Published:Updated:

“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”

“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன்

“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”
“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”

திருமணத்துக்கு முன்னர் வரை அகம்-புறம் என அக்கறையோடு தன்னைக் கவனித்துக்கொள்கிற பெண், திருமணமான பிறகு அதையெல்லாம் மறந்துவிடுகிறாள். அதனாலேயே ஆண்களைவிடவும் பெண்கள் உடல் எடை அதிகரிப்பில் தொடங்கி, உளவியல் சிக்கல்கள் வரை வெவ்வேறு விதமான பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அலட்சியம் மட்டுமே காரணம் அல்ல... தன் குடும்பத்தின் மீதான அர்பணிப்பும்தான்.

தன் குடும்பத்தின் மீதான அக்கறையில் தன்னைக் கவனிக்க மறந்து, ஆபத்தான ஒரு நோயின் பிடியில் சிக்கி, பெரிய போராட்டத்துக்குப் பிறகு மீண்டுவந்திருக்கிறார் இ.மாலா. தொலைக்காட்சிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் பணியாற்றியவர்.

``என் கணவர் பாலசுப்ரமணியெம். `பிதாமகன்' தொடங்கி `இது நம்ம ஆளு' வரை பல படங்களின் ஒளிப்பதிவாளர். எங்களுடையது காதல் திருமணம். கவின், கருண் எனத் துறுதுறுப்பான இரண்டு மகன்கள். வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான், அந்த விபரீத நோய் என்னைத் தாக்கியது.

எனக்கு கடந்த மூன்று வருடங்களாக உயர் ரத்தம் அழுத்தம் இருந்தது. சிலமுறை மட்டும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தேன். `அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். முறையாக மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்' என, நம்பிக்கை தரும் வார்த்தைகளை மருத்துவர் சொன்னார். அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளைக் கொடுத்து தினமும் சாப்பிடச் சொன்னார்.

எதையுமே ஆரம்பத்தில் தொடர்ந்து செய்தாலும், நாட்கள் போகப் போக... சிறு அலட்சியம் உண்டாகும். சின்னச் சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும். எனக்கும் அந்த அலட்சிமும் சோம்பேறித்தனமும் எட்டிப்பார்த்தன.

மாத்திரைகளை அடுத்த வேளை சாப்பிட்டுக்கொள்ளலாம், அடுத்த நாளில் இருந்து சாப்பிடலாம் என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். ஆனாலும், தினமும் இயற்கை உணவு, நடைப்பயிற்சி என நாள் தவறாமல் செய்தேன். அப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் லேசான தலைவலி வந்தது. வலி ஏற்படும்போது சில மணித்துளிகள் தூங்கி விழிப்பேன். `தலைவலி' என என் கணவரிடம் சொன்னால் பயப்படுவார்; அவரது வேலையும் பாதிக்கும் என நினைத்து, அவரிடமும் அதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. சரியாக மார்ச் 6-ம் தேதி மாலை 3 மணிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த தலைவலி. என்னை அறியாமல் வாந்தி எடுத்து அப்படியே மயக்கம் போட்டு விழுந்துகிடந்தேன். இதுவரை நடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நடுவே மார்ச் 18-ம் தேதி மட்டும் ஞாபகம் கொஞ்சம் எட்டிப்பார்த்துச் சென்றது. அதன் பிறகு நான் கண்விழித்துப் பார்த்த நாள் ஏப்ரல் 9. சுமார் 20 நாட்களுக்கும் மேல்... இந்த உலகத்தில் என்ன நடந்தது என எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை. மறந்துபோய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால், என் வாழ்க்கையில் நடுவுல கொஞ்ச நாட்களைக் காணோம்'' என்கிறார் மாலா. 

“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”

அதிக ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் இருக்கும் ஒரு குழாயில் சிறு ஓட்டை ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியிருக்கிறது. அதுதான் Brain Hemorrhage -யில் போய் முடிந்திருக்கிறது. ஒரு மிகச்சிறிய அலட்சியம்தான், ஜஸ்ட் ஒரு மாத்திரைதான் மரணத்தின் எல்லைகளைக் காட்டிவிட்டது.

``பிரபல மருத்துவர் ஒருவரை அணுகினோம். ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்தவர், `தலையை ஓப்பன் செய்து அறுவைசிகிச்சை செய்வதைவிட `Interventional' என்ற புதிய முறையில் அறுவைசிகிச்சை செய்யலாம். இது தொடையில் துளைபோட்டு வயிறு, மார்பு, தொண்டை வழியாக டியூப் செலுத்தி மூளைக்குள் அறுவைசிகிச்சை செய்யும் முறை. அதில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம்' எனப் பரிந்துரை செய்தார், அவருக்கு வாட்ஸ்அப் வழியாக ஸ்கேன் ரிப்போர்ட்டை அனுப்பினோம். `அடுத்த அரை மணி நேரத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துவந்தால் காப்பாற்ற முடியும்' என அவர் சொல்லிவிட...

27 நிமிடங்களில் போரூர் ராமச்சந்திராவுக்குப் போனோம். `மூளையில் அறுவைசிகிச்சை செய்யும்போது முக்கியமாக மூன்று பாதிப்புகள் வரலாம். ஒன்று கை-கால்கள் செயல் இழந்துபோவது, நினைவு தப்பிப்போவது, பேச்சு வராமல்போவது. அறுவைசிகிச்சையில் 300 சதவிகிதம் உயிருக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், இந்தப் பாதிப்புகள் வரலாம்' எனக் கூறி என்னிடம் கையெழுத்து வாங்கிய பிறகுதான் அறுவைசிகிச்சை நடந்தது'' என்கிறார் பாலசுப்ரமணியெம்.

`` `அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்து எந்தவித பாதிப்புகளும் இன்றி மீண்டுவந்தது பெரிய ஆச்சர்யம்' என மருத்துவர்களும் சொன்னார்கள். ஆனால், `குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் நினைவுகள் இருக்காது' எனச் சொல்லிவிட்டார்கள். அறுவைசிகிச்சைக்குப் பிறகு என்னைத் தொடர்ந்து தூங்க‌விடக் கூடாது என்பது மருத்துவர்களின் கட்டளை. அதனால், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் என்னை எழுப்பி ஏதாவது பேசவைக்க வேண்டும். எனக்கு அதிகம் பிடித்த‌தை எல்லாம் அடிக்கடி என் கணவர், என் கணவருடைய அண்ணன் மகன் கெளதம் என அனைவரும் அருகில் இருந்து கவனித்துக்கொண்டு, ஒவ்வொரு மூன்று மணி நேரமும் என்னை எழுப்பி பேசவைத்தார்கள். ஒருநாள் சிவகார்த்திகேயன்கூட `ரெமோ' பட லேடி லுக்கில் பார்க்க வந்திருக்கிறார். நான் பார்த்ததும் `வாங்க‌ சிவா...' என அடையாளம் கண்டேன் என பிறகு ஒருநாள் என் கணவர் சொன்னார். நடிகர் சூர்யா, என் நண்பர்கள் என அனைவரும் வந்திருந்தனர். ஆனால், அப்போது அவர்கள் எல்லாம் நினைவில் இருந்தாலும், இப்போது எதுவும் நினைவில் இல்லை. மருத்துவர்களும் அந்த நினைவுகள் இருந்தால்தான் பிரச்னை. அந்த ஞாபகம் முழுவதும் நீங்கினால்தான் முழுவதுமாக குணம் அடைந்ததாகச் சொன்னார்கள். இப்போது அந்த ஒரு மாதம் பற்றிய சிந்தனைகளை நான் யோசிப்பது கிடையாது. என் வாழ்க்கையில் தப்பிப்போன நாட்கள் அவை.

ஒருவருக்கு தன் வாழ்வு முடியப்போகிறது எனத்  தெரியும்போதுதான் `நம்ம வாழ்க்கையில் இது எல்லாம் நாம பண்ணியிருக்கலாமே'னு தோணும். நான் மயங்கி விழும்போது அப்படித்தான் இருந்தது. இப்போது நான் மீண்டு வந்திருக்கிறேன். ஒரு பிறவியிலேயே இன்னோரு பிறவி எடுத்திருக்கிறேன்.

ஒரு மாத்திரை சாப்பிடாமல்விட்டதன் விளைவு, இப்போது தினமும் 30 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். எவ்வளவு கசப்பாக இருந்தாலும் மாத்திரைகளை இப்போது இஷ்டப்பட்டுச் சாப்பிடுகிறேன்.

வீட்டில் உடல் சோர்ந்து பெரும்பாலும் படுக்கையில்தான் இருந்தேன். என்னைப் படுக்கையில் பார்க்கக் கஷ்டமாயிருக்கிறது. `வீட்டில் இருந்து ஏதாவது செய்யுங்கள்' என `மைம்' கோபியும், `லவ் குரு' ராஜாவும் உற்சாகப்படுத்தினார்கள். இதோ வாரவாரம் மழலைக் கூட்டத்தோடு யூடியூபில் வீடியோ போடும் வேலைகளைத் தொடங்கிவிட்டேன்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் மாலா.

``இப்போது அடிக்கடி மருத்துவரைச் சந்திக்கிறேன். மருத்துவர் அறையில் அந்தநாளில் அவர் சந்திக்கப்போகும் `patient list' போர்டில் தொங்கிக் கொண்டிருக்கும்.அதில், ஆண்களைவிட பெண்கள் பெயர்கள்தான் அதிக அளவில் இருந்தன.

ஏன்? என் மனதுக்குள் அதற்கான பதில் ஓடியது. பெண்களின் குணம் அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறைகொள்ளாமல், தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஓடுவது... தங்களுக்கு என்ன தேவை என்பதைக்கூட யோசிக்காமல் குடும்பத்துக்காக உழைப்பது. எல்லாம் சேர்ந்துதான் உடலே ஒரு கட்டத்தில் கட்டாய ஓய்வைத் தேடுகிறது; நம் ஓட்டத்தை நிறுத்துகிறது. பெண்களே ப்ளீஸ் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்'' எனக் கைகூப்புகிறார் மாலா.