Published:Updated:

சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?
சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

நா.ப.சேதுராமன், கே.புவனேஸ்வரி, படம்: தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி
சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

ரு கொலை வழக்கின் முடிச்சு அவிழ்வதற்குள் அடுத்தடுத்த கொலைகள். நடுரோட்டில் கொலை, வீட்டுக்குள் கொலை, ரயில் நிலையத்தில் கொலை... என தமிழகத்தில் கொலைகளின் பயங்கரம் கூடிக்கொண்டே போகிறது.

கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சென்னை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற  கணிப்பொறியாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நமக்கு மிக அருகில் உள்ளவர்களையும் சந்தேகத்துக்கு உட்படுத்தியிருக்கிறது. அந்த அளவுக்கு அந்தப் படுகொலைச் சம்பவம் மனித மனங்களைப் புரட்டிப்போட்டிருக்கிறது.

சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

எல்லா நாட்களைப்போலத்தான் அன்றைய நாளும் சுவாதிக்கு விடிந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த சுவாதியை,  வழக்கம்போல ரயில் நிலையத்தில் விடுவதற்காக   அவரது அப்பா வண்டியைக் கிளப்பினார். ``அப்பா குறுக்க எறும்பு போகுது. பார்த்துப் போங்க... நசுக்கிடாதீங்க' என்பதுதான் சுவாதி கடைசியாக அவரது அப்பாவிடம் பேசிய வார்த்தைகள். அந்த அளவுக்கு சக உயிர்களை நேசித்த பெண். அவளுக்கு இப்படி ஒரு மரணம் என்பதை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை'' என உடைந்து அழுகிறார் சுவாதியின் சித்தப்பா கோவிந்தராஜ்.
 
சுவாதி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர். அப்பா சந்தான கிருஷ்ணன், ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து  ஓய்வுபெற்றவர். ரயில்  நிலையத்தில் பெண்கள் பெட்டி நிற்கும் இடத்துக்கு அருகே இருந்த நாற்காலியில் சுவாதி உட்கார்ந்திருந்த போதுதான், அந்த மர்மநபர் வெட்டிச்  சாய்த்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.

சுவாதி கொலைசெய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கண்காணிப்பு கேமரா  இல்லாததே காவல் துறையால் குற்றவாளியை  நெருங்க முடியாமல் இருப்பதற்குக் காரணம்.  அந்தப் பகுதி  வீடுகளில் பொருத்தப்பட்ட  சி.சி.டி.வி கேமராக்களில் இருந்த வீடியோ காட்சிகளைக்கொண்டுதான், கொலையாளி யார் என இப்போது புலனாய்வு செய்துகொண்டிருக் கிறது காவல் துறை.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளில் மட்டும் 7,567 கொலைகள் நடந்துள்ளன எனக் குவியும் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. கொலை முயற்சி சம்பவங்கள் 11,845. சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 கொலைகள் நடந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கொலைகள் நடுரோட்டில் நடந்தவை.  பொதுமக்கள்  கண் எதிரே  நடக்கும்  படுபயங்கரச் செயல்களால், சென்னை மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இயங்கும் மாநிலத் தலைநகரிலேயே நிலைமை இப்படி என்றால், மற்ற மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கும் என்ற அச்சம், மக்கள் மனத்தில் சூழ ஆரம்பித்திருக்கிறது.

எப்படி நடக்கிறது இத்தனை கொலைகள், எங்கே பிரச்னை, யார் மீது தவறு? கண்முன்னே நடக்கும் இத்தனை கொலைகளையும் காவல் துறையால் ஏன் கட்டுப்படுத்தமுடியவில்லை?
காவல் துறை வட்டாரங்களில் பேசியபோது விதவிதமான சிக்கல்களை முன்வைத்தனர். சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், இந்தக் கொலைகளில் பாதிக்கு மேல் தடுக்க முடியும் என்கிறார்கள்.

சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

``ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிலும் தலா 5 `சோர்ஸ்' என சென்னை மாநகரில் இருக்கும் 134 காவல் நிலையத்திலும் போலீஸ் சோர்ஸுக்கான ஆட்கள் உண்டு. போலீஸ் கவனத்துக்கே வராமல் இருக்கும் சமூகவிரோதச் செயல்களை, அங்கு உள்ள சோர்ஸ்கள் சேகரித்து, கமிஷனர் லெவலுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். கமிஷனர், உரிய சமயத்தில் தனக்குக் கீழ் இருக்கும் நம்பிக்கையான ஆட்கள் மூலம், அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்துவார். இது காலங்காலமாக இருந்துவரும் ரகசிய நடைமுறை. ஆனால், இன்று அப்படிப்பட்ட சோர்ஸுகள் இல்லாததே கொலைகளைகளும் குற்றச்சம்பவங்களும் அதிகமாகக் காரணம்'' என்கிறார் நம்மிடம் பேசிய தமிழகக் காவல் துறை அதிகாரி ஒருவர்.

இங்கே நடக்கும் பெரும்பாலான கொலைகளின் பின்னணியில் கூலிப்படைகள் செயல்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. முன்னர் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்தக் கூலிப்படையினர், இப்போது தமிழகத்தில் இருந்தே குறைந்த சம்பளத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தக் கூலிப்படைகளும் அவை செயல்படும் விதமும், காவல் துறைக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்கிறார்கள். இதில் பெரும்பாலான சம்பவங்கள் நடப்பதற்கு `பிரிசன் ஆபரேஷன்' ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். பல கொலைகளுக்கான திட்டமிடல்கள் சிறையில் வெற்றிகரமாகச் செய்துமுடிக்கப்படுகின்றன என்கிறார்கள்.

``சிறையில் இருக்கும் ஒரு கைதியைப் பார்க்க ஒரே ஆள் தொடர்ந்து மனு போட்டுக்கொண்டிருக்கிறான் என்றால், அவனைக் கண்காணிக்க வேண்டும். சிறையில் இருக்கும் அவனுடைய லீடரிடம் இருந்து அவன் என்ன மாதிரியான வேலைகளை வாங்கிக்கொண்டு வெளியே போகிறான், அதை நிறைவேற்றுகிறானா, அவன் எந்த போலீஸ் லிமிட்டில் இருந்து வருகிறான்... என்பது போன்ற தகவல்களை உடனுக்குடன் மேல் அதிகாரிகளுக்கு, சிறை வாசலில் இருக்கும் ஒற்றுப் பிரிவு போலீஸார் சொல்ல வேண்டும்.

அதேபோல் எந்தத் தேதியில் எந்தக் குற்றவாளி சிறையில் இருந்து வெளியே வருகிறான், அவன் எந்த டீமின் அசோசியேட், அதேபோல் சிறைக்கு உள்ளே வரும் குற்றவாளி ஏதாவது திட்டத்தோடு வருகிறானா... என மிகவும் கண்காணிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இவை இப்போது சரியாக நடப்பது இல்லை என்பதைத்தான், நாள்தோறும் தொடரும் இந்தக் கொலைச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன'' என்கிறார் அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி.

ஒருபக்கம் சுவாதியின் கொலைகளுக்காக ஊரே கண்ணீர் சிந்தி, உரிய நடவடிக்கைக்காகப் போராடிக்கொண்டிருக்க, சேலத்தில் காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த வினுப்ரியா என்ற 20 வயது பெண், தன் முகத்தின் போட்டோவை மார்ஃபிங் செய்து ஆபாசமான படங்களோடு இணைத்து ஃபேஸ்புக்கில் வெளிவந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரும், அவரது குடும்பத்தினரும் காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். வழக்கம்போல போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வினுப்ரியா அவமானம் தாங்காமல், தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நடுரோட்டில் அரிவாளால் வெட்டினால் மட்டும்தான் கொலையா? நீதி மறுக்கப்பட்டதால் இறந்துபோன வினுப்ரியாவின் மரணத்தை வெறும் தற்கொலை என எப்படிக் கடந்துபோக முடியும்?

ஊடக முக்கியத்துவம் பெற்றதால் சுவாதியின் கொலை நமக்குத் தெரியவருகிறது. அதைப் பற்றி அதிகமாகவே கவலைப்படுகிறோம். அவருக்காகக் குரல்கொடுக்கிறோம். காவல் துறையும் அதிக சிரத்தையோடு போராடுகிறது. ஆனால், எத்தனை சுவாதிகள் இதே தமிழ்நாட்டில் கொல்லப் படுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 81 ஆணவப் படுகொலைகள் இதே தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. இந்தக் கொலைகளில் குற்றம்சாட்டப்பட்டவர், ராஜமரியாதையோடு ஜாமீனில் வெளியேறி தன் கொலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

சிறுசேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியையும், அவருடைய கொலைக்குப் பிறகு அவசரமாகக் கைதுசெய்யப்பட்ட மூன்று வடநாட்டு இளைஞர்களையும் மறந்துவிட முடியாது. அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா என்பதும் இன்று வரை யாருக்குமே தெரியாது.

இங்கே நமக்கான பாதுகாப்பை வழங்கப்போவது யார்? அதில் யாருக்கு எல்லாம் பொறுப்பு இருக்கிறது. நமக்கு உரிய பாதுகாப்பையும் நீதியையும் வழங்க வேண்டிய இந்த அமைப்பு மிகச் சரியாக இயங்குகிறதா..? என்று நம்மை நாமே பரிசோதித்துப்பார்க்க வேண்டும். இங்கே எந்தக் குற்றவாளியும், தானாக உருவெடுத்துவந்து தொழில்செய்துகொண்டிருப்பது இல்லை. ஒவ்வொரு குற்றவாளிக்கும் கொலைகாரனுக்கும் பின்னால் அதிகார மையத்தின் ஆதரவுக் கரங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறிந்து களைய வேண்டும். அதுதான் மாற்றத்துக்கான முதல் அடியாக இருக்கமுடியும்!

சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

ஹென்றி  டிஃபேன், மனித உரிமை செயற்பாட்டாளர்  

``சுவாதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த  மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி  உள்ளது. இதில் பொதுமக்களை குறைகூற முடியாது. ஒட்டுமொத்தக் காவல் துறைதான் இதற்குப்  பொறுப்பு ஏற்க வேண்டும். `காவல் துறை  உங்கள்  நண்பன்’ என்கிறார்கள். உண்மையில் நண்பனாகச் செயல்படுகிறார்களா?   வழக்குகளில் சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வரும்போது, அவர்களை காவல் துறை  நடத்தும் விதம்தான் இதுபோன்ற சம்பவங்களில்  பொதுமக்கள் ஒதுங்கிப்போக காரணம். காவல் துறை  செய்யும் வேலையில்  அவர்கள் தலையிட்டால் பிரச்னை வந்துவிடும் என்பதால், சுவாதியைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. உண்மையில் பொதுமக்களோடு காவல் துறை நண்பனாகப் பழகும்போதுதான்  இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும்!’’

சுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

அ.மார்க்ஸ் - சமூக  செயற்பாட்டாளர்

``காவல் துறைக்கும் - கூலிப்படைக்கும்  இடையே  உறவு இருப்பதாக முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், தன் ஆய்வு ஒன்றில் தெரிவித்தார். இதுபோன்ற படுகொலைகள் நடக்கும்போது யாராவது  இரண்டு பேரைச்  சுட்டுக்கொன்றுவிட்டு  தமிழகக்  காவல் துறை , சட்டம்-ஒழுங்கு  சரியாக  உள்ளதாகக்  காட்டிவிடுகிறார்கள். உண்மையில் இரண்டு  தரப்புக்கும்  இடையே  உள்ள  உறவு   பணநோக்கத்தின் காரணமாக ஏற்பட்டது என்றும்  கூறுகின்றனர்.  கூலிப் படைகளின்  அடிப்படைகளை  நன்கு அறிந்தவர்கள் காவல் துறையினர். அவர்கள் நினைத்தால் இவற்றை ஒழிக்க  முடியும்.  அரசியல் தலைவர்களும் சமூக  ஆர்வலர்களும் ஊடகங்களும் இந்தப் பிரச்னை குறித்துப் பேசிவந்த நிலையில், காவல் துறை கண்டும்காணாமல்  இருந்துவிட்டது!’’

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த முக்கியப் படுகொலைகள் இவை...

• மே 30-ம் தேதி, சென்னை எழும்பூரில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோகினி கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது கை-கால்களைக் கட்டிப்போட்டு கொடூரமாகக் கொன்றிருந்தனர்.  அதே பகுதியில் மூதாட்டி ஒருவர், கழுத்தை நெறித்துக்  கொலை செய்யப்பட்டார்

•   ஜூன் 5-ம் தேதி, சென்னை கோடம்பாக்கத்தில்  வழக்குரைஞர் முருகன், பட்டப் பகலில் கொல்லப்பட்டார். அவரைக் கொலையாளிகள் சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டுத் தப்பினர். இந்தக் கொலைக்கு முருகன் மனைவி லோகேஸ்வரிதான் காரணம் எனத் தெரிய வந்தது. அவரையும் கொலையாளிகளையும் போலீஸ் கைதுசெய்தது.

•   ஜூன் 7-ம் தேதி, ஆர்.டி.ஐ அலுவலர் பரஸ்மல் ஜவன்ராஜ், சென்னை-பெரியமேடு பேக்கர்ஸ் சாலை வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, படுகொலை செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து  அண்ணா நகரில் கூலித் தொழிலாளி வீரைய்யா அடித்தே கொல்லப்பட்டார்.

•   ஜூன் 22-ம் தேதி, வியாசர்பாடியில் வழக்குரைஞர் ரவியை ஓட ஓட விரட்டி கொலை செய்த  அதிர்ச்சி சம்பவம் முடிவதற்குள், 24-ம் தேதி காலை தனியார் மென்பொருள் நிறுவன கணிப்பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலைசெய்யப்பட்டது, பொது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

•   ஜூன் 24-ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாள் என்ற பெண்ணும் அவரது மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோரை, தந்தை  என்று சொல்லப்பட்ட சின்ன ராஜ் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

•   ஜூன் 24 -ம்  தேதி, சென்னை - கேளம்பாக்கம் அருகே, தையூர் ஊராட்சி அலுவலகம் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியது. கொலைசெய்யப்பட்டுக் கிடந்தவர் மைலாப்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பது தெரியவந்தது.அவரது நண்பர்கள் நாகராஜன், மணி மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரும் முன்பகை காரணமாகக் கொலைசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

•   ஜூன் 26 -ம் தேதி  இரவு,  நந்தனம் அண்ணா சாலை பகுதியில் ரௌடி வேலு,  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு