பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நீரின்றி அமையாது தமிழகம்!

நீரின்றி அமையாது தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீரின்றி அமையாது தமிழகம்!

நீரின்றி அமையாது தமிழகம்!

நீரின்றி அமையாது தமிழகம்!

மீண்டும் தமிழகத்துக்கு ஒரு நதிநீர்ப் பிரச்னை. காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை... என அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகள்  எதுவும் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இப்போது ஆந்திராவில் இருந்து பிரச்னை.

ஆந்திரா எல்லைப் பகுதியில், சித்தூர் அருகே புல்லூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே ஐந்து அடியில் ஒரு தடுப்பணை இருக்கிறது. இப்போது அதை 12 அடியாக உயர்த்தும் வேலையில் ஆந்திரா அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இதனால் தமிழகத்தில், பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குப் போகும் ஆபத்து உருவாகியிருக்கிறது. தமிழக வட மாவட்டங்களில் உள்ள பல நகரங்கள், கிராமங்களின் மிகப்பெரும் குடிநீர் ஆதாரம் பாலாறு மட்டுமே.

கர்நாடகத்தில் 93 கி.மீ பயணித்து, ஆந்திராவின் வழியே 33 கி.மீ கடக்கும் பாலாறு,  தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே கர்நாடகாவில் 18 தடுப்பணைகள், ஆந்திராவில் 32 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. (222 கி.மீ. தூரம் பாயும் தமிழகத்தில் ஒரே ஒரு தடுப்பணை மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது). பாலாறு பாலைவனம் போல காட்சியளிப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம். இந்த நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள தனது எல்லைப் பகுதியில் இருக்கும் தடுப்பணையின் உயரத்தையும், ஆந்திரா அரசு இன்னும் இரு மடங்காக உயர்த்தினால், பாலாற்றில் தடுப்பணைகள் மீது வழிந்துவரும் தண்ணீர்கூட தமிழகத்துக்கு வராது. 

`நதிகள் உற்பத்தியாகும் மாநிலம், அந்த நதிகளின் நீரைக் கடைசியாகப் பெறக்கூடிய மாநிலத்தின் முன்அனுமதியைப் பெறாமல் அணைகளை, தடுப்பணைகளை, நீரைத் திருப்பும் அல்லது தேக்கும் கட்டுமானங்களைக் கட்டக் கூடாது' என்பது 1892-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்த விதி. ஆனால், இதைப் புறந்தள்ளிவிட்டு தடுப்பணை உயரத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஆந்திரா அரசு.

ஏற்கெனவே தமிழகத்தில் ஆற்றுமணலைச் சுரண்டுவது, இயற்கை வளங்களைச் சூறையாடுவது, சரியான பராமரிப்பின்மை ஆகியவற்றால் ஏராளமான பிரச்னைகளைச் சந்திக்கிறோம். அதோடு அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகளும் இணைந்து குடிநீருக்கும் விவசாயத்துக்கும் கொள்ளி தூக்குகிறது. ‘தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது’ என ஆந்திரா முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது மட்டும் போராட்டம், வழக்கு, கண்டன அறிக்கை, மத்திய அரசுக்கோ சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கோ கடிதம் என எதிர்வினையாற்றுவது போதாது. நீதி கிடைக்கும் வரை, மாநில அரசுகள் தங்கள் உரிமைக்காகப் போராடியாக வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தவேண்டிய மத்திய அரசு, இதில் அரசியல் செய்யக் கூடாது.

எத்தனை பகை இருந்தாலும் பாகிஸ்தானுடன் நதிநீரைப் பகிர்வதில் இந்தியாவுக்கும் அவர்களுக்கும் பிரச்னை இல்லை. ஆனால், இந்தியாவில் நம் மாநிலங்களுக்கு இடையிலோ ஏராளமான நதிநீர்ப் பிரச்னைகள். இதற்கு அழுத்தமான தீர்வுகாண வலுவான தேசிய நதிநீர்க்கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

ராஜ்ய சபாவில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வின் எம்.பி-க்களின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைப்படும் காலம் இது. எனவே, நம் நதிநீர்ப் பிரச்னைகளுக்கு நிரந்தரச் சட்டத்தீர்வு காண, ஆளும் அ.தி.மு.க அரசு முன்முயற்சிகள் எடுக்க வேண்டும். இப்போதும் இல்லையெனில், இனி எப்போது?