Published:Updated:

“எங்கே போறதுன்னு தெரியலை?”

“எங்கே போறதுன்னு தெரியலை?”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கே போறதுன்னு தெரியலை?”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன், ஆ.முத்துக்குமார்

“எங்கே போறதுன்னு தெரியலை?”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன், ஆ.முத்துக்குமார்

Published:Updated:
“எங்கே போறதுன்னு தெரியலை?”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கே போறதுன்னு தெரியலை?”
“எங்கே போறதுன்னு தெரியலை?”

‘‘மைதிலி பாட்டி, கடந்த மூணு மாசமா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில சிகிச்சையில் இருக்காங்க. நிறைய உறவுகள் இருந்தும், அவங்களுக்கு ஆதரவுனு யாரும் இல்லை. வழக்கமா அரசு மருத்துவமனைகள்ல பேஷன்ட்கூட உறவினர்கள் யாராவது இருந்தால்தான் அட்மிஷனே போடுவாங்க. ஆனா, கடந்த மூணு மாசமா மருத்துவமனையில இருக்கும் இந்தப் பாட்டிக்கு, உதவி... உறவு எல்லாமே மருத்துவர்கள்தான்; மருத்துவமனைதான் அவங்களுக்கு வீடு. பாட்டி இப்போ முழுசா குணமாகிட்டாங்க. ஆனா, அவங்களுக்கு மருத்துவமனையைவிட்டு எங்கே போறதுனு தெரியலை’’ - கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர் அரவிந்தனின் பேச்சில் அவ்வளவு வருத்தம்.

‘‘மூளை நரம்புகள் பாதிப்பினாலோ, ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை, உப்புக்களின் மாற்றத்தினாலோ வயதானவர்களுக்கு இப்படியான தெளிவு இல்லாத நிலை வரும். அதை மனநோய்னு புரிஞ்சுக்கிட்டு அந்தப் பாட்டியை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்குக் கூட்டிட்டு வந்தாங்க. அவங்களுக்கு மிக மோசமான நிலையில கால்ல ஒரு புண் இருந்தது. அந்தப் புண்ணும் சர்க்கரை-உப்பின் அளவும்தான் அவங்களோட தெளிவின்மைக்குக் காரணம்.

“எங்கே போறதுன்னு தெரியலை?”

‘ஒண்ணும் பிரச்னை இல்லை. புண்ணுக்கு மருந்து போடுங்க. சரியாகிடும்’னு ஏதோ ஒரு அரசு மருத்துவமனைக்கு ரெஃபர் பண்ணியிருக்கலாம். ஆனா, அரசு மருத்துவமனைக்குப் போனா ஏதோ ஒரு வழியில வைத்தியம் கிடைக்கும்னு நம்பி யாரோ பக்கத்துவீட்டுக்காரங்க அந்த அம்மாவைக் கூட்டிட்டு வந்தாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு அரசு மருத்துவமனையின் மீது இருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க வைக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.

உடனே கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனையில உள்ள என் நண்பரும் மருத்துவருமான அருணிடம் விவரம் சொன்னேன். டீனின் சிறப்பு அனுமதிபெற்று உடனடியாக பாட்டியை அங்கு அட்மிட் செய்து, கால் புண்ணுக்கு ஆபரேஷன் நடந்தது. பாட்டி இப்போ நல்லாருக்காங்க. மருத்துவர்கள், பட்டமேற்படிப்புப் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள்னு பலரும் கடந்த மூணு மாசமா பாட்டியை ரொம்பக் கவனமா பார்த்துக்கிட்டாங்க'' என்கிறார் அரவிந்தன்.

ஒடுங்கிய கண்களும் சிரித்த முகமுமாக, காலில் கட்டுடன் இருந்தார் மைதிலி பாட்டி.

‘‘எனக்கு திருநெல்வேலி பக்கத்துல திருக்குறுங்குடி சொந்த ஊர். பிழைப்புக்காக அப்பா காலத்துலேயே சென்னைக்கு வந்துட்டோம். 1974-ம் ஆண்டு எனக்குக் கல்யாணம் ஆச்சு. வீட்டுக்காரர் பேரு ரெங்கநாதன். சமையல்வேலைக்குப் போவார். எங்களுக்கு ஒரே பையன் கிருஷ்ணா. மயிலாப்பூர் பி.எஸ் மேல்நிலைப் பள்ளியில படிச்சான். ப்ளஸ் டூ பரீட்சை எழுதிட்டு காளியப்பா ஆஸ்பத்திரி பக்கம் சைக்கிள்ல வந்துட்டு இருந்தப்போ, வண்டியில வந்த யாரோ அவனை இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டாங்க. ஸ்பாட்லயே என் பையன் இறந்துட்டான். அது நடந்தது 1996-ல். ‘உனக்குக் கொடுத்த சோதனை பத்தாது’னு கடவுள் நினைச்சாரோ என்னவோ, அடுத்த இழப்பு என் கணவர். 2010-ல் என் மகன் செத்த அதே இடத்துல என் கணவரை ஒரு பைக் இடிச்சுடுச்சு. அவரை பக்கத்துல இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க. கையில காசு இல்லாததுனால, பிறகு அவரை  ஜி.ஹெச்-க்குக் கொண்டுபோனோம். ஆனால், அங்கே என் வீட்டுக்காரர் இறந்துட்டார். அன்னையில இருந்து கவர்மென்ட் ஆஸ்பத்திரின்னாலே ஒரு வெறுப்பு. எப்படிப்பட்ட நிலையிலும் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் பக்கம் போகவே கூடாதுனு இருந்தேன்’’ - பேசப் பேச, அவரை அறியாமல் கண் கலங்கும் மைதிலி பாட்டி தொடர்ந்தார்.

``கடந்த மார்ச் 31-ம் தேதி திருப்பதிக்குப் போனேன். மலையில நடந்து போகும்போது ஒரு குரங்கு பிராண்டினதுல என் கால் புண்ணாகிடுச்சு. புண்ணு சரியாகிடும்னு நினைச்சு, ஊசி எதுவும் போடல. வழக்கம்போல வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தா, குரங்கு கடிச்ச இடம் வீங்க ஆரம்பிச்சுடுச்சு. ரெண்டு நாள் வீட்டுக்குள்ளேயே புலம்பிட்டுக் கிடந்திருக்கேன். அக்கம்பக்கத்தினர் மனநல மருத்துவமனையில கொண்டுபோய் காட்டியிருக்காங்க. அங்கே இருந்துதான் இங்கே வந்தேன். எந்த கவர்மென்ட் ஆஸ்பத்திரி பக்கம் போகவேக் கூடாதுனு இருந்தேனோ, அதே கவர்மென்ட் ஆஸ்பத்திரிதான் இப்போ என்னைக் குணமாக்கி, மூணு மாசமா சோறு போட்டுக் காப்பாத்திட்டு வருது.

“எங்கே போறதுன்னு தெரியலை?”

எனக்கு உறவுகள் இருந்தாலும் ஆதரவுக்கு யாரும் இல்லை. என்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்டீங்கன்னா போதும். அங்கேயும் என்னை சும்மா வெச்சுக்க வேணாம். நான் எஸ்.எஸ்.எல்.சி வரை படிச்சிருக்கேன். நல்லா எழுதுவேன்; இங்கிலீஷ் பேசுவேன். ஒன் ஹவர்ல சமைச்சும் போடுவேன்’’ என்று வெறுமையாகச் சிரிக்கிறார் மைதிலி பாட்டி.

கீழ்பாக்கம் மருத்துவமனை டீன் நாராயண பாபு, ‘‘மைதிலி பாட்டி சிகிச்சையில், மருத்துவம் பெரிய விஷயமே கிடையாது; சாதாரண அறுவைசிகிச்சைதான். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக அவரைக் கவனித்துக்கொண்ட மருத்துவக் குழுவினரின் மனிதநேயமே இதில் முக்கியமானது’’ என்கிறார். தொடரட்டும் இந்த மனிதம்!