Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5

தேவையானவற்றை மட்டும் தெரிந்துகொள்ளும்போது மனம் விரிவடைகிறது. தேவைக்கு அதிகமாகத் தெரிந்துகொண்டால், மனம் குறுகி, அறிவு விரிகிறது. `ஒரு காட்டில் தேவதை வாழ்ந்தாள்' எனக் கூறினால், மனதில் காடு வளர்ந்து தேவதை பிறக்கிறாள். அறிவு, ‘தேவதை என்று யாரும் இல்லை’ எனத் தீர்ப்பு எழுதி, மனதில் பிறந்த காட்டை அழிக்கிறது; தேவதையைக் கொலைசெய்கிறது. எப்போதுமே அறிவாளிகளாக வாழ்ந்து விட முடியாது. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்குமான வேறுபாடு இதுதான். மனிதர்கள், மனதால் வாழப் படைக்கப்பட்டவர்கள்.
நவீனச் சமூகக் குழந்தைகளின் மனதில் கற்பனைக்கான வாய்ப்புகள் சிதைக்கப் படுகின்றன. `ஓர் ஊரில் ஒரு வீரன் இருந்தான்’ எனக் கூறினால், இதைக் கேட்கும் குழந்தைகளின் மனதில் தனித் தனியான சித்திரங்கள் உருவாக வேண்டும்.

இன்றைய குடும்பங்களில் கதை சொல்பவர்களே குறைந்துவிட்டார்கள். ஒருவேளை கதை சொன்னாலும் அதைக் கேட்கும் குழந்தைகளின் மனதில் சுயமாக எந்தச் சித்திரமும் உருவாகிவிடாது. ஏனெனில், அவர்கள் கதைகளைக் கேட்பது இல்லை; பார்க்கிறார்கள். தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்கள், இணையங்கள் வழியாகச் சிறுவர்கள் நிறையப் பார்க்கிறார்கள்.

கதை சொல்லுதல் என்பது, மனதின் உரையாடல். ஒரே கதையை 100 முறை சொன்னாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக அந்தக் கதை பிறக்கும். கதையைக் கேட்கும் சிறுவர்களுக்கு ஒவ்வொரு முறையும் அக உலகம் விரிந்துகொண்டேபோகும்.

கதை கேட்கும்போது உருவாகும் எந்த மன உணர்வும், கார்ட்டூனைப் பார்க்கும்போது உருவாகாது. ஏனெனில், இந்தக் காட்சி வடிவத்தில் பார்வையாளருக்கு எந்தப் பங்கேற்பும் இல்லை. ராமாயணக் கதையை பாட்டி சொல்லக் கேட்டவர்களுக்கு, ராமன் உருவம் அவரவர் மனதில் உருவானது. ஒரு கோடிப் பேர் ராமாயணம் கேட்டாலும், ஒரு கோடி வகையான ராமன்கள் உருவாகிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது ராமாயணத்தைப் `பார்ப்போர்’ எத்தனை கோடிப் பேராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு ராமன்தான் தெரிகிறான். பீமன், கண்ணன் ஆகிய பெயர்களுக்குப் பின்னால் இருந்த வியக்கத்தக்க உருவங்களும் அவற்றைப் பற்றிய சொந்தக் கற்பனைகளும் முற்றிலும் ஒழிந்துபோயின. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சித்திரங்கள்தான் பீமனும் கண்ணனும் என்றாகிப்போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதையும் கேட்டறியும்போதுதான், மனதின் செயல்பாடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம். பார்க்கும்போது அந்தக் காட்சியில் மனம் உறைந்துவிடுகிறது. இதற்கு மேல் எதுவும் இல்லை என்ற இறுதிநிலையைக் காட்சிகள் வழங்கி விடுகின்றன. குடும்பத்தின் மூத்தவர்கள் கதை சொல்லிகளாக இருந்தவரைக்கும் குழந்தைகளின் கற்பனைத்திறன் எல்லையற்று இருந்தது. அந்தக் காலத்தில், குழந்தைத்தனம் சிதையாத வகையில் கதைகள் கூறப்பட்டன.

இப்போது காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் கதைகளின் நாயகர்களும் நாயகிகளும் போக்கிரித் தனத்தின் உருவகங்களாக இருக்கிறார்கள். அவர்களது மொழிமாற்ற வசனங்களோ, அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கின்றன. வயது மீறிய கதைகள், உருவங்கள், வசனங்கள் வீட்டின் மையத்தில் அரங்கேற்றம் செய்யப்படும்போது, அமைதியான குழந்தைகளை வளர்த்தெடுக்கும் வழி ஏது?

இப்போதைய குழந்தைகள் வரையும் சித்திரங்களில் வேற்றுக்கிரகவாசிகளின் உருவங்கள் இருப்பதைக் காணும்போது மனம் பதைக்கிறது. இன்னும் இவர்கள் தமது அண்டை வீட்டாரைக்கூட அறிந்துகொள்ளவில்லை.

பல சிறுவர்களுக்கு, தமது சொந்த ஊரின் பெயர் தெரியாது; இரண்டாம் தலைமுறை தாத்தா- பாட்டியைத் தெரியாது. ஆனால், இவர்களுக்கு வேற்றுக்கிரகவாசிகளின் பெயர்களும் அவர்களின் இயல்புகளும் மனப்பாடம்.

இவர்கள் காணும் எல்லா கதைகளும் சண்டைகளை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதன் முடிவு ஏதோ ஒரு கொலைக்களத்தில்தான் அமையும் என்ற நம்பிக்கை விதைக்கப்படுகிறது. இந்தச் சிந்தனை, பெரியவர்களுக்கே ஆபத்தானது. தொலைக்காட்சித் தொடரில் கொலை செய்யப்படுவதை முதல்முறை யாகக் காணும் குழந்தை, பதறி அழுகிறது. ‘அது வெறும் கதை’ எனக் கூறி அழுகையை நிறுத்துவதே பெரும் சவால் ஆகிறது. இதுதான் குழந்தையின் குணம். இந்தக் குணத்தைச் சிதைத்துச் சீரழிக்கும் தொடர்களைப் பற்றிய எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் இருக்கிறீர்களே!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5

`யானையின் காலில் முள் குத்திவிட்டது’ என பாட்டி கதை சொல்லும்போது கலங்கி, கண்ணீர் வடிக்கும் மனமுடைய அதே குழந்தைகள்தான், இப்போது ஒரு நாளைக்கு நூறு கொலைகளை கண்கள் இமைக்காமல் கண்டுகளிக்கின்றன. மெத்தென்ற  சாய்வு  இருக்கைகளில்  அமர்ந்துகொண்டு, தின்பண்டங்களைக் கொறித்தவாறு குருதி கொப்பளிக்கும் சண்டைகளைக் காணும் குழந்தைகளின் மனதில் எந்த நீதிக் கதையை விதைக்க முடியும்?

வெற்றியின் மீது வெறியூட்டும் வகையில் கணினி விளையாட் டுக்கள் வடிவமைக்கப்படு கின்றன. கணினியிலும் செல்பேசிகளிலும் உள்ள விளையாட்டுக்களில் சிறுவர் களின் விரல்கள் இயங்கும் வேகத்தைப் பாருங்கள். தமக்கான தலைவிதியைத் தாமே அதிவேகமாக அவர்கள் எழுதிக்கொண்டிருப்பது தெரியவில்லையா? தேவைக்கு அதிகமான வேகம், கோபம், ஆவேசம், அயர்ச்சி, வெட்கம், பெருமிதம்... ஆகியவை எல்லாம் மிகக் குறுகிய நேரத்தில் வந்து மறைகின்றன.

இப்போதைய பல பள்ளிகளில் விளையாட்டுப் பிரிவுகள் இழுத்து மூடப்படுகின்றன. கால்பந்து, கூடைப்பந்து, கபடி போன்ற உடலையும் மனதையும் மேம்படுத்தும் விளையாட்டுக்களில் பங்கேற்கும் சிறுவர்கள் அரிதாகிவிட்டனர். ஆனால், வீட்டுக்கு வீடு வீர விளையாட்டுக்கள் அரங்கேறிக்கொண்டுள்ளன... கணினித் திரையில். விளையாட்டுக்களின் நோக்கம், வெற்றி அடைவது அல்ல. வெற்றி, தோல்வி ஆகிய இரு நிலைகளுக்கும் இடையில் உள்ள பெரும் பயணத்தை அனுபவமாகக் கற்றுத்தரத்தான் விளையாட்டுக்கள் தேவைப்படுகின்றன. எந்த விளையாட்டிலும் எல்லோரும் வெற்றிபெறுவது இல்லை. அதற்காகத் தோல்வி அடைந்தோர் மனஉளைச்சலுக்கு ஆளாவதும் இல்லை.

உண்மையான விளையாட்டு, மனதைப் பக்குவப்படுத்தும். ஆனால், சிறுவர்கள் ஆடும் கணினி விளையாட்டுக்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களால், தோல்வியை ஒப்புக்கொள்ளவே முடிவது இல்லை. வெற்றி பெறும் வரையில் கணினித் திரையில் விரல்களைத் தேய்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மனநிலையுடன் சமூகத்தில் வாழ முடியுமா எனச் சிந்தியுங்கள்.

தேவைக்கு அதிகமாகத் தெரிந்துகொள்வது, துன்பத்தைத் தரும்.

மின்விசிறி சுழலும் ஓசை கேட்கிறது, பூமி சுழலும் ஓசை கேட்பது இல்லை. எது தேவையோ அதை மட்டுமே அறிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளோம். தேவையற்றவை நமது புலன்களின் அறிவுக்கு மறைக்கப்படுகின்றன. ஒருவேளை எல்லா ஓசைகளும் கேட்கும்படியாக நமது செவிகள் மாற்றியமைக்கப்பட்டால், அண்டத்தில் சுழலும் கோள்களின் பேரிரைச்சலால் செவிப்பறைகள் கிழிந்து மரணம் நேரிடும்.

தேவையாவனவற்றை மட்டும் தெரிந்துகொள்ளுதல் மரபு வாழ்வியல். தேவையைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் பல்வேறு துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் நவீன வாழ்க்கைமுறை. இப்போதைய சிறுவர்களின் நிலைமை நவீன வாழ்க்கையின் தீவினைக்கு ஆட்பட்டுள்ளது. மிகைத் துடிப்பு சிறுவர்கள் (ஹைப்பர் ஆக்ட்டிவ்) பெருகிக்கொண்டிருக் கிறார்கள். மன அழுத்தம், இப்போது பள்ளிக் குழந்தைகளிடம்கூட அறிமுகமாகிவிட்டது.

இந்தக் காலத்துச் சிறுவர்கள் தேவைக்கு அதிகமாகத் தெரிந்துகொள்கிறார்கள். செல்பேசிகளின் நுட்பங்களைக் கண்டறிந்து இயக்கும் சிறுவர்கள், தங்கள் அறியாமையைத் தொலைத்துவிடுகிறார்கள்.

அறியாமை, மிக உன்னதமான இயல்பு. அறியாமை என்பது இருள். அறியாமைதான் அமைதி. இருளையும் அமைதியையும் உணர்ந்து அனுபவிக்காதவர்களால், ஒளியையும் ஓசையையும் புரிந்துகொள்ள முடியாது. அறியாமைதான் பசி. அறிவு எனும் உணவு செரிக்கவேண்டுமானால், அறியாமை எனும் பசி தோன்ற வேண்டும். அறியாமைதான் தாகம், அறிவு நீர்.

பூமியில் உயிர் வாழத் தேவையான அறிவு, படைக்கும்போதே வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தை கண் திறக்கும் முன்னரே, தாயின் முலைக்காம்புகளைச் சுவைக்கிறது. சிறுநீர் கழித்த ஈரத்தில் படுத்திருக்க விரும்பாமல், எல்லா குழந்தைகளும் துணி மாற்ற வரும்படி பெற்றோரை அழுது அழைக்கிறது. மனிதக் குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு மிகுதியாகத் தேவைப்படுகிறது.
காட்டுக் குதிரைகளோ பிறந்த மறு நிமிடமே நடக்கத் தொடங்கிவிடுகின்றன. ஆமைக் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியேறிய உடனே கடலில் நீந்துகின்றன. எந்த உயிருக்கு எந்தப் பருவத்தில் எது தேவை என்பது படைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  இந்த விதியை மதித்து நடக்கும் வரை வாழ்க்கை இனிதாகிறது. தேவைக்கு அதிகமானவற்றை தேவைப்படாத காலத்தில் அறிந்துகொள்ளுதல், படைப்பின் விதிகளை மீறும் செயல்.

இப்போதைய சிறுவர்களுக்கு ஓடத் தெரியும். ஆனால், அமைதியாக நடக்கத் தெரியவில்லை. சாப்பிடும்போது, உணவை மட்டும் கவனித்து உண்பதுதான் சரியான பழக்கம். தொலைக்காட்சியைக் காணாமல் உண்ணும் பழக்கம் பல குழந்தைகளிடம் இல்லை. ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து, பொறுமையாக விளையாடும் குழந்தைகளைக் காண்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது. காந்தியடிகள், நூல் நூற்கும் ராட்டையைச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். `பஞ்சை ராட்டையில் சுழற்றி நூலாக்கும் பழக்கம், சிறுவர்களின் மனதைப் பண்படுத்தும்' என்றார் அவர். இப்போதைய குழந்தைகளின் பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதற்கு  இந்த  மாதிரியான செயல்திட்டங்கள் தேவை என நினைக்கிறேன்.

நவீனக் கருவிகளின் பிடியில் இருந்து சிறுவர்களை விடுவிப்பது, நமது ஒருங்கிணைந்த செயல்பாடாக இருக்க வேண்டும். செல்பேசி உள்ளிட்ட கருவிகளை மிகக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அவற்றை சிறுவர்களுக்குப் பழக்காதீர்கள். இரவுகளில் பிள்ளைகளின் அருகே படுத்துக்கொண்டு, தலை கோதிவிட்டவாறு கதை சொல்லுங்கள். உங்கள் கதைகளில் தேவதைகள், அன்னங்கள், தெய்வங்கள், அரக்கர்கள், பேசும் மரங்கள் எல்லாம் உலா வரட்டும். அந்தக் கதைகளின் ஆழத்தில் அறச்சிந்தனைகள் இருக்கட்டும். கதை கேட்கும் குழந்தைகளின் மனம் பெருங்கடலாக விரியட்டும்.நமது பிள்ளைகள், உடனடி வெற்றிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். கணினி விளையாட்டுக்களின் மேலே ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம், பிள்ளைகளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

எந்நேரமும் கார்ட்டூன் ஓசைக்கும், கணினி விளையாட்டு இரைச்சலுக்கும் பழகிய குழந்தைகளுக்கு அமைதியின் மீது வெறுப்பு உருவாகும். எல்லா கதைகளிலும் கொலைகளைப் பார்த்து வளரும் பிள்ளைகள் வன்முறை நிறைந்த சமூகத்தை உருவாக்கிவிடுவார்கள். இந்தச் சீர்கேடுகளின் தலைநகரமான அமெரிக்காவில்தான், பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சிறுவர்கள் இருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது, 22 நிமிடங்களில் ஓடி முடியும் தொலைக்காட்சிக் கதை அல்ல. அது ஒரு நெடும் பயணம். தேவையானவை எல்லாம் நினைத்த உடனே கிடைத்துவிட்டால், அந்தப் பயணம் விரைவில் முடிந்துவிடும். தேவையானவற்றைத் தேடுவதும், அதற்காகக் காத்திருப்பதும்தான் பயணத்தை நீடிக்கச் செய்யும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5

அறியாமை எனும் அற்புத வரம் குழந்தைப் பருவத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் பிள்ளைகள்தான் பிற்காலத்தில் அறிவின் சிகரங்களை எட்டுவார்கள். குழந்தைகளை கருவிகளின் பிடியில் இருந்து விடுதலை செய்தால் போதும். அவர்களின் கனவில் தேவதை தோன்றி, வேண்டும் வரங்களைத் தருவாள்.

கருவிகளின் மிகையான உற்பத்திக்காகத்தான் புவிச் சூழல் சிதைக்கப்படுகிறது. குழந்தைகளின் மனதில் வன்முறையை விதைக்கும் கருவிகள், பூமியின் மீது வன்முறையை ஏவிய பின்னர்தான் உங்கள் வீடுகளை வந்தடைகின்றன. நமது பிள்ளைகள் கருவிகளை வீசி எறிந்தால், சிலிக்கான் சில்லுகளுக்காக அழிக்கப்படும் பெருங்காடுகள் காக்கப்படும். மென்பொருள் சார்ந்த விளையாட்டுக்களை ஒழித்துக்கட்டினால், கடலில் கொட்டப்படும் கணினிக் கழிவுகள் குறையும்; டால்பின்களும் திமிங்கலங்களும் பவழப் பாறைகளும் இன்னபிற கடல் உயிரினங்களும் இந்தப் பூமியில் நீடு வாழும்.

- திரும்புவோம்...