Published:Updated:

இதுதானா பெண்களுக்கான நீதி? - (ஆண் திமிர் அடக்கு!)

 இதுதானா பெண்களுக்கான நீதி? - (ஆண் திமிர் அடக்கு!)
பிரீமியம் ஸ்டோரி
News
இதுதானா பெண்களுக்கான நீதி? - (ஆண் திமிர் அடக்கு!)

நான்கு பெண்கள்... நான்கு பார்வைகள்!கவிதா முரளிதரன்

 இதுதானா பெண்களுக்கான நீதி? - (ஆண் திமிர் அடக்கு!)


சுவாதியின் கொலை, அதன் விசாரணை... என நாம் எல்லோரும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக இருந்த அதே காலகட்டத்தில்தான், சேலத்தில் வினுப்ரியா என்கிற பெண் தற்கொலை செய்துகொண்டார். ஒருதலைக் காதல் காரணமாக அவரது புகைப்படங்களை ஒரு நபர் அதற்கான செயலியின் மூலம் மிக ஆபாசமான முறையில் மாற்றி, ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருக்கிறார். அதன் மீது புகார் தரப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லாததால், வினுப்ரியா தற்கொலை செய்துகொள்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்ட உடனே அந்த ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு, அடுத்த நாளே அந்தக் குற்றத்தைச் செய்த சுரேஷ் என்பவர் கைதுசெய்யப்படுகிறார்.

இந்தச் சூழலில் உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டும்? சமூக ஊடகங்களில் ராம்குமாருக்கு எப்படி விதவிதமான தண்டனைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோமோ, அதைப்போலவே வினுப்ரியாவின் வழக்கில் கைதாகியிருக்கும் சுரேஷ் மீதும், ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க வினுப்ரியாவின் பெற்றோரிடம் லஞ்சம்கேட்ட போலீஸார் மீதும் கோபப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களின் இயல்பாக அதுவே இருந்திருக்கும். ஆனால், நடந்துகொண்டிருப்பது என்ன தெரியுமா?

பெண்களுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை புகட்டப்படுகிறது. உயர் பொறுப்பு வகித்த ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவரோ, சமூக வலைதளங்களில் பெண்கள் புகைப்படங்கள் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும், சமூக விரோதிகள் அதைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் எனக் கவலைப்படுகிறார். அப்படிப் பயன்படுத்தும் சமூக விரோதிகளுக்கு என்ன தண்டனை என்பது பற்றி எல்லாம் அவர் பேசியதாகத் தெரியவில்லை.

 இதுதானா பெண்களுக்கான நீதி? - (ஆண் திமிர் அடக்கு!)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிர்பயா தொடங்கி சுவாதி வரையில், பல பிரச்னைகளில் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தும் ‘தார்மீகக் கோபம்’, வினுப்ரியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுரேஷ் மீதோ அல்லது லஞ்சம் வாங்கிய காவல் துறையினர் மீதோ வெளிப்படாததன் உளவியல் புரியாதது அல்ல.

நிர்பயா போன்ற வெகுசில `அபூர்வ’ வழக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் பெண்கள் மீதான வன்முறைக்குக் காரணம் பெண்களேதான் என்ற ஆண்மையக் கருத்தியலில் இருந்து விடுபட்டவை அல்ல சமூக ஊடக `நீதி மன்றங்கள்’. நிர்பயா பிரச்னையில்கூட `அந்த நேரத்தில் ஏன் ஒரு பெண் பேருந்தில் ஆண் நண்பரோடு பயணிக்க வேண்டும்?' எனக்  கேள்வி எழுப்பிய சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் இருக்கிறார்கள்.

சுவாதி விஷயத்திலும் இது நடந்தது.  சுவாதியின் நண்பர்கள் பற்றிய செய்திகள் கசியத் தொடங்கியபோது, சுவாதி பற்றிய ‘புனித பிம்பம்’ ஒருசிலரின் சமூக ஊடகங்களில் வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டது. கடவுள் பக்தி நிரம்பியவர், அதிர்ந்து பேசாதவர், ஆண்களுடன் பழகாதவர் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. அதை எல்லாம் வாசிக்கும்போது, `ஒருவேளை அந்த இயல்புகளைக் கொண்டவராக இல்லாவிட்டால், சுவாதியின் கொலை நியாயமானதாகியிருக்குமா?' என்ற கேள்வி எழாமல் இல்லை. சுவாதிக்காக நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஒன்றில் ‘சுவாதியைக் கொலை செய்வதைவிட கொடூரமானது, அவரது நடத்தையைக் கொலைசெய்வது' என்று எழுதிய பதாகை தெரிந்தது.

மகள் இறந்தாலும் சரி... சாதி, கௌரவம் முக்கியம் என்ற அடிப்படையைக்கொண்ட ஆணவக்கொலைகளின் பின்னால் உள்ள உளவியலுக்கும், இது மாதிரியான ‘நடத்தைக் கொலைகள்’ பற்றிய அதீதக் கவலைகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? `நடத்தை சரியில்லாததால் அல்லது அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டால் கொல்லப்படுவதும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பெரும்பாலும் ஏன் ஒரு பெண்ணாகவே இருக்கிறார்?' என்ற கேள்வி, ஏன் நம்மில்  பலருக்கும் எழுவதே இல்லை? அதைப் பற்றி பேசாமல், கொல்லப்படும் / வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணின் நடத்தையைப் பற்றி ஏன் தீராத விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்? `என்னை என் பெற்றோர்கூட நம்பவில்லை’ என வினுப்ரியாவின் தற்கொலைக் கடிதம் சுமக்கும் துயர் மிகுந்த கேள்வியும் இதுதான்.

ஏதோ ஒருவகையில் `நடத்தைக் கொலை’ செய்யப்பட்ட ஒரு பெண், உயிருடன் இருக்கக் கூடாது அல்லது அவர் பொதுவாழ்வில் இயங்கக் கூடாது என்ற மிக நுணுக்கமான, கண்ணுக்குப் புலப்படாத நிர்பந்தத்தை சமூக ஊடகங்களும் சேர்ந்து இப்போது உருவாக்குகின்றன. சுவாதி, வினுப்ரியா மட்டும் அல்ல, சமூக ஊடகங்களில் அன்றாடம் பல `நடத்தைக் கொலைகள்’ நடக்கின்றன. இந்த நடத்தைக் கொலை மிரட்டல்கள் எல்லாமே பெண்களை சமூக ஊடகங்களில் இருந்தும், பொதுவெளிகளில் இருந்தும் துரத்தி வீட்டில் முடக்கும் முயற்சியே.

சுவாதி கொலை வழக்கில் ஒரு புறம் அவரது நடத்தை குறித்த கேள்விகளும், அது சார்ந்த பதற்றமான விளக்கங்களும் சமூக ஊடகங்களில் சுற்றிக்கொண்டிருந்த அதே நேரம், இன்னொரு புறம் கொலை பற்றிய இணைப் புலனாய்வையும் சிலர் நடத்திக்கொண்டிருந்தார்கள். எந்த விசாரணையும் இன்றி அதில் குற்றவாளியாக்கப் பட்டவர் ஓர் இஸ்லாமிய இளைஞர். சுவாதியின் கொலை, காதல் ஜிகாத்தாக மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவு வேறாக இருந்தபோதும் அது பற்றிய குற்றவுணர்வோ, வெட்கமோ அதைப் பரப்பியவர்களிடம் கொஞ்சமும் இல்லை. மாறாக, மதப் பிரச்னையில் இருந்து அதைச் சாதிப் பிரச்னையாக மாற்ற முனைந்தார்கள்.

`சுவாதியின் கொலை `Crime for passion' எனப்படும் உணர்ச்சிக் கொலை' என்கிறது போலீஸின் முதல்கட்ட விசாரணை. இந்த அடிப்படைப் புரிதல் இல்லாத சமூக ஊடக நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளில், `சுவாதி போன்ற உயர்சாதியைச் சேர்ந்த, படித்த, நல்ல பணியில் உள்ளவர்களின் காதலுக்குத் தகுதியற்றவர்கள் ராம்குமார் போன்றவர்கள்’ என, சாதிய வன்மம் வெளிப்பட்டது.

அதற்குத் தண்டனையாக எந்தக் குற்றமும் செய்யாத ராம்குமாரின் சகோதரியின், அம்மாவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆடி கார் ஏற்றி ஒரு தொழிலாளியைக் கொன்ற இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிடாமல் காப்பாற்றப்பட்ட ஊடக நெறிகள், ராம்குமார் போன்றோரின் வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை வெளியிடும்போது காணாமல்போகின்றன. இந்த ஊடக அறத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய சமூக ஊடகவியலாளரான  ஒரு பெண், `ஊடகவியலாளருக்கு, ட்விட்டரில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்' என எழுதுகிறார்.

பல நேரங்களில் சமூக ஊடகங்கள் கட்டப் பஞ்சாயத்துகளாக உருவெடுக்கும் அவலம்தான் நடக்கிறது. பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் இந்தப் பஞ்சாயத்துகளில் எந்த விசாரணையும் இன்றி குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

காதலை நிராகரித்ததால், அவமானப் படுத்தியதால் அரிவாளை எடுத்து வெட்டிக்கொன்றதாகச் சொல்லப்படும் ராம்குமார் மட்டும்தான் இங்கே குற்றவாளியா?