Published:Updated:

இந்தியாவின் நம்பிக்கைகள்!

இந்தியாவின் நம்பிக்கைகள்!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் நம்பிக்கைகள்!

எம்.குமரேசன்

இந்தியாவின் நம்பிக்கைகள்!

எம்.குமரேசன்

Published:Updated:
இந்தியாவின் நம்பிக்கைகள்!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் நம்பிக்கைகள்!
இந்தியாவின் நம்பிக்கைகள்!

முதல்முறையாக 121 பேர் கொண்ட பெரும்படையுடன் பிரேசிலுக்குப் புறப்பட்டிருக்கிறது இந்தியா. ஒலிம்பிக்குக்கு அதிக வீரர்கள் தகுதி பெற்றிருப்பதால், இந்த முறை இந்தியா டபுள் டிஜிட்டில் பதக்கங்களை அள்ளும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கும் கில்லிகளின் அறிமுகம் இங்கே...

சதீஷ் சிவலிங்கம்:
தங்கத் தமிழன். 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற 24 வயதான சதீஷ், வேலூர் சத்துவாச்சாரி கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா வெயிட் லிஃப்ட்டர். சிறுவயதில் இருந்தே ஜிம்தான் சதீஷின் வாழ்க்கை. கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியின்போது, முதுகில் காயம் ஏற்பட்டது.  கடும் காயத்தில் இருந்து மீண்டு ஒலிம்பிக்குக்குத் தயாராகியிருக்கிறார் சதீஷ்.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

கடந்த ஆண்டு தேசிய பளுத்தூக்குதல் போட்டியில், மிக அதிகமாக 339 கிலோ எடையைத் தூக்கி சாதனைப் பதித்தார். ஆனால், உலக அளவில் இந்த 77 கிலோ எடைப் பிரிவில் 367 கிலோ எடையைத் தூக்கி அதிகபட்ச ரெக்கார்டு வைத்திருக்கிறார் அர்மேனியாவின் 21 வயது ஆண்ட்ரேனிக் காரப்பெட்டியான். தவிரவும் கஸகஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 வீரர்கள் சதீஷின் பெஸ்ட் 339 கிலோ எடையைவிட அதிக எடை தூக்கியிருக்கிறார்கள்.  சதீஷுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

கே.கணபதி: இந்தியாவின் அதிவேக நடைமனிதர். சும்மா நடந்தால்கூட ஒலிம்பிக் கனவுடன்தான் நடப்பார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய தடகளப் போட்டியில்,
20 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடம் 51 விநாடிகளில் கடந்து, ரியோ ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றார். இவர் கிருஷ்ணகிரி அருகில் கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ``எங்கள் குடும்பம் சந்தோஷமாக வாழ, மாதம் 5,000 ரூபாய் போதும். ஆனால், திடீரென என் மகன் `ஒலிம்பிக்குக்குப் போக இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும்' எனச் சொன்னபோது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை'' என்கிறார் கணபதியின் தந்தை கிருஷ்ணன்.

இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகப் பணிபுரியும் கணபதியின் மாதச் சம்பளம் 20,000 ரூபாய். ``அவனின் சம்பளம் முழுக்க பயிற்சிக்காகவும், ஷூ போன்ற உபகரணங்கள் வாங்கவும் செலவாகிடும். என் மகனோட ஒலிம்பிக் கனவு நிறைவேற மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கோம். ஒலிம்பிக் பதக்கத்துடன் அவன் சொந்த ஊருக்கு வருவான்னு நம்பிக்கையோடு காத்திருக்கோம்’’ என்கிறார் கிருஷ்ணன். 

இந்தியாவின் நம்பிக்கைகள்!

ஆரோக்கிய ராஜீவ் - தருண்: ரியோ ஒலிம்பிக் 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் பங்கேற்க, இந்திய அணியில் இருந்து ஆரோக்கிய ராஜீவ் - தருண் என இரு தமிழர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், அடிப்படையில் லாங் ஜம்பர். திருப்பூரைச் சேர்ந்த தருண் தடை தாண்டுதலில் கில்லி.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த இண்டியன் கிராண்ட் ப்ரீ போட்டி 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில், ஆரோக்கிய ராஜீவ், தருண், கேரளாவைச் சேர்ந்த குனுமுஹம்மது மற்றும் முஹமது அனாஸ் அடங்கிய நால்வர் குழு, 3.00.98 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தது. இது உலக அளவில் 2-வது பெஸ்ட். இதற்கு முன்னர் அமெரிக்க ரிலே டீம் இலக்கை 3.00.38 நிமிடங்களில் கடந்ததே உலக சாதனை. அதனால் இந்த முறை தடகளத்தில் ஒரு பதக்கம் கன்ஃபர்ம் என்ற நம்பிக்கையோடு களம் இறங்கியிருக்கிறது இந்தியா.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

சாய்னா நேவால்: பாட்மின்டன் பிரிவில் இந்தியாவின் மெடல் மங்கை. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர், இந்த முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கலாம். கடந்த மாதம் வென்ற ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டம் சாய்னாவுக்கான பதக்க வாய்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலிய ஓப்பனில் காட்டிய அதிவேகத்தை ரியோவிலும் தொடர்ந்தால், பாட்மின்டனில் இந்தியா முதல்முறையாக தங்கம் வெல்லும்.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

ரஞ்சித் மஹேஸ்வரி: தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தரக்கூடியவர்கள் பட்டியலில் முதல் வரிசையில் இருக்கிறார் தமிழகத்தின் ரஞ்சித் மஹேஸ்வரி. பிறந்தது கேரளா என்றாலும் போட்டிகளில் பங்கேற்பது தமிழ்நாட்டுக்காகத்தான். தாய் மஹேஸ்வரி மீதான பாசம் காரணமாக அவரது பெயரை தன்னோடு இணைத்துக்கொண்டார். இண்டியன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் 17.30 மீட்டர் நீளத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார் ரஞ்சித். கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் 17.81 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார் அமெரிக்காவின் கிறிஸ் டெய்லர். இந்த முறையும் டெய்லர் இருக்கிறார். அவரைத் தாண்டினால் ரஞ்சித்துக்குத் தங்கம் நிச்சயம்.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

வினேஷ் போகத்: முழுக்க முழுக்க மல்யுத்தக் களத்தில் பிறந்து வளர்ந்தவர் வினேஷ் போகத். பிரபல மல்யுத்த வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான   மஹாவீர் சிங் போகத்தின் மகள்தான் வினேஷ். இவரது அக்கா கீதா, லலிதாகுமாரி இருவருமே மல்யுத்த வீராங்கனைகளே.

`டங்கல்' படத்தில், மஹாவீர் சிங் போகத்தாக அமீர் கான் நடித்துவருகிறார். 21 வயதான வினேஷ் போகத் தற்போதைய காமன்வெல்த் சாம்பியன். கடந்த மே மாதம் துருக்கியில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று ஒலிம்பிக்கில் இடம் பிடித்திருக்கும் வினேஷ், 48 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் மோதவிருக்கிறார்.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

லலிதா பாபர்: 27 வயதான மஹாராஷ்டிராவின் லலிதா பாபர்தான் 3,000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லலிதா, அதற்கு அடுத்து நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8-வது இடத்துக்குச் சறுக்கினார். ஆனால், உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே இந்தியர் லலிதாதான். உலக சாம்பியன்ஷிப்பில் 9 நிமிடம் 29 விநாடிகளில் பந்தயத்தை முடித்த லலிதா, இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல, 9 நிமிடங்களுக்குள் வர வேண்டும்.

``கடந்த ஆண்டுதான் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தில் கலந்துகொண்டேன். அதனால் பதற்றம், படபடப்பு அதிகம் இருந்தன. ஆனால், இப்போது அனுபவம் இருக்கிறது. நிச்சயம் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்’’ என்கிறார் லலிதா!

இந்தியாவின் நம்பிக்கைகள்!

ஷிவா தபா: பாக்ஸிங்கில்தான் இந்திய அணி பெரும் சோகத்தைச் சந்தித்திருக்கிறது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேரி கோம்,
ரியோ ஒலிம்பிக்கில் இல்லை. இதனால் இந்தியக் குத்துச்சண்டைக் குழுவில் எந்த வீராங்கனையும் இல்லை. ஆனால், வீரர்களைப் பொறுத்தவரை ஷிவா தபா, பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இவர் 56 கிலோ ஃபாந்தம்வெயிட் பிரிவில் போட்டியிடுகிறார். `22 வயதான ஷிபா தபா, ஃபாந்தம்வெயிட் பிரிவில் உலக ரேங்கிங்கில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதனால் எப்படியும் பதக்கம் வெல்வார். ஆனால், அவர் தங்கம் வெல்லவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்கிறது இந்தியக் குத்துச்சண்டை  அமைப்பு.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

யோகேஷ்வர் தத்: லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர், இந்த முறை எதிர்பார்ப்பது தங்கம். ``ரொனால்டோ எப்படி யூரோவில் சாதித்தாரோ அதேபோல நானும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’’ என்கிறார் யோகேஷ்வர். காரணம், ரொனால்டோ போலவே வீட்டில் ஹைபோக்சிக் சேம்பரில் பயிற்சியில் ஈடுபடுகிறார். ஹைபோக்சிக் சேம்பர் என்பது, காற்றில் குறைவான ஆக்ஸிஜன் இருக்கையில் பயிற்சி எடுக்கும் முறை. இடைவிடாத பயிற்சி, யோகேஷ்வருக்கு நிச்சயம் பதக்கத்தைப் பெற்றுத்தரும் என நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

இந்தியாவின் நம்பிக்கைகள்!

ஜீது ராய்: ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்கப் பதக்கங்களை வெல்ல, துப்பாக்கிச் சுடும் போட்டியைத்தான் பெரிதும் நம்பவேண்டியிருக்கிறது. இந்தப் பிரிவில் 12 இந்தியர்கள் களத்தில் இருக்கின்றனர். 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், ஜீது ராய் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்பது எதிர்பார்ப்பு. 29 வயதான ஜித்து, 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியிலும், இன்ஷியான் ஆசியப் போட்டியிலும் தங்கப்பதக்கங்களை அள்ளியவர்.