Published:Updated:

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?
பிரீமியம் ஸ்டோரி
காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

மருதன்

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

மருதன்

Published:Updated:
காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?
பிரீமியம் ஸ்டோரி
காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?
காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

ந்து வயது சோரா சஹூர், ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெற்றியில் கட்டுப்போட்டிருக்கிறார்கள். இரு கால்களிலும் வயிற்றிலும் வட்டவடிவில் துளைகளும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ‘உனக்கு என்ன ஆச்சு?’ எனக் கேட்டபோது மெல்லிய குரலில் சோரா விவரித்தார். ‘அதுவா? வீட்டுக்குள் வெடிக்க அனுமதி இல்லை எனப் பலர் வெளியில் வந்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒன்று என் மேல் வந்து விழுந்துவிட்டது என நினைக்கிறேன்.’

அந்த மருத்துவமனையில் சோராவுடன் நூற்றுக்கணக்கானவர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். பலருக்கு உடல் முழுக்கக் குழிகள். சிலருடைய முகங்கள் அச்சுறுத்தும் வகையில் வீங்கியிருக்கின்றன. கண்ணை இழந்தவர்கள், பார்வையை முழுமையாகப் பறிகொடுத்தவர்கள் பல மடங்கு அதிகம். சோரா நம்பியதைப்போல் அவள் மீதும் அந்த மருத்துவமனையில் உள்ள நூற்றுக்கணக் கானவர்கள் மீதும் வந்து விழுந்தவை பட்டாசுத் துண்டுகள் அல்ல... பெல்லட்(pellet) குண்டுகள். இந்த வகைக் குண்டுகளைத் துப்பாக்கியில் பொருத்தி சுடும்போது, ஒவ்வொன்றில் இருந்தும் பல ஈயக் குண்டுகள் புறப்பட்டு நாலாபுறங்களிலும் சிதறித் தாக்கும். தாக்கும் இடத்தை ஊடுருவி அறுத்து ஒரு குழியை உருவாக்கும். மெல்லியத் தசைகளைக் கொண்ட கண்களை இந்தக் குண்டுகள் தாக்கும்போது பார்வையை நிரந்தரமாக அழித்துவிடுகிறது.

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

சோரா நம்புவதைப்போல் நடந்திருப்பது விபத்து அல்ல. கல் வீசியெறிந்து போராடிய காஷ்மீர் மக்கள் மீது, அதே மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட விரிவான, திட்டமிடப்பட்ட தாக்குதல். சாதாரண குண்டுகளைப்போல் உயிரைப் பறிக்கக் கூடியவை அல்ல எனக் காரணம் சொல்லி, பெல்லட் குண்டுகளை 2010-ம் ஆண்டு இதே காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அறிமுகம் செய்துவைத்தனர். அப்போது ஓமர் அப்துல்லா முதலமைச்சர். இன்றைய முதலமைச்சரான மெஹ்பூபா முஃப்தி அப்போது எதிர்க்கட்சித் தலைவர். ‘இது என்ன ஜனநாயக அரசா... இல்லை பெல்லட் குண்டு அரசா?’ என ஆவேசமாகச் சீறினார். ‘உங்கள் வீட்டில் உள்ள குழந்தையின் கண்களில் பெல்லட் தாக்கினால் சும்மா இருப்பீர்களா?’ எனவும் முழங்கினார்.

இன்று மெஹ்பூபா முஃப்தி முதலமைச்சர். ‘பெல்லட் குண்டுகள் உபயோகிப்பது ஏற்புடையது அல்லதான்; ஆனால், வேறு வழி தெரியவில்லை என்பதால், அவற்றை உபயோகிக்கவேண்டியிருக்கிறது’ என நீட்டி முழக்கி விளக்கம் அளித்துக்கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் இருந்து ஓமர் அப்துல்லா, ‘இது அநீதியான அரசு’ என தனது சத்தியாவேசத்தை வெளிப்படுத்துகிறார். `பெல்லட் குண்டுகளை சொந்த மக்கள் மீதே பிரயோகிப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா?' என்றும் சீறுகிறார். இந்த நாடகங்களுக்கு மத்தியில் நின்று நிதானமாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு.

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

நடந்தது என்ன?

அனைத்துக்கும் தொடக்கப்புள்ளி, புர்ஹான் முசாஃபர் வானி என்கிற 22 வயது இளைஞனின் மரணம். கடந்த ஜூன் 8-ம் தேதி இந்தியப் பாதுகாப்புப் படையினரால் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு அறிந்த பயங்கரவாதியாக இருந்த வானியின் மரணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பள்ளத்தாக்கின் பெரும்பகுதி திரண்டுவரும் என ஆளும்வர்க்கம் எதிர்பார்க்கவில்லை. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் கூடியபோது, பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் ஒன்றுதிரண்டு அந்த எழுச்சியை ஒடுக்க முனைந்தனர்.

இதை மேலதிக ஆவேசத்துடன் எதிர்கொண்ட போராட்டக்காரர்கள் 2010-ம் ஆண்டில் நடந்ததைப்போலவே, கற்களை எடுத்து வீசி பதில் தாக்குதலைத் தொடங்கிவைத்தார்கள். விபரீதத்தை உணர்ந்து பெல்லட் குண்டுகள் தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை அனைத்தையும் பிரயோகித்து ‘அமைதியை’ நிலை நாட்டியது பாதுகாப்புப் படை. ஒரு மரணத்தை முன்வைத்து தொடங்கப்பட்ட எழுச்சி 35 மரணங்களோடு இப்போதைக்கு முடிவடைந்துள்ளது. ஐந்து வயது சோரா சஹூர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மீண்டும் ஒருமுறை இருளில் தள்ளப்பட்டிருக்கிறது காஷ்மீர்.

யார் இந்த புர்ஹான் முசாஃபர் வானி?

15 வயதானபோது வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் வானி. அதுவரை நன்றாகவே படித்திருக்கிறார். `ஆஸாத் காஷ்மீர்' கனவு அவருக்குள் அரும்ப ஆரம்பித்ததற்கும் அந்தக் கனவை அடைய ஆயுதப் போராட்டம் ஒன்றே வழி என, வானி தேர்ந்தெடுத்ததற்கும் காரணமாக ஒரு சம்பவத்தை அவர் தந்தை குறிப்பிட்டுச் சொல்கிறார்.

‘ஒருமுறை வானி தன் சகோதரருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காரணமே இல்லாமல் காவல் படையினர் இருவரையும் பிடித்து அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் வானியைக் காயப்படுத்தியதோடு அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கவும் தூண்டியிருக்கிறது’ என்கிறார்.

புர்ஹான் வானியின் சகோதரர் காலித் வானி, சென்ற ஆண்டு இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டார். ஆனால், அதற்கு முன்னால் தனது 21-ம் வயதில் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தில் இணைந்து அதில் பிரபலமான ஒரு தலைவராக மாறினார் புர்ஹான் வானி. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது. வானிக்குத் தேவைப்பட்ட ஆயுதம், அங்கீகாரம் இரண்டையும் இந்த அமைப்பு தந்து உதவியது. துப்பாக்கியுடன் நிற்கும் படம், நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி அனைத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்ற ஆரம்பித்தார். எதிர்பார்த்ததைப் போலவே ஆயிரக்கணக்கானவர்கள் வானியை ஒரு கதாநாயகனாக வரித்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் பின்தொடரத் தொடங்கினார்கள். ஒரே சமயத்தில் நாடு அறிந்த நபராகவும், தேடப்படும் பயங்கரவாதியாகவும் மாறினார் புர்ஹான் வானி. அவருடைய மரணத்துக்குப் பிறகும் இந்த இரு அடையாளங்களும் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. 

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

‘உயிருடன் இருந்தபோது திரட்டியவர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஆட்களை புர்ஹான் வானி தன் மரணத்துக்குப் பிறகு திரட்டிக்கொண்டிருக்கிறார்’ என்கிறார் ஓமர் அப்துல்லா. இதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. தெரிந்திருந்தால், ‘எல்லாம் முடிந்துவிட்டது. காஷ்மீர் அமைதி வழிக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது’ என அறிவிப்பாரா முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி?

இந்த முறை மட்டும் அல்ல, தொடர்ச்சியாகவே பிழையான பார்வையையும் தவறான கொள்கை யையும்கொண்டே காஷ்மீரை அணுகிவந்திருக்கிறது இந்திய அரசு. ஒவ்வொரு முறையும் அந்தப் பள்ளத்தாக்கு அதிரும்போதும், `இதோ இதுவே கடைசி. இத்துடன் எல்லாம் சரியாகிவிடும்' என்றே சமாதானமாகிறது இந்தியா. காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக காஷ்மீரிகள் ஒன்று கலந்துவிட்டார்கள் என்றும் நம்ப விரும்புகிறது. இன்றைய தலைமுறையினர், ஆஸாத் காஷ்மீர் பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள்; காஷ்மீரின் போராட்ட வரலாற்றை அவர்கள் மறந்துபோயிருப்பார்கள்; இனி பழசுக்கு அவர்கள் திரும்பிப்போக மாட்டார்கள் என்று தர்க்கமும் பேசுகிறது.

ஆனால், இந்தியாவின் இந்தப் பகல்கனவை காஷ்மீரிகள் தொடர்ச்சியாகக் கலைத்துக்கொண்டே வருகிறார்கள். இந்த முறை நடந்ததும் அதுவேதான். முந்தைய தலைமுறைகளை விஞ்சும் அளவுக்குப் புதிய ஆவேசத்துடன் இன்றைய தலைமுறை மீண்டும் ஆஸாத் காஷ்மீர் கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறது. புர்ஹான் வானியின் மரணம், வாகான ஒரு களத்தையே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. காஷ்மீரை இந்தியாவும் இந்தியாவை காஷ்மீரும் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிடவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த இணைப்பு ஏன் சாத்தியப்படவில்லை?

சிக்கல் எங்கே?

காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு மலைப்பாம்பைப்போல் அவநம்பிக்கை சுருண்டுப் படுத்துக்கொண்டிருக்கிறது. அதை பெல்லட் குண்டுகளால் வீழ்த்த முடியாது. அதேபோல், கற்களை எறிந்தோ புர்ஹான் வானியைப் போல் ஆயுதம் தாங்கியோகூட தோற்கடித்துவிட முடியாது. இருந்தாலும் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் மக்களும், பயங்கரவாத அமைப்புகளும் இந்த மூன்று வழிகளை மட்டுமே விடாமல் கையாண்டு வருகிறார்கள்.

காஷ்மீர் கலவரம்... காரணம் யார்?

புர்ஹான் வானியை ஒரு போராளியாக முன்னிறுத்துவது எளிது. அதைப் பலரும் செய்துவருகிறார்கள். அதைவிடவும் சுலபமானது, பிரிவினைவாதத்தை முன்வைத்து அவருடைய படுகொலையை நியாயப்படுத்துவது. இதையும் பலர் செய்துவருகிறார்கள். இரண்டுமே உணர்ச்சிக் கொந்தளிப்புடன்கூடிய பார்வைகள். வன்முறை மூலம் ஆஸாத் காஷ்மீரை உருவாக்கிவிடலாம் என புர்ஹான் வானி போன்றோர் கருதுகிறார்கள் என்றால் அதே வன்முறை மூலம் ஆஸாத் காஷ்மீர் கனவைச் சிதறடித்துவிடலாம் என்று அரசு மெய்யாக நம்புகிறது. விளைவு? ஒரு மாய வட்டம்போல் வன்முறை காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

மலைப்பாம்பு, தானாகவே வெளியேறிவிடப் போவதும் இல்லை; காஷ்மீர், அதுவாகவே அமைதி மார்க்கத்துக்குத் திரும்பிவிடப்போவதும் இல்லை. 22 வயது இளைஞன் எப்படிப் பயங்கரவாதியாக மாறினான் என்பதைக் காட்டிலும், அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் எப்படிக் கலந்துகொண்டார்கள் என்பதை ஆராய்வது அவசியம். அதைச் செய்வதற்கு முன்னால் முதலில் துப்பாக்கிகளையும் கற்களையும் கீழே வைத்துவிட்டு நேர்மையான உரையாடல் ஒன்றைத் தொடங்கவேண்டும்.

தன்னை வீழ்த்தியது பட்டாசு அல்ல... பெல்லட் குண்டுகள்தாம் என்பதை ஐந்து வயது சோரா சஹூர் உணர்வதற்கு முன்னால், இந்த உரையாடலைத் தொடங்கிவிடுவது உத்தமம்!