Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

ப்போது எந்தப் பள்ளிக்குச் சென்று கண் பரிசோதனை செய்தாலும், நூற்றுக்கணக்கான `கண் நோயாளிகளை’க் கண்டறிந்துவிட முடியும். இன்னும் சில ஆண்டுகளில், மிக அதிகமான சிறுவர்கள் பார்வைக் குறைபாடு உள்ள  நோயாளிகளாக மாறிவிடும் சூழல் உள்ளது. அப்படி ஒரு சூழல் உருவாகிவிடாமல் தடுக்க வேண்டுமானால், நமது இல்லங்களின் சூழலை மாற்றியமைக்க வேண்டும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாழ்க்கைக்குத் தேவையானதைக் கண்டு களிக்கவும், தேவையற்றதை அறிந்து ஒதுக்கவும்தான் `விழி’ எனும் புலன் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற உயிரினங்களின் பார்வைத்திறன், படைப்பின் விதிகளை மீறாது. யானைக் கன்றும் பாம்புக் குட்டியும் ஒரே இடத்தில் திரிந்தாலும், பருந்தின் பார்வைக்கு பாம்புக் குட்டிதான் தெரியும். மீன்கொத்திகளைப் பாருங்கள். குளத்தின் மேல் பத்து அடி உயரத்தில் பறந்தாலும், நீரோட்டத்தின் அடியில் ஓடும் மீன்கள் மட்டுமே தெள்ளத்தெளிவாகத் தெரியும். மரங்கொத்திகளோ, மரத்தண்டின் உள்ளே இருக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் துல்லியமாக அறியும்.

`பார்வை’ என்பது, கண்களால் மட்டும் கிடைக்கும் புலன் அறிவு அல்ல; உள்ளுணர்வும் கண்களின் புலன் அறிவும் இணைந்து கிடைப்பது. அன்றாடம் கடந்துசெல்லும் பாதையில்கூட உங்களால் எல்லாவற்றையும் பார்த்துவிட முடியாது. மளிகைக் கடையைத் தேடிப் போனால், உங்கள் கண்களுக்கு மளிகைக் கடைகள்தான் முதன்மையாகத் தென்படும். மருந்துக் கடையைத் தேடிப் போனால், மருந்துக் கடைகள்தான் முதன்மையாகத் தென்படும். எதைத் தேடிச் செல்கிறீர்களோ, அதைத்தான் உங்கள் கண்கள் முதன்மைப்படுத்திக் காட்டும்.

உண்மையில், கண்கள் எல்லாவற்றையும் காண்கின்றன. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் பார்வையாக மாறிவிடாது. கண்ணில் தெரிபவை யாவும் காட்சிகளே, மனதில் பதிபவை மட்டுமே பார்வைகள். மற்ற உயிரினங்கள், மனிதர்களைக் காட்டிலும் தெளிவான, சிறப்பான பார்வைத்திறன் கொண்டவை. ஏனெனில், அவற்றின் உள்ளுணர்வும் கண்களும் எப்போதும் ஒத்திசைவுடன் இயங்கும். மரங்கொத்திகளும் மீன்கொத்திகளும் இன்னபிற உயிரினங்களும், இந்த இணைப்பை சிறப்பாகப் பயன்படுத்தித்தான் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன.

கண்கள் என்பது, அக உலகுக்கும் புற உலகுக்குமான இணைப்புப் பாலம். மனிதர்களின் கண்கள், இந்தச் சமூகத்தின் கொடூரமான தாக்குதலுக்கு இரையாகின்றன. தேவையானவற்றை மட்டுமே காணப் படைக்கப்பட்ட விழிகளும், தேவையானவற்றை மட்டுமே உணர படைக்கப்பட்ட மனமும் இங்கே முரண்படுகின்றன. உள்ளுணர்வு மனதின் வழியாகக் கூறும் அறிவுரைகளை, இந்தச் சமூக மனிதர்கள் நிராகரிக்கிறார்கள்.

`இரவுப் பொழுது, ஓய்வுக்கானது’ என்பது விதி. இந்த விதியின் மீது மனிதகுலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் எந்தக் கேள்வியும் எழுந்தது இல்லை. ஆனால் இப்போது, இரவுபொழுதுகள் யாவும் அலைச்சல் மற்றும் மனஉளைச்சலுக்கானவையாக மாற்றப் பட்டுள்ளன. `இரவில் ஓய்வெடுக்காதவர்களுக்கு, பார்வைத்திறன் பாதிக்கப்படும்' என்ற உண்மை, மருத்துவமுறைகளுக்கும் அப்பாற்பட்டது. அதாவது, இந்த உண்மை இயற்கையின் நியதிகளில் ஒன்று. இதைச் சொல்வதற்கு மருத்துவர்கள் தேவை இல்லை.

நமது மரபு மருத்துவக் கொள்கைகளின்படி, கண்களுக்கும் கல்லீரலுக்கும் நேரடியான உறவு உண்டு. கண்களும் கல்லீரலும் உருவ அமைப்பில் ஒரேவிதமானவை. அதேபோல காதுகளும், சிறுநீரகமும் நுரையீரலும் உருவ அமைப்பில் ஒரே தன்மைகொண்டவை. இரவில் கண் விழித்தால், கல்லீரல் அதிக வெப்பம் அடையும். இதனால், கண்களில் பாதிப்புகள் உருவாகத் தொடங்கும். இரவில் விழித்திருந்தால், கல்லீரல் மட்டும் அல்ல... உள்ளுறுப்புகள் அனைத்தும் சீர்கெடும்.

இரவு என்பது, பெரும்பாலான பருவங்களில் 7 மணிக்கே தொடங்கிவிடுகிறது. 7 மணிக்குப் பிறகு, உடலாலும் மனதாலும் அலைதல் தவறு. கதிரவன் மறைந்த பின்னர் பூமி எப்படிக் குளிர்கிறதோ, அதேபோல மனமும் உடலும் குளிர்ந்து உறங்க வேண்டும் அல்லது உறவுகொள்ள வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இப்படித்தான் நமது கிராமங்கள் இருந்தன. தொலைக்காட்சிப் பெட்டிகளின் படையெடுப்புக்குப் பிறகு, கிராமங்களின் இரவுகளும் ஒழிந்துபோயின.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

மனதைப் பதற்றம் அடையச் செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மனம் கெட்டுப் போகிறது. பல தொலைக்காட்சித் தொடர்களில் பயன்படுத்தப்படும் சொற்கள், பின்னணி இசை ஆகியவை மனதுக்கு இதமாக அல்லது கடுமையாக உள்ளனவா என்பதை, சற்று சிந்தித்துப்பாருங்கள்.

இயற்கையில், ஒளியும் ஒலியும் இணைந்தே இருப்பதைக் கவனியுங்கள். பொழுது புலரும்போது ஒளியாகிய வெளிச்சம், நிலத்தில் இறங்குகிறது. அதே கணத்தில் ஓசையும் பறவைகளின் வழியாகக் கேட்கத் தொடங்குகிறது. எவ்வளவு பெரிய மாநகரத்திலும் இன்னும் பறவைகள் வாழ்கின்றன. அவை யாவும் கதிரவன் வருகையை அறிவிக்கின்றன. அந்திப் பொழுதில், வெளிச்சம் குறையத் தொடங்கும் முன்னர் எல்லா பறவை களும் கூடு திரும்பிவிடுகின்றன. வெளிச்சத்தோடு சேர்ந்து ஓசையும் ஒடுங்கிவிடுகிறது. இருள் அமைதிக்கானது; வெளிச்சம் ஓசைக்கானது.

இப்போதைய தலைமுறையினருக்கு இரவுப் பொழுது 12 மணி வரைக்கும் நீள்கிறது. அதாவது மறுநாள் அதிகாலை வரை அவர்கள் விழித்திருக் கிறார்கள். பெரும்பாலான சிறுவர்கள் இரவு
10 மணி வரை கண் விழிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு காரணம் தாண்டவமாடுகிறது. ஆனால், இந்தக் காரணங்களால் படைப்பின் விதிகளை மீறவோ, மாற்றவோ இயலாது.

7 மணிக்கு மேல் தீவிர சிந்தனையும் உழைப்பும் இருத்தல், உயிர் இயல்பு அல்ல.

நீங்கள் ஓர் உயிரினமாக வாழக் கற்றுக் கொண்டால், உங்களுக்கு இவ்வளவு விளக்கங்கள் தேவைப்படாது. சாதனையாளராகவோ, வெற்றிகரமான மனிதராகவோ, கடும் உழைப்பாளராகவோ இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்போருக்கு, எனது சொற்கள் புரியாமல்கூட போகலாம். ஆனால், நான் அவர்களிடம்தான் கூடுதலாக உரையாட விரும்புகிறேன். உங்கள் வெற்றிகள், மரியாதைகள் மீது எனக்கு அக்கறை இல்லை. ஆனால், உங்கள் நலன் எனது விருப்பம்.

ஓர் உயிரினமாக இருப்பது என்றால், ‘புவியின் பிற உயிரினங்களும் நானும் ஒன்றுதான்’ என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். மனிதர்களுக்கு பல சிறப்புகள் உண்டு என நீங்கள் நம்பினால், கரப்பான்பூச்சிகளுக்கும் பல சிறப்புகள் உண்டு என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும். உயிரினங்களுக்கு என தனித்தன்மைகள் உள்ளன. ஆனால், படைப்பின் பார்வையில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான்.

பூமியில் உள்ள கோடானுகோடி உயிரினங்களில், இயற்கையின் விதிகளை இழிவுசெய்வது மனிதர்கள் மட்டும்தான். இந்த விதி மீறல்களில் இரவுகளை மனிதர்கள் கையாளும் விதம் முதன்மையானது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

பகல் பொழுது, வெளிச்சம், வெப்பம், ஓசை என்ற மூன்று வரங்களைத் தருகிறது. வெப்பம்தான் இயக்க ஆற்றலைத் தரும். அதாவது, உயிரினங்கள் இயங்க வேண்டுமானால் சூழலில் போதுமான வெப்பம் இருக்க வேண்டும். உணவு செரிக்க, உடலில் சரியான அளவுக்கு வெப்பம் இருக்க வேண்டும்.

உடலுக்கு என தனி வெப்பநிலை கிடையாது. புறச்சூழலுடன் இணைந்துதான் உடல் இயங்கும் என்பதால், புறச் சூழலில் வெப்பம் நிலவினால் உடலின் செரிமான ஆற்றல் சிறப்பாக இருக்கும். அதாவது, பகல்பொழுதில் உழைப்பதற்கும் வெப்பம் எனும் இயக்க ஆற்றல் வேண்டும்; உணவு செரிப்பதற்கும் வெப்பம் வேண்டும்.

வெயில் இறங்கிய பின்னர், பூமியில் வெப்பம் குறைகிறது. இந்தச் சூழலில் மனிதர்கள் உண்டு முடித்திருக்க வேண்டும், ஓய்வுக்குத் தயாராகியிருக்க வேண்டும்.

மாலைப் பொழுதிலேயே உணவு உட்கொள்வது தான் நமது மரபாக இருந்தது. முன்னர் எல்லாம், கிராமங்களில் உணவு சமைப்பதே மாலையில்தான். அவர்களுக்கு அந்தி உணவுதான் சுடுசோறு.
வெளிச்சமும் ஓசையும், இயக்கத்துக்கும் மன அமைதிக்குமானவை. பகல்பொழுதில் ஓசையே இல்லாத அமைதி நிலவினால், மனநிலை நடுக்கம் அடைகிறது. இரவில் அதிக ஓசை இருந்தால், மனம் பதற்றமாகிறது. புறச்சூழல்களுக்கும் மனநிலைக்கும் நேரடியான உறவு உண்டு.

ஒவ்வொரு நாளும் வெயிலோடு சேர்ந்து எழுந்து, வெயிலோடு சேர்ந்து அடங்க வேண்டும். அந்தியில் உண்ட உணவு, முன்னிரவில் செரிமானமாகிவிடும். இதனால், உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள், கருப்பை, இதயம், நுரையீரல் ஆகியவை தம்மை உற்சாகமாக சீரமைத்துக் கொள்கின்றன. இரவு 10 மணிக்கோ அதன் பின்னரோ உட்கொள்ளப்படும் உணவு, செரிமானம் ஆவதற்கே பின்னிரவு ஆகிவிடும். இந்த நேரம், உள்ளுறுப்புகள் தம்மைச் சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய சிறுவர்களுக்குப் பார்வைத்திறன் குறைபாடு உருவாவதற்கு இரவில் கண் விழிப்பதுதான் அடிப்படைக் காரணம் என எண்ணுகிறேன். உறங்கச் செல்லும் முன்னர், அவர்களது வயிற்றுக்குள் திணிக்கப்படும் உணவின் தன்மை கடினமானதாக இருந்தால், அதைச் செரிப்பதற்காக, இரவு முழுவதும் உடல் போராட்டம் நடத்தவேண்டியிருக்கும். இவை இரண்டையும்விட முக்கியமானது, படுக்கைக்குப் போகும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும்.

கடந்து சென்ற நாட்கள் குறித்த கவலைகளும் மறுநாள் குறித்த கணக்கீடுகளும் மனதைத் துன்புறுத்தும் சிந்தனைகள். உற்சாகமும் மகிழ்ச்சியும்கூட மனதுக்கு ஊறுவிளை விப்பவைதான் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அமைதி எனும் உணர்வுதான் நிரந்தரமானது. இரவு-பகல் என்ற பேதம் இல்லாமல் எந்நேரமும் அமைதியான மனநிலையில் இருத்தல்தான் படைப்பின் ஒழுங்கை மதிக்கும் பண்பு. இரவில் மட்டுமாவது அமைதியுடன் இருப்பது இன்றியமையாதது. அமைதியற்ற மனதுடன் உறங்குவோரின் உடல் ஓய்வெடுக்கும்; மனம் அலைந்துகொண்டிருக்கும்.

பிணம்போல உறங்கி, பிறப்புபோல விழிக்க வேண்டும். அதுதான் சரியான ஓய்வு. ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறளில் ஆசான் வள்ளுவர், `இறப்பும் பிறவியும் உறக்கமும் விழிப்பும் போன்றவை' என்றார்.

அந்தியில் சாய்ந்து அதிகாலையில் எழுவோருக்கு மனமும் உடலும் அன்றாடம் புத்தம்புதிதாகப் பிறக்கின்றன. காலை நேரத்தில் மலம் கழிப்பதில் இவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருப்பது இல்லை. அதிகாலையில் வீசும் உயிராற்றல் மிகுந்த காற்றை இவர்கள் அனுபவித்து உள்ளிழுக்கிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரைக்கும் வீசும் காற்று வேறு, அதன் பின்னர் வீசும் காற்று வேறு என்பதை உணர்ந்தோரால் புரிந்துகொள்ள முடியும். இந்தக் காற்று, மூளையின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனுப்பப் படுகிறது. அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கம் நமது மரபில் வலியுறுத்தப்பட்டதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4

நவீனத் தொழில்நுட்பங்கள், இருளை வெளிச்சமாக்கிவிட்டன. அவற்றால் ஒருபோதும் இரவைப் பகலாக்க முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் பெருகி வளர்ந்துள்ள கண் மருத்துவத் துறைக்கும் இரவு கண் விழிப்புக்கும் உள்ள உறவை, சற்று பொறுமையாகச் சிந்தித்தால் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

உங்கள் இல்லச் சூழல் இரவில் அமைதியாகி விட்டால், அது வீடு அல்ல பறவைக்கூடு. நீங்களும் உங்கள் கூட்டுக்குள் மாலையில் அடைந்து காலையில் சிறகு துடிக்கக் கிளம்பலாம்!

- திரும்புவோம்...