Published:Updated:

ஆண் - பெண் இணக்கம் மலரட்டும்! - (ஆண் திமிர் அடக்கு!)

ஆண் - பெண் இணக்கம் மலரட்டும்! - (ஆண் திமிர் அடக்கு!)
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண் - பெண் இணக்கம் மலரட்டும்! - (ஆண் திமிர் அடக்கு!)

நான்கு பெண்கள்... நான்கு பார்வைகள்!குட்டி ரேவதி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஆண் - பெண் இணக்கம் மலரட்டும்! - (ஆண் திமிர் அடக்கு!)


`பிராய்லர்' கோழிகள்போல், பெண் குழந்தைகளை திருமணத்துக்காக மட்டுமே வளர்த்துவிடும் சிந்தனைகள் போய்விட்டன. வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருளாதார மேம்பாட்டை வழங்குவதற்காகவும் சமூகப் பங்களிப்புக்காகவும் வீட்டின் குறுகிய வெளிகளைவிட்டு பொதுவெளியை நோக்கி இளம் தலைமுறைப் பெண்கள் நகர்ந்துள்ள காலகட்டம் இது.

காலங்காலமாக சினிமாவிலும் வீடுகளிலும் கொட்டில்களிலும் அடைக்கப்பட்ட கட்டுப்பட்டியான பெண்களைப் பார்த்துப் பழகிய ஆண்களுக்கு, இதை எதிர்கொள்வது புதியதொரு சவால்தான். இதில், பெண்கள் ஆண்களின் எல்லைகளை மீறிச் செல்வதாக நம்பும் ஆண் மனோபாவம்தான் விபரீதமானது. இது ஆண்களிடம் மட்டுமே அல்ல, நவநாகரிக வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் காட்டிக் கொள்ளும் பெண்களிடமும் இருக்கிறது. சக பெண்களிடம் இன்னொரு பெண் காட்டும் அதிகார, வன்முறை மனோபாவமும் இத்தகைய ஆண்களின் அதே மனோபாவத்துடன்தான் செயல்படுகிறது.

பணிகள் முடித்து, நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பும் பெண்கள், `இனி அச்சமின்றி நள்ளிரவைக் கையாள முடியாது' என்கிறார்கள். 20 வயது உள்ள இன்னோர் இளைஞன் மொபைலில் தன் தங்கையிடம், `தனியாக வராதே. நான் வந்து பிக்கப் செய்துகொள்கிறேன்' எனக் கூறுகிறான். ஒரு பெண், ஊரில் இருக்கும் தன் அம்மாவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது நான் எங்கே, எப்படி இருக்கிறேன் எனச் செய்தி அனுப்பவேண்டியிருக்கிறது எனக் கூறுகிறாள். குறிப்பிட்ட ஒரு வன்முறையின் தன்மை, சமூகத்தை வெவ்வேறு திசைகளில் தீவிரமாகச் செலுத்துகிறது. நம் சமூகத்தில் `பாலியல் உறவு' என்பது, வன்மங்களுடன்தான் வளர்த்தெடுக்கப் படுகிறது. தனக்கு நிறைவேறாமல்போன உறவு குறித்த ஆசைகளை வன்மங்களாக மாற்றி, மனதில் பதியவைத்துக்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அமில வீச்சுகளும் வன்புணர்வுகளும், கொலைகளும், பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

ஆண் - பெண் இணக்கம் மலரட்டும்! - (ஆண் திமிர் அடக்கு!)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுமக்கள் காணும்படியாக, ஒற்றை ஆணால் கொலை செய்யப்பட்ட சுவாதி தொடர்பான உரையாடல்களும் விசாரணைகளும் ஊடகங்களின் குறுக்கீடுகளும் சமூகத்தை உலுக்கியுள்ளன. ஆனால், இந்தக் கொலைச்செயல் பற்றிய பொதுச் சமூகத்தின் எல்லா நகர்வுகளும் இன்னும் இறுக்கமான, கூர்மையான வன்முறை நோக்கியே இருக்கின்றன. இதை நாம் அறியாது செய்கிறோமா அல்லது தற்காலிகமாகவே இந்த விஷயத்தைக் கையாள விரும்புகிறோமா என்ற கேள்விகள் எழுப்புகின்றன.

பெண்களுக்கு, பொது இடங்களில் பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமே இந்த விஷயத்தின் மைய அர்த்தம் இல்லை. வீடு, கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், பொது இடங்கள் எங்குமே, எப்போதுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இருந்தது இல்லை என்பது ஒரு தொடக்கநிலை அல்லது அடிப்படையான புரிதல். அதிலும் பெண்களை ஈவ்-டீசிங் செய்தல் என்பதும், பெண்களின் உடலை கொஞ்சமும் சுயமரியாதை இன்றி உறுத்துப்பார்த்தல் என்பது காலங்காலமான காதல் - காவியப்பண்பாடாக ஊறிப்போன சமூகம் இது. இந்நிலையில் எங்கு இருந்து தொடங்கினாலும், பெண் - ஆண் உறவுகள் இன்னும் அதிகமாகச் சிக்கலாக்கப்படுகின்றன என்பதைத்தான் சுவாதி கொலை நிகழ்விலும் முன்வைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. காவல் துறையால் `குற்றவாளி' என முன்னிறுத்தப்படும் `ராம்குமார்' எனப்படுபவர் தாண்டி, இந்த விஷயத்தை எல்லா பெண் - ஆண் உறவுகளுக்காகவும், காதல் உறவுகளுக்காகவும் நீட்டிப்பார்க்கும் சந்தர்ப்பமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதையே இந்த நிகழ்வு எழுப்பியுள்ள அதிர்ச்சிகள் வலியுறுத்துகின்றன.

`ஒருதலைக் காதல்' என்பது, `ஒருதலை ராகம்' படத்தில் டி.ராஜேந்தர் சொன்னது மாதிரியாக இன்று இல்லை. ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் மனதில் மாற்றம் எழும் வரை பொறுத்திருப்பது இல்லை. பெண்களுக்கு சமூகத்தின் எந்த இடத்திலும், `நோ' எனச் சொல்ல, `எனக்கு இது வேண்டாம்' என மறுக்கும் வாய்ப்பும் உரிமையும் இல்லவே இல்லை. ஒருகாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களிலும் இதே நிலைதான் இருந்தது. பெண்கள், எத்தகைய ஆணுக்கும் எத்தகைய வாழ்வுக்கும் `யெஸ்' எனச் சொல்லவேண்டியிருந்தது. இன்று காதலர்கள், கத்திகளுடனும் அமிலங்களுடனும் அனுப்பப்படுகின்றனர். சமூகத்தின் அத்தனை ஆணைகளும் எப்போதும் ஆண்கள் கையிலேயே கொடுக்கப்படுகின்றன.

சுவாதி கொலை நிகழ்வு, மீண்டும் மீண்டும் பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து தொலைவையும், ஆண்களுக்குப் பெண்கள் எல்லோரும் கேலிசெய்துபார்க்க, கொலைசெய்து பார்க்கும் ஒரு வேடிக்கை உயிராகவும்தான் தென்படும்படியாகவே ஊடகங்கள் இந்த விஷயத்தை ஆக்கிவிட்டதுதான் விபரீதம். குற்றவாளியை அம்பலப்படுத்துவதிலும் அவனுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலும் மூர்க்கமான முனைப்புடன் இருக்கும் ஊடகங்களும் பொது சமூகமும், பெண்ணையும் ஆணையும் இணக்கமான வழிகளில் பழகவிடுவது இல்லை. பொதுவெளியில் காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வதைக் கடுமையாகக் கண்டிக்கும் ஆபாசமாக்கும் சமூகம்தான், இத்தகைய பொதுவெளிக் கொலைகளை ஊக்குவிக்கிறது; தூண்டுகிறது.

`நிர்பயா' வன்புணர்வுக் கொலை முதல் ஜிசா, சுவாதி கொலைகள் வரை ஒவ்வொரு வன்முறைச் சம்பவம் நிகழும்போதும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது வரை பெண்கள் சமூகம் தங்கள் குரலை உயர்த்திப்பேசுவார்கள். குற்றவாளிக்குக் கொடுக்கும் கொடுமையான தண்டனையை `நீதி' என்றும் நம்பும் நாம், அதுவே மற்ற ஆண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்பும் நாம், உண்மையில் பெண் - ஆண் உறவுகள் இணக்கம் அடைவதற்கு எந்த முயற்சியையும் எடுப்பது இல்லை. அப்படி ஒரு வாய்ப்பையும் கொடுப்பது இல்லை.

 பெண் - ஆண் நேசத்தின் பொருட்டுத்தான் சமூகமும் காலமும் சக்கரமாகச் சுழல்கிறது. பெண் - ஆண் உறவுதான் இந்தப் பூமியின் கட்டுமானம். இதில் முழுமையை அடையாமல், சமூகத்தில் எவ்வளவு உரிமைகளை, முற்போக்குகளை, முன்னேற்றங்களை நாம் பேசினாலும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். மீண்டும் மீண்டும் பெண் - ஆண் நேசம் நோக்கி நம்மை காலமும் வெளியும் உந்தித்தள்ளிக்கொண்டே இருக்கும்.