Published:Updated:

இது ஆப் டாக்ஸி!

இது ஆப் டாக்ஸி!
பிரீமியம் ஸ்டோரி
News
இது ஆப் டாக்ஸி!

கார்க்கிபவா, படம்: பா.காளிமுத்து

இது ஆப் டாக்ஸி!

ஒரு டாக்ஸி சேவையில், நாம் என்னென்ன எதிர்பார்ப்போம்?

1) நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் வரவேண்டும்.

2) வாடகை விஷயத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

3) பயணம், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


டாக்ஸி விஷயத்தில் இந்த மூன்றுமே முன்னர் இருந்த சிஸ்டத்தில் இப்போது கிடையாது.

ஐந்து நிமிடங்களில் நாம் நினைத்த இடத்தில் டாக்ஸி வரும் என்ற நிலை, சில வருடங்கள் முன்னர் வரை இல்லை. எப்படியும் அரை மணி நேரம் கழித்துதான் காரோ, வேனோ வீட்டுக்கு வரும். அவர்கள் சொல்லும் விலைதான். பில் கிடையாது. அதுவும் முடிவில் டிரைவர் பேட்டா, கிலோமீட்டர் லிமிட் என, ஏகப்பட்ட பஞ்சாயத்து. இந்தச் சிக்கல்களை எல்லாம் டெக்னாலஜியின் துணைகொண்டு தகர்த்தெறிந்து சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வளர்ந்து கொண்டிருக்கின்றன `ஆப்' மாடல் டாக்ஸிகள்.

ஓலா, ஊபர் எனப் பல பன்னாட்டு நிறுவனங்களும், சில இந்திய ஸ்டார்ட்அப்களும் இந்த பிசினஸில் தீவிரமாக முதலீடு செய்து வருகின்றன. ஒரு கார்கூட வாங்க வேண்டாம். ஒரு டிரைவருக்கும் சம்பளமும் தங்கும் இடமும் தர வேண்டாம். ஒரே ஒரு மொபைல் அப்ளிகேஷன் மட்டுமே என்பதுதான் இந்த பிசினஸின் ஸ்பெஷல். இந்திய டாக்ஸி சந்தையில் ஓலாவும் ஊபரும்தான் முன்னணியில் இருக்கின்றன. இந்தியா முழுவதும் 3,50,000 டாக்ஸிகள் தன் வசம் இருப்பதாகச் சொல்கிறது ஓலா.

`ஆப்’ டாக்ஸிகள் எப்படிச் செயல்படுகின்றன?

ஊபர், ஓலா என ஏதேனும் ஒரு நிறுவனத்தின் அப்ளிகேஷன் நமது மொபைலில் டவுண்லோடு செய்யவேண்டும். நம் மொபைல் நம்பரை ரிஜிஸ்டர் செய்தால், ஆப் பயன்பாட்டுக்குத் தயார். மொபைலில் இருக்கும் ஜி.பி.எஸ் சேவை மூலம் நாம் இருக்கும் இடத்தை அந்த ஆப் அறிந்துகொள்ளும். நாம் இருக்கும் இடத்துக்கு அருகில் எத்தனை கார்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதையும் சரியாகக் காட்டிவிடும். நமக்கு கார் தேவை எனச் சொன்னால், உடனே அருகில் இருக்கும் கார் டிரைவரின் மொபைலில் அந்தத் தகவல் பளிச்சிடும். அவர் `நான் வர்றேன்' என க்ளிக்கினால், வண்டி எண், டிரைவரின் மொபைல் எண் உள்பட எல்லா தகவல்களும் நம் மொபைலுக்கு வந்துவிடும். 20 செகண்ட்தான் டிரைவருக்கு நேரம். அவருக்கு விருப்பம் இல்லை என்றால், அடுத்த காருக்கு அந்த ரிக்வெஸ்ட் சென்றுவிடும்.

எந்த கார் நமக்காக வருகிறதோ, அது எங்கு இருக்கிறது, எங்கே வருகிறது என்பதை நம் மொபைலில் பார்த்துக்கொள்ளலாம். `2 மினிட்ஸ் சார்' எனச் சொல்லிவிட்டு 10 கி.மீ-க்கு அந்தப் பக்கம் இருந்து வருவது எல்லாம் இங்கே சாத்தியம் இல்லை.

அடுத்து, வாடகை எவ்வளவு என்பதில் வெளிப்படைத்தன்மை. ஆப் வகை டாக்ஸிகளின் இப்போதைய பலமே இதுதான். நாம் செல்லவேண்டிய இடத்தை மேப்பில் க்ளிக்கினால், எவ்வளவு தூரம் என்பது தெளிவாகிவிடும்.

இது ஆப் டாக்ஸி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைவைத்து தோராயமான விலையையும் சொல்லிவிடுகிறது. இடையில் வரும் டிராஃபிக் போன்ற பிரச்னைகளால் மட்டும் கொஞ்சம் மாறுபடலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். கையில் பணம் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நிர்பந்தமும் கிடையாது. ஆன்லைனில் அந்த ஆப் மூலமாகவே பணம் செலுத்தலாம். அதனால் சில்லறை பஞ்சாயத்தும் கிடையாது.

மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக, விலை விஷயத்திலும் ஆப் டாக்ஸிகள் அதிரடியாக இறங்கியிருக்கின்றன. ஆட்டோக்களே `கிலோமீட்டருக்கு 12 ரூபாய் போதவில்லை' என குதித்துக் கொண்டிருக்கும்போது, கி.மீ-க்கு ஆறு ரூபாயில் இருந்தே கார்களைத் தருகின்றன ஆப் டாக்ஸிகள். இதைத் தாண்டி அவ்வப்போது முதல் சவாரி இலவசம், 50 சதவிகிதம் கழிவு என்ற ஆஃபர்களால் நம் இன்பாக்ஸையும் நிரப்புகிறார்கள்.

“எனக்கு சொந்த ஊர் ஆந்திரா. 1994-ம் ஆண்டுல இருந்து பிரைவேட் கம்பெனியில டிரைவரா இருந்தேன். ஊபர் பற்றி கேள்விப்பட்டு, ஒன்பது லட்சம் ரூபாய் லோன் போட்டு இந்த காரை வாங்கி அட்டாச் பண்ணியிருக்கேன். ஒரு வருஷம் ஆச்சு. தினமும் எவ்ளோ கலெக்‌ஷன் ஆகுதோ அதுல 20 சதவிகிதம் ஊபருக்கு கமிஷன். அதுபோக, டிமாண்ட் அடிப்படையில ஒரு நாளைக்கு இத்தனை டிரிப் எடுக்கணும்னு சொல்வாங்க. அதை எடுத்தா, நிறைய இன்சென்ட்டிவ் தருவாங்க. அதுலதான் எங்களுக்கு லாபம். இங்கே எனக்கு எந்த பிரஷரும் கிடையாது. என்னால எப்ப முடியுதோ அப்ப கார் ஓட்டினா போதும். மொபைலை ஆஃப் பண்ணிட்டா, என் வேலை முடிஞ்சது. வாராவாரம் புதன்கிழமை சரியா பேமென்ட் என் அக்கவுன்ட்டுக்கு வந்துடும்” என்கிறார் ஊபர் நிறுவனத்தில் கார் ஓட்டும்
ஆதிநாராயணன்.

``கேப் நிறுவனங்களுக்கும் டிரைவர்களுக்கும் எந்த அக்ரிமென்ட்டும் கிடையாது. அதனால், எப்போது வேண்டுமானாலும் அவர்களைவிட்டு வெளியே வரலாம். அதே சமயம், நிறுவனங்களிடம் பெரிய அசையா முதலீடுகள் எதுவும் இல்லை. எனவே, அவர்கள் பிசினஸை மூடினால் லோன் போட்டு கார் வாங்கியவர்கள் நிலைமை சிக்கல்தான். ஆனால், அந்த ரிஸ்க் எடுத்தால்தான் இந்த லாபம் பார்க்க முடியும்'' என்கிறார் ஆதி நாராயணன். கார் வாங்குவதற்குத் தேவையான பல உதவிகளை நிறுவனங்களே செய்கின்றன என்பது கூடுதல் லாபம்.
 
கிலோமீட்டருக்கு, குறைவான விலை. ஆனால், டிரைவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் குறைவில்லை.

ஆப் டாக்ஸிகளுக்கு எப்படி லாபம் கிடைக்கிறது?

இப்போது ஆப் டாக்ஸிகள், மார்க்கெட் ஷேர் பிடிக்கும் மும்முரத்தில் இருக்கின்றன. அதனால் தங்களின் மார்க்கெட்டிங் செலவாகத்தான் இந்தத் தள்ளுபடியைப் பார்க்கிறார்கள். கணிசமான நுகர்வோர்கள் கிடைத்ததும் விலையை நிச்சயம் கூட்டுவார்கள். பீக் ஹவர் சார்ஜ் என இப்போதே வசூலிக்கிறார்கள். அதாவது கார்களுக்கு தட்டுப்பாடு நிலவினால், மொத்த விலை 1.5 மடங்கு, 2 மடங்கு என அதிகரிக்கும். வழக்கமான விலையில் கார்களே கிடைக்காது. இப்போதே இப்படி என்றால், மற்ற எல்லா வாடகை வாகனங்களையும் அழித்த பிறகு இவர்கள் வைத்ததே விலை என்றாகிவிடும் சூழல் இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி, டாக்ஸிகள் மூலம் மற்ற வருவாய் பெறவும் யோசித்துவருகிறார்கள்.

ஓலா நிறுவனம், இப்போது ‘ஷேரிங்’ ஆப்ஷனைக் கொண்டுவந்துவிட்டது. ஒருவர் வேளச்சேரியில் இருந்து அண்ணாசாலை செல்ல 180 ரூபாய் ஆகலாம். ஷேரிங் மூலம் சென்றால், வழியில் யாராவது அண்ணாசாலைக்குப் போக வேண்டும் என்றால், அவரையும் டாக்ஸியில் ஏற்றிக் கொள்வார்கள். நம்மிடம் 100 ரூபாய், அவரிடம் 100 ரூபாய் ஓலா வசூலித்துவிடும். ஷேர் ஆட்டோ கான்செப்ட்டில், ஷேர் டாக்ஸி. இதனால் பயணம் செய்யும் இருவருக்கும், ஓலா நிறுவனத்துக்குமே லாபம்தான். வழியில் யார் அண்ணாசாலைக்குப் போகக் காத்திருக்கிறார்கள் என்பதை, எந்தக் கூடுதல் செலவுமே இல்லாமல் ஆப் சொல்லிவிடும்.

அடுத்த கட்டமாக, பொருட்கள் டெலிவரி செய்யவும் டாக்ஸியைப் பயன்படுத்த இருக்கி றார்கள். தாம்பரத்தில் இருந்து திருவொற்றியூருக்கு ஒருவர் சென்றால், அந்த வண்டியில் எவ்வளவு இடம் காலியாக இருக்கும்? டிக்கியிலும் இடம் காலியாக இருக்கிறது என்றால், கூரியர்போல பொருட்களை டெலிவரி செய்யும் வேலையையும் ஆப் டாக்ஸிகள் செய்ய இருக்கின்றன. நாளுக்குநாள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துவரும் சூழலில் ‘லாஸ்ட் மைல் டெலிவரி’ எனப்படும் டோர் டெலிவரிக்கும் இந்த டாக்ஸிகளைப் பயன்படுத்த யோசித்து வருகிறார்கள். எல்லா ஆப் டாக்ஸி நிறுவனங்களின் இப்போதைய டார்கெட் நிறைய கஸ்டமர்கள். அவர்கள் மொபைலில் இவர்களது ஆப். அதன் பிறகு, லாபம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு என நினைக்கின்றன.

 “வேளச்சேரி பக்கத்துல ஒரு ஹோட்டல்ல 60 வயசு அம்மா வேலைசெய்றாங்க. சின்ன ஆண்ட்ராய்டு மொபைல்ல ஊபர் ஆப் மட்டும் போட்டு வெச்சிருக்காங்க. நைட் வேலை முடிஞ்சதும் அவங்களும் கூட வேலை செய்றவங்களும் கேப் புக் பண்றாங்க. அவங்க கோவிலம்பாக்கம் போகணும். ஊபர்ல 70 ரூபாய்ல போயிடலாம். ரெண்டு பேரும் பஸ், ஷேர் ஆட்டோவுல போனா 30 ரூபாய் ஆகுமாம். இதுல போனா டைம் மிச்சம் ஆகும்னு சொன்னாங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு” என்கிறார் டிரைவர் செல்வதுரை.

டெல்லியில் ஊபர் டிரைவர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது, `ஒரு குற்றவாளியை எப்படி டிரைவராக நியமிக்கலாம்?' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. `டெல்லி போலீஸ்தான் டிரைவருக்கு எந்தக் குற்றப் பின்னணியும் வழக்குகளும் இல்லை என சான்றிதழ் அளித்திருக்கிறது' என்றது ஊபர். ஆமாம், போலீஸிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே டிரைவராக ஆப் டாக்ஸி நிறுவனங்கள் இணைத்துக்கொள்கின்றன. ஓட்டுநர்களின் நடத்தையை கஸ்டமர்களும் ஆப் மூலமே தெரியப்படுத்தலாம். தொடர்ந்து குறைவான ரேட்டிங் வாங்கும் ஓட்டுநர்களை எச்சரிக்கின்றன நிர்வாகங்கள். அதே சமயம் கஸ்டமர்கள் பற்றியும் ஓட்டுநர்கள் ரேட்டிங் தரவேண்டும். தொடர்ந்து பிரச்னை செய்யும் கஸ்டமர் என்றால், அவரிடமும் பேசுகிறது நிர்வாகம்.

ஆப்-பிலும் பல பாதுகாப்பு வழிகள் உள்ளன. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பான பயணத்துக்கு ஆப் நல்லது. ரிஜிஸ்டர் செய்யும் போதே இன்னொரு மொபைல் எண்ணையும் பதிவுசெய்துகொண்டால், எல்லா பயணத் தகவல்களும் அந்த எண்ணுக்கும் சென்றுவிடும். எப்போது பயணம் தொடங்குகிறது, டாக்ஸி எந்த வழியில் செல்கிறது, எங்கேயாவது நீண்டநேரம் நிற்கிறதா... என அனைத்தையும் கண்காணிக்க முடியும்.

அதேபோல மனைவி டாக்ஸியில் செல்கிறார் என்றால், கணவர் அவரது போனில் இருந்து புக் செய்தால் போதும். மனைவி எந்த இடத்தில் சென்றுகொண்டிருக்கிறார், வழியில் தாமதம் ஏற்படுகிறதா என்பதை ஈஸியாகத் தெரிந்து கொள்ளலாம். தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் 100 சதவிகிதப் பாதுகாப்பு வழிமுறைகள் எதிர்காலத்தில் சாத்தியம் என்கிறார்கள் டெக்னாலஜி ஆர்வலர்கள்.

டெக்னாலஜி என்பது, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் போதுதான் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், இந்த ஆப் மாடல் டாக்ஸிகளுக்குக் கொடுக்கலாம் ஒரு பவர்ஃபுல் ஹைஃபை.

ஓலா Vs ஊபர்

இந்தியாவில் ஓலாவும் ஊபரும், ஆப் டாக்ஸி பிசினஸில் எதிரிகள். அமெரிக்காவில் ஊபர் மார்க்கெட் லீடர். இந்தியாவில் ஓலா வசம்தான் 70 சதவிகித மார்க்கெட் இருக்கிறது. இந்தியாவில் தன் வளர்ச்சியைத் தடுக்க, ஓலா சதி செய்ததாக நீதிமன்றத்தை நாடியது ஊபர். 94,000 போலி கணக்குகள் தொடங்கி, நான்கு லட்சம் போலி புக்கிங்குகள் செய்து, அதை கேன்சலும் செய்திருப்பதாக ஊபர் குற்றம்சாட்டியது. இதன் மூலம், ஊபரின் சேவை மோசமாக இருப்பதாக சோஷியல் மீடியாவில் சொல்லவைத்ததாம் ஓலா. ஓலாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருக்கிறது ஊபர்.

ஆட்டோவும் உண்டு!

ஆட்டோக்களையும் ஓலா விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் ஆட்டோ பயன்படுத்துபவர்கள் அதிகம். எனவே, அவர்கள் மொபைலிலும் தங்களது ஆப்-ஐ கொண்டுசேர்க்க நினைக்கிறார்கள். ஓலா ஆப் மூலம் நமக்கு அருகில் இருக்கும் ஆட்டோக்களையும் புக் செய்யலாம். புக்கிங் செலவாக கஸ்டமர்களிடம் 10 ரூபாய் வாங்குகிறார்கள். மற்றபடி மீட்டர் விலைதான். மீட்டர் போடும் ஆட்டோக்களே இங்கே இல்லை என்பதால், ஓலா ஆட்டோக்களுக்கும் இப்போது செம டிமாண்ட். சென்னையில் மட்டும் 10,000 ஆட்டோக்கள் ஓலாவுடன் இணைந்திருக்கின்றன.