Published:Updated:

குரலோசையில் குறளோசை!

குரலோசையில் குறளோசை!
பிரீமியம் ஸ்டோரி
குரலோசையில் குறளோசை!

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

குரலோசையில் குறளோசை!

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
குரலோசையில் குறளோசை!
பிரீமியம் ஸ்டோரி
குரலோசையில் குறளோசை!
குரலோசையில் குறளோசை!

சென்ற வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒருநாள், சித்ரவீணை ரவிகிரணை அலைபேசியில் அழைத் திருக்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி.

‘நான் கலந்துகொள்ளவேண்டிய ஒரு கூட்டத்துக்காக, 34 திருக்குறள் களைக் குறிச்சுவெச்சிருக்கேன். நீங்க அவற்றை ட்யூன் செய்து பாடிக் கொடுக்கணும்' எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சம்மதித்த ரவிகிரண், அந்தக் குறள்களை விருத்தமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார். ரவிகிரணின் காதுகளில் வள்ளுவனின் குறட் பாக்கள் தொடர்ந்து ரீங்காரமிட்டன.

இந்த வருடம் ஜனவரி மாத முதல் வாரத்தில் பனிப்பொழியும் ஒரு காலைப் பொழுதில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ரவிகிரணுக்கு, திடீரென மின்னல் அடித்ததுபோல் ஒரு யோசனை.

‘1,330 திருக்குறள்களையும் கர்னாடக ராகங்களுடனும் தாளங்களுடனும் இசையமைத்துப் பாடினால் என்ன?'

கடற்கரை நடையை முடித்துக் கொண்டு ரவிகிரண் நேராகச் சென்றது பெசன்ட் நகர் பிள்ளையார் கோயிலுக்கு. ஆனைமுகத்தோனை கண்கள் மூடி வேண்டிக்கொண்டார்.

ரவிகிரணின் வாய், முதல் குறளை முணுமுணுத்துப் பாடியது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மையான ஆதி பகவனின் ஆசி, இந்த 49 வயது இசை மேதைக்கும் கிட்டியிருக்க வேண்டும்.

முதல் அதிகாரமான `கடவுள் வாழ்த்து' கம்பீர நாட்டை ராகத்தில் தொடங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என, மனதளவில் தீர்மானித்துக்கொண்டார். அண்மையில் ஒரு பொன்மாலைப் பொழுதில் ரவிகிரணை நேரில் சந்தித்தபோது...

கிழக்குக் கடற்கரை சாலை பாலவாக்கத்தில், உள்ளடங்கிய குறுக்குத் தெரு ஒன்றில் இருக்கிறது கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் ரவிகிரணின் வீடு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் முற்றம். சாப்பிடும் மேஜையை ஒட்டியிருக்கும் சிறிய பூஜை அலமாரியில் பிரதானமாக திருப்பதி வெங்கடாசலபதியும் தாயாரும்.

‘`என் சித்ரவீணை அரங்கேற்ற கச்சேரி, 1978-ம் ஆண்டு திருப்பதியில் நடந்தது. அந்தச் சமயம் எனக்குத் தரப்பட்ட படம் இது.”

வரவேற்பு அறை சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார் ரவிகிரண்.

‘`1,330 குறள்களுக்கு இசை அமைப்பது என்பது முடிவானதும், இதை பொதுமக்கள் முன்னிலையில்தான் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். என் சீடரும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரியுமான டி.கே.ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டு இதற்காக அரங்கம் ஒன்றும், பார்வையாளர்கள் சிலரையும் ஏற்பாடு செய்து கொடுக்கக் கேட்டுக்கொண்டேன். தரமணியில் உள்ள International Institue of Tamil  Studies வளாகத்தில் உள்ள அரங்கம் எனக்கு ஒதுக்கித் தரப்பட்டது.”

முதலில் கணக்கு போட்டுப் பார்த்தபோது, அத்தனை குறள்களுக்கும் மெட்டு அமைத்து முடிக்க மொத்தம் நூறு மணி நேரம் தேவைப்படும் என நினைத்திருக்கிறார் ரவிகிரண். மறுபடியும் கூட்டிக் கழித்துப் பார்த்தபோது, ஐம்பது மணி நேரத்தில் அது சாத்தியப்படக்கூடும் என அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

குரலோசையில் குறளோசை!

‘`ஜனவரி 12-ம் தேதி இந்த ‘யக்ஞம்’ தொடங்கப்பட வேண்டும் என முடிவானது. அன்று சென்னையில் இசைக்கலைஞர்கள் சேர்ந்து விளையாடும் கிரிக்கெட் போட்டி. அதில் ஓர் அணிக்கு நான் கேப்டன்! அதை முடித்துவிட்டு தரமணிக்குச் சென்று மேடையில் சுருதிப் பெட்டி யுடன் உட்கார்ந்தேன். எதிரில், நான் இசையமைப் பதைப் பார்வையிட முந்நூறு, நாநூறு பேர். ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்துடன் ஆரம்பித்தேன். முதல் ஆறு குறள்களை கம்பீர நாட்டையிலும், இறுதி நான்கு குறள்களை மோகனத் திலும் பாடி பதிவுசெய்து கொண்டேன்”.

இப்படி இலக்கியத்துடன் இசையைச் சங்கமிக்கும் பணி தொடர்ந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் 16 மணி நேரத்தில் மூன்று நாட்களில் 1,330 குறள்களும் அந்தந்த ராகத்துக்குள் தாளத்துடன் சேர்ந்துவிட்டன. அதாவது, ஒரு மணி நேரத்தில் 83 குறள்கள். ஒரு குறளுக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொண்டிருக்கிறார் ரவிகிரண்.

‘`எங்கள் இசை உலகின் ஞானசம்பந்தர் என இவரைக் குறிப்பிடலாம்” என்று இது தொடர்பாக அண்மையில் நடந்த அறிமுக விழாவில் பூரித்தார் சுதா ரகுநாதன்.

‘`திருக்குறளின் கட்டமைப்பும் அழகும் பாதிக்கப்படாத அளவுக்குப் பொருத்தமான தாளங்களையும் ராகங்களையும் தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது. சிலவற்றுக்கு அபூர்வ தாளங்களைப் பயன்படுத்திக்கொண்டேன். கல்யாணி, தோடி, காம்போதி மாதிரியான கன ராகங்கள், சஹானா, தன்யாசி போன்ற ரக்தி ராகங்கள், நாட்டுப்புறப் பண்கள், இந்துஸ்தானி ராகங்கள் என கலவையில் அமைந்திருப்பது, குறள்கள் பாடப்படும்போது புரியும்” என்றார் ரவிகிரண்.

133 அதிகாரங்களுக்கு, மொத்தம் 169 ராகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். எந்த ஒரு ராகத்தையும் மறுமுறை கேட்க முடியாது. மெட்டு அமைக்கும்போது அனைத்துக் குறள்களையும் தன் குரலிலேயே பாடி பதிவு செய்துகொண்டாலும், அவற்றின் இறுதி வடிவத்துக்கு சகக்கலைஞர்களைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், நித்யஸ்ரீ, உன்னிகிருஷ்ணன், ஓ.எஸ்.தியாகராஜன், ஓ.எஸ்.அருண், ஹைதராபாத் சகோதரர்களில் சேஷசாரி என ஆரம்பித்து, இன்றைய வளரும் இசைக்கலைஞர்கள், பாலமுரளி கிருஷ்ணா, நிஷா ராஜகோபாலன், அமிர்தா முரளி, கே.காயத்ரி உள்ளிட்ட பலரின் குரல்களில் குறள்களைக் கேட்க முடியும். இவர்கள் அனைவருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார் ரவிகிரண்.

‘`நான் இவற்றை சி.டி-க்குள் அடக்கி விற்பனை செய்யப்போவது இல்லை. மார்க்கெட்டிங் என் குறிக்கோள் கிடையாது. வித்வான்கள் பாடி அனுப்புவதை உடனுக்குடன் யூடியூப்-பில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறேன். உலகம் முழுவதும் பரவியிருக்கும் இலக்கிய, இசை ரசிகர்கள் இந்தத் திருக்குறள் களைக் கேட்டு மகிழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கச்சேரிகளில் இவை பாடப் படவேண்டும். அதிலும் ஒருசிலவற்றை மெயினாக எடுத்துக்கொண்டு, ஆலாபனை - நிரவல் - ஸ்வரங்களுடன் பாடலாம். அதே மாதிரி, பரதக் கலைஞர்களும் தங்களுடைய நிகழ்ச்சிகளில் எந்தக் குறளையும் தேர்வுசெய்து அபிநயிக்கலாம்” எனத் தெளிவாகப் பேசினார் ரவிகிரண்.

யூடியூப்புக்குள் பிரவேசம் செய்து, ‘சித்ரவீணை என்.ரவிகிரண் திருக்குறள் புராஜெக்ட்' எனத் தேடினேன். ‘காலம் அறிதல்’ என்ற 49-வது அதிகாரத்தில் அடங்கும் குறட்பாக்களை, ஊர்மிகா ராகத்தில் உன்னிகிருஷ்ணனின் குரலில் கேட்க முடிந்தது. பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு கீரவாணி ராகத்தில் 52-வது அதிகாரம் (தெரிந்து வினையாடல்), காம்போதி ராகத்தில் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா 119-வது அதிகாரம் (பசப்புறு பருவரல்) எனப் பல குரல்களில் பல்வேறு குறள்கள்.

குரலோசையில் குறளோசை!

தனது இரண்டாவது வயதிலேயே ராகங்களை அடையாளம் காணத் தொடங்கிவிட்டவர் மழலை மேதை ரவிகிரண். வீணை மேதை எஸ்.பாலச்சந்தர் அப்போது குழந்தையைச் சோதித்துப்பார்த்து வியந்து, தன் மோதிர விரலால் குட்டியச் சம்பவங்களும் உண்டு. முதலில் வாய்ப்பாட்டுத்தான் கற்றுவந்திருக்கிறார் இவர். பத்து வயது நிரம்பும் சமயத்தில் சித்ரவீணைக்கு மாறினார். அப்பா
என்.நரசிம்மனின் தயாரிப்பால் மளமளவென வளர்ந்தார். வாய்ப்பாட்டைவிட சித்ரவீணைக்கு குளோபல் மார்க்கெட் அதிகம் என்பதை உணர்ந்து, அதிலேயே முழுக்கவனம் செலுத்தினார். இன்று சித்ரவீணை ரவிகிரண் உலகம் சுற்றும் வாலிபர்.

17-வது வயதில் கலைமாமணியும், 38-வது வயதில் சங்கீத நாடக அகாடமி விருதும் பெற்றுவிட்ட இவர், ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் மீது அலாதி மோகம் கொண்டு, முறைப்படி கவிராயரின் பாடல்களைக் கற்றுத் தெளிந்திருக் கிறார். அவை குறித்து ஆராய்ச்சிகள் பல செய்திருக்கிறார்.

குரலோசையில் குறளோசை!

அதே மாதிரி வெளிநாடுகளில் ரவிகிரண் நிகழ்த்தும் ‘மெல்ஹார் மோனி’ நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். இதோ, இந்த மாத இறுதியில் முத்துஸ்வாமி தீட்சிதரின் மூன்று பாடல்களை பீதோவன் படைப்புகளுடன் இணைந்து இசைக்க விமானம் ஏறப்போகிறார்.

‘`சிறு வயதில் திருக்குறள்களை நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. தண்டபாணி தேசிகரின் குரலில் ‘அகர முதல...’ என்ற குறளைக் கேட்டது மட்டும் இன்றும் நினைவில் உள்ளது. அனைத்துக் குறள்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிட்டும் என்பது நான் நினைத்துப்பார்க்காத ஒன்று” என்று பூரிக்கிறார் ரவிகிரண்.

தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

என்ற ‘மக்கட் பேறு’ அதிகாரத்தில் வரும் குறள் ஒன்று காதுகளில் ஒலித்தது!