Published:Updated:

டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

மு.நியாஸ் அகமது, ஓவியம்: ஹாசிப்கான்

டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

மு.நியாஸ் அகமது, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி
டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

வருக்கு, பூர்வீகம் தமிழ்நாடு அல்ல; தமிழும் அவ்வளவாக வராது. ஆனால், தமிழ்நாட்டின் சூழலியல் போராட்டக் களத்தில் மிக முக்கியமானவர். சூழலியல் சார்ந்து இயங்கவிரும்பும் பலருக்கும் அவர் ஆதர்சம். அப்படிப்பட்ட ஒருவருடைய கைது, என்ன மாதிரியான அதிர்வு அலைகளை உருவாக்கும்?

காவல் துறைகூட எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழ்நாட்டின் சிறு நகரம் ஒன்றில் நடந்த கைது, இன்று இந்தியா முழுக்க விவாதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாக எண்ணற்ற இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்டவர் சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்... பியூஷ் மனுஷ்.

 யார் இந்த பியூஷ் மனுஷ்?

பியூஷின் பூர்வீகம் ராஜஸ்தான். சென்ற தலைமுறையில்தான் அவரது குடும்பம் சேலத்தில் குடியேறியது. அவர்களது முழுக் கவனமும் தொழிலில் மட்டும்தான். இவரும் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், கொசுவலை உற்பத்தித் தொழிற்சாலையைச் சிறிதாகத் தொடங்கினார். நிறைவான லாபம். இருந்தும், பியூஷுக்கு இயல்பாகவே சூழலியல் மீது மிகுந்த அக்கறை. `கொசுவலை உற்பத்திசெய்வதற்காக, சாயங்கள் பயன்படுத்துவது நெருடலாக இருக்கிறது. நமக்கு நாமே உண்மையாக இல்லையோ, நமது பிழைப்புக்காக நம் நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்கிறோமோ, நம் நம்பிக்கைகளுக்கு நாமே முரண்படுகிறோமோ?' என தனக்குள்ளேயே விவாதித்துக்கொண்டார். திடீரென ஒருநாள், கொசுவலை உற்பத்தித் தொழிற்சாலையை மூடிவிட்டார்.

`நாம் ஆயிரக்கணக்கில் மரங்கள் நடலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் `வளர்ச்சி' எனப் பொய்யான காரணங்களைக் கூறி, லட்சக் கணக்கில் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கின்றன. அதை எல்லாம் காக்க போராடாமல், வெறும் செடிகளாக நடுவது மட்டும் சூழலியல் செயற்பாடு ஆகாது' என பியூஷிடம் சொல்லியிருக்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன். இந்தச் சொற்கள், அவரை உலுக்கின.

இதற்குப் பிறகு, பியூஷ் மனுஷ் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. பியூஷ், தன்னை முழுநேரச் சூழலியல் செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டார். அதுவரை பியூஷ் சேத்தியாவாக இருந்தவர், தன் பெயரில் இருந்த `சேத்தியா' என்ற சாதியை நீக்கி, `மனுஷ்'-ஐ சேர்த்துக்கொண்டார்.

மக்களைத் திரட்டி பியூஷ் முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாமே அவசியமானவை; அசாத்தியமானவை. மிகப் பெரிய ரசாயன ஆலை ஒன்று, முறைகேடாக ரசாயனக் கழிவுகளை மேட்டூர் காவிரி ஆற்றில் கொட்டியது. இதனால் பலரும் மோசமான நோய்களுக்கு உள்ளானார்கள். இதற்கு எதிராக மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் போராடியும், சட்டப் போராட்டம் நடத்தியும் வென்றார் பியூஷ். இதுபோல் பியூஷின் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு மக்கள் போராட்டம் ‘கஞ்சமலைப் பாதுகாப்பு இயக்கம்’.

பெரும் நிறுவனங்கள் சில ஒன்றாக இணைந்து, கஞ்சமலையில் உள்ள தாதுக்களைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டன. அந்த நிறுவனங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், அந்த நிறுவனங்கள் கவுந்தி - வேடியப்பன் மலைகளை நோக்கி ஓடின. அங்கும் சென்று மக்களை ஒருங்கிணைத்துப் போராடி வென்றார் பியூஷ்.
அரசின் பங்களிப்பு சிறிதும் இல்லாமல் சேலத்தில் மக்களைத் திரட்டி, `சேலம் மக்கள் குழு' என்ற அமைப்பைத் தொடக்கினார். அந்த அமைப்பு புனரமைத்த மூக்கனேரி, குமரகிரி அம்மாபேட்டை ஏரி போன்றவை, இப்போது சேலத்தின் முக்கிய அடையாளங்கள்.

டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

தர்மபுரியில், ஏறத்தாழ 200 ஏக்கர் வறண்ட நிலத்தை மக்கள் பங்களிப்பால் அடர்வனமாக மாற்றியிருக்கிறார். அங்கு மட்டும் அவர்கள் நட்ட மரங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல். அங்கு பியூஷ் தலைமையிலான மக்கள் குழு ஏற்படுத்திய நீர்நிலைகள் 20. இப்போது அங்கு ஊற்றெடுக்கும் நீர், ஏறத்தாழ 10 கிராமங்களின் நீர் தேவைக்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி எங்கு எல்லாம் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கின்றனவோ அங்கே எல்லாம் மக்களைத் திரட்டுவதில் பெரும்பங்கு வகித்தவர் பியூஷ்.

  பியூஷின் கைது ஏன்?

“சேலத்தில் முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் வேலைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு இந்த வேலைகள் குறித்து உரிய முறையில் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. `மக்களிடம் உரிய முறையில் தகவல் தெரிவித்த பிறகே பணிகள் தொடங்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் சேலம் மக்கள் குழு ஜூலை 8-ம் தேதி ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது. அமைதியான வழியில் நடத்தப்பட்ட போராட்டத்தை, காவல் துறை தடுக்க நினைத்தது. நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, சேலம் மக்கள் குழுவைச் சேர்ந்த பியூஷ், கார்த்திக் மற்றும் முத்து ஆகியோரை கைதும்செய்தது.

டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

கார்த்திக் மற்றும் முத்துவுக்கு, ஜூலை 14-ம் தேதி (வியாழக்கிழமை) ஜாமீன் வழங்கப்பட்டது; பியூஷுக்கு ஜாமீன் வழங்க காவல் துறை ஆட்சேபம் தெரிவித்ததால், அவருக்கு மட்டும் மறுக்கப்பட்டது. பியூஷ், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவதும், அதற்காக கைதுசெய்யப்படுவதும் புதிது அல்ல. ஆனால், இந்த முறை அவர் மீது சிறையில் கடுமையான வன்முறையை ஏவியிருக்கிறார்கள்” என்கிறார் பியூஷின் நண்பர் சுரேஷ்.

`` `நீதிக்காகப் போராடுவதுதான் கடவுளை அடையும் வழி' என, பியூஷ் எப்போதும் என்னிடம் சொல்வார். `நாம் கடவுளை உண்மையாக நேசிக்கிறோம் என்றால், அனைத்து அநீதிகளுக்கும் எதிராகப் போராட வேண்டும்' என்பார். ஆனால், அப்போது அந்தச் சொற்களின் அர்த்த ஆழங்கள் எனக்குப் புரியாமல் இருந்தன. கடந்த ஒரு வாரமாக பியூஷுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடும்போதுதான் நான் கடவுளை உணர்கிறேன்” என வலியோடும் கண்ணீரோடும் வந்துவிழுகின்றன பியூஷின் மனைவி மோனிகாவின் சொற்கள்.

 அச்சுறுத்துவதற்காக நடந்த கைதா?

“சேலத்தில் சூழலியலைக் கெடுக்கும் ஏதாவது பெரும் திட்டத்தைக் கொண்டுவர அரசு முயல்கிறதோ என எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அப்படி ஒரு திட்டம் இருந்தால் பியூஷ் நிச்சயம் மக்களைத் திரட்டி அதை எதிர்ப்பார். அதனால், அவரைக் கைதுசெய்வதன் மூலம் மக்களை அச்சுறுத்த அரசு நினைக்கிறதோ என எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு எல்லாம் முடியாது என அரசுக்குப் புரியவைப்போம். சிறையில் அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையைக் கோருவது மட்டும் அல்லாமல், பியூஷ் எந்தெந்த விஷயத்துக்கு எல்லாம் போராடினாரோ, அந்தப் போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்” என்கிறார்கள் பியூஷின் கைதுக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் குழு அமைப்பினர்.

இயற்கை வளங்களுக்கு மட்டும் அல்ல. அவற்றைக் காக்கப் போராடுபவர்களுக்கும்கூட பாதுகாப்பு இல்லை என்பதே பியூஷின் கைது நமக்கு உணர்த்தும் உண்மை!

டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

முப்பது பேர் தாக்கியிருக்கிறார்கள்!

பியூஷின் வழக்குரைஞர் மாயன், “பியூஷ் கரங்களைக் கட்டி, இருட்டு அறையில் வைத்து ஏறத்தாழ முப்பது பேர் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் மீது ஏன் இவ்வளவு வன்மம்? வினுப்பிரியா தற்கொலையைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களை பியூஷ்தான் முன்னெடுத்தார். `வினுப்பிரியாவின் தற்கொலைக்கு, காவல் துறையின் மெத்தனமே காரணம். காவலர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்' என்றார். ஒருவேளை, காவலர்கள் இதை மனதில் வைத்துக்கொண்டுதான் இவ்வாறாகச் செயல்படுகிறார்களோ என எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றார்.

ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ``பியூஷ் மீது எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை'' என்கின்றனர்!