Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6

யற்கை பற்றிய புரிதல் இல்லாமல் தயாரிக்கப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனித வாழ்க்கையை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த சூழலையும் சீரழித்துவிடும். கொசுக்கொல்லிகளின் வருகை இந்த விதமான சீரழிவுகளைக் கொண்டுவந்துள்ளது. குழந்தைகளைக் கொசு கடித்தால் உருவாகும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் வழியாகத் தான், கொசுக்கொல்லிகள் வீடுகளுக்குள் நுழைந்தன. நச்சுப் புகை பரப்பும் கருவிகளை, படுக்கை அறைக்குள் வைத்துக்கொண்டு உறங்கும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது.

கொசுக்களைக் கொலைசெய்வதாக நம்பிக் கொண்டு உறங்கும் மனிதர்கள், தம்மைத்தாமே சீரழித்துக்கொள்வதை அறியாதிருக்கிறார்கள். `கொசு விரட்டி’ என்ற சொல் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அவை `விரட்டிகள்’ அல்ல `கொல்லிகள்’. கொசுக்களைக் கொலைசெய்யும் அளவுக்கு நஞ்சு அந்தக் கருவிகளில் உள்ளது.

மிக எளிமையான கேள்வி ஒன்றைக் கேட்டுப் பாருங்கள். கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், காய்ச்சல்களின் தீவிரம் குறைந்துள்ளதா... அதிகரித்துள்ளதா? ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின்போதும் சிலவகை காய்ச்சல்களைப் பற்றிய பதற்றம் உருவாக்கப் படுகிறது. இதன் ஊடாக, கொசுக்களின் மீதான அச்சம் தூண்டப்படுகிறது. விளைவாக, வீட்டு மளிகைப் பொருட்களின் பட்டியலில் கொசுக்கொல்லிகளும் இணைக்கப்பட்டுவிட்டன. கடந்த 20 ஆண்டுகளாக கொசுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பெருவணிகத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை `கொசுப் பொருளாதாரம்' என்றே அழைக்கலாம்.

கொசுக்கொல்லிகளின் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்த மிக முக்கிய மாற்றம் நுரையீரல் நோய்களின் பெருக்கம். இதைப் புரிந்துகொள்ள எந்தப் புள்ளிவிவரங்களையும் தேடாதீர்கள். எல்லா புள்ளிவிவரங்களும் நிறுவனங்களின் தயாரிப்புகள்தான்.

உங்கள் சுற்றத்தாரைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களைச் சுற்றிலும் எத்தனை மூச்சிரைப்பு நோயாளிகள் இருந்தனர், இப்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிடுங்கள். உங்கள் குழந்தை களின் நுரையீரலை சளி, எவ்வளவு மோசமாகப் பற்றிக்கொண்டுள்ளது எனப் பாருங்கள். சளி தொடர்பான தொல்லைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மருத்துவ முயற்சிகள் எவ்வளவு தீவிரம் அடைந்துள்ளன எனக் கவனியுங்கள். சீராக மூச்சு விடுவதற்குக்கூட, மருந்துகளை நம்பி இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகுவதை உற்று நோக்குங்கள். சுவாசத்தைச் சீராக்குவதற்கான பொருட்களின் விளம்பரங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன எனப் பாருங்கள்.

நமது மரபு மருத்துவக் கொள்கைகளின்படி தோல் நோய்களுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் உறவு உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக, தோல் நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிவிட்டதை நீங்களே உணர்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சிந்தனைக்கு ஒரு திறவுகோலை நான் தருகிறேன். இனி நீங்களே சிந்தித்து, நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும்.

மூடிய அறைக்குள் நச்சுப் புகையைப் படரவிட்டால், கொசுக்கள் மட்டும் செத்து விழும், மனிதர்கள் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிறுவனங்களின் நச்சுத் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் ஓர் ‘எச்சரிக்கை’ அறிவிப்பு இருக்கும். கொசுக்கொல்லிகளிலும் அந்த அறிவிப்பு உண்டு. மனதாரச் சொல்லுங்கள் நீங்கள் அந்த அறிவிப்புகளைப் படித்தது உண்டா? ஒருவேளை படித்தாலும் அவற்றை உங்களால் கடைப்பிடிக்க முடியுமா? `கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, எல்லா கதவுகளையும் மூடி வைக்கக் கூடாது’ என்பது ஓர் அறிவிப்பு. இதை உங்களால் செயல்படுத்த முடிகிறதா?

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கதவுகளைத் திறந்தாலே கொசுக்கள் உள்ளே புகுந்துவிடும்’ என்ற அச்சத்திலும் அருவருப்பிலும் அல்லவா நீங்கள் வாழ்கிறீர்கள். நிறுவனங்களும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் மேதைகளும் எல்லா சட்டங்களில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஏனெனில், அவர்கள் ‘சட்டப்படி’ நஞ்சு தயாரிக்கிறார்கள். நீங்கள்தான் ‘சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல்’ நஞ்சுக்கு இரையாகிறீர்கள்.

மீண்டும் எனது முதல் கேள்வியை நினைவூட்டுகிறேன். கொசுக் கொல்லிகளின் வருகைக்குப் பின்னர், அச்சுறுத்தும் காய்ச்சல் களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா... உயர்ந்துள்ளதா? ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்திலும் காய்ச்சல்களின் மீதான அச்சமும், அவற்றின் தாக்குதலும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் நீங்கள் கொசுக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறீர்கள். மறுபக்கம் காய்ச்சல்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கின்றன. இந்தப் போரில், மருந்து நிறுவனங்களும், கொசுக்கொல்லி நிறுவனங்களும் மாபெரும் வெற்றி பெறுகின்றன. சமூகத்தின் நலனும் பூமியின் உயிர்ச் சூழலும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கொசுக்களின் உணவு, மனித ரத்தம் அல்ல... மனிதக் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும் தாவரச் சுரப்புகளும்தான் அவற்றின் முதன்மை உணவுகள். சக உயிரினங்களின் ரத்தமும் அவற்றின் உணவுதான். அந்தச் சக உயிரினங்களில் மனிதர்கள், கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் வீடுகளைச் சுற்றிலும் தவளைகளும் பிள்ளைப்பூச்சிகளும் மரவட்டைகளும் நத்தைகளும் வாழ்ந்தன. இவை எல்லாம் வாழ்வதற்கு ஏற்றவகையில் செடிகளும் புதர்களும் அப்போது இருந்தன. வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர்தான் இந்த எல்லா உயிரினங்களுக்கும் உணவு ஆதாரம். கொசுக்களும் இவற்றோடு இணைந்து வாழ்ந்தன. அப்போது கொசுக்கள் மனிதர்களைத் தேடி வரவில்லை.

படைப்பின் ஒழுங்குவிதிகள் குலையாத காலம் அது. கழிவுநீரிலும் அழுகிய உணவுகளிலும் உருவாகும் நுண்ணுயிரிகளை உணவாக உட்கொண்டு சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு பல உயிரினங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கொசுக்கள் அவற்றில் முதன்மை யானவை. ஆடு, மாடு, நாய், பூனை, எலி போன்ற விலங்குகளும் பரவலாக வாழ்ந்த காலம் அது என்பதால், கொசுக்களின் உலகம் பெரியதாக இருந்தது.

நுண்ணுயிரிகளின் பெருக்கம் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பெரிய உயிரிகளின் உயிர் வாழ்க்கை சிக்கலாகிவிடும். நுண்ணுயிரிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தவளை, நத்தை, கரப்பான் போன்ற எண்ணற்ற பூச்சி இனங்கள் செயலாற்றுகின்றன. கொசுக்களும் ஈக்களும் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

நவீனச் சமூகக் கட்டமைப்பில் மேற்கண்ட உயிரினங்களில் பெரும்பாலானவை ஒழிக்கப்பட்டன. குறிப்பாக, ஈக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிள்ளைப்பூச்சி எனும் அருமையான வகையினம் ஏறத்தாழ அழிந்துவிட்டது. தவளைகள் காடுகளுக்குத் துரத்தப்பட்டன. காடுகளும் ஏரிகளும் நகர விரிவாக்கத்தாலும் தொழிற்சாலைகளாலும் அழிக்கப்பட்டன. நத்தைகளுக்கு வயல்களில்கூட வாழ்க்கை இல்லை. எல்லா வயல்களும் பூச்சிக்கொல்லி நஞ்சுக்களால் நிரப்பப்பட்டன. வெறும் ஐம்பது ஆண்டுகளில் இவ்வாறான முற்றுகைப் போர் சக உயிரினங்களின் மீது ஏவப்பட்டது.

இந்தப் போரில் கொசுக்கள் மட்டும் கூடுதல் ஆற்றலோடு போராடத் தொடங்கின. தவளைகள் இல்லாத நகரங்களில் கொசுக்கள் மனித ரத்தம் தேடுகின்றன. படைத்தவரின் விதிகளில் மிக முக்கியமானது, ‘எளியவை அழிக்கப்பட்டால் வலியவை மிகுந்துவிடும்’ என்பது. பிள்ளைப் பூச்சிகளை அழிந்தால் கொசுக்கள் மிகுந்துவிடும் என்பதும் அந்த விதியின் விளைவுதான். ரசாயன வேளாண்மை, வண்ணத்துப்பூச்சிகளை எளிதில் அழித்தது. இப்போது வலிமையான பச்சைப் புழுக்கள் மிகுந்துவிட்டன. காடுகளைக் கைப்பற்றுவோர் மான்களை எளிதில் வேட்டையாடு கின்றனர். காட்டுப்பன்றிகளும் யானைகளும் இப்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

வீடுகளைச் சுற்றி இருந்த கழிவுநீரைச் சுத்தம் செய்த பல்வேறு உயிரினங்கள் ஒழிந்த நிலையில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. ஏனெனில், நவீனச் சமூகம் உயிரினங்களைக் குறைத்தது, கழிவுகளை அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் குப்பைகளும் சாக்கடைகளும் காட்சியளிக்கும் ‘சிங்கார’ நகரங்கள் உருவாகின. இந்தக் கழிவுகளின் வழியாகப் பெருகும் நுண்ணுயிரிகளைப் பற்றி நவீன மனிதர்கள் கவலைப்படவில்லை. அவர்களது எண்ணமும் செயலும் கொசுக்களை ஒழிப்பதைப் பற்றியது. ஏனெனில், `சிக்கல்களுக்குக் காரணம் நான்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்வது கடினம். எல்லா சிக்கல்களுக்கும் பிறர்தான் காரணம் எனப் பழிபோடுவது சுகமானது’.

`தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற நமது மரபின் கொள்கையை உங்கள் முன் வைக்கிறேன். இப்போதைய நலக் குறைபாடுகளுக்குக் காரணம் கொசுக்கள் அல்ல... மனிதர்கள்.
பெருகும் கழிவுகளின் கிருமிகளை உணவாக உட்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளவை கொசுக்கள் என்பதை மறவாதீர்கள். கொசுக்கள் எல்லாம் சேர்ந்து கிருமிகளை உருவாக்கவில்லை; மனிதர்களுக்கு நோய் தரும் கிருமிகளை உணவாக்கும் கொசுக்கள், மனிதர்களையும் கடிப்பதால் நோய்த் தொற்று உருவாகிறது. இதுதான் நவீன அறிவியல் சொல்லும் செய்தி. இப்போது, ஒழிக்கப்பட வேண்டியவை கொசுக்களா... கழிவுகளா... எனச் சிந்தியுங்கள்.

ஒருவேளை, `கொசுக்களை எல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டால், கழிவுகளில் பெருகும் கோடானு கோடி கிருமிச் செறிவினைக் கட்டுப்படுத்தும் உயிரினம் எது?' என்ற கேள்விக்கு விடை வேண்டும். அப்போதும், நிறுவனங்களும் அவற்றைத் தாங்கும் மேதைகளும் ‘கிருமி கொல்லும் மருந்துகளை’ விற்பனைக்குக் கொண்டுவருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவர்களது அடுத்த இலக்கு அதுதான்.

கொசுக்கள் இல்லாத சூழலில் பல்லிகளும், தவளைகளும், வௌவால்களும் வேறு பல உயிரினங்களும் உணவின்றித் தவிக்கும். தாவரங்களின் மகரந்தச்சேர்க்கையில் கொசுக்கள் பணியாற்றுகின்றன. கொசுக்கள் இல்லை எனில், தாவரங்களின் காய்ப்பும் குறையும்.

எந்த ஓர் உயிரினத்துக்கு எதிராக நஞ்சு பயன்படுத்தப்பட்டாலும் அது மனிதர்களையும் சேர்த்தே அழிக்கும் என்பதை உணர வேண்டும். நாம் சக உயிரினங்களோடு கூடி வாழப் பிறந்தோம். உறங்கும்போது, கொசு வலைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிப்பது, இப்போதைய நெருக்கடிக்கான சிறந்த மாற்றாக அமையும். மாலை வேளைகளில் சாம்பிராணிப் புகையை அன்றாடம் பரவவிடுவது கொசுக்களின் வருகையைக் குறைக்க உதவும். காய்ந்த வேப்பிலைகள், தும்பை இலைகள் ஆகிய இரண்டையும் சிறு சட்டியில் இட்டு புகையவிட்டால், கொசுக்கள் வெளியேறும்.

கொசு வலைகளை, குடிசைத் தொழில் செய்வோரிடம் இருந்து வாங்குங்கள். கடந்த 20 ஆண்டுகளில் கொசுவலைகளின் விற்பனை குறைந்து, அந்தத் தொழிலில் இருந்து பல்லாயிரம் குடும்பங்கள் வெளியேறும் நிலை உருவானது. இப்போது சீனத் தயாரிப்புக் கொசு வலைகள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன. கொசு வலைகளை எல்லாம் இறக்குமதி செய்தால், கடைசியில் பிழைப்புக்காக மனிதர்களை ஏற்றுமதி செய்யவேண்டிவரும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6

வேப்பிலைகளையும் தும்பை இலைகளையும் நீங்களே தேடிச் செல்லுங்கள். குறிப்பாக, உங்கள் பிள்ளைகளுக்கு அந்தச் செடிகளை அறிமுகப்படுத்துங்கள்.

முக்கியமான வேண்டுகோள்... கொசுக்களைக் கொல்லும் மின்மட்டைகளை வீசி எறியுங்கள். உணவு எனும் ஒரே ஒரு காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும் சக உயிர்களைக் கொலை செய்யும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு கொலை செய்யவேண்டிய தேவையும் இயற்கையில் உருவாவது இல்லை.

- திரும்புவோம்...