Published:Updated:

என்னவாகும் நந்தினியின் கனவு?

என்னவாகும் நந்தினியின் கனவு?
பிரீமியம் ஸ்டோரி
என்னவாகும் நந்தினியின் கனவு?

பா.விஜயலட்சுமி, படங்கள்: பா.காளிமுத்து

என்னவாகும் நந்தினியின் கனவு?

பா.விஜயலட்சுமி, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
என்னவாகும் நந்தினியின் கனவு?
பிரீமியம் ஸ்டோரி
என்னவாகும் நந்தினியின் கனவு?
என்னவாகும் நந்தினியின் கனவு?

ட்டினம்பாக்கம் கடலோர மீனவக் குடியிருப்புகளின், குட்டிக் குட்டி வீடுகள் நிறைந்த சந்துகளைக் கடந்து சென்றால் வருகிறது நந்தினியின் வீடு.

சென்னையில் ஏ.டி.எம் ஒன்றில் இருந்து எடுத்துவந்த சம்பளப் பணத்தைப் பறித்துச் சென்ற கொள்ளைக்காரனை, தைரியமாகத் துரத்திச் சென்றபோது தடுப்புக்கல் ஒன்றில் மோதி வண்டியில் இருந்து தவறிவிழுந்து, இறந்துபோன பெண்தான் நந்தினி.

இன்னும் கட்டி முடிக்கப்படாத  நந்தினியின் வீடு முழுவதும் அவரது ஞாபகங்கள் சூழ்ந்திருக்கின்றன. எழக்கூடத் திராணியற்று, மகளின் நினைவுகளில் தரையில் படுத்தபடியே இருக்கிறார் நந்தினியின் தந்தை வடிவேலு.

`‘நந்தினி, ரொம்பத் தைரியமான பொண்ணு. அதேநேரத்தில் ரொம்பப் பொறுப்பான பொண்ணு. எப்போ பார்த்தாலும் படிப்பு, படிப்புதான். இன்னைக்கு வரை நான் கூலி வேலைபார்க்கிற நாலு வீடுங்களிலும் இவதான் என் பொண்ணுனு தெரியாது. பி.சி.ஏ படிச்சு முடிச்சதுமே அவளுக்கு ஸ்கூலில் வேலை கிடைச்சது. வேலை விட்டா வீடு... வீடு விட்டா வேலை... இதுதான் அவளுக்கு உலகம். அத்தைப் பசங்க, மாமா பசங்க, பெரியப்பா, சித்தப்பா பசங்கனு நைட்டானா எல்லாருமே இங்கேதான் இருப்பாங்க. எப்பவும் வீடு ஜேஜேனு இருக்கும். நந்தினி போனப்புறம், இதோ பார்க்கிறீங்கள... எவ்வளவு வெறுமை’’ - மகள் நந்தினியின் நினைவுகள் பொங்கி வழிகின்றன அவரது தாய் செல்வியின் கண்களில்.

தன் பள்ளிப் பிராயம் தொடங்கி, நண்பர்களின் பெயர், மாத வாரியாகச் செலவுப் பட்டியல், இடையிடையே  சில கவிதைகள் என... தன் அழகான கையெழுத்தில் டைரியை நிறைத்துவைத்திருக்கிறார் நந்தினி.

நீலாங்கரை தனியார் பள்ளியின் எல்.கே.ஜி டீச்சரான நந்தினிக்கு, குழந்தைகள் என்றாலே உயிர். வீட்டுக்கு வந்தாலும் பள்ளி வேலைகளிலேயே மூழ்கிக் கிடப்பாராம். `மை லைஃப்' என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.சி.ஏ வரையில் அவர் பட்டியலிட்டு வைத்திருப்பது எல்லாமே அவருடைய கல்வி தொடர்பான விஷயங்கள்தான்.

‘`என் அக்கா சூப்பரா படிப்பாங்க. சின்ன வயசில் இருந்தே குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்கணும்கிறதுதான் அவர் குறிக்கோள். அழகாக ஓவியம் வரைவாங்க. கவிதைகளும் எழுதுவாங்கனு அவர் டைரியைப் பார்த்த அப்புறம்தான் எனக்கே தெரியும்’' - அழுகையை முழுங்கியபடி பேசுகிறார்  நந்தினியின் தம்பி விக்னேஷ்.

``நந்தினி எம்.சி.ஏ கரஸ்ல படிச்சுட்டு இருந்தா. அவகிட்ட மொத்தமாவே ஆறேழு சுடிதார்கள். மூக்குத்தி தவிர அவகிட்ட பொட்டுதங்கம் கிடையாது. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, பக்கது வீட்டுப் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கப் போயிடுவா. இந்த வீட்டைக் கட்டிமுடிக்கணும்கிறதுக்காகவே 24 வயசுலயும் கல்யாணம் பற்றி அவ கவலைப் படலை' என உடைந்து அழுத நந்தினியின் அம்மா செல்வியால் பேச முடியவில்லை.

‘`நாங்க பிறந்து வளர்ந்த இந்த ஏரியாவிலேயே வீடு வேணும்கிறதுதான் அம்மா ஆசை. அதுக்காகவே அக்கா வீடு கட்ட ஆரம்பிச்சா. வசதிக்கு மீறின ஆசைதான். ஆனாலும் முடிஞ்ச அளவுக்கு கடன் வாங்கினாலும் வீட்டை எப்படியாவது கட்டி முடிச்சே ஆகணும்கிறதுதான் அக்காவோட குறிக்கோள். அதனாலே கடன்சுமை அதிகமானப்பவும் அக்கா கலங்கலை.

அன்னைக்கு நைட்கூட கடன் கொடுத்த ஒருத்தருக்கு, மறுநாளே கடனைத் திருப்பிக் கொடுத்துடணும். அவர் நாலைஞ்சு தடவை வந்து கேட்டுட்டுப் போய்ட்டார்ங்கிற வைராக்கியத்தில்தான், நானும் கூட வர்றேன்னு சொன்னதையும் மீறி கேட்காம அக்கா போனா. நஜ்ஜூ இங்கேயே தங்கி படிக்கிறதால அவளைக் கூட்டிக்கிட்டு ஏ.டி.எம் போன கொஞ்ச நேரத்துக்குள்ள சொடக்குப் போடற மாதிரி அக்காவோட வாழ்க்கையே முடிஞ்சுப் போய்டுச்சு’' என கண்கலங்குகிறார் விக்னேஷ்.

என்னவாகும் நந்தினியின் கனவு?

``அக்காவுக்கு என் மேல உயிர், அவங்க வீட்டில்தான் நான் எப்பவும் இருப்பேன். அன்னைக்கு நைட் என் கையில்தான் பணம் இருந்த பேக் இருந்தது. நான் கொஞ்சம் சுதாரிச்சிருந்தா இன்னைக்கு அக்கா எங்களை விட்டுப் போயிருக்க மாட்டா. சம்பாதிச்ச பணமாச்சே... அதுவும் கடனை அடைக்க தேவையான பணமாச்சே. அம்மா, அப்பா நிலைமை என்னாகும்கிற எல்லாமும் அந்த நிமிஷத்துல எங்களை நிலைகுலைய வெச்சிருந்தாலும், அக்கா தைரியமா அந்தக் கொள்ளைக்காரனைத் துரத்திக்கிட்டுப் போச்சு. ஆனா, கொஞ்ச நேரத்தில் என்ன நடந்துச்சுனே தெரியாத அளவுக்குத் தூக்கியடிச்சு விழுந்து கிடந்தோம். அக்கா இறந்துபோச்சுனு என்னால இன்னும் நம்ப முடியல’’ என்கிறார் நந்தினியின் அத்தைப் பெண் நஜ்ஜூ.

என்னவாகும் நந்தினியின் கனவு?

``குடிபோதையில் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டேன். நந்தினி இறந்துபோனது எனக்குத் தெரியாது'' என்கிற கருணாகரன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில், நந்தினியின் வண்டி மோதி இறந்துபோன 65 வயதான பொதுப்பணித் துறை முன்னாள் ஊழியர் சாகரின் குடும்பமும், ஒட்டுமொத்தக் குடும்பப் பாரத்தையும் தூக்கிச் சுமந்த நந்தினியின் குடும்பமும், கூடவே சேர்ந்து கொள்ளையன் கருணாகரனின் மனைவி ரீனாவும், அவரது நான்கு குழந்தைகளும் நிர்க்கதியாக நிற்கின்றன.

குடிபோதையில் பாதை மாறிய ஒருவனால் நந்தினி என்கிற இளம்பெண்ணின் வாழ்வு பூக்கும் முன்னரே அஸ்தமித்துப்போயிருக்கிறது. இன்னும் எத்தனை நந்தினிகளைக் குடி அரக்கனுக்குப் பலிகொடுக்கப்போகிறோம்?