குள்ளாக ஒட்டுமொத்த உலகத்தையும் அடக்கியது.

இயல் எண்கள், முழு எண்கள், கற்பனை எண்கள் என வகைப்படுத்தப்பட்ட அவை, மொபைல் போன்களின் வருகைக்குப் பிறகு, ‘ஃபேன்சி நம்பர்’ அல்லது ‘வி.ஐ.பி நம்பர்’ எனப் புது வெரைட்டியாக உருவெடுத்தது. இந்தப் போக்கு, உலகம் முழுக்க ஃபேன்சி நம்பருக்கான சந்தையை உருவாக்கியுள்ளது.

பல கோடிகளில் புரளும் சின்னஞ்சிறிய ஃபேன்சி நம்பர் சிம் கார்டுகளை வாங்கி விற்கும் இந்த வர்த்தகம், சத்தம் இல்லாமல் இந்தியாவில் வளர ஆரம்பித்திருக்கிறது; பெரிய போட்டிகள் இன்றி தொடர்கிறது. மொத்தமாக இந்தியாவில் இந்த வியாபாரத்தில் 500 பேருக்கும் குறைவானவர்களே இருக்கிறார்கள்.

``ஃபேன்சி நம்பர்கள் எனத் தனியாக ஒன்றும் கிடையாது; அவரவர் விருப்பம் சார்ந்தது. சிலர் தங்களுடைய அல்லது தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களின் பிறந்த நாள் தேதி, மாதம், வருடம் வரும் வகையில் கேட்பார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத எண்களாக இருக்கும். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை அதுதான் ‘ஃபேன்சி நம்பர்’. சிலருக்கு ஒரே மாதிரி எண்கள் ஃபேன்சியாகத் தெரியும். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்களுடைய ராசி எண் கூட்டுத்தொகையாக வரும் எண்கள் ஃபேன்சி. முஸ்லிம்கள் 786 வரும் எண்களுக்கு, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், வரிசையாக வரும் எண்கள் (உதாரணத்துக்கு 12345, ஒரே மாதிரியான எண்கள் 99999, 00000) என வரும் மொபைல் எண்களை விரும்பிக் கேட்பார்கள்.

அப்போது இருக்கும் டிமாண்ட், மார்க்கெட்டில் எங்கள் போட்டியாளர்கள் நிர்ணயித்துள்ள விலை போன்றவற்றைப் பொறுத்து எண்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறோம். உதாரணமாக, 9999X 9990X என்றால் பத்தாயிரம், XX 00000000 என்கிற மாதிரி எண்கள் என்றால் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை விற்பனையாகும். 99999999X போன்ற எண்கள் 38 லட்சம் வரை விலை எகிறும்'' என்கிறார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் ஸ்ரீபால் கோத்தாரி.

X எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் ஒரே எண்கள். அவை 9 ஆகவும் இருக்கலாம் அல்லது 8, 7-ல் ஒன்றாகவும் இருக்கலாம்.

``X000000000 என்கிற எண்ணின் விலை 14.5 கோடி ரூபாய். பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள பிசினஸ்மேன் ஒருவர் 2014-ம் ஆண்டில் இவ்வளவு விலை கொடுத்து இந்த எண்ணை வாங்கினார். இப்போது வரை இந்த எண்ணுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ளது. அதைவிட சில கோடிகள் கூடுதலாகக் கொடுப்பதற்கு பலரும் தயாராக உள்ளனர்'' என அதிரவைக்கிறார் ஸ்ரீபால்.

98409 98409 - இதுபோன்ற எண்களை `மிரர் நம்பர்கள்' என அழைக்கிறோம். இதுபோன்ற நம்பர்களை, புதுத் தொழில் தொடங்கி அதை புரோமோட் செய்கிறவர்கள் விரும்பி வாங்குவார்கள்; வி.ஐ.பி-க்கள் வாங்குவார்கள். எங்களின் விளம்பரம் என்பது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் நண்பர்கள்தான். என்னிடம் நம்பர் வாங்கியவர்கள், அவருடைய மொபைலில் இருந்து மற்றொருவருக்குக் கொடுக்கும் ஒவ்வோர் அழைப்பும் எங்களுக்கான விளம்பரம். அதைப் பார்ப்பவர்கள், `எண் ஃபேன்சியாக இருக்கிறதே. எங்கே வாங்கினாய்... எனக்கும் இதே மாதிரி வேண்டும்' எனக் கேட்பார்கள், அதுதான் எங்களுக்கான விளம்பரம். 10 ஆண்டுகளாக 5,000 நம்பர்கள் வரை விற்றுள்ளேன். தற்போது 500 நம்பர்கள் என்னிடம் இருக்கின்றன. நாங்கள் இந்த எண்களை செல்போன் கம்பெனிகள் ஏலம்விடும்போது, அவர்களிடம் இருந்து வாங்குகிறோம். அதற்கான சரியான ஆவணங்கள், 12.5 சதவிகிதம் வரி கட்டி வாங்குகிறோம். அதன் பிறகு, எங்கள் நண்பர்கள், கஸ்டமர்களுக்கு விற்கிறோம். அப்படி விற்கும்போது, அவர்களிடம் உரிய ஆவணங்களை வாங்கிக்கொள்கிறோம். மற்றபடி அவர்கள் இதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லும் ஸ்ரீபாலின் மொபைல் நம்பர் 92929292XY. இதற்கு இவர் கொடுத்த விலை 30 லட்சம்.

ஃபேன்சி நம்பர்களுக்கு இன்னொரு பெயர் வி.ஐ.பி நம்பர். இவற்றுக்கு ஒவ்வொன்றையும் ஒரு குறியீட்டில் அழைக்கின்றனர்.

கடைசி நான்கு எண்கள் ஒன்றாக இருந்தால் `டெட்ரா', 6 எண்கள் ஒன்றாக இருந்தால் `ஹெக்ஸா', 9 எண்கள் ஒன்றாக இருந்தால் `நெப்டா' எனப் பெயர்வைத்து டீல் பேசுகிறார்கள்.

``ஃபேன்சி நம்பர், வி.ஐ.பி நம்பர் பிசினஸ் ஆரம்பத்தில் இல்லை. ஆனால், மெதுவாக இது கோடிக்கணக்கிலான வர்த்தகமாக மாறியது. அதன் பிறகு, மிகத் தாமதமாகத்தான், செல்போன் நிறுவனங்கள் சுதாரித்தன. பிறகு, ஃபேன்சியாக இருக்கும் நம்பர்களை ‘பிளாக்’ செய்து அதற்கு விலை வைத்தன. பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் ஏலத்தில் விற்பனைசெய்தன. இந்தத் தொழிலில் இருப்பவர்கள், ஏலத்தின் மூலம் நம்பர்களை வாங்குகிறார்கள். அது தவிர வேறு சில டெக்னிக்ஸ் இவர்களுக்கு உண்டு. அதற்கு செல்போன் நிறுவனங்களின் ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகளின் சப்போர்ட் தேவை.

இவர்கள்தான், புது சீரியல் எண்களை, மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தும்போது, ஃபேன்சி நம்பர் பிசினஸ்மேன்களுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். நம்பர் சீரியஸையும் அனுப்புகிறார்கள். அதை வைத்துக்கொண்டு, அதில் இருக்கும் ஃபேன்சி நம்பரை மட்டும் கேட்டால் நிறுவனம் கொடுக்காது. கொடுத்தாலும் அதிக விலை கேட்கும். அதனால், இந்த ஃபேன்சி நம்பர் பிசினஸ்மேன்கள், குறிப்பிட்ட ஓர் எண்ணைக் குறிவைத்து, அதற்கு முன்னர் இருக்கும் 25 நம்பர்களையும், அதற்குப் பின்னால் இருக்கும் 24 நம்பர்களையும் சேர்த்து மொத்தமாகக் கேட்பார்கள். ஒரே கஸ்டமர் 50 எண்கள் கேட்கிறார் என்பதால், மொபைல் நிறுவனங்கள் அவர்களுக்கு ஃபேன்சி நம்பர்களையும் சாதாரண விலையிலேயே கொடுப்பார்கள். அல்லது 25, 50, 75 சதவிகிதம் என ஏதாவது ஒரு டிஸ்கவுன்ட்டில் கொடுப்பார்கள். அதை வாங்கியவர், இந்த டீலுக்காகச் செலவுசெய்த தொகை, செல்போன் கம்பெனி ஊழியர்களுக்குக் கொடுத்த கமிஷன், தனக்கான லாபம் எல்லாவற்றையும் கணக்குப்போட்டு அதை விற்பனை செய்வார்'' என்கிறார் தனியார் மொபைல் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் அருண் பிரசாத்.

ஃபேன்சி எண்களுக்கு பொதுமக்களிடம் இருக்கும் மோகத்தை சாதகமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் ஒரு கும்பல், ஃபேன்சி நம்பர்கள் பட்டியலை மெசேஜ் அனுப்பும். அவர்களைத் தொடர்புகொண்டால், ஆன்லைன் மூலம் தங்கள் அக்கவுன்ட்டுக்குப் பணம் அனுப்புங்கள். அட்ரஸை மெசேஜ் செய்யுங்கள். நீங்கள் அனுப்பிய அட்ரஸுக்கு சிம் கார்டு வரும் எனச் சொல்லும். நாம் அவர்கள் சொன்னபடி அனுப்பியதும், மீண்டும் அந்த நம்பரைத் தொடர்புகொள்ள முடியாது. அதன் பிறகு அது எப்போதும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டே இருக்கும். ஹைதராபாத்தில் இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் இதுவரை போலீஸில் பிடிபடவில்லை.

புதிதாகக் கிளம்பியிருக்கும் இந்த ஃபேன்சி நம்பர் வலை, நமக்கு முன் எப்போது வேண்டுமானாலும் விரிக்கப்படலாம். அதில் இருந்து தப்பித்துக்கொள்வதும் சிக்குவதும் நம்பர்களின் விளையாட்டில்தான் இருக்கிறது.

ஃபேன்சி நம்பர்... ப்ளாக் கரன்சி... கிடுகிடுக்கும் நம்பர் பிசினஸ்!

பி.எஸ்.என்.எல் ஏலத்தில், 94455 55555 என்ற நம்பர், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

ர்டெல் நிறுவனம் தொடங்கியதும் முதலில் அறிமுகம் செய்த எண் - 984XXXXXXX. இதன் விலை 25 லட்சம் ரூபாய்.

காஸ்ட்லி நம்பர்ஸ்!

999999999X     - 40 லட்சம்

XXXXXXX000      - 30 லட்சம்

XX00000000     - 20 லட்சம்

9999XX9999     - 10 லட்சம்

XX22222222     -  8 லட்சம்

9999XX8888     -  5 லட்சம்

XXXX000000     -  3 லட்சம்

XXXX786786     -  1 லட்சம்

ஃபேன்சி நம்பர் பிசினஸில் கறுப்புப் பணம்!

ஃபேன்சி நம்பர் பிசினஸில் அதிக அளவில் கறுப்புப் பணமும் புழங்குகிறது. ``ஃபேன்சியாக இருக்கிறது என்ற காரணத்துக்காக வாங்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் விலை ஒரு லட்சத்துக்குள்தான் இருக்கும். ஆனால், 5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் வரை விலை உள்ள சிம் கார்டுகள் வைத்திருப்பவர்கள் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். காரணம், அந்த விலையில் சிம் கார்டு வாங்குபவர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்குவதற்காக வாங்கலாம். ஒருவரிடம் 5 கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருக்கிறது. அதை அவர் பாதுகாப்பாகப் பதுக்கிவைக்க வேண்டும். அதற்கு எளிமையான வழி என்ன? 50 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள ‘ஃபேன்சி நம்பர்’ சிம் கார்டுகள் 10 வாங்கிவிட்டால் போதும். இதில் 5 கோடி அடங்கிவிடுகிறது. அந்த சிம் கார்டுகளுக்கு மாதாமாதம் வாடகை செலுத்துவார்கள். அது டீ-ஆக்டிவ் ஆகாதவாறு பார்த்துக்கொள்வார்கள். தங்களுக்கு பணம் தேவையானபோது, ஃபேன்சி நம்பர்களை புரோக்கர்களிடம் கொடுத்து விற்கச் சொல்வார்கள். அவர்கள், இதுபோல் கறுப்புப் பணம் பதுக்கவேண்டிய தேவை உள்ள நபர்களிடம் இதை விற்பார்கள். அதில் புரோக்கர் கமிஷனும் சேரும். அந்தத் தொகை போக, இவருக்கு மற்ற பணம் வந்துவிடும். இதைவிட கறுப்புப் பணத்தைப் பதுக்க, பாதுகாப்பான வேறு வழி இருக்கிறதா என்ன?'' என்கிறார் ஃபேன்சி நம்பர் பிசினஸ் ஏஜென்ட் ஒருவர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு