Published:Updated:

உயிர் ஓவியங்கள்!

உயிர் ஓவியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் ஓவியங்கள்!

அதிஷா

உயிர் ஓவியங்கள்!

``அழகு எங்கும் நிறைந்திருக்கிறது. அதைத் தேடியே நான் பயணிக்கிறேன்” - மிஹேலா நோராக் வீட்டில் இருந்து கிளம்பி, மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. 50 நாடுகளைக் கடந்தும் தொடர்கிறது மிஹேலாவின் அழகு தேடல். ரோமானியாவைச் சேர்ந்த 31 வயதான மிஹேலா, பிரமாதமான புகைப்படக் கலைஞர். இவர் உலகம் முழுக்கத் தேடி அலைவது அழகான பெண்களை!

அழகுக்கான அட்லஸ் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஹேலா. `தி அட்லஸ் ஆஃப் பியூட்டி' என்ற அவருடைய பயணம், 2013-ம் ஆண்டில் தொடங்கியது. இன்று, உலகத்தின் ஆயிரக்கணக்கான பெண்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய கதைகளைச் சேகரித்துக்கொண்டே புகைப்படப் பதிவுகளுடன் பயணிக்கிறார் மிஹேலா. தற்போது, ஸ்பெயினில் பெண்களைப் படம் பிடித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கும் வந்து, நூற்றுக்கணக்கான பெண்களைச் சந்தித்து, பேசி படங்கள் எடுத்துச் சென்றுள்ளார்.

``என் புகைப்படக் கலையின் வழியே நான் படம்பிடிக்க நினைப்பது, பெண்களிடம் இருக்கும் அமைதியையும் கருணையையும் மட்டும்தான். நான் கர்ப்பிணிகளை, காவல் துறை அதிகாரிகளை, அகதிகளை, தீவிரவாதிகளை, விளையாட்டு வீராங்கனைகளைச் சந்தித்தேன். எல்லா பெண்களிடமும் இந்தக் குணம் நிறைந்திருப்பதைக் கண்டேன்” என்கிறார் மிஹேலா.

உயிர் ஓவியங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவர் ரோமானியாவில் இருந்து கிளம்பும்போது, அன்டார்டிகா தவிர்த்து அத்தனை கண்டங்களிலும் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வது, அங்கே இருக்கும் பெண்களைச் சந்திப்பது என முடிவெடுத்தார். இப்போது கிட்டத்தட்ட எல்லா கண்டங்களுக்கும் சென்றுவிட்டார். இருப்பினும், ``இன்னும் செல்லவேண்டிய நாடுகள் நிறைய இருக்கின்றன'' என்கிறார்.

எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்? - மிஹேலாவிடமே முகநூலில் பேசினோம்.

உயிர் ஓவியங்கள்!

``எனக்கு, பயணம்தான் உயிர். என் கணவருக்கும் என்னைப் போலவே அதில் ஆர்வம் அதிகம். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும், சம்பாதிக்கும் பணத்தில் பாதியை பயணங்களுக்காகச் செலவழிப்போம். எனக்கு டிராவல் போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். ஒருமுறை எத்தியோப்பியாவுக்குச் சென்றபோது, அங்கே நான் பார்த்த ஆப்பிரிக்கப் பெண் அவ்வளவு அழகாக இருந்தார். ஆப்பிரிக்கப் பெண்கள் பற்றிய என் எண்ணங்கள் எல்லாவற்றையும் மாற்றியது அவர்களுடைய அழகு. அப்போதுதான் என் டிராவல் போட்டோகிராஃபியையும் பெண்களின் முகப்படங்களையும் இணைக்க முடிவெடுத்தேன். அப்படித்தான் அட்லஸ் புராஜெக்ட் தொடங்கியது'' என்கிறார் மிஹேலா.

உயிர் ஓவியங்கள்!
உயிர் ஓவியங்கள்!

இவருக்கு ஆங்கிலம் உள்பட ஐந்து மொழிகள் தெரியும் என்பதால், செல்லும் நாடுகளில் எல்லாம் தனியாகவே சமாளிக்கிறார். ``மொழியே தெரியவில்லை என்றாலும் இருக்கவே இருக்கு சைகை மொழி; அதில் சமாளிப்பேன்'' என உற்சாக ஸ்மைலி போடுகிறார்.

``ரஷ்யப் பெண்களிடம் நேர்மை, பிரேசில் பெண்களிடம் வாழ்வதின் மீதான பெருமை, ஜப்பான் பெண்களிடம் பாரம்பர்யத்தைக் கைவிடாத குணம், குடும்பத்தை வழிநடத்தும் திறமையை சீனப் பெண்களிடம்... என ஒவ்வொரு நாட்டுப் பெண்ணுக்கும் ஒவ்வொருவிதமான குணம் உண்டு. அதைத் தொடர்ந்து கற்கிறேன். இந்தப் பெண்கள் அத்தனை பேரையும் அழகாக்குவது அவர்கள் ஆண்களுக்கு நிகராகச் சுமக்கும் சமூகப் பொறுப்புகள்தான்'' என்கிறார் மிஹேலா.

மிஹேலா மங்கோலியாவின் புல்வெளிகளில், அமேசானின் மழைக் காடுகளில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வராண்டாவில், ஈரானிய மசூதிகளில், திபெத்திய மலைவீடுகளில் என வெவ்வேறு இடங்களில், ஏராளமான புதிய சூழல்களில் தன்னந்தனியாக அலைந்து இந்தப் பெண்களைப் படம்பிடித்திருக்கிறார்.

உயிர் ஓவியங்கள்!
உயிர் ஓவியங்கள்!

``அதிக மேக்கப் போட்டவர்களை நான் படம் பிடிக்க மாட்டேன். அதோடு நான் படம் பிடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக கேமராவைப் பார்க்கும் எளிய வாழ்வை வாழும் மக்கள். அவர்களுக்கு, புகைப்படம் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனாலேயே அந்தப் படங்கள் அத்தனை இயல்பாக நிஜமான அழகுடன் உருவானது'' என்கிறார்.

மிஹேலாவின் படங்கள், வெறும் முகங்களைப் பதிவுசெய்திருக்கும் சாதாரணப் புகைப்படங்கள் அல்ல. அவற்றை ஆழ்ந்து நோக்கும்போது, உயிருள்ள ஓவியங்களைப்போல அசைகின்றன. அதில் தோன்றும் பெண்களின் கண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகள் சொல்கின்றன... உயிரைக் கரைக்கின்றன.

மிஹேலாவின் படங்களையும் அவருடைய பயணத்தையும் இங்கே பின்தொடரலாம்: facebook.com/MihaelaNorocPhoto/