Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

நீர், உயிர் ஆற்றலின் அடிப்படை வடிவம்.

நீர் இல்லாத நிலத்தில் உயிர்கள் வாழ்வது இல்லை. நீர் என்பது தாகம் தணிக்கும் பொருள் மட்டும் அல்ல; நீரும் ஓர் உணவுதான். `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்பது, நமது சங்கப்பாடலின் வரி. நீரில் உயிர்கள் இருக்க வேண்டும். அந்த உயிர்கள் யாவும் மனித உடலில் வாழ்ந்து பெருகினால்தான், இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கும். உயிரற்ற நீரை மட்டுமே பருகிக்கொண்டிருந்தால், உடலின் இயக்க ஆற்றல் தடைபடும். உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்காது.

பூமியில் உள்ள பல வகையான நீரும் அப்புறப்படுத்தப்பட்டு, எல்லா இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பப்பட்டால், ஒரே ஓர் உயிர்கூட வாழாது. மனித உடலும் இப்படித்தான், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே தொடர்ந்து பருகிக்கொண்டிருந்தால், உயிர் ஆற்றலை இழக்கத் தொடங்கிவிடுகிறது.

தூய்மையான குடிநீர் என்ற கருத்து மிகவும் தேவையானது. இந்தக் கருத்தை வணிகமயமாக மாற்றிய நிறுவனங்கள், தூய்மை என்ற இடத்தில் `சுத்திகரிக்கப்பட்ட’ என்ற சொல்லைத் திணித்துவிட்டன. இது வெறும் சொல் விளையாட்டு அல்ல; மிக மோசமான விளைவுகளைத் தருகிற உயிர் விளையாட்டு. 

மழைதான் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான நீர் ஆதாரம். ஆறு, ஏரி, குளம், குட்டை, ஊற்று, சுனை, ஓடை, காட்டாறு போன்ற எல்லா வடிவங்களிலும் மழைநீர்தான் நமக்கும் நம்முடன் வாழும் பிற உயிரினங்களுக்கும் உணவாக வேண்டும். இந்த நீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கும். நுண்ணுயிர்கள் இல்லாத நீர் என எதுவும் இயற்கையில் இல்லை. சரியாகப் பராமரிக்கப்படாத நீரில் இயற்கையான அளவைவிட அதிகமான நுண்ணுயிர்கள் பெருகிவிடும். இது பாதுகாப்பற்ற குடிநீர். இவ்வாறு நேராத வகையில், குடிநீரை முறையாகப் பராமரித்தால் போதும்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீர் நிறுவனங்கள் சமூகத்தின் உடல்நலனில் ‘அக்கறை’ செலுத்தத் தொடங்கின. நாம் பருகும் ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அந்த நிறுவனங்கள் மிகுந்த ‘கவலை’கொண்டன. `சுத்திகரிக்கப்பட்ட’ நீர்ப்புட்டிகள் சந்தைக்கு வந்தன. நீரில் வாழும் நுண்ணுயிரிகளை எல்லாம் ‘கிருமிகள்’ என்ற பொதுப்பெயரால் அந்த நிறுவனங்கள் அழைத்தன. எல்லா நுண்ணுயிரிகளையும் கிருமிகள் என அழைப்பது அறிவியலுக்குப் புறம்பானது மட்டும் அல்ல, மிக மோசமான பொய்யும்கூட. பொது இடங்களில் கிடைக்கும் எந்த நீரும் கிருமிகளால் நிரம்பியதுதான் என்ற கட்டுக்கதை வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.

உணவகங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் இருக்கும் குடிநீர் தரமற்றது என மக்கள் நம்பத் தொடங்கினர். முறையான பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இவை தரமான நீராக மாறியிருக்கும். அரசும் அதன் துணை அமைப்புகளும் குடிநீர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றின. விளைவாக, இப்போது நீங்கள் பருகும் பெரும்பான்மை குடிநீர் ‘சுத்திகரிக்கப்பட்ட’தாகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

`சுத்திகரிப்பு செய்யும்போது நீரில் உள்ள `கிருமிகள்’ மட்டும் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனவா அல்லது எல்லா நுண்ணுயிரிகளும் ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யப்படுகின்றனவா?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். ஏனெனில், நுண்ணுயிரிகள் மிகமிகக் குறைவாக உள்ள நீர், மனித உடலை உலுக்கிப்போடும் அளவுக்குத் தீமைகளைச் செய்யக்கூடியது. நமது உடலே நுண்ணுயிரிகளின் பிரபஞ்சம்தான். இந்தப் பிரபஞ்சத்துக்குள் நீர் எனும் உணவின் வழியாகத் தொடர்ந்து கோடானுகோடி உயிரிகள் செல்ல வேண்டும். இது படைப்பின் விதி. இவ்வாறு செல்லும் உயிரிக்கூட்டத்தில், உடலுக்கு ஒவ்வாத வகையினங்கள் இருந்தால், அவற்றை அழித்து வெளியேற்று வதற்கு என, எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உடலுக்குள் உள்ளன.

எச்சில் அவற்றில் மிக முக்கியப் பாதுகாப்புக் கவசம். உடலின் மிகச் சிறந்த எதிர் உயிரி மருந்து (ஆன்டிபயாடிக்) எச்சில்தான். இயற்கையான குடிநீரைப் பருகும்போது எச்சில் சுரந்து, இனிமை மிகுந்த சுவை கிடைக்கிறது. புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரைப் பருகும்போது, அளவுக்கு அதிகமான எச்சில் சுரப்பதையும் அதில் கசப்புச் சுவை மிகுந்திருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். உடலுக்கு ஒவ்வாத எந்த உணவையும் பானத்தையும் வாயில் திணிக்கும்போது, எச்சில் சுரப்பு மிக அதிகமாக இருக்கும். உள்ளே நுழையும் ஒவ்வாத பானத்தை அல்லது உணவை உடனடியாகச் சுத்திகரித்து வெளியே துப்பச்செய்யும் பணியை, எச்சில் சுரப்பிகள் செய்கின்றன.

உடல் முழுவதும் இவ்வாறான தற்காப்பு உறுப்புகளும் சுரப்பிகளும் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும், உயிருள்ள பொருட்களைக் கையாளும் வகையில் உள்ளனவே தவிர, வேதிப்பொருட்களைக் கையாளும் வகையில் அல்ல என்பதே முக்கியமான சேதி. தொழிற்சாலைகளில் `சுத்திகரிக்கப்படும்’ நீரில் கலக்கப்படும் வேதிப்பொருட்களில் குளோரின் முதன்மையானதும் அடிப்படையானதும். இதைப் பயன்படுத்தாத ‘சுத்திகரிப்பு நிலையங்களே’ இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகத்தான் சுத்திகரிக்கப்படுகிறது.

குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மனப் பதற்றம், பீதியடைதல் என மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவீன அறிவியலின் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கிப் பட்டியலிட இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், ‘அனுமதிக்கப்பட்ட அளவு’ என்பது. `குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா?' என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், ‘சுத்திகரிப்பு’ நிபுணர்கள் அளிக்கும் விடை, ‘அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின் பாதுகாப்பானதுதான்’ என்பதாக இருக்கும்.

புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கிப் பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது ‘அனுமதிக்கப்பட்ட’ அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை. ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள் கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள் அறியாதவை.

ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை, மிகத் துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைப் பிடிக்கின்றன என நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும். குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பருகுவது பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர் வழங்கும் நிறுவனங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். பதில் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளன.

பூமியில் வீசும் கதிர்வீச்சுகளில் அகச்சிவப்பு, புறஊதாக் கதிர்கள் அடிப்படையானவை. குறைந்த வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை, அகச்சிவப்புக் கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவுகொண்டவை புறஊதாக் கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வீச்சைப் பாய்ச்சித்தான் ‘சுத்திகரிப்பு’ச் செய்கின்றன. குளத்து நீரின் கீழே படித்திருப்பவை அகச்சிவப்புக் கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வீச்சு இருப்பது, நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது.  குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும் பருகலாம். அதிக அளவிலான கதிர்வீச்சுகள், எந்த உயிரினத்துக்கும் ஆபத்தானவை தான். குறைந்த அளவு கதிர்வீச்சுகள் அடங்கிய உணவையும் நீரையும் உட்கொள்ளும் வகையில் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது மிதமிஞ்சிய புத்திசாலித் தனத்தின் வெளிப்பாடாக, மிகைக் கதிர்வீச்சுகள் குடிநீரில்  செலுத்தப்படுகின்றன.

புறஊதாக் கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும்தான் அழிக்கும்; அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வும் இதுவரை கூறவில்லை. நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வீச்சுகள் உள்ளன என்பதையாவது முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக்குடன் வினைபுரிபவைதான். பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது, அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வீச்சுகளும் கலந்துள்ளன என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

`அரசு அனுமதிபெற்ற நிறுவனம்’ ‘தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்’ போன்ற அறிவிப்புகளின் பின்னால், மறைவான ஓர் உலகம் இயங்குகிறது. உங்களை வந்தடையும் ஒவ்வொரு நீர்ப்புட்டியையும் அரசு அதிகாரிகள்  சோதித்து அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று தருவதாகவும் ஒரு மாயத் தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே நீரைச் `சுத்திகரிப்பதற்கு' என அமைக்கப்படும் கருவிகளுக்கும், மேலே உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.

நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்னீர்தான் உயிர் ஆதாரம். நன்னீர் என்றால், பல கோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும் மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு, நவீனத்தின் சதிகளைக் காட்டிலும் வலிமையானது. `மழைநீர்தான் அமுதம்’ என்றார் ஆசான் திருவள்ளுவர்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

மழைநீரைச் சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாகத் தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், தமக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழைநீர் சேமிப்பில் ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவை யாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான நேரங்களில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும்.

வேறு வழியே இல்லாமல், ‘சுத்திகரிப்பு’ நீரைப் பயன்படுத்துவோருக்கு என, சத்து நீர் முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். நன்னாரி வேர், வெட்டி வேர், தேற்றாங்கொட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிச்சாகக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவை அனைத்தும் சிறிய அளவு இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொள்ளுங்கள். `சுத்திகரிக்கப்பட்ட’ நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணி நேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தி யாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7

இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்துக் கடைகளை நோக்கித் திரும்புவது மிக நல்லது. அங்குதான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வேர்கள் ஓடிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுள்காலம் மிக நீளமானது. எந்தச் சீர்கேடுகளையும் உறிஞ்சி எடுத்து மரங்களைக் காக்கும் வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

- திரும்புவோம்...