Published:Updated:

அம்பேத்கர் காட்டிய பாதை!

அம்பேத்கர் காட்டிய பாதை!
பிரீமியம் ஸ்டோரி
அம்பேத்கர் காட்டிய பாதை!

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

அம்பேத்கர் காட்டிய பாதை!

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
அம்பேத்கர் காட்டிய பாதை!
பிரீமியம் ஸ்டோரி
அம்பேத்கர் காட்டிய பாதை!
அம்பேத்கர் காட்டிய பாதை!

ஒரு போராட்டத்தைத் தொடங்க உறுதியான உள்ளம் போதும். அது நம்மை வழிநடத்தும். அப்படி ஒரு மிக நீண்ட போராட்டத்தை நடத்தியவர் சமூக ஆர்வலர் பெஜவாடா வில்சன். மலம் அள்ளுகிற மனிதர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சமூகப் போராளி. மூன்று லட்சத்துக்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றிய திசைகாட்டி. 32 ஆண்டுகளுக்கு முன்னர் தனிமனிதராக தன் போராட்டத்தைத் தொடங்கினார் வில்சன். இன்று 6,000 தொண்டர்களோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டி ருக்கிறார். வில்சனின் தொடர் போராட்டங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான `மகசேசே விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. `ஆசியாவின் நோபல்’ எனக் கருதப்படுகிற உயரிய விருது இது.

பெஜவாடா வில்சனுக்கு கோலார்தான் சொந்த ஊர். தங்கச் சுரங்கத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு என ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் அங்கே உண்டு. இந்த வீடுகளில் இருந்த கழிப்பறை எல்லாமே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தண்ணீர் வசதி இல்லாத எடுப்புக் கழிப்பறைகள். இவற்றில் மலையாகக் குவிந்துகிடக்கிற மனித மலத்தை, சக மனிதர்களே இறங்கி நேரடியாகச் சுத்தம் செய்யவேண்டும். இதற்காக பிரிட்டிஷ்காரர்களால் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப் பட்ட ஆயிரக்கணக்கான `தோட்டி' இன மக்கள்தான், 100 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாரில் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இந்தத் துப்புரவுத் தொழிலாளிகளுக்கு என ஒதுக்குப்புறமாக ஒரு காலனி இருந்தது. வில்சன் பிறந்தது அந்தக் காலனியில்தான்.

வில்சனின் குடும்பத்தினர் எல்லோருக்குமே மலம் அள்ளுவதுதான் வேலை. வில்சனை மட்டும் அந்தத் தொழிலில் ஈடுபடுத்தாமல் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைத்தனர் அவரது பெற்றோர். பள்ளியில் வில்சன் `தோட்டி' எனக் கேலிக்கு உள்ளானார். தலித் சிறுவனாக பல்வேறு அவமதிப்புகளைச் சந்தித்தார். அதற்கான காரணம் அவருக்கு அப்போது புரியவே இல்லை. 15 வயதுக்கு மேல்தான் வில்சனுக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது. தன் உறவினர்கள் மலம் அள்ளுவதைப் பார்த்தபோது, தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு வந்தது. இதை மாற்ற முடியாதா எனத் தவித்தார்.

``நான் கண்ட காட்சிகள் பல நாட்கள் என்னைத் தூங்கவிடாமல் செய்தன. என் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருத்தி, வாளி நிறைய மலத்தைச் சுமந்து செல்கிறாள். அது தவறி அங்கங்கே கீழே விழுந்துவிட, மொத்த மலத்தையும் தன் கைகளால் அவள் அள்ளிச் சுத்தப்படுத்துகிற காட்சி என்னை உலுக்கியது. வீட்டுக்குப் போய் என் தாத்தா பாட்டியிடம் இந்தக் கொடுமையை விவரித்தேன். `உன் அம்மா - அப்பாவும் அதைத்தான் இத்தனை வருஷமா செஞ்சுட்டிருக்காங்க’ என்றபோது, என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை'' எனக் கலக்கத்தோடு விவரிக்கிறார் வில்சன். தன் குடும்பத்தினரிடம் இந்தத் தொழிலை விட்டுவிட வற்புறுத்தினார். ஆனால், யாரும் தயாராக இல்லை. காரணம், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எதுவுமே வெளியே இல்லை. கல்வியால்தான் எந்தச் சமூக மாற்றத்தையும் நிகழ்த்த முடியும் என முழுமையாக நம்பினார் வில்சன். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டத்தை முடித்தார்.

அம்பேத்கர் காட்டிய பாதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்பை முடித்த பிறகு, வேலை தேட ஆரம்பித்தார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்யச் சென்றார். அங்கே இருந்த அலுவலர் அவருடைய சாதியைப் பார்த்து, வில்சனின் விருப்பப் பணி `துப்புரவு' என அவரே நிரப்பிக்கொண்டார். `இனி எப்போதும் அரசுப் பணிக்குச் செல்லப்போவது இல்லை. என் மக்களின் வாழ்வை மாற்றப்போகிறேன். அவர்களை இந்தத் தொழிலில் இருந்து மீட்டு வேறு வேலைகளுக்கு மடைமாற்றுவேன்' என வில்சன் உறுதியுடன் முடிவெடுத்தது அன்றுதான்.

1982-ம் ஆண்டில் கோலார் தங்கச் சுரங்கத்தின் நிர்வாக இயக்குநருக்கு எடுப்புக் கழிப்பறைகளை அகற்றக் கோரி ஒரு கடிதம் எழுதினார் வில்சன். `சீக்கிரமே நடவடிக்கை எடுக்கிறோம்’ என சிம்பிளாகப் பதில் கொடுத்தது நிர்வாகம். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. காத்திருந்து பார்த்த வில்சன் கோபத்தோடு பிரதமருக்கே கடிதம் எழுதிவிட்டார். இது குறித்து மீடியாவுக்குத் தெரிந்து எல்லோரும் அந்தக் கடிதத்தை வெளியிட, கோலார் வயலில் இருந்த அத்தனை எடுப்புக் கழிப்பறைகளும் அதிரடியாக அகற்றப்பட்டன. அதுதான் வில்சனின் முதல் நடவடிக்கை. அன்று தொடங்கி பெஜவாடா வில்சன் இன்று வரை ஓயவே இல்லை. இந்தியா முழுக்க பல லட்சம் எடுப்புக் கழிப்பறைகளை அழித்திருக்கிறார். மலம் அள்ளும் தொழிலாளர்கள் இடையே விழிப்புஉணர்வை ஊட்டி, வேறு வேலைகளுக்குச் செல்லவைத்திருக்கிறார்.

வில்சன் தன் தோழர்களோடு சேர்ந்து `சஃபாய் கர்மாச்சாரி அண்டோலன்' என்ற அமைப்பைத் தொடங்கியதுதான் திருப்பம்.

``1990-ம் ஆண்டுக்கு முன்னர் வரை காந்தியைத்தான் பின்பற்றிவந்தேன். நான் படித்த கல்வி, எனக்கு அவரைத்தான் அறிமுகப்படுத்தியது. காந்தியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தபோது, அவர் மலம் அள்ளுதலைப் புனிதமான விஷயமாகப் பேசியதைப் படித்தேன். அது `ஒரு தாய், தன் குழந்தையைச் சுத்தப்படுத்துவதைப் போன்றது’ என அவர் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் அம்பேத்கர், தலித்கள் செத்துப்போன விலங்குகளைத் தின்பதைத் தடுக்க முனைந்தார். அதன் தோலைச் சுமப்பதையும் சாக்கடைகளில் இறங்குதல், மலம் அள்ளுதல் போன்ற வேலைகளைச் செய்வதையும் தடுத்தார். அதைப் பற்றி படித்தபோது நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். அதுவரை நான் மட்டும்தான் தலித்களின் விடுதலைக்காகப் போராடுவதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது ஏற்கெனவே தொடங்கப்பட்டது. நான் அதில் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் செல்லவேண்டிய பாதையை அம்பேத்கர் எனக்குச் சுட்டிக்காட்டினார். அம்பேத்கரைப் படிப்பதன் வழி ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் சுதந்திரத்தை விளங்கிக்கொள்ள முடியும்'' என்கிறார் வில்சன்.

மனிதர்கள் மலம் அள்ளுவதைத் தடுக்கும் சட்டம் ஒன்று 1993-ம் ஆண்டு இயற்றப்பட்டது (The Employment of Manual Scavenging and Construction of Dry Latrines (Prohibition) Act). ஆனால், அது முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. உடனடியாக வேலையைத் தொடங்கினார் வில்சன். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுத் துறை நிறுவனங்களில் இருக்கும், மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் மனிதர்கள் மலம் அள்ளுவதற்குத் தடைவிதித்தது உச்ச நீதிமன்றம். கூடவே மலக்குழிகளில் விழுந்து மாண்டுபோகும் தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. துப்புரவுத் தொழிலாளர்களின் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. 2006-ம் ஆண்டு தொடங்கி 2010-ம் ஆண்டு வரை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, எடுப்புக் கழிப்பறைகளை, அகற்றுகிற பணியில் ஈடுபட்டார் வில்சன். பாதாளச் சாக்கடைகளிலும் மலக்குழிகளிலும் விழுந்து இறப்பவர்களுக்காகவும் போராட ஆரம்பித்தார்.

``இந்தியா முழுக்க 1,073 பேர் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம்செய்யும்போது இறந்து போயிருக்கிறார்கள். இவர்களில் முறையான இழப்பீடு பெற்றவர்கள் வெறும் 36 பேர்தான். இதற்காக 2014-ம் ஆண்டு முதல் போராடிவருகிறோம். ஆனால், இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலக்குழிகளில் மனிதர்கள் இறங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் மலக்குழிகளிலும் பாதாளச் சாக்கடைகளிலும் விழுந்து மரணிக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகரித்தேவருகிறது'' என்கிறார் வில்சன்.

மலம் அள்ளுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து அகற்றுவது அத்தனை சுலபம் அல்ல. காரணம், அவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைக்காது. அப்படியே கூலிவேலைகள் கிடைத்தாலும் அவர்களுடைய சாதி தெரிந்துவிட்டால், வேலை காலி. அதனாலேயே பலரும் இந்தத் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து செய்கிறார்கள். அவர்களை இதில் இருந்து மீட்க ஒரே வழி, அவர்களுக்கான மாற்றுத் தொழில்களை உருவாக்குவதுதான். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை அளிக்கிறார் வில்சன். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிசெய்கிறார். இப்போது மகசேசே விருதில் கிடைக்க உள்ள தொகையையும் துப்புரவுத் தொழிலாளர்களின் மாற்று வேலைப் பயிற்சிக்காகச் செலவிட உள்ளதாகக் கூறியிருக்கிறார்.

அம்பேத்கர் காட்டிய பாதை!

``துப்புரவுத் தொழிலைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது. ஆனாலும் மனிதக் கழிவுகளைச் சுமந்த தங்களுடைய கூடைகளை ஒரே நாளில் துணிவோடு தூக்கி எறிந்த பெண்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது அவர்களுக்கானதே. இன்னும் இந்தியா முழுக்க இரண்டு லட்சம் பெண்கள் மனிதக் கழிவுகளை அள்ளிக்கொண்டிருக் கிறார்கள். ஆறு லட்சம் தலித்கள் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். அவர்கள் அதில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்'' என்கிறார் பெஜவாடா வில்சன்.

அவரவர் `வேலை'யை அவரவர் செய்யும் நாளே வில்சனின் இலக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism