அறம் பொருள் இன்பம் - 7

ம் நாட்டில் இறைவனுக்குப் படைப்பதில் மூன்று விஷயங்கள் கொண்டாடப்படுபவை: தேன், சந்தனம், தங்கம். ஏன் தெரியுமா? இவை மூன்றும் காலத்தால் கெடாதவை; தூய்மையானவை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தன் சுவை, மணம், நிறம் மாறாது.

குறிப்பாக, தங்கம் – சுற்றுப்புறத்தோடு கலக்காமல் தன் தனித்தன்மையைக் காத்துக்கொள்வதால், கடினமான இரும்புகூட காற்றோடு கலந்து துருப்பிடித்து வலிமை இழந்தாலும் தங்கம் மட்டும் மாறுவதே இல்லை.

இப்போதைக்கு, பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயைத் தரக்கூடிய முதலீடாக பி.பி.எஃப் – பொது சேம நல நிதி இருப்பது உண்மைதான். எனினும், ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி அல்ல.
சொல்லப்போனால், இப்போதையை வட்டியைவிட அப்போது அதிக வட்டி கொடுத்தார்கள். ஆண்டுக்கு சுமார் 9 சதவிகிதம் வட்டி இருந்தபோதும், அன்றைய தேதியில் பணவீக்கம் அதைவிட அதிகமாக இரட்டை இலக்க எண்ணில் இருந்த காரணத்தால், உண்மையான வருவாயைவிட இழப்புதான் அதிகம்.

அறம் பொருள் இன்பம் - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருங்காலத்தில், இப்போதைய வட்டி விகிதம் (பணவீக்கத்தைப் பொறுத்து) மேலும் குறையலாம் அல்லது கூடலாம். அப்படியானால், இதைவிட அதிக ஆதாயம் வர வாய்ப்பு உள்ள முதலீடுகள் ஏதேனும் உண்டா? இருக்கின்றன. என்ன... கொஞ்சம் ரிஸ்க்கும் அதோடு சேர்ந்துவரும்.

அதற்கு முன்னர், பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் நாம் எல்லோரும் மிகப் பாதுகாப்பாகக் கருதும் தங்கம், எப்படிப்பட்ட ஒரு முதலீடு என்பதைப் பார்த்துவிடலாம்.

கடந்த 400 ஆண்டுகளாக தங்கத்தின் விலையை ஆராய்ச்சிசெய்ததன் அடிப்படையில், அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல், `தங்கத்தின் உண்மையான மதிப்பு, கூடவோ குறையவோ இல்லை; அப்படியேதான் இருக்கிறது.'

இதை ஓர் உதாரணத்தின் மூலம் தனது அறிக்கையில் விளக்குகிறார். `400 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கிராம் தங்கத்தைக்கொண்டு ஒரு பொருளை வாங்க முடியும். இன்று, அந்தப் பொருளின் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும். இருப்பினும், இன்றும் அதே ஒரு கிராம் தங்கத்தைக்கொண்டு அந்தப் பொருளை வாங்க முடிகிறது' என்கிறார்.

இதில் இருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, கடந்த 4,000 ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு கூடவே இல்லை. இரண்டு, தங்கத்தின் மதிப்பு கொஞ்சம்கூடக் குறையவில்லை.

வாங்கும் சக்தி, கொஞ்சம்கூடக் கூடாமலும் குறையாமலும் அதே அளவு இருக்கிறது என்றால், பணவீக்கத்துக்கு ஏற்ப ஈடுகொடுத்து தங்கத்தின் மதிப்பும் அதிகரித்துவருகிறது – மெள்ள மெள்ள!

எனவே, இதை இரண்டுவிதமாக அணுகலாம். பணவீக்கத்துக்கு எதிரான ஒரு `ஹெட்ஜ்' ஆகப் பயன்படுத்தலாம். நம் சேமிப்பின் சிறு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம், பணவீக்கத்தின் கடும் தாக்குதலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.

பணவீக்கம் அதிகரிக்கும்போது அதற்கு ஏற்ப வேறு பல முதலீடுகள் அதிகரிக்காமல் போகலாம் அல்லது அதன் மீதான ஆதாயமோ வருவாயோ போதாமல் இருக்கலாம். ஆனால், தங்கம் அப்படி அல்ல. பொதுவாகவே பணவீக்கத்துக்கு ஈடாக தங்கத்தின் விலையும் நீண்டகால அடிப்படையில் மாறவே செய்கிறது.

என்ன ஒரு சிக்கல்... தங்கத்தில் கொஞ்சமாவது முதலீடு செய்யலாம் எனத் தீர்மானித்த பிறகே எந்தவிதத்தில் முதலீடுசெய்வது என்பதில் நம்மவர்களுக்கு பெரும் குழப்பம் வரும்.

தங்கம் ஒரு சேமிப்பா?

நல்ல கேள்வி. `ஒரு நல்ல முதலீட்டுக்கான இலக்கணம் என்ன?' எனப் பட்டியலிடுவோமா!

பாதுகாப்பான முதலீடாக இருக்க வேண்டும். ஓரளவுக்குப் பணவீக்கத்தைத் தாண்டிய வருவாய் தர வேண்டும். நீண்டகால அடிப்படையில் திரும்ப எடுக்கும்போது, உபரியான ஆதாயம் இருந்தால் நல்லது. வரிச் சலுகைகள் ஏதாவது இருந்தால் உத்தமம்!

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

தங்கம் பாதுகாப்பான முதலீடா என்றால், இன்றைய சூழலில் `ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் பல வல்லரசுகள்கூட அதில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், எதிர்காலத்திலும் அப்படியே தொடருமா என்றால், சொல்ல முடியாது.

ஏதாவது கண்டுபிடிப்பால் அதிக அளவு தங்கம் கொட்டத் தொடங்கினால், அவ்வளவுதான். அலுமினியம்போல் ஆகிவிடும். அலுமினியம்கூட கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், அரசர்கள் மட்டுமே பயன்படுத்தும் உலோகமாக இருந்ததாகச் சொல்வார்கள்.

அது மட்டும் அல்ல, முதலீட்டுக்கு மட்டும் பாதுகாப்பு இருந்தால் போதுமா... உயிருக்கு? முதலீடு போனால் திரும்பக் கிடைக்கும். உயிர் போனால் கிடைக்குமா? செய்தித்தாள்களை அன்றாடம் படியுங்கள். ஆங்காங்கே கொலை, கொள்ளை என, விடுமுறைக்குக்கூட வீட்டைப் பூட்டிவிட்டு நிம்மதியாகப் போக முடியவில்லை. அதிகாலையில், இரவு வேளைகளில் சாலைகளில் தனியாகப் போக முடியுமா?
 
சில சமயங்களில் முதலுக்கே மோசம் விளைவிக்கக்கூடிய, உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய அல்லது உயிரையே பறிக்கக்கூடிய முதலீடாகக்கூட தங்கம் மாறலாம். எனவே, பாதுகாப்பான முதலீடு என்பது காலகாலமாக நம் மனதில் இருக்கும் ஒரு நம்பிக்கை, அவ்வளவுதான்.

அடுத்ததாக, பணவீக்கத்தைத் தாண்டிய வருவாய். ஒரு ஃபிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டால், மாதாமாதமோ கால் ஆண்டுக்கு ஒருமுறையோ வட்டி கொடுப்பார்கள். அதே மாதிரி, வீடு கட்டினால் அதில் நாம் குடியிருக்கலாம் – வாடகை மிச்சம் அல்லது அதை வாடகைக்கு விடலாம் – வருமானம் வரும். நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால், ஈவுத்தொகையாக டிவிடெண்ட் வரலாம். பங்கின் விலையும் ஏற வாய்ப்பு உண்டு. ஆனால், தங்கத்தின் மீது?

அறம் பொருள் இன்பம் - 7

எந்தவிதமான வருவாயும் இல்லாத முதலீடு, தங்கம். அதன் விலை ஏறுவதால் கிடைக்கக்கூடிய ஆதாயம் மட்டுமே நமக்கு லாபம். அதனால்தான் பிரபல முதலீட்டாளரான வாரன் பஃபெட் சொன்னார், `பின்னாளில் விலை அதிகரித்தவுடன் இன்னொரு முட்டாள் வாங்குவார் எனும் நம்பிக்கையில் இன்று வாங்கும் முட்டாள் நாம்'. கொஞ்சம் கடுமையான வார்த்தைகள்தான். உண்மை சுடும்தானே!
கடைசியாக, நீண்டகால ஆதாயம். இன்றைய தேதியில் இதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலம் தொடரும் எனச் சொல்ல முடியாது. `தங்கம், அரிதான ஒரு பொருள்' எனும் நிலை தொடரும் வரை, இந்த ஆதாயமும் தொடரும்.

அதுகூட பெரிய அளவில் இல்லை. நீண்டகால அடிப்படையில் பங்குச்சந்தை முதலீடும் ரியல்எஸ்டேட் முதலீடுகள் இந்தியாவில் அதைவிட அதிக ஆதாயத்தைத் தந்திருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில், தங்கம் சராசரியாக 10 சதவிகிதத்துக்கும் குறைவான வருவாயைக் கொடுத்திருக்கிறது. பங்குச்சந்தைக் குறியீடுகளோ சராசரியாக ஆண்டுக்கு சுமார் 16 சதவிகிதம் ஆதாயம் கொடுத்திருக்கின்றன.

தங்கத்தின் மீதான ஆதாயத்துக்கு ஆதாய வரி உண்டு. ஆனால், பங்குகளின் மீதான நீண்டகால ஆதாயத்துக்கோ நிறுவனங்கள் கொடுக்கும் ஈவுத்தொகைக்கோ ஒரு ரூபாய்கூட வருமான வரி கிடையாது. ( ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஈவுத்தொகை பெறுபவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் வரி உண்டு.)

ஆக, எந்தவிதத்தில் பார்த்தாலும் தங்கம் நம்பர் ஒன் முதலீட்டுப் பொருளாக இருக்க முடியாது. அதே சமயம், சர்வதேசப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் உள்ளிட்ட வேறு பல காரணங்களால், நம் முதலீட்டின் ஒரு சிறு பகுதியாக தங்கம் இருப்பது நிச்சயம் நல்லது.

ஆபரணத் தங்கத்தில்முதலீடு செய்யலாமா?

பொதுவாக நாம் எல்லோரும் விரும்புவது ஆபரணத் தங்கம். அது எவ்வளவு லாபகரமானது என்பதைப் பார்க்கலாம்.

தங்க நகைகள் வாங்கும்போது, நாம் என்னவெல்லாம் கொடுக்கிறோம்? கூலி, சேதாரம், கல் எடை. இவை மூன்றும் சேர்த்து 15 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதம் வரை கழிவு ஆகலாம். கவுன்ட்டரில் இருப்பவர் ஒரு சின்னச் சிட்டையில் கணக்கு போட்டுக் காண்பிப்பார். இதில் தள்ளுபடி கேட்பார்கள் நம் மக்கள். உடனே கடைக்காரர் கால்குலேட்டரை வைத்து உலக மகா கணக்கு போட்டு சிறு தொகையைக் கழிப்பார்.

`எங்க அம்மா காலத்துல இருந்து இங்கேதான் வாங்குகிறோம்' எனப் பெருமையாகச் சொன்னதும், முதலாளியிடம் கூட்டிச் செல்வார். அவர் அதை ரவுண்ட் செய்து, மேலும் ஒரு மிகச் சிறு தொகையைக் கழிப்பார். இந்த நாடகம் முடிந்தவுடன், மிகுந்த மகிழ்ச்சியுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு நாம் வெளியே வருவோம். இப்படியாக, வாங்கும்போது சுமார் 25 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரைகூட விலை அதிகம் கொடுக்கிறோம்.

நல்ல முதலீட்டுக்கு என்ன அழகு?

அதன் மதிப்பு கூடும்போது விற்று லாபம் பார்க்க வேண்டும் அல்லவா? என்றாவது விலை கணிசமாக அதிகரித்துவிட்டது என நகையை விற்று லாபத்தைப் பதிவுசெய்திருக்கிறோமா நாம்? `மொதமொதலா அவுக வாங்கிக் கொடுத்தது', `அப்பா கொடுத்த ராசி' என ஏதேனும் சால்ஜாப்பு சொல்லி, விற்கவே மாட்டோம். ரொம்பப்போனால், வேறு ஏதாவது நகையாக உருக்கி மாற்றுவோம். அப்புறம் என்ன முதலீடு அது?

ஒருவேளை நாமே சம்மதித்து விற்பதற்காக எடுத்துச் சென்றாலும், அன்று பார்த்து கடைக்காரர் வாங்க மாட்டார். `எங்களுக்கு இன்று தேவை இல்லை. வேணும்னா வேற நகையா மாத்திக்குங்க' என்பார்.

அறம் பொருள் இன்பம் - 7

மீண்டும் 25-ல் இருந்து 30 சதவிகிதம் இழப்பு. `பெண்கள் தன் வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று முறையாவது இப்படி நகையை மாற்றுகிறார்கள்' எனச் சொன்னார் நகைக் கடை வைத்திருக்கும் என் நண்பர் ஒருவர். அப்படியானால், ஒருவரின் வாழ்நாளில் மொத்தத்தில் 100 சதவிகிதம் இழப்புதானே!

`அப்படினா, தங்க ஆபரணங்களை வாங்கவே கூடாது என்கிறீர்களா?' எனக் கேட்காதீர்கள். அது உங்கள் இஷ்டம், உரிமை. ஆனால், அதை ஒரு நல்ல முதலீடு எனச் சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். `சேலை, துணிமணி வாங்குவதுபோல அதுவும் நம் மனதுக்குப் பிடித்த ஒரு செலவு' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

`ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்கலாம் இல்லையா?' எனக் கேட்பார்கள் சிலர். `வாங்கும்போதே இப்படி அபசகுனமாக நினைத்து, ஒரு முதலீடு செய்யலாமா?' எனவும் திருப்பிக் கேட்கலாம். அவசரத் தேவைகளை பெரும்பாலும் காப்பீடுகொண்டு சந்திக்க வேண்டுமே தவிர, முறையாகத் திட்டமிடாமல் தேவை இல்லாத அவசர அடமானங்கள் மூலமாக அல்ல.

தங்க பவுன் காசுகள்?

நஷ்டம் கொஞ்சம் குறைவு என்றாலும், வாங்குகையில் இதில்கூட கூலி, சேதாரம், எல்லாம் உண்டு. விலைகூட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால், விற்கும்போது சந்தை விலையைவிடக் குறைவாகவே போகும். பல இடங்களில் அடமானத்துக்கும் இதை ஏற்பது இல்லை – இது நகை இல்லை என்பதால்.

முதலீடாகக் கருதி ஆபரணத் தங்கம் வாங்கினால், பணக்காரர் ஆகலாம். ஆனால், யார் என்பதுதான் கேள்வி? தியாகராய நகரில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரிரு மாடிக் கடைகளாக இருந்தன. இன்று? ஆனால், தங்கம் வாங்கப் போன நாம் மட்டும் அன்றும் அதே டூ வீலர்; இன்றும் அதே டூ வீலர். இல்லையெனில் கால்டாக்ஸி. தங்கம் வாங்கினால் பணக்காரர் ஆகலாமா, விற்றால் பணக்காரர் ஆகலாமா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

அறம் பொருள் இன்பம் - 7

தங்கத்தை முதலீடாகக் கருதி முதலீடு செய்ய, வேறு வழிகள் இருக்கின்றன. தங்கத்தை முதலீடாக மட்டுமே பார்க்கும்பட்சத்தில் அவற்றில் முதலீடு செய்வதே நல்ல பலன் அளிக்கும். அவை என்ன என்பதைப் பார்க்கலாமா?

கோல்டு இ.டி.எஃப்., தங்கத்துக்கு ஈடான மாற்றுப் பத்திரங்கள், தங்கப் பத்திரங்கள் இவற்றில் சிலவற்றுக்கு வட்டி வருவாய் உண்டு. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். குறிப்பிட்ட வரிச் சலுகையும் உண்டு. அவை என்ன எனத் தெரிந்து முதலீடு செய்வது ஆபரணத் தங்கத்தைவிட ஆதாயம் தரும்.

- பொருள் சேர்க்கலாம்...