Published:Updated:

இது நமக்கான கேள்வியும்கூட!

இது நமக்கான கேள்வியும்கூட!

பிரீமியம் ஸ்டோரி
இது நமக்கான கேள்வியும்கூட!

ந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகள், நமது சமூகத்தின் கலாசார வேர்கள் குறித்துக் கவலைகொள்ளவைக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சுவாதியின் படுகொலை, தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில் நம்மிடையே சில கேள்விகள் எழுகின்றன.

முதல் கேள்வி... ரயில்வே போலீஸாரின் பாதுகாப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகள் பற்றியது. தலைநகரத்தின் முக்கியமான ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஏன் காவலர்களே இல்லை? தெருவோரக் கடைகளில்கூட இரண்டு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுகிற இந்தக் காலத்தில், சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள்கூட இல்லை என்பது, என்ன மாதிரியான அலட்சிய மனோபாவம்?

அடுத்த கேள்வி... பொதுமக்களாகிய நம்மை நோக்கி எழுப்பப்படவேண்டியது. சுவாதி படுகொலை நடந்தபோது, சுமார் 50 நபர்கள் வரை அதே ரயில் நிலையத்தில் இருந்ததாகச் செய்தி. ஓர் இளம்பெண் நம் கண் முன்னர் படுகொலைக்கு உள்ளாக்கப்படும்போது, ஏன் யாருக்குமே அதைத் தடுக்க வேண்டும் என்றோ, குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்றோ... கூச்சலிடக்கூட ஏன் தோன்றவில்லை? கொலை நடந்த பிறகும்கூட, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏன் பொதுமக்கள் எவரும் முயலவில்லை? சரிந்துகிடந்த சுவாதியின் உடலை துப்பட்டாவால் மூடக்கூட யாரும் முன்வரவில்லையே... அந்த அளவுக்கா நம்முடைய உணர்வுகளை இழந்து நாம் வெற்றுக்காகிதங்களாகி நிற்கிறோம்? பலத்த மழை பெய்து, பெருவெள்ளம் நம்மைச் சூழ்ந்தபோது, இயற்கைப் பேரிடரையும் எதிர்த்து, களம் இறங்கி நிவாரணப் பணிகளைச் செய்து, ‘சென்னை’ என்பதை பெருமைக்குரிய நகரமாக மாற்றிய நாம்தானா, இப்படிப் பயந்து ஒதுங்கிப்போவது?

சென்னையில் இப்படிப்பட்ட கொலைகள் தற்போது வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கூலிப்படைக் கொலைகள் பற்றிய செய்திகள் இன்றி நாட்கள் நகர்வதே இல்லை. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், பட்டப்பகலில் எந்தவித அச்சமும் பதற்றமும் இன்றி இந்தக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. ‘ஜெயலலிதா ஆட்சியில் வேறு பல பிரச்னைகள் இருந்தாலும், சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும்’ என்ற கற்பிதம், உண்மை முகம் காட்டத் தொடங்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே சுவாதி இறந்துவிட்டார் என்று தாங்களாகவே முடிவெடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு போலீஸ் கொண்டுசெல்லவில்லை என்பது எத்தனை பெரிய அநீதி. இனியும் முந்தைய காலங்களின் கொலை - கொள்ளைகளின் புள்ளிவிவரங்களைக் காட்டி, சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக, சட்டமன்றத்தில் சம்பிரதாய வார்த்தைகளை உதிர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையான தேவை, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுதான்.

நம் சமூகமும் ஆளும் அரசும், தங்களைப் பற்றி சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டிய தருணம் இது. சமூகம் என்பது நான்கு பேர். அந்த நான்கு பேரும் தனக்குள்ளேயே தனித்துப்போக நேர்ந்தால், பொதுவெளியில் தன் கண் முன்னால் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக சிறு கல் வீசவும் அஞ்சினால், சிறிய முனகலை எழுப்பவும் தயங்கி ஒதுங்கினால், நம்மால் உயரிய சமூகமாக உருப்பெறவே முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு