Published:Updated:

சாவி 100

சாவி 100
பிரீமியம் ஸ்டோரி
சாவி 100

ரவிபிரகாஷ், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

சாவி 100

ரவிபிரகாஷ், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
சாவி 100
பிரீமியம் ஸ்டோரி
சாவி 100
சாவி 100

னந்த விகடன் எனும் கற்பகத் தரு, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துவரும் கொடைகள் ஏராளம்; தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு அளித்த ரத்தினங்கள் ஏராளம்... ஏராளம். எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், விமர்சகர்கள் என அந்தப் பட்டியல் நீளமானது.

சாவி 100

பேராசிரியர் கல்கி, தேவன், துமிலன் என அற்புதமான படைப்பாளிகளைத் தந்த அதே ஆனந்த விகடன்தான், சாவி என்கிற திறமையான பத்திரிகையாளரையும் தந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி, சாவியின் நூற்றாண்டு!

`எனக்கு நினைவுதெரிந்த நாள் முதலே, அதாவது என் 14-வது 15-வது வயதிலேயே, பத்திரிகை என்றால் என்ன, எடிட்டர் என்றால் யார் என்றெல்லாம் தெரியாத அந்த இளம் பருவத்திலேயே ஒரு பத்திரிகைக்கு எடிட்டராக வேண்டும் என ஆசைப்பட்டேன் என்றால், அதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான்' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சாவி.

ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர, அவர் செய்த உத்தி குறும்புத்தனமானது. இது நடந்தது 1938-ம் ஆண்டில்.

“அப்போது எனக்கு 22 வயது. சிறுகதைகள் சிலவற்றை எழுதி எடுத்துக்கொண்டு, ஆனந்த விகடனின் அசோசியேட் எடிட்டராக இருந்த கல்கியைப் போய்ப் பார்த்தேன். அப்போது சென்னை, தங்கசாலைத் தெருவில் இயங்கிவந்தது ஆனந்த விகடன். என் கதைகளைப் புரட்டிப் பார்த்த கல்கி, எதுவும் நன்றாக இல்லை எனத் திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனாலும், எப்படியாவது விகடனில் வேலைக்குச் சேர்ந்துவிடவேண்டும் என வைராக்கியமாக இருந்தேன்.

எழுத்தாளரும் என் மேல் அக்கறைகொண்ட நண்பருமான தி.ஜ.ர., ஒரு யோசனை சொன்னார். ‘கத்தரி விகடன்’ என்னும் பெயரில் ஒரு புதிய பத்திரிகையைத் தொடங்கப்போவதாக ‘ஹனுமான்’ பத்திரிகையில் ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுக்கச் சொன்னார். ‘விகடனுக்குப் போட்டியாக அதே பெயரில் இன்னொரு பத்திரிகை வருவதை விரும்ப மாட்டார் வாசன். நிச்சயமாக இதுகுறித்து கல்கியை அழைத்துப் பேசுவார். பார்த்துக்கொண்டே இருங்கள், விகடனில் உங்களுக்கு வேலை உறுதி’ எனச் சொல்லியிருந்தார். ஆச்சர்யம்… அவர் சொன்னதுபோலவே நடந்தது.

மறுநாள், தி.ஜ.ர-வும் நானும் தம்புச்செட்டித் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது, பின்னாடியே சைக்கிளில் முனுசாமி என்பவர் வந்து, ஒரு துண்டுச்சீட்டை என்னிடம் கொடுத்தார். அதில், ஆசிரியர் என்னைப் பார்க்க விரும்புவதாக தேவன் எழுதியிருந்தார்.

அடுத்த நாள் காலையில் நான் விகடன் அலுவலகத்துக்குப் போய் கல்கியைப் பார்த்தேன். ‘நீதானே அந்த விளம்பரம் கொடுத்தது?’ என்றார்.

சாவி 100

‘ஆமாம்’ என்றேன்.

‘இதோ பார், பத்திரிகையைத் தொடங்கி நடத்துறது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இங்கே உனக்கு உதவி ஆசிரியர் வேலை தர்றேன். மாசம் 40 ரூபாய் சம்பளம். என்ன சொல்றே?’ என்றார்.

நான் கொஞ்சம் தயங்கினேன். ‘என்ன தயங்கறே?’ என்றார்.

‘அதில்லே… என் புதிய பத்திரிகைக்காகச் செலவு பண்ணியிருக்கிறவருக்கு என்ன பதில் சொல்றதுன்னுதான்…’ என்று இழுத்தேன்.

‘எவ்வளவு செலவு பண்ணியிருக்கார்?’ என்று கேட்டார் கல்கி.

சட்டென, `120 ரூபாய்' என மனதில் தோன்றியதைச் சொன்னேன். உடனே, எனக்கு 120 ரூபாய் கொடுக்கச் சொல்லி, ஒரு சீட்டில் எழுதி என்னிடம் கொடுத்து, ‘இதைக் கொண்டுபோய் அக்கவுன்ட்ல கொடுத்துப் பணம் வாங்கிக்கோ’ என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. ஆனந்த விகடனில் சேர்ந்தேவிட்டேன்!” என்று அந்த அனுபவத்தை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி.

முதலில் பெற்ற தொகையில் சாவி செய்த காரியம் என்ன தெரியுமா? அது ஒரு தமாஷ்!

எழுத்தாளர்களின் அடையாளம் ஜிப்பா அணிந்திருத்தல் என்றோர் எண்ணம் எப்படியோ சாவியின் மனதில் சின்ன வயதிலேயே பதிந்துபோயிருக்கிறது. அதுவும், சிறந்த எழுத்தாளர் என்றால், சில்க் ஜிப்பா அணிய வேண்டும் என்பதாகத் தீர்மானித்துக்கொண்டு, முதல் வேலையாக பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள துணிக்கடைக்குச் சென்று சில்க் துணி வாங்கி, அங்கேயே வாசலில் உட்கார்ந்திருந்த டெய்லரிடம் அளவு கொடுத்து, அப்போதே தைத்து, அணிந்து மகிழ்ந்தார்.

மறுநாள், சில்க் ஜிப்பாவில் கல்கி முன்னால் ஜம்மென போய் நின்றார் சாவி. இவரின் கோலத்தைப் பார்த்துவிட்டு, “சபாஷ்… நேற்று கொடுத்த பணத்தில் முதல் செலவு இந்த ஜிப்பாவா?” என்று கேட்டார் கல்கி. சாவி கூச்சத்தோடு நெளிய, “சகிக்கலை, முதல்ல இதைக் கழட்டி எறி. நல்ல கதர் சட்டையா வாங்கிப் போட்டுக்கொள். அதுதான் கௌரவம்” என்றார் கல்கி.

சாவி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அன்றைக்கு வீடு திரும்பியதும் அந்த ஜிப்பாவைக் கழற்றிப் போட்டவர்தான், அதன்பிறகு அவர் சில்க் ஜிப்பாவே அணியவில்லை. அது மட்டும் அல்ல, கல்கி சொன்னதுபோல், தன் வாழ்நாளில் மிகப் பெரும்பான்மையான நாட்களில் கதர்சட்டைதான் அணிந்திருந்தார்.

ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம் எனப் பிரபலமான பத்திரிகைகளில் எல்லாம் சாவி பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், அதற்கு முன்னரே விசித்திரன், சந்திரோதயம், ஹனுமான், தமிழன் எனப் பலப் பல பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அது மட்டும் அல்ல, அந்நாளில் மிகப் பிரபலமான மல்யுத்த வீரர்களாக இருந்த கிங்காங், தாராசிங் இருவரையும் ஊர் ஊராக அழைத்துச் சென்று குத்துச் சண்டைப் பந்தய நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தியாகராய நகரில் ‘காபி பேலஸ்’ என சிறிய அளவிலான ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார். சாண்டில்யன், தமிழ்வாணன் போன்ற எழுத்தாளர்களும், ம.பொ.சி. போன்ற அரசியல்வாதிகளும் அதன் ரெகுலர் கஸ்டமர்கள்.

ஆனந்த விகடனில் இருந்து கல்கி வெளியே வந்து, தனிப்பத்திரிகை தொடங்கியபோது, குருவைப் பின்பற்றி சீடரான சாவியும் ‘கல்கி’ பத்திரிகையில் சேர்ந்துவிட்டார். சில வருடங்கள் கழித்து, சொந்தமாக ‘வெள்ளிமணி’ என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். தமிழ்ப் பத்திரிகை உலகிலேயே முதன்முதலாக சிறுகதைகளுக்கு வண்ணப்படங்கள் அச்சிட்டு வெளியிட்ட பத்திரிகை ‘வெள்ளிமணி’தான்.

பின்னர், 50-களில் ஆனந்த விகடனில் சாவியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

ஒருமுறை, விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சாவியையும் இன்னும் சிலரையும் திருவையாறு ஆராதனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கே காவிரிப் படித்துறையில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தபோது, நான்கைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கழுவிக்கொண்டி ருந்தார்கள்.

தென்னையும் வாழையும் நிறைந்த அந்தக் காவிரிக்கரைச் சூழலில், சட்டை அணியாத சங்கீதக்காரர்களுக்கும், பட்டைப்பட்டையாக விபூதி அணிந்த ஆன்மிக அன்பர்களுக்கும் இடையே இப்படி அந்நிய தேசத்துக்காரர்கள் கலந்திருந்த காட்சி விகடன் ஆசிரியரின் மனதில் ஒரு விசித்திர எண்ணத்தைத் தோற்றுவித்தது. `இதேபோல், அமெரிக்காவில் நம்ம பாரம்பர்யக் கல்யாணம் ஒன்றை நடத்தி, அதில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்... எவ்வளவு தமாஷாக இருக்கும்?' என்ற எண்ணமே அது. அவர் உடனே அதை சாவியிடம் பகிர்ந்துகொள்ள, “அப்படியே நடத்திவிட்டால்போகிறது” என்றார் சாவி. அப்படிப் பிறந்ததுதான் ‘வாஷிங்டனில் திருமணம்’. குலுங்கக் குலுங்கச் சிரிக்கச்செய்த இந்த நகைச்சுவைத் தொடர்கதை வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பானது.

சாவி 100

விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனுக்கும் சாவிக்கும் இடையே சீரான புரிதல் இருந்தது. இருவரின் எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இயங்கின. அவர் கோடு போட்டால், இவர் ரோடு போட்டுவிடுவார். அப்படி ஒரு பொருத்தம். விளைவு... விகடனில் அற்புதமான பல படைப்புகள் வெளியாகி, வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின.

‘வயதான தொழிலதிபர் ஒருவருக்கும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே காதல். இந்த ஒன்லைன் ஸ்டோரியை விரிவாக்கி, தொடர்கதையாக எழுத முடியுமா? ஜெயகாந்தனோ அல்லது நீங்களோதான் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்’ என  விகடன் ஆசிரியர்  எஸ்.பாலசுப்ரமணியன் சொல்ல,   ஒப்புக்கொண்ட சாவி, ‘விசிறிவாழை’ என உடனே ஒரு தலைப்பையும் சொன்னார். வாஷிங்டனில் திருமணம் நகைச்சுவைத் தொடர் என்றால், விசிறிவாழை சென்டிமென்ட்டும் சீரியஸும் நிரம்பிய கதை.

“கதையே இன்னும் முடிவாகவில்லை. அதற்குள், `விசிறிவாழை' என உடனே எப்படித் தலைப்பிட்டீர்கள்?” என ஆசிரியர் பாலு  வியப்புடன் கேட்க, “கதாநாயகியின் வாழ்க்கை யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகப் போவதாகத்தான் இந்தக் கதை நீளும் சாத்தியம் இருக்கிறது. விசிறிவாழை, பார்க்க அழகாக இருக்கும்; அதனால் யாருக்கும் உபயோகம் இராது. எனவேதான், அதையே தலைப்பாக வைத்தேன்” என்றார் சாவி.

மகாத்மா காந்தி நடைப்பயணமாக நவகாளி யாத்திரை புறப்பட்டபோது, அவரோடே நடைப்பயணம் மேற்கொண்டு, அந்த அனுபவங்களை கல்கி பத்திரிகையில் ‘நவகாளி யாத்திரை’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார். காந்தி, காமராஜ், ராஜாஜி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி எனப் பலருடனும் நெருங்கிப் பழகியவர் சாவி. வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் இத்தகைய அபூர்வ வாய்ப்பு கிடைத்தது இல்லை.

தாம் எழுதுவது மட்டும் அல்ல; மற்ற எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களிடம் இருந்து சிறந்த படைப்பைப் பெற்று, அவர்களை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் சாவிக்கு அலாதி ஆனந்தம்.

எழுத்தாளர்களுக்கு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தவர் சாவி. சுஜாதா, புஷ்பாதங்கதுரை, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களுக்கும், கோபுலு, ஜெயராஜ் போன்ற ஓவியர்களுக்கும் விழாக்கள் எடுத்துக் கௌரவப்படுத்தியிருக்கிறார். `அர்த்தமுள்ள இந்துமதம்’, `குறளோவியம்’, `ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது...’ போன்ற பல பிரபல தொடர்களின் தலைப்புகள், சாவி தந்தவையே. கண்ணதாசனை ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுத வைத்ததும், மு.கருணாநிதியை ‘குறளோவியம்’ எழுதவைத்ததும், வைரமுத்துவை ‘கவிராஜன் கதை’ எழுதவைத்ததும் சாவியே!

எழுத்தாளர் மணியன் ஒருமுறை சொன்னதுபோல், ‘சா’ என்றால் சாதனை, ‘வி’ என்றால் விடாமுயற்சி என வாழ்ந்துகாட்டிய பெருமகனார், பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி!