Published:Updated:

இந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?
இந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

அதிஷா

பிரீமியம் ஸ்டோரி
இந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

பாலச்சந்திரன் மரணத்தின்போது ஈழத்தமிழர்களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடிய சட்டக் கல்லூரி மாணவி திவ்யபாரதி, இப்போது ஆவணப்பட இயக்குநர். மலக்குழிகளில் மாண்டுபோகும் மனிதர்களின் உண்மைக் கதைகளைத் தேடித்தேடித் திரட்டி ‘விஷம் பரவட்டும்’ என்கிற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். தமிழகம் எங்கும் உள்ள துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதன் பின்னணியில் இயங்கும் சாதியவர்க்க அரசியல்... எனப் பல விஷயங்களைப் பேசுகிற படம். ‘சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’ என்ற பழநிபாரதியின் பாடல் வரியில் இருந்து படத்துக்கான தலைப்பைச் சூட்டியிருக்கிறார்.

‘`சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் இரண்டு பேர் இறந்துபோனார்கள். இருவரும் மலக்குழிக்குள் சுத்தம் செய்வதற்காக இறங்கி, அங்கே விஷவாயு தாக்கி இறந்துபோனவர்கள். அவர்கள் மாநகராட்சிப் பணியாளர்கள். அவர்களை அந்தப் பணிக்கு அமர்த்தியது மாநகராட்சி நிர்வாகம். ஆனால், அந்த மரணத்துக்கோ அந்த உயிர்களுக்கோ எந்தவித மரியாதையும் இல்லை. அவர்களுடைய மரணம் ‘சந்தேக மரணம்’ என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டது. அந்த இருவரையும் இப்படி ஒரு வேலைக்காகப் பணியமர்த்தியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இறந்துபோன இருவருக்கும் உரிய நீதி கேட்டு ஏழு அமைப்புகள் சேர்ந்து, பல போராட்டங்களை முன்னெடுத்தோம். மூன்று நாட்கள் பிணங்களை வாங்க மறுத்தோம். அவர்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தரப் போராடினோம். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. எங்கள் போராட்டம் இப்போதும் தொடர்கிறது.

ஈமச்சடங்குகளைச் செய்யக்கூட அந்தத் தொழிலாளிகளின் குடும்பத்தினரிடம் பணம் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் மூலம் பணம் திரட்டி சடங்குகளைச் செய்து முடித்தோம். இறந்துபோனவர்களில் ஒருவருடைய மனைவிக்கு மிகவும் இளவயது. பெயர் மகாலட்சுமி. அவருடைய அழுகையையும் வேதனையையும் என்னால் மறக்கவே முடியாது. இந்தச் சம்பவத்தின் தாக்கம், எனக்குள் பல நாட்கள் தீரவே இல்லை.

மதுரை மரணத்தைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே, அடுத்தடுத்து இதே மாதிரியான மலக்குழிகளில் விழுந்து இறந்துபோனவர்கள் பற்றிய செய்திகள் வெளியாகின. குறிப்பாக, நெய்வேலி மற்றும் `தலப்பாகட்டு' ஹோட்டல் மரணங்கள். இந்த மரணங்களின் பின்னணிகளைத் தேடத் தொடங்கினோம். நம்மைச் சுற்றி இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் செய்திகள் தெரியவந்தன. இங்கே அவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறை எத்தகையது என்பதை உணர ஆரம்பித்தேன். இதை ஆவணப்படுத்தவும் மக்களிடம் கொண்டு செல்லவும் முடிவெடுத்தேன்.

இது மக்களால் எடுக்கப்படும் திரைப்படம். முழுக்க முழுக்க கிரவுட் ஃபண்டிங்தான். இது குறித்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டபோது, பல நண்பர்களும் ஆர்வத்தோடு முன்வந்து 1,000, 2,000 எனச் சிறுகச் சிறுக மொத்தமாக ஒரு லட்ச ரூபாய் வரை நிதியுதவி செய்தனர். அந்த நிதியில்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன்.

இந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

இந்தப் பின்னணியில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. அவர்களிடம் எல்லா தகவல்களும் உள்ளன. அதை வைத்து அவர்கள் நிறைய நிதி உதவி பெறுகிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவிகளையும் பெற்றுத்தருவது இல்லை என்பதுதான் இன்றைய நிலை’’ - உறுதியாக ஒலிக்கிறது திவ்யாவின் குரல்.
 
``மலக்குழிகளில் மரணிக்கும் இந்த மனிதர்களுக்கு சாதி அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ உதவுவது இல்லையா?''

``இல்லை என்பதுதான் உண்மை. தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளுக்குமே துப்புரவுத் தொழிலாளர்கள், மலம் அள்ளுபவர்கள், மலக்குழிகளில் மரணிப்பவர்கள் குறித்த மிகச் சரியான புரிதலோ, அக்கறையோ இல்லை. இந்த ஆவணப்படம் எடுப்பதற்காகச் சந்தித்த வெவ்வேறு மனிதர்களின் வழியே தெரிந்துகொண்ட உண்மை இதுதான். தலித் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக இதை சாதியச் சிக்கலாக அணுகுகின்றன. அருந்ததியர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபடுவதாக நினைக்கிறார்கள். இடதுசாரி அமைப்புகள், இதை வர்க்கப் பிரச்னையாகப் பார்க்கின்றன. ஆனால், இதில் இரண்டுமே இருக்கின்றன. நம்முடைய போராட்டங்களும் தீர்வுகளும் அதற்கேற்ப அமைய வேண்டும். இந்த அமைப்புகள் மீது எல்லாம் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எங்களுடைய படத்தில் முன்வைத்திருக்கிறோம்.''

``துப்புரவுப் பணியாளர்கள் குறித்த புரிதல் என, எதைக் குறிப்பிடுகிறீர்கள்?''

‘`இந்தப் பணியில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பகுதியினர் பெண்கள்தான். குறைந்த கூலிக்கு அவர்களை விரும்பியபடி உபயோகிக்க முடியும் என்பதே இதற்குக் காரணம். அவர்கள் மீதான பாலியல் நெருக்கடிகள் சொல்லித் தீராது. நாம் இங்கே மலம் அள்ளுவதைப் பற்றி பேசுகிறோம். பெண்களுக்கான பொதுக்கழிவறைகளில் நாப்கின்கள் அகற்றுவது, மலம் அள்ளுவதைவிட மிக மோசமான வேலை. இந்தப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு, எந்தவிதப் பாதுகாப்பு சாதனங்களும் வழங்குவது இல்லை. இதை எல்லாம் வெறும் கைகளால் செய்கிறார்கள் என்பது எப்படிப்பட்ட அவலம்!

தமிழ்நாடு முழுக்க மலம் அள்ளும் தொழிலாளர்கள் பலரும் அருந்ததியினர் என்றே நினைக்கிறோம். அவர்கள் அல்லாத வேறு பல சமூகத்தினரும் இதில் ஈடுபடுகின்றனர். திருப்பூர் மாதிரியான இடங்களில் வடமாநிலத்தவர்களும் இந்த வேலைகளில் உட்படுத்தப்படுகிறார்கள். வடஇந்தியத் தொழிலாளர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கேட்பதற்கு நாதி இல்லை என்பது, அவர்களை பணிக்கு அமர்த்துபவர் களுக்குச் சாதகமான அம்சமாக இருக்கிறது. சமீபத்தில் விருதுநகரில் இறந்த வட இந்தியத் தொழிலாளர்களை மறுநாளே எரித்துவிட்டார்கள். எவ்வளவு கொடுமை இது!''

``இந்தப் படம் எடுப்பதில் என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்தித்தீர்கள்?''

``அரசிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்புகளைச் சமாளிப்பதுதான் எங்களுடைய முதல் சிக்கலாக இருந்தது. மனிதர்கள் மலம் அள்ளுவதைத் தடுக்காமல், அப்படிப்பட்டவர்கள் இருப்பது தெரியாமல் மறைப்பதில்தான் பெருமுனைப்பு காட்டுகிறது அரசு. இந்தப் படத்தை வெளியிட, அரசு கடுமையான எதிர்ப்புகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கிறேன். அப்படி ஒரு சூழல் வந்தால் யூடியூபில் வெளியிடுவேன். காரணம், இந்தப் படத்தை எடுக்கும்போதே எங்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து ஏராளமான தொல்லைகள் வந்தன. படப்பிடிப்பின்போது உளவுத்துறை ஆட்கள் எங்களைப் பின்தொடர்ந்து வந்து மிரட்டினர். மாநகராட்சி ஊழியர்களை மிரட்டிவைத்து, அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கவிடாமல் செய்தனர். அதையும் மீறித்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். `எங்கள் மாநிலத்தில் மலம் அள்ளும் பணியில் இருப்பது வெறும் 1,000 மனிதர்கள்தான்' என பொய் அறிக்கை தரும் அரசு, வேறு என்ன செய்யும்? தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் மலம் அள்ளுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் அரசு மூடிமறைக்கிறது.

இந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

பல இடங்களில் செப்டிக் டாங்குகளில் இறங்கி வேலைபார்க்கிறவர்கள், எங்களுடைய கேமராக்களைப் பார்த்ததும் பதறி அடித்து வெளியே வந்துவிடுவார்கள். முதல் நாள் காலையில் கேமரா இல்லாமல் போய், மோசமான பொதுக் கழிப்பிடங்களைப் பார்வையிட்டுத் திரும்புவோம். அடுத்த நாள் அதைப் படம் எடுக்கக் கிளம்பினால், பணியாளர்களே எங்களை அனுமதிக்க மறுப்பார்கள். அவர்களுடைய அன்றாடப் பிழைப்பு பாதிக்கப்படும் என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். எங்களிடம் பேசிய பல துப்புரவுப் பணியாளர்களும் மிரட்டப் பட்டிருக்கிறார்கள்.’’
 
``அடுத்து என்ன?''

``மதுரை மரணம், `தலப்பாக்கட்டு' மரணம் மாதிரி ஒருசில மரணங்கள்தான் மீடியாவில் பதிவாகின்றன. ஆனால், கடந்த அக்டோபர் தொடங்கி இன்று வரை எங்களுடைய ஆய்வில் தெரியவந்திருப்பது 16 மரணங்கள். எங்களுக்குத் தெரியாமல் இன்னும் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம். பல மரணங்கள், அரசினால் தொடர்ச்சியாக காவல் துறை உதவியோடு மறைக்கப்படுகின்றன. இப்படி மாண்டுபோன பலருக்கும் இன்னமும் உரிய இழப்பீடு கிடைக்க வில்லை என்பது மிக வேதனை தரும் விஷயம்.

பல குடும்பங்கள், வருமானம் இன்றி தவிக்கின்றன; பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாமல் போராடுகின்றன. எங்களுடைய ஆவணப்பட பட்ஜெட்டில் இருந்து சிறுதொகையைக் கொடுத்து உதவியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். அதில் ஒருபகுதிதான் இந்த ஆவணப்படம்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்வி, `மலக்குழிக்குள் இறங்கும் தொழில் வேண்டாம் என்றால், வேறு என்ன தொழில் செய்வது?' என்பதுதான். அதற்கான மாற்றுத்திட்டங்கள் யாரிடமும் இல்லை. மலம் அள்ளுதல் முழுக்க நவீனமயமாக்கப்பட்டு இயந்திரமயமாக்கப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் வரவேண்டும். மலக்குழி களுக்குள் இறங்குபவர்களுக்கு பணிநிரந்தரம் தருவதோ அல்லது அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்துவதோ தீர்வு ஆகாது. அப்படி ஒரு விடியலை நோக்கித்தான் பயணம். களத்தில் இறங்கிப் போராடுவோம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு