Published:Updated:

ஆண்களைப் பயிற்றுவிப்போம்! - (ஆண் திமிர் அடக்கு!)

ஆண்களைப் பயிற்றுவிப்போம்! - (ஆண் திமிர் அடக்கு!)
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்களைப் பயிற்றுவிப்போம்! - (ஆண் திமிர் அடக்கு!)

நான்கு பெண்கள்... நான்கு பார்வைகள்!டாக்டர் ஷாலினி

ஆண்களைப் பயிற்றுவிப்போம்! - (ஆண் திமிர் அடக்கு!)

கொலையாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ராம்குமார், ஸ்வாதியைக் குறிவைத்துத் தாக்கிய பாகம் அந்தப் பெண்ணின் வாய்.

துப்பாக்கியால் வாயில் சுடுவது கொஞ்சம் சுலபம். ஆனால், அரிவாளால் வாயைக் குறிபார்த்துக் கிழிப்பது ரொம்ப சிரமம். இருந்தும் ஒருவன் மிகச் சரியாக ஒருத்தியின் வாயைத் தாக்கியிருக்கிறானே... ஏன்?

அவள் என்னவோ சொல்லி, அவனைக் காயப்படுத்தியிருக்கலாம். கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன சொல்லியிருக்க முடியும்? அப்படியே அவள் சொன்னாலும், வெறும் வார்த்தைதானே? இவன் அதை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

இவனுக்கு சீரியஸாகத் தோன்றும் ஏதோ ஒரு வார்த்தையை இவள் சொல்லியிருப்பாளோ? சரி, சொல்வது அவள் சுதந்திரம். அது அவனைக் கஷ்டப்படுத்தியிருந்தாலும் அதை முதிர்ந்த மனப்பக்குவத்துடன் எடுத்துக்கொண்டிருக்கலாமே?

ஆண்களைப் பயிற்றுவிப்போம்! - (ஆண் திமிர் அடக்கு!)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், இந்த மாதிரி `முதிர்ந்த மனப்பக்குவம்' எல்லாம் திடீரென ஒருநாள் தானாகத் தோன்றி வியாபிக்கும் வஸ்து அல்லவே! அது பல ஆண்டுகளின் தொடர் பயிற்சியால் ஏற்படும் நரம்பு முனை மாற்றம்.

மனிதர்கள்தான் என்றாலும் நம் எல்லோரது மூளைக்குள்ளும் ஒரு மிருக மூளை இன்னும் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது எல்லாம் மூளையின் மற்ற பாகங்களைவிட இந்த `லிம்பிக் பாகம்' அதிதுரிதமாகச் செயல்பட்டு, அனிச்சைச் செயல்களால் நம்மைக் காப்பாற்ற வல்லது. அதனால்தான் இயற்கை இன்னும் இந்த லிம்பிக் மூளைக்கு, நம் மண்டைக்குள் இடம் அளித்திருக்கிறது.

ஆபத்து என்றதுமே லிம்பிக் மூளை, முன்யோசனைக்கு எல்லாம் நேரத்தை வீணடிக்காமல், டக்கெனப் பிரயோகிக்கும் டெக்னிக்குகள் நான்கே நான்குதான்.

1) தாக்குதல், 2) தப்புதல், 3) உறைந்துபோதல், 4) மயக்கமுறுதல். இந்த நான்கும், உயிர் பிழைக்க உபயோகப்படலாம். குறிப்பாக, இயற்கை இடர், மிருகத் தாக்குதல் மாதிரியான சம்பவங்களில்.
ஆனால், மனிதனுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, இந்த நான்கு எதிர்வினைகளுமே உதவாது. உதாரணத்துக்கு ஆசிரியர் அதட்டினால், அவரைத் தாக்குவதோ, பள்ளியைவிட்டு ஓடிவிடுவதோ அல்லது அங்கேயே மயக்கம்போட்டு விழுவதோ பிழைக்கத் தோதான எதிர்வினைகள் அல்ல. சிறிது நேரத்துக்கு உறைந்துபோய் இருந்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகர்வார்கள் மாணவர்கள்.

ஆக, மனிதர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரத்யேகமான பிரச்னைகளைத் தீர்க்க, இந்த லிம்பிக் பகுதி மட்டும் போதாது என்றுதான் மனித மண்டையில் முன்மூளை மிகப் பெரிதாகப் பரிணமித்துள்ளது. இந்த முன்மூளை பொறுத்திருத்தல், சகித்துக்கொள்ளுதல், ஹாசியமாக எடுத்துக்கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், சட்டைசெய்யாமல் இருத்தல், புலம்பித் தள்ளுதல், அழுது தீர்த்தல், எதிர்கால நலனை கருத்தில்கொண்டு தற்சமயத்துக்கு அடங்கிப்போதல் மாதிரியான பலப்பல எதிர்வினைகளை ஆற்றவல்லது. இத்தனை எதிர்வினைகளில் காலம், சூழல், சந்தர்ப்பத்தைப் பொறுத்து சரியான எதிர்வினையைத் தேர்வுசெய்து அமல்படுத்தி மனதைச் சாந்தப்படுத்திக்கொள்வது மனிதர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

ஆனால் லிம்பிக பாகம், முன்மூளை பாகம் இந்த இரண்டில், லிம்பிக் பாகம்தான் பரிணாமத்தில் மிக புராதானமானது; பல மில்லியன் நூற்றாண்டுகளாகச் செயல்பாட்டில் இருப்பது. கருவில் இருக்கும்போதே வேலைசெய்ய ஆரம்பித்துவிடும் என்பதால், இந்தப் பகுதிதான் முதலில் இயங்கும். பெரும்பாலும், சுயேச்சையாகவே இயங்கிவிடும்.

முன்மூளை பயிற்றுவித்தால்தான் வளர்ச்சி பெரும். பல ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகுதான் இது லிம்பிக் மூளையை அடக்கி ஆளப் பழகும். குழந்தை வளர்ப்புமுறைகள், பள்ளிக் கல்வி, மற்றோருடன் பழகும்போது ஏற்படும் பொது அறிவு, மனிதர்களோடு புழங்கும்போது ஏற்படும் அனுபவம், மதபோதனை, சட்டபோதனை, மனநல போதனை மாதிரியான தொடர் பயிற்றுவிப்பினால் மட்டுமே இந்த முன்மூளையைத் தயார்செய்ய முடியும்.

இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசங்கள் உண்டு. பெண் மூளையில் ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்டிரான், ஆக்ஸீடோசின் மாதிரியான ஹார்மோன்களே பிரதானம். இவை, பெண்களை தொலைநோக்குடன் செயல்படவைக்கின்றன; ரிஸ்க் எடுக்காமல் பத்திரமாக இருக்கவைக்கின்றன. காரணம், இயற்கையில் பெண் இன்றியமையாதவள்.

ஆனால், ஆணின் மூளையில் அவன் வயதுக்கு வந்த பிறகு, அவன் வாழ்நாள் முழுக்க ஓங்கி வேலைசெய்யும் ஒரே ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான். இந்த ஹார்மோன் அவனை சட்டென ரிஸ்க் எடுக்கவைக்கிறது, சூழ்நிலையை சரியாக எடைபோடாமல் ஆபத்துக்களை எதிர்கொள்ளவைக்கிறது.

ஓர் ஆணை மரியாதையோடும் மகிழ்ச்சியோடும் நடத்தினால், அவன் டெஸ்டோஸ்டிரான் அந்தக் கணமே அதிகமாகிவிடுகிறது. அதன் உபயத்தால் அவன் முன்மூளை இயங்கி `நான் உன்னைப் பாதுகாப்பேன்' என்கிற பொறுப்பு உணர்ச்சி பெறுகிறான். இதுவே ஓர் ஆணை அவமரியாதை செய்து முகம் சுளித்தால், அவனுக்கு டெஸ்டோஸ்டிரான் தாறுமாறாகக் குறைந்துபோய், திடீர் கோபம் வந்து, `என்னையா அவமரியாதை செய்கிறாய்... உன்னை என்ன பண்ணுகிறேன் பார்' என அவன் லிம்பிக் மூளை திடுமென இயங்க ஆரம்பிக்கிறது.

சுயமரியாதை இல்லாத ஆண் என்ன செய்வான்? பொழுது போகவில்லை என, தரக்குறைவான கருத்துக்களை போதிக்கும் குப்பைப் படங்களைப் பார்ப்பான். அதில் எவனாவது, `அடிடா அவளை... உதைடா அவளை...' எனப் பாடி ஆடும் காட்சி வந்தால், அதை உள்வாங்கிக்கொள்வான். ஒரு பெண், தன்னை வேண்டாம் எனச் சொன்னால், அவளைத் தண்டிக்கும் மனநிலையில் ஏற்கெனவே இருக்கும் இந்தப் பையனை யாராவது அவமானப் படுத்திவிட்டால், இவன் வாழ்வு உந்துதலைவிட மரிக்கும் உந்துதல் வலுப்பெற்றுவிட, முன்பின் யோசிக்காமல் தாக்குதல் பாணியில் இறங்கிவிடுகிறான்.

ஆண்களை இப்படி நேரடியாகவும் மறைமுக மாகவும் டெஸ்டோஸ்டிரான் பதைபதைப்புக்களுக்கு ஆளாக்கும் சமூகக் காரணங்களை இனியாவது அறிவியல்பூர்வமாக அணுகி, மாற்றங்களை ஏற்படுத்துவது முக்கியம். அதிக சுயமரியாதை உள்ள ஆண்கள், தங்கள் தரம் தாழ்ந்துபோக அஞ்சுவார்கள். சுயமரியாதையே இல்லாத ஆணுக்கு தரத்தைப் பற்றிய கவலையே இல்லை என்பதால், அவன் ஆபத்தானவனாகிறான்.

சுயமரியாதைமிக்க ஆண்களை உருவாக்குவதுதான், இது மாதிரியான பிரச்னைகளுக்கு நிரந்திரத் தீர்வாக இருக்க முடியும். அப்போதுதான் பெண்களும் முழு சுயமரியாதையோடு சுதந்திரமாக இயங்க முடியும். எவ்வழி ஆடவரோ, அவ்வழியே பெண்டிர்!