Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8

ம.செந்தமிழன், படம்: ப.சரவணகுமார் ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8

ம.செந்தமிழன், படம்: ப.சரவணகுமார் ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8

ரு சமூகத்தில் நியாயமான நடத்தைகளை அவமதிக்கும் வழக்கம் அதிகரித்துவிட்டால், அந்தச் சமூகம் அழிவை நோக்கி விரைகிறது எனப் பொருள். மஞ்சள் பை, சொம்பு, கூஜா ஆகிய சொற்கள் எல்லாம் நவீனச் சமூகத்தில் இழிவானவை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னர், மேலே குறிபிட்ட பொருட்களின் மீது அவமரியாதையான போர்வை போத்தப் பட்டது. மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம், சொம்பு தூக்குதல் அவமானத்துக்குரியது, கூஜா எடுத்துச் செல்வது வேடிக்கையானது போன்ற மதிப்பீடுகளை நவீனம் உருவாக்கியது.

இந்த மூன்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்குத் தேவையான கொள்கலன்கள். மஞ்சள் பைகளை, நெகிழிப் பைகள் (பிளாஸ்டிக் பைகள்) அழித்தன. சொம்பு, கூஜாக்களை நெகிழிப் புட்டிகள் (பிளாஸ்டிக் பாட்டில்கள்) ஓரங்கட்டின. தமிழ்நாட்டின் எந்த நகரத்தில் நீங்கள் வசித்தாலும் பரவாயில்லை, உங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து தெருக்களின் ஓரங்களைப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் நெகிழிக் குப்பைகள் கிடக்கின்றன. வீட்டுவாசல்களில், வீதிகளில், சாக்கடைகளில், கால்வாய்களில், வயல்களில், ஆறுகளில், பேருந்து நிலையங்களில், கடைத்தெருக்களில், கோயில்களில்… இன்னும் எல்லா இடங்களிலும் நெகிழிக் குப்பைகள்.

வயிறு புடைத்த மாடுகள் நெகிழிப் பைகளோடு சேர்த்து அவற்றில் அப்பியிருக்கும் இட்லியையோ,  ஒட்டியிருக்கும் சாம்பாரையோ விழுங்குகின்றன. பல மனிதர்கள் நெகிழிப் புட்டிகளில் செடி வளர்த்து இன்புறுகிறார்கள். பிள்ளைகள் யாவரும் நெகிழிப் புட்டிகளில்தான் பள்ளிக்குக் குடிநீர் தூக்கிச் செல்கின்றனர். பெரும்பாலான பிள்ளைகளின் உணவுப்பெட்டியே நெகிழியில் தயாரிக்கப்பட்டதுதான்.

உற்றுநோக்குங்கள், இயற்கைப் பொருட்களைக் காட்டிலும் செயற்கை வேதி நஞ்சான நெகிழிப் பொருட்கள்தான் நமது சூழலில் பெரும்பான்மையாக உள்ளன. இது ஓர் அபாயகரமான நிலைமை.
உங்கள் தெருவில் கிடக்கும் நெகிழிக் குப்பைகள், அங்கே இயற்கையான வெப்பநிலையில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன. வெயிலில் கிடக்கும் மஞ்சள் பை, தன் மீது இறங்கும் வெப்ப ஆற்றலை உள்வாங்கி நிலத்துக்குக் கடத்திவிடும். அதே வெயிலில் கிடக்கும் நெகிழிப் பை, வெப்பத்தை இயன்ற அளவுக்கு எதிரொளிக்கும். ஏனெனில், நெகிழித் தொழில்நுட்பத்தில் வேதிப்பொருட்களின் மூலக்கூறுகள் மிகவும் இறுக்கமானவையாக வடிவமைக்கப்படுகின்றன. மஞ்சள் பைகள் கிழிந்துவிட்டாலும் அழுக்கடைந்தாலும், நிலத்தில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன. ஆனால், நெகிழிப் பைகளுக்கு அந்தத் தகுதி இல்லை. அவை நுண்ணுயிர்களால் எளிதில் சிதைக்க முடியாத வகையில் உருவாக்கப்பட்டவை.

பூமியில் உள்ள எல்லா பொருட்களும் உணவுகள்தான். இங்கே எதுவும் சிதைக்க இயலாதது அல்ல. ஒன்று மற்றொன்றின் உணவு என்பதுதான் படைப்பு விதி. நெகிழிகளும் ஒருகாலத்தில் அழியப்போகிறவைதான். ஆனால், அந்தக் காலம் வரைக்கும் மனித இனம் வாழுமா என்ற கேள்வி மிக முக்கியமானது. வயிற்றால் செரிக்க இயலாத உணவை உள்ளே தள்ளினால், உடல் குலைந்து உயிர் சிதையும். நிலத்தால் செரிக்க இயலாத உணவாகிய நெகிழி உயிரின வகைகளைச் சிதைக்கும்.

நீர் அருந்துவதற்கு நெகிழிப் புட்டிகளைப் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு மூளைச் செயல்பாடுகளில் குறைபாடு உருவாகிறது; பெரியவர்களுக்கு ஆண்மைக்குறைவு உருவாகிறது என்ற ஆய்வுமுடிவுகள் இப்போது வலம் வருகின்றன. இந்த ஆய்வுகள் எல்லாம் மிக மோசமான பூதத்தின் ஒரு நகத்தைப் பற்றியவைதான். அந்தப் பூதமோ நீண்ட பற்களோடு பூமியின் எல்லா உயிரினங்களின் மீதும் கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்துகிறது. நெகிழிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைப் பற்றி முழுமையான ஓர் அறிக்கை வரப்போவதே இல்லை. ஏனெனில், இது பன்னாட்டு நிறுவனங்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரம்.

நெகிழிகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தவறு இல்லை என நீண்டகாலமாக ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. ‘மறுசுழற்சியின்போது வெளியாகும் கரியமில வாயுவின் அளவு மிக ஆபத்தானது’ என்ற எதிர்க்குரல்கள் இப்போது ஒலிக்கின்றன. புவி முழுவதும் இதுவரை சேர்ந்துள்ள நெகிழிக் குப்பைகளை பூமி செரித்தால், அதில் இருந்து உருவாகும் வெப்பமும் கரிக்காற்றும் ஒட்டுமொத்த பருவநிலையையும் சிதைத்துவிடும். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்தக் கணத்தில் உற்பத்தியாகும் குப்பைகளையும் இனிவரும் காலங்களில் சேரப்போகும் குப்பைகளையும் கணக்கில்கொண்டால், ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பூமியின் உயிரினங்களைக் கூண்டோடு அழிக்கும் சாத்தான் ஒன்றை மனிதர்கள் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள்.

நவீன மேதைகள், `அணு உலைகளால் ஆபத்து இல்லை’ என்ற கருத்தையே நிலைநாட்டி விட்டார்கள். கேவலம் நெகிழிக் கழிவுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பார்களா என்ன? ஆனால், நமக்கு மாபெரும் ஒரு பொறுப்பு உள்ளது. இந்தப் பூமி நம் இல்லம்; நமக்காகப் படைக்கப்பட்டது. மிக நேர்த்தியாக, மிக அழகாகப் படைக்கப்பட்ட நம் கோள் இது. இங்குதான் நம் முன்னோர் வாழ்ந்துள்ளனர். இங்குதான் நம் சந்ததியும் வாழ வேண்டும். நெகிழிக் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் மண்புழுக்களும் அட்டைப்பூச்சிகளும்கூட மடிந்துபோகின்றன. குளங்களில் ஏரிகளில் இந்தக் குப்பைகள் கலந்து, மீன்களும் பிற நீர்வாழிகளும் கூட்டம் கூட்டமாகச் சாகின்றன. காற்றில் இந்த நெகிழிகளின் நச்சு வெப்பம் கலந்துள்ளது. இந்த அவலத்தை மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8

ஒரே ஒரு நெகிழிப் பை உங்கள் கையில் திணிக்கப்படும் கணத்தில், இந்த வாசகங்களை நினைத்துக்கொள்ளுங்கள். ‘இதோ இந்த சின்னஞ்சிறிய பை இந்தப் பூமியில் மண்ணோடு மண்ணாகக் கலப்பதற்கு 1,000 ஆண்டுகள் வரை ஆகும். பெருங்கடல்களில் உள்ள உயிரினங்களைக் கொன்றுகுவிப்பதில் இந்தப் பையும் ஆயுதமாகப்போகிறது. இப்போதைய பெருங்கடல் குப்பைகளில் 90 சதவிகிதம் நெகிழிக் குப்பைகள் உள்ளன. கடலில் உள்ள குப்பைகளில், ஒரு சதுரமைல் பரப்புக்கு 46 ஆயிரம் நெகிழித் துண்டுகள் கிடக்கின்றன. இப்போதே, ஏராளமான கடல் பறவைகள், கடல் ஆமைகள் மற்றும் மீன்களின் வயிற்றில் நெகிழிக் குப்பைகள் இருக்கின்றன. இந்தக் கழிவுகளை விழுங்கி இறக்கும் கால்நடைகள் ஏராளம். இந்தப் பை மிக மிகச் சிறியது. ஆனால், இதன் ஆயுட்காலம் மிக மிக நீளமானது. பூமியின் எல்லா உயிரினங்களையும் அழிக்கும் அளவுக்கான வல்லமை இந்த நெகிழிப் பைக்கு உள்ளது.’

இது, நிச்சயமாக சுற்றுச்சூழல் கருத்து அல்ல; பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்குமான வாழ்க்கைக் கருத்து. ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சிவிட்டு நெகிழிக் குவளையை வீசி எறிகிறீர்கள். அந்தக் கோப்பை என்ன ஆகிறது எனச் சிந்தித்திருக்கிறீர்களா?

திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பந்தியில் இலைக்கு எதிரே ஆளுக்கு ஒரு நெகிழிப் புட்டியில் நீர் தருகிறீர்கள். அதே திருமண விழாவில் `நீடூழி வாழ்க’ என்ற வாழ்த்துகளையும் பொறித்து வைக்கிறீர்கள். இந்த இரு செயல்களும் முரண்பாடானவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு மடக்கு நீர் அருந்துவதற்கு எல்லாம் ஒரு புட்டி நெகிழியைப் பயன்படுத்தினால், எவரும் நீடு வாழ முடியாது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை நஞ்சாக மாற்றுவதற்கு, விழாக்களில் பயன்படுத்தப் படும் நீர்ப் புட்டிகளின் அளவு மட்டும் போதும். ஒவ்வோர் ஆண்டும் வீசி எறியப்படும் நெகிழிகளைப் பாய்போல் தைத்தால், அதைக் கொண்டு இந்த பூமியை நான்கு முறைகள் சுருட்டிவிடலாம். அந்த வகையில், கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பூமியின் சுற்றளவைக் காட்டிலும் ஏறத்தாழ 100 மடங்கு அதிகமான நெகிழிகள் இப்போது இருக்கின்றன.

நாளை காலையில் இருந்து நெகிழிகளை முற்றிலும் நிறுத்திவிடலாம் என முடிவுசெய்தால்கூட, புவிச்சூழல் கெடுவதைத் தடுக்க முடியாது என்பதுதான் மிகவும் கசப்பான உண்மை. நெகிழிகளின் பயன்பாடு அபாய அளவைக் கடந்துவிட்டது. எவ்வளவோ சுற்றுச்சூழல் போராளிகள், இயற்கைக் காவலர்கள் இதைப் பற்றி பேசிப் பேசி ஓய்ந்துவிட்டார்கள். இப்போது நான் இதை எழுதுவதற்குக் காரணம், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள் மிகச் சிலராவது இருக்க மாட்டார்களா என்ற விருப்பத்தினால்தான்.

உங்கள் வீட்டில் இருந்து நெகிழிகளை ஒழிக்க, சில வழிமுறைகளை முன்வைக்கிறேன். முதலில், குழந்தைகளுக்கான பொம்மைகளைப் பாருங்கள். அவற்றைத் தூக்கி வீசிவிட்டு, மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கிவையுங்கள். பொம்மைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது அவமானம் அல்ல. ஓரிரு பொம்மைகள் இருந்தாலும் இயற்கைப்பொருட்களில் செய்யப்பட்டவையாக இருப்பதுதான் சரி.

அடுத்ததாக, சமையலறைக்குச் செல்லுங்கள். பெரும்பாலான வீடுகளில் உப்புகூட நெகிழியில் இருக்கிறது. நெகிழி, உப்புடன் வினைபுரிந்து நஞ்சாக்கவல்லது. அலமாரியில் உள்ள எல்லா நெகிழிகளையும் வீசிவிட்டு, கண்ணாடிப் புட்டிகளையும் மண் குடுவைகளையும் பயன்படுத்துங்கள். மண் குடுவைகளுக்கு உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்பதை எழுதி வைத்துக்கொண்டால், பொருட்களை அடையாளம் கண்டுகொள்வது எளிது. குடிநீருக்கான கொள்கலன்கள் அனைத்தையும் மண்பாண்டங்களாக்கிவிடுங்கள். குளியலறை, கழிவறைப் பொருட்களை எவர்சில்வர், பித்தளை போன்ற உலோகங்களுக்கு மாற்றிவிடுங்கள்.

எல்லா  விழாக்களிலும் சில்வர் குவளை களையோ மண் குவளைகளையோ பயன்படுத்துங்கள். இந்தக் குவளைகளை வெந்நீரில் போட்டுக் கழுவினால், தூய்மை பராமரிக்கப்படும். தேநீர், பால் போன்ற நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது சொம்பு, கூஜா போன்ற பொருட்களைப் பயன்படுத்துங்கள். கடைகளுக்குப் போகும் போது மட்டும் அல்ல, எப்போதும் ஒரு துணிப்பையை உடன் வைத்திருங்கள். மீன், இறைச்சி ஆகியவற்றைக்கூட பாத்திரங்களில் வாங்குங்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8

குயவர்களைத் தேடிக் கண்டறியுங்கள். அவர்கள் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரைக்கும் நிலத்தோடு உறவாடுபவர்கள். உங்கள் தேவைகளை எடுத்துக் கூறி அப்படிப்பட்ட பாத்திரங்கள், கொள்கலன் களை உற்பத்திசெய்துதரும்படி அவர்களிடம் கேளுங்கள். நான் அறிந்த வரையில், இது மிக எளிதாக நடக்கும் செயல். இந்தச் சிந்தனைகொண்ட நண்பர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றுசேர்ந்து குயவர்களிடம் தேவைகளைக் கூறினால், மொத்தமாக வடிவமைத்துத் தருவார்கள். வீட்டின் கொள்கலன்கள் மண்பாண்டங்களாகவும் உலோகப் பாண்டங்களாகவும் இருக்கட்டும்.

உணவு எடுத்துச் செல்லும் பாத்திரங்களில் நெகிழிகள் இருப்பது மிகவும் ஆபத்தானது. பழைய காலம்போல, அடுக்குமுறை உணவுப்பெட்டிகளுக்கு மாறுங்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவு மற்றும் நீர்ப் புட்டிகளில் நெகிழியைத் தடை செய்துவிடுங்கள்.

ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரங்களைத் தோண்டும்போது நம் முன்னோர் செய்த மண்பாண்டங்கள் கிடைக்கின்றன. இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிலம் தோண்டப்படும்போது, எது கிடைக்க வேண்டும் என்பதை இப்போது வாழும் மனிதர்கள் முடிவுசெய்யலாம்!

- திரும்புவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism