பிரீமியம் ஸ்டோரி
முன்னேறுகிறார் ஹிலாரி!

மெரிக்க அதிபராக பில் கிளின்டன் 1993-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, முதல் பெண்மணியாக ஹிலாரியும் வெள்ளை மாளிகைக்குள் முதன்முதலாக காலடி எடுத்துவைத்தார். அப்போது அவருக்கு வந்த வாழ்த்துச் செய்திகளில் ஒன்று அவருடைய பள்ளித்தோழி ஒருவர் அனுப்பியது. ‘ஹிலாரி, நீ வெள்ளை மாளிகைக்குச் சென்றதில் ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை. ஆனால், நீ அதிபராக அல்லவா அங்கு நுழைந்திருக்க வேண்டும்?’

அந்தத் தோழியின் ஆதங்கம் நினைவாகும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஹிலாரியுடன் மல்லுக்கட்டி வந்த சக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஹிலாரிக்காக வழிவிட்டிருக்கிறார். ‘ஹிலாரியுடன் இணைந்து பணியாற்றுவேன்’ என்ற அவரின் அறிவிப்பு, ஜனநாயகக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் ஹிலாரிதான் என்பதை உறுதிசெய்கிறது. நவம்பர் 8-ம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும்கூட ஹிலாரியே தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

இதற்கு ஹிலாரி நன்றி சொல்ல வேண்டியது ஒருவருக்குத்தான். அந்தப் பக்கத்தில் இருந்து போட்டியிடும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். சில வாரங்கள் முன்னர்கூட ட்ரம்ப் எங்கு சென்றாலும் அவருக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்புகள் குவிந்துகொண்டு தான் இருந்தன. `ட்ரம்ப் அதிபராவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன' என்றுதான் பல முன்னணி பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருந்தன. மிகச் சமீபகாலம் வரை சாண்டர்ஸ், ஹிலாரிக்குக் கடும் போட்டி கொடுத்துவந்தார். ஆனால், அங்கே ட்ரம்ப் அருகில்கூட இன்னொரு வேட்பாளரால் நெருங்கி வர முடியவில்லை.

இருந்தும் இப்போது நிலைமை தலைகீழாகத் திரும்பியிருக்கிறது. அதைத் தீர்மானமாக உணர்த்தும் ஒரே அளவுகோல், (வேறென்ன?) நிதிதான். இதுவரை டொனால்ட் ட்ரம்ப் பிரசாரக்கணக்கில் சேர்ந்திருக்கும் நிதி 1.3 மில்லியன் டாலர். ஹிலாரி கிளின்டனுக்குச் சேர்ந்திருப்பதோ 42.5 மில்லியன் டாலர். ஒப்பீட்டளவில் இந்த முறைதான் முதல்முறையாக இரு கட்சிகளின் தேர்தல் நிதியில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. ட்ரம்பைவிட 32 மடங்கு அதிக பணத்தை ஹிலாரி ஈட்டியிருக்கிறார் என்பதை வைத்தே அமெரிக்க ஊடகங்கள் அவருடைய வெற்றியை உறுதிப்படுத்துகின்றன. ட்ரம்பைவிட 32 மடங்கு அதிக நம்பிக்கையை ஹிலாரி வென்றிருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

ட்ரம்ப் வேண்டாம் என, கிட்டத்தட்ட தீர்மானமாகவே ஒரு பிரிவினர் முடிவுக்கு வந்ததற்கு, சென்ற மாதம் நடைபெற்ற ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு முக்கியக் காரணம். ஒமர் மட்டீன் என்னும் 29 வயது அமெரிக்கர், ஒரு கிளப்புக்குள் நுழைந்து 49 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தவிர்க்க இயலாதபடி தேர்தல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல் ட்ரம்ப் இந்தச் சம்பவத்தைப் பாய்ந்து வந்து பற்றிக்கொண்டார். ஏற்கெனவே இஸ்லாமிய வெறுப்பில் ஊறித் திளைத்துக்கொண்டிருந்தவர், கொலையாளி ஓர் இஸ்லாமியர் என்பதைப் பார்த்தவுடன் ஆவேசத்துடன் பேசத் தொடங்கி விட்டார். அப்போது இரண்டு விஷயங்களை அவர் குறிப்பிட்டார். முதலாவதாக, `முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை இனிமேலாவது தீவிரமாகத் தடுத்தாக வேண்டும்' என்றார். இரண்டாவதாக, `ஓர்லாண்டோ தாக்குதல் குறித்து அமெரிக்க முஸ்லிம்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரியும். இருந்தாலும் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள்' என்றார். முதலாவது அநீதியான பிரகடனம் என்றால், இரண்டாவது அநியாயமான குற்றச்சாட்டு. இந்த இரண்டையும் அமெரிக்கர்கள் ரசிக்கவில்லை.

இதே ஓர்லாண்டோ சம்பவத்தை ஹிலாரி எதிர்கொண்ட விதம், பரவலான பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. என்ன செய்தார் தெரியுமா? கொல்லப்பட்ட 49 அமெரிக்கர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ட்விட்டரில் வெளியிட்டு, கீழே அழுத்தமாக ஒரே ஒரு வார்த்தையைப் பதிவுசெய்தார். ‘போதும்!’

போதும் என்பதன் அர்த்தம் அமெரிக்காவுக்குத் தெரியும். `சர்வசாதாரணமாக எல்லோருக்கும் துப்பாக்கி கிடைக்கும் வழக்கம், இத்துடன் போதும்' என்பதுதான் ஹிலாரியின் நிலைப்பாடு. `துப்பாக்கி வைத்திருப்பது, அமெரிக்காவின் அடிப்படை உரிமை' என்பது ட்ரம்பின் வாதம். `ஓர்லாண்டோ கொலையாளிக்கு துப்பாக்கி சுலபத்தில் கிடைத் திருக்கக் கூடாது' என்கிறார் ஹிலாரி. கொலையான ஒவ்வொருவரிடமும் துப்பாக்கி இருந்திருந்தால், அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்பது ட்ரம்பின் தர்க்கம். ஹிலாரியின் ஆதரவு வட்டம் விரிவடைந்து வருவதைப் பார்க்கும்போது, ட்ரம்பின் `வேண்டுமை'விட ஹிலாரியின்  `போதும்' பயன் அளிக்கக்கூடியது என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹிலாரி தன்னுடைய அரசியல் வெற்றிப்பாதையை தோல்வியில் இருந்தே கட்டமைக்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக அதிபர் பிரைமரி தேர்தலில் பராக் ஒபாமாவுடன் போட்டியிட்டு தோற்றுப்போன ஹிலாரி கிளின்டன், அதில் இருந்தே தன் பாடங்களைப் படித்துக்கொள்ள ஆரம்பித்தார். தன்னை வீழ்த்திய ஒபாமாவின் அரசில் அயல்துறை அமைச்சராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். எதிலும் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் இருந்ததும், மக்களிடம் போதுமான அளவு ஒட்டாமல் விலகி நின்றதும் தன்னுடைய பலவீனங்களாக இருந்ததை உணர்ந்து சட்டென தன்னை மாற்றிக்கொண்டார்.

அமெரிக்காவையும் அமெரிக்கர் களையும் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகளில் சரியோ தவறோ, தீர்மானமான முடிவை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டார். தான் ஒரு பெண் என்பதால், தன்னுடைய வலிமை யையும் முடிவெடுக்கும் திறனையும் கூடுதல் அழுத்தம் கொடுத்து மக்கள் மனதில் பதியவைக்கவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். ஒசாமா பின்லேடனைக் கொல்லும் ராணுவத் திட்டத்தில் ஒபாமாவுடன் கலந்துகொண்ட ஒரு சிலரில் தானும் உண்டு என்பதை பலமுறை பேசியும் எழுதியும் நினைவுபடுத்தினார்.

முன்னேறுகிறார் ஹிலாரி!

ஒபாமாவோடு இணைந்திருப்பதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை முழுக்க சம்பாதித்துக்கொண்ட ஹிலாரி, இந்த இணைப்பை எப்போது துண்டிக்கவேண்டும் என்பதையும் தெரிந்துவைத்திருந்தார். 2016-ம் ஆண்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததைத் தொடர்ந்து, ஒபாமா அரசிடம் இருந்து கூடுமானவரை தன்னை விலக்கி வைத்துக்கொண்டார். சரியான ஒரு தருணத்தில் ஒபாமாவை எதிர்க்கவும் செய்தார். சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ்ஐஎஸ் பலம் பெற்றிருப்பதற்கு ஒபாமாவின் தவறான வெளிவிவகாரக் கொள்கையே காரணம் என்பதை இடித்துக்காட்ட அவர் தயங்கவில்லை.

நிலையான அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக்கொண்டார். பெரும் பணக்காரர் களுக்கு அதிக வரி விதிக்கவேண்டும். சமூகநலத் திட்டங்களை அரசிடம் இருந்து பறித்து தனியார்களிடம் கொடுக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் எனச் சொல்ல முடியாது. துப்பாக்கி உரிமம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாசுபாட்டைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தவேண்டும். கருத்தடை செய்துகொள்ள ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண்களையும் சிறுபான்மையினரையும் பணியில் அமர்த்திக்கொள்வது சட்டமாக்கப்பட வேண்டும். சுதந்திரச் சந்தை ஆதரிக்கப்பட வேண்டும், விரிவாக்கப்பட வேண்டும். மற்றபடி, ராணுவ விரிவாக்கம் அவசியமற்றது.

இதை எல்லாம் பார்க்கும்போது, இயல்பாகவே ஒருவருக்கு ஏற்படும் சந்தேகம் `ஹிலாரி கிளின்டன் இடதுசாரியா, வலதுசாரியா?' என்பதுதான். இந்தக் கேள்வியை நீண்ட காலமாகவே அமெரிக்கா விவாதித்துக்கொண்டிருக்கிறது.

மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து பேசும் அதே ஹிலாரி, மக்கள் நலத் திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். ஈராக் போரை ஆதரித்த அதே ஹிலாரி, தற்சமயம் டொனால்ட் ட்ரம்பை `போர் வெறியர்' என வர்ணிக்கிறார். ஆக மொத்தம், ஹிலாரி இடதும் அல்ல... வலதும் அல்ல. எங்கே செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ, அந்தப் பக்கம் அப்போதைக்கு சாய்ந்துவிடுவதுதான் அவருடைய அரசியல்.

முன்னேறுகிறார் ஹிலாரி!

இதை வைத்துப் பார்க்கும்போது, ஹிலாரியை அவருடைய கொள்கைகளுக்காக ஆதரிப்பவர்களைக் காட்டிலும் டொனால்ட் ட்ரம்பை அவருடைய கொள்கைகளுக்காக எதிர்ப்பவர்களே அதிகம் என்பது புரிகிறது. இதன் பொருள், ட்ரம்ப் எதிர்ப்பே ஹிலாரி ஆதரவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான். ட்ரம்பின் வெறுப்பு அரசியலை அமெரிக்கா வெறுக்கிறது. அதனாலேயே ஹிலாரியை அது நேசிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு