Published:Updated:

4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்

4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்
பிரீமியம் ஸ்டோரி
4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து

4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து

Published:Updated:
4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்
பிரீமியம் ஸ்டோரி
4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்
4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்

சை உலகில் கொண்டாடப்படும் மியூஸிக் அகாடமியின் `சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார், வயலின் இசைக்கலைஞர் அவஸரலா கன்யாகுமாரி. நெருக்கமானவர்கள் மத்தியில் செல்லமாக `கன்யா'. மியூஸிக் அகாடமியின் நீண்டகால சரித்திரத்தில், வயலின் வாசிக்கும் பெண் இசைக்கலைஞர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

``திருப்பதி வெங்கடாசலபதி எனக்கு அப்பா, மகாலட்சுமி அம்மா'' என தெலுங்கு வாசத்துடன் கூடிய தமிழில் மிகவும் சன்னமாகப் பேசுகிறார் கன்யாகுமாரி. விசாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள விஜயநகரம்தான் கன்யாகுமாரிக்கு சொந்த ஊர். சிறு வயது முதலே இசையில் ஆர்வம். கல்லூரிப் படிப்பைத் தொடர, அம்மா வழி தாத்தாவும் பாட்டியும்தான் இவரை சென்னைக்குப் புலம்பெயரவைத்தார்கள். ராணி மேரி கல்லூரியில் பி.ஏ மியூஸிக் சேர விண்ணப்பித்திருக்கிறார். இடம் கிடைக்கவில்லை.

``உடனே திருப்பதிக்குப் போனேன். அப்பாவிடம் வேண்டிக்கொண்டு திரும்பினேன். யாரோ சிபாரிசுசெய்ய, அதே கல்லூரியில் இடம் கிடைத்தது.''

விஜயநகரத்தில் இருந்தவரை கன்யாகுமாரிக்கு குருவாக இருந்து வயலினில் தயார்செய்தவர், விஜயேஸ்வர ராவ். சென்னை வந்ததும் சிறிது காலம் பாம்பே சகோதரிகளிடம். பின்னர், வயலின்
எம்.சந்திரசேகரன். அதற்குப் பிறகு எம்.எல்.வசந்தகுமாரியிடம் அடைக்கலம் புகுந்தார்.

எம்.எல்.வி-யைப் பற்றி பேசும்போது கன்யாகுமாரியின் கண்கள் பிரகாசிக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை அவரை `அக்கா' என விளிக்கிறார்.

``பாடகி சாருமதிதான் என்னை அக்காவிடம் அறிமுகப்படுத்தினார். அக்காவுடன் இருந்த பத்தொன்பது வருடங்கள் என் வாழ்க்கையில் முக்கியமான காலம். நான் சின்னப் பெண் எனப் பார்க்காமல், என்னை பக்கவாத்தியம் வாசிக்க பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். பல இடங்களுக்கு என்னை அழைத்துப்போனார். ஏதாவது சந்தர்ப்பத்தில் தன் கச்சேரியை ரத்துசெய்ய நேரிட்டால், அதே மேடையில் என்னை சோலோ வாசிக்கவைத்தார்.''

சியாமா சாஸ்திரியின் பைரவி ராக ஸ்வர ஜதி `அம்ப காமாட்சி...' பாடல், கன்யாகுமாரியின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. தினமும் காலையில் பூஜைக்குப் பிறகு வயலினில் இந்த ஸ்வர ஜதியை வாசித்துவிட்டுதான் சாப்பிடவே உட்காருவாராம்.

சென்ற டிசம்பரில் பெருவெள்ளத்துக்குப் பிறகு, `இனி இப்படியொரு பாதிப்பு வேண்டாம்' என்ற பிரார்த்தனையுடன் சென்னை, திருப்பதி தேவஸ்தானத்தில் சக கலைஞர்கள் சிலருடன் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் கன்யாகுமாரி. அதில், பைரவி ராக ஸ்வர ஜதியை மட்டுமே 58 முறை பாடி, வாசித்தார்களாம்!

ன்யாகுமாரி, தனது கச்சேரிகளுக்கு வயலினை வைத்து எடுத்துவரும் பெட்டி மிகவும் பழசாக இருக்கும். `புதுசாக ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே?' எனப் பலரும் கேட்டிருக்கிறார்கள்.
 
மறுத்துவிட்டார். காரணம், அது வயலின் மேதை டி.என்.கிருஷ்ணன் எப்போதோ தேர்வுசெய்து கொடுத்தது. அந்த அளவுக்கு சென்டிமென்ட் பார்ப்பவர்.

4 நாட்களில் 2 விருதுகள்! - மகிழ்ச்சியில் இசை உலகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளூரிலும் வெளியூரிலும் வெளி நாட்டிலும் நிறையச் சீடர்களைத் தயார் படுத்திவருகிறார் கன்யாகுமாரி. வயலின் டூயட் கச்சேரிகளுக்கு தன் சீடர்களில் ஒருவரையே பக்கத்தில் உட்காரவைத்து ஊக்கப்படுத்துகிறார். இவரின் முதல் சீடர் என்ற பெருமைக்குரியவர், இன்று கச்சேரி மேடைகளில் பலருக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துவரும் எம்பார் கண்ணன்.

`கன்யாகுமாரிக்கு சங்கீத கலாநிதி!' என்ற அறிவிப்பு வந்த நான்கே நாட்களில், இன்னொரு மெகா விருது.

கர்னாடக சங்கீத வித்வான் டி.எம்.கிருஷ்ணா, மகசேசே விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன்னர் இசை உலகில் இந்த விருதைப் பெற்றவர் எம்.எஸ். மட்டுமே!

`சர்ச்சை நாயகன்' என்றும், `போராளி' என்றும் பலராலும் விமர்சிக்கப்பட்டுவரும் கிருஷ்ணா, மேடைப் பாடகராக மட்டும் இந்த விருதைப் பெறவில்லை; கச்சேரிகளுக்கு வெளியே கலைக்காகவும் குறிப்பாக, கர்னாடக இசைக்காகவும் அவர் முன்னெடுத்துவைக்கும் `சமூகச் சீர்திருத்த' நடவடிக்கைகளுக்காகவும்தான் இந்த உயரிய விருது.

`வீட்டில் பயிற்சிசெய்தோம்... மேடைகளில் பாடினோம்... கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் வரவு வைத்துக்கொண்டு பேங்க் பேலன்ஸை உயர்த்தினோம்' என்கிற குறுகிய வட்டத்தில் உழன்றுகொண்டிருப்பவர் அல்ல கிருஷ்ணா; இசையில் தேடல் கொண்டிருப்பவர். அதையும் தவிர, உயர் சாதியினரால் மட்டுமே கர்னாடக சங்கீதம் ஆதிக்கம் செய்யப்பட்டும்வரும் நடைமுறையை மாற்றி, சமூகத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களும் கர்னாடக இசையைக் கேட்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றுப் பாடவும் வேண்டும் என்ற சிந்தனையுடன் பேசியும் எழுதியும் வருபவர். குப்பங்களில் இவர் இசை விழா நடத்துவதும் அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான்.

எனில், கிருஷ்ணாவை ஒருவகையில் `நவீன நந்தனார்' என அழைக்கலாமோ?

`தலித்களும், ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் வேறு சிலரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு, கர்னாடக இசையை ஒரு கோயில் மாதிரி நான் நினைக்கவில்லை. அது ஒரு ரம்மியமான, கம்பீரம் நிறைந்த வீடு. இங்கு பல அறைகள் காரணமே இல்லாமல் மூடப்பட்டு, புழுதி படிந்து கிடக்கின்றன. அந்த அறைகள் திறக்கப்பட வேண்டும். ஆர்வமும் உரிமையும் இருப்பவர்கள் எல்லோரும் அந்த அறைகளுக்குள் நுழைய வேண்டும். இசையின் தரம் உயர, அவர்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.'

- மகசேசே விருது அறிவிப்புக்குப் பிறகு இப்படிச் சொல்லியிருக்கிறார் டி.எம்.கிருஷ்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism