Published:Updated:

தனியே தன்னந்தனியே...

தனியே தன்னந்தனியே...
பிரீமியம் ஸ்டோரி
தனியே தன்னந்தனியே...

பா.விஜயலட்சுமி, படம்: ஹாசிப்கான்

தனியே தன்னந்தனியே...

பா.விஜயலட்சுமி, படம்: ஹாசிப்கான்

Published:Updated:
தனியே தன்னந்தனியே...
பிரீமியம் ஸ்டோரி
தனியே தன்னந்தனியே...
தனியே தன்னந்தனியே...

சென்னை பேரக்ஸ் சாலை பிளாட் பார்மில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்கிறார் சுகுணா. 29 வயதான சுகுணாவின் கணவர், குடிக்குப் பலியானவர். கூலி வேலையில் ஒரு நாளைக்கு சம்பளமாக 50 ரூபாய் கிடைத்தால் மட்டுமே மூன்று பேரின் பசி தீரும். இல்லை என்றால், சுகுணாவும் குழந்தைகளும் அன்று முழுக்கப் பட்டினிதான். குழந்தைகளின் வயிற்றுப் பசிக்காக, கட்டட வேலை... மண் அள்ளும் வேலை என ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார் சுகுணா.

இதே சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக பணிநிமித்தமாக ஒற்றைப் பெண்ணாக வசித்துவருபவர் திவ்யா. ‘`பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், என் பெற்றோர் வசிப்பது மகாராஷ்டிராவில். அப்பாவால் வேலையையும், அம்மாவால் வயதான அப்பாவையும் விட்டு வர முடியாது. என் வாழ்க்கைக்கு இந்த உழைப்பு அவசியம். குடும்பத்தைப் பிரிந்தே ஆகவேண்டிய சூழல். நானே சமைத்து... நானே சாப்பிட்டு  என வருத்தமோ, மகிழ்ச்சியோ எல்லாமே என்னுடனேயே முடிந்துவிடுகிறது'' என்கிறார் திவ்யா.

மத்திய அரசின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிட்டத்தட்ட ஏழு கோடிப் பெண்கள் தனியாக வசிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 8.11 லட்சம் பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். இது, 1.84 கோடி குடும்பங்களைக் கொண்ட தமிழ்நாட்டில் 4.40 சதவிகிதம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், நகர்ப்புறங்களைவிட கிராமப்புறப் பெண்கள்தான் அதிக அளவில் தனியாக வாழ்கின்றனர். நகர்ப்புறப் பெண்களின் எண்ணிக்கை 2.95 லட்சம் என்றால், தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் கிராமப்புறப் பெண்களின் எண்ணிக்கை 5.15 லட்சம்.

தனியே தன்னந்தனியே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணமாகிக் கணவனைப் பிரிந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், திருமண வயது தாண்டியும் குடும்பத்தைச் சுமக்கவேண்டிய கட்டாயத்தால் உழைப்பவர்கள், கல்விக்காகத் தனியே வசிக்கும் பெண்கள் என `சிங்கிள் உமன்'களின் எண்ணிக்கை, நீங்கள் நினைப்பதைவிட அதிகம்.

‘`2011-ம் வருடம், கையில் 200 ரூபாயோடு சென்னை வந்தேன். எந்த வருமானமும் உடனடியாக இல்லை. ஒரு படத்தில் உதவி இயக்குநர். ஆனால், சம்பளம் கிடையாது. ஐந்து வருட தனிமைப் போராட்டம். இன்னைக்கு நாடக நடிகை, இயக்குநர், காம்பியரிங், நடிப்புப் பட்டறைனு நிறைய வேலைகள். தனியா இருந்தாலும் இந்த வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கு.

இன்னைக்கும் நான் தனியாத்தான் இருக்கேன். என் வேலைக்கு நான் தனியாக வசிப்பதுதான் வசதியாக இருக்கிறது. காரணம், அதன் தன்மை. ஆனால், நள்ளிரவு ஷூட்டிங் முடித்துவிட்டுத் திரும்பிவரும்போது காவலர்கள் கூப்பிட்டு விசாரிப்பதைவிட அவர்களுடைய பார்வை `நீ ஏன் இத்தனை மணிக்கு வருகிறாய்?' என்பதாகத்தான் உள்ளது. பாதுகாப்பு கொடுக்கவேண்டிய அவர்களே அலட்சியமாகப் பார்ப்பதால்தான் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன'’ என்கிறார் சினிமாவில் துணை இயக்குநராக பணியாற்றும் விஜயலட்சுமி.

வேலைக்காகவும் படிப்புக்காகவும் தனியாக வசிக்கும் பெண்களைவிட, கணவனால் கைவிடப்பட்டோ, கணவனைப் பிரிந்தோ, கணவன் இறப்புக்குப் பிறகு தனியாக வாழும் பெண்களின் நிலை மிகவும் கடினம். தமிழகப் பெண்களில் 13.1 சதவிகிதம் பெண்கள், கணவனைப் பிரிந்து தனியாக வசிக்கின்றனர். இந்திய அளவில் 8.3 சதவிகிதப் பெண்கள் கணவனைப் பிரிந்து சிங்கிளாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

``பெண்கள் அதிக அளவில் வேலைக்குப் போகும் சமூகத்தில், பெண்கள் தனியாக வசிப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்தப் புள்ளிவிவரக் கணக்கில் எத்தனை பெண்கள் 20 முதல் 40 வயதுக்குள் கணவனை இழந்து வாழ்கிறார்கள் என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம். குடி சார்ந்த மரணமும், அதனால் விதவைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் உண்மை'' என்கிறார் பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

சென்னையில் மட்டும் அனுமதிபெற்ற லேடீஸ் ஹாஸ்ட்டல்கள் 800-க்கும் மேல் உள்ளன. இதில் தனி ரூம், இருவர் ஷேரிங், ஏழு பேர் ஷேரிங் என பல வகைகளில் ரூம்கள் கிடைக் கின்றன. ஏ.சி வசதிகொண்ட சிங்கிள் ரூமின் வாடகை 8,500 முதல் 15,000 ரூபாய் வரை உள்ளது. இதில் மூன்று வேளை உணவும் ஹாஸ்ட்டலில் வழங்கப்படும். தவிர, இன்னும் அதிக வசதிகள் கொண்ட ஹாஸ்ட்டலில் தனியாகச் சமைத்துச் சாப்பிடவும் அனுமதி உண்டு.  ஒரு பெண் திருமணமாகியோ, வேலை நிமித்தமாகமோ, கல்வி முடித்தோ சென்றால், அந்த இடத்தை நிரப்ப இன்னொரு பெண் வந்துகொண்டே இருக்கிறார்.

‘`படிப்புக்காகவும் குடும்பச் சூழ்நிலைக்காவும் வேலைக்காகவும் பெண்கள் தனியாக வாழ்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், இதுகுறித்துப் பேசும்போது பலரும் ஒருவிதமான பதற்றத்தை உண்டாக்குகிறார்கள். ‘அடடா தனியாக வசிக்கிறார்களே!’ எனத் தேவை இல்லாத நெருடல்களை உண்டாக்குகிறார்கள். எனினும், தனியாக வாழ்வதில் பாதுகாப்பு குறித்த சில பயங்களும் கவலைகளும் அதிகம்தான். இப்படி தனித்து வாழும் பெண்கள் அதிகரித்துள்ள நகர்ப்புறங்களில் சரியான தங்கும் இடங்கள்  இல்லை. அதனாலேயே அதிகச் சம்பளம் வாங்கும் பெண்கள்கூட முறையான வசதிகள் இல்லாத விடுதிகளில் தங்கவேண்டியுள்ளது. இந்த அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், தனித்து வாழும்  பெண்கள் அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசே அவர்களுக்கான முறையான விடுதிகளையும் வீடுகளையும் அமைத்துக்கொடுத்தால், அதுவே பெண்களுக்கான பாதுகாப்பில் முதல்படியாக அமையும்’' என்கிறார் எழுத்தாளர் ஓவியா.

தனியே தன்னந்தனியே...

ஹாஸ்ட்டல்கள் இல்லாமல் தனியாக வீடு எடுத்து தங்கும் பெண்களின்  எண்ணிக்கையும் தமிழகம் முழுவதும் அதிகரித்துவருகிறது.

‘`தனியா இருக்கிறதுல பெரிய கஷ்டம், வீடு தேடுறதுதான். நாலைஞ்சு பேர் சேர்ந்தா மட்டும்தான் அதிகரிச்சிருக்கிற விலைவாசியில் சமாளிக்க முடியும். சில ஹாஸ்ட்டலில் தண்ணீர் பிரச்னை, உணவு சரியில்லாமல் இருப்பதுனு இன்னும் கொடுமைகள் அதிகம். வீட்டில் தங்குறதுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள். வீடு மாத்தக்கூட மூன்று மாசம் முன்னாடியே சொல்லணும்னு நிறையக் கெடுபிடிகள். ஆனால், ஒரு ஃப்ரீடம் இந்த வாழ்க்கையில இருக்கு. சென்னையில் ஃப்ரிட்ஜ், டி.வி முதல் பல பொருட்களை வாடகைக்கே எடுத்துக்க முடியும். தனியா வாங்கணும்னு அவசியம் இல்லை. தேவையான எல்லா பொருட்களையும் நம்ம வருமானத்துல வாங்கிக்கிறது ரொம்ப நல்ல ஃபீலைக் கொடுக்குது’' என்கிறார் சென்னையில் தோழிகளுடன் தங்கியிருக்கும் நித்யா.

``திருமணம் ஆகாத பெண்களைவிட, திருமணம் ஆகித் தனித்து வாழும் பெண்களில் பலரது கதைகள் துன்பம் நிறைந்தவை'' என்கிறார் வழக்குரைஞர் அருள்மொழி.

‘`திருமணத்துக்குப் பிறகு கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் பெண்கள், பிறந்த வீட்டுக்குக்கூட சுமையாகத்தான் தெரிகின்றனர். என்னிடம் ஒரு வழக்கு வந்தது. அந்தப் பெண், ஒரு வங்கி அதிகாரி. கணவருக்கு விவாகரத்து அளிக்காமல் வழக்கைத் தொடர்ந்து நடத்திவந்தார். ஒருகட்டத்தில் நான், `ஏன்?’ எனக் கேட்டபோது `நீ புருஷன் இல்லாமத்தானே இருக்க. உனக்கு குழந்தையும் இல்லை.

 எங்களுக்குப் பணம் கொடுத்து உதவலாமே’ என சொந்தக்காரங்களே நச்சரிக்கிறார்கள். இதற்காகவாவது நான் மணமுறிவு முடிவை  நீட்டிக்கவேண்டியிருக்கிறது. இதை எல்லாம் கடந்து தனித்து வாழும் பெண்களை அன்பு, மரியாதையுடன் நடத்தும் கொஞ்சம் பேர் வாழ்கிறார்கள். ஆனால், அந்தக் கொஞ்சம் பேரை அடையாளம் காண பெண்கள் பல கோளாறான மனிதர்களைத் தாண்டித்தான் பயணிக்கவேண்டியுள்ளது’' என்கிறார்.

தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அரசின் சார்பில் தங்கும் விடுதிகள் அதிக அளவில் இல்லை. இருக்கும் விடுதிகளிலும் அடிப்படை வசதிகள் பலவும் மிஸ்ஸிங். பாதுகாப்புக் குறைபாடுகளும் அதிகம். இந்த நிலை மாற, அரசுதான் முனைய வேண்டும். நிச்சயம் அரசு சிங்கிள் உமன்களின் பிரச்னைகளுக்குச் செவிசாய்க்கும் என நம்பலாம். காரணம், நம் தமிழகத்தின் முதல்வரே `சிங்கிள் உமன்'தான்!

தனியே தன்னந்தனியே...

``தனியாக வசிக்கவேண்டிய கட்டாயம் வரும்போது, பெண்கள் முதலில் மனதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலைக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் இடம்பெயரும் பெண்கள், வசிக்கப்போகும் வாழ்வாதாரப் பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் காவல் நிலையம், மருத்துவமனை, அடிப்படையான அலுவலக முகவரிகள் ஆகியவற்றைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அற்பவிஷயங்களுக்குப் பயப்படும் சுபாவத்தை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். பதற்றமான ஒரு சூழ்நிலையில் கராத்தே, குங்ஃபூவைவிட சமயோஜிதமான யோசனை மட்டுமே கைகொடுக்கும். யாரேனும் பின்தொடர்வதுபோல உணர்ந்தால், மொபைலில் தேவை இல்லாத அழைப்புகள் வந்தால், தயங்காமல் காவல் துறையில் புகார் அளியுங்கள்'' என்கிறார் முன்னாள் காவல் துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism