
ஸ்கூபா டைவிங் தொடங்கி கேவிங் வரை செய்துபார்க்க பெஸ்ட் இடங்கள் இவை. மரணத்தின் விளிம்பு வரை சென்றுவந்துவிட வேண்டும் என்ற துடிப்பு உள்ளவர்களுக்கும் சாகச விரும்பிகளுக்குமான ஹாட் ஸ்பாட்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்கூபா டைவிங்
நடுக்கடலில் சில மீட்டர் ஆழத்துக்குச் சென்று, ஆழ்கடலின் அதிசயங்களைப் பார்க்கும் பரவசத்தை ஸ்கூபா டைவிங் தருகிறது. இது இந்தியாவின் பல கடலோரப் பகுதிகளில் இப்போது செய்யக்கூடியதாக மாறிவிட்டாலும், அந்தமான் நிக்கோபார் தீவுதான் இதற்கான ரைட் ஸ்பாட். இங்கே உள்ள நீலமும் பச்சையுமான கடல்பகுதிகளில் காணப்படும் பவழப்பாறைகளும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களும் ஸ்கூபா டைவிங்கை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிவிடும். நீச்சல் தெரியாதவர்கள்கூட ஸ்கூபா டைவிங் பண்ண முடியும் என்பதால், யார் வேண்டுமானாலும் முயற்சிசெய்யலாம். ஒருவருக்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை செலவாகும். அந்தமான் போக வசதி இல்லை என்றால் டோன்ட் வொர்ரி... புதுச்சேரியில்கூட ஸ்கூபா டைவிங் செய்ய முடியும். இணையத்தில் தேடினால் விவரங்கள் கிடைக்கும்!

பாரா க்ளைடிங்
இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் `பிர்-பில்லிங்' ஏரியா பாரா க்ளைடிங் செய்ய மிகச் சிறந்த இடம். மலைகளுக்கு மத்தியில் மேகங்களைக் கிழித்துக்கொண்டு வானில் சிறகு முளைத்துப் பறக்கும் ஜாலியான சாகச விளையாட்டு இது; ஆனால் ஆபத்தானது. தனியாக பாரா க்ளைடிங் செய்ய, முறையான பயிற்சி அவசியம். ஆனால், `ஒருமுறை பறந்தா போதுங்க...' வகை ஆட்களுக்கு, `Tandem' என்னும் இருவராகப் பறக்கும் வசதி இருக்கிறது. காசைக் கொடுத்துவிட்டால் க்ளைடரில் நம்மோடு பயிற்சிபெற்ற ஒரு டிரைவரும் இருப்பார். அவர் பாரா க்ளைடரை இயக்க, நாம் ஹாயாகப் பறக்கலாம். ஒருமுறை பறக்க, 2,500 முதல் 5,000 ரூபாய் வரை செலவாகும். இமாச்சலப்பிரதேசத்தின் இயற்கை எழிலை வானத்தில் இருந்து பார்க்கும் அந்த அற்புதத் தருணத்துக்கு, எவ்வளவு செலவழித்தாலும் தகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கே பறப்பது பரவசமாக இருக்கும்.

ஒயிட் வாட்டர் ராஃப்ட்டிங்
பாறைகளுக்குள் புகுந்து ஓடும் காட்டாற்றில், பலூன் போன்ற படகில் கூட்டாகப் பயணிக்கும் ஜிலீர் விளையாட்டு இது. பாறைகளுக்குள் விழுந்து வெளியேறும் படகை ஒவ்வொரு முறையும் கட்டுப்படுத்துவதும், அதை லாகவமாகச் செலுத்துவதும் த்ரில் அனுபவம். இதற்கு மிகச் சரியான இடம் ரிஷிகேஷ். ஒருவருக்கு 850 முதல் 2,000 ரூபாய் வரை செலவாகும். 24 முதல் 40 கி.மீ வரையிலான தூரத்தைக் கடக்கும் இந்த விளையாட்டுக்கு, ஓரளவு உடல் தகுதி அவசியம். நீச்சல் தெரிந்துவைத்திருப்பது கட்டாயம் அல்ல; தெரிந்திருந்தால் நல்லது. ரிஷிகேஷ் போக முடியாதவர்கள், கர்நாடகாவின் சிக்மகளூர், டான்டேலி என சில இடங்களிலும் செய்ய முடியும். ஆனால், ஐஸ்கோல்டு அட்வெஞ்சர் வேண்டுமென்றால், ரிஷிகேஷ்தான் சரியான சாய்ஸ்!

கேவிங்
திகிலடிக்கும் குகைகளுக்குள் புகுந்து கும்மிருட்டில் பயணிக்கும் திகில் ரைடுதான் `கேவிங்'. இந்த வகையான பயணத்தை விரும்புபவர்களுக்குச் சரியான இடம் மேகாலயா. எங்கு தடுக்கினாலும் மலைக்குகைகளுக்குள்தான் விழவேண்டியிருக்கும். காசி மலைத்தொடர், ஜெயன்டியா மலைத்தொடர், காரோ மலைகள் என எண்ணற்ற மலைத்தொடர்களும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் பத்துக்கும் அதிகமான ஆழமான குகைகளும் உண்டு. குகைகளுக்குள் இருக்கும் பசுமையான இடங்கள் சுனைகள், பரவசக் குளிர்ச்சியும் புதுமையான அனுபவத்தைத் தரும். ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு விதமான தனித்தன்மையுடன் இருப்பதால், இந்தக் குகைப் பயணங்கள் உங்களை தொடர்ச்சியாகப் பயணிக்கவைக்கும்!

ஸ்கை டைவிங்
விமானத்தில் பறந்துபோய் குறிப்பிட்ட உயரத்தில் இருந்து தொபக்கடீர் எனக் குதித்துப் பறக்கும் ஸ்கை டைவிங், உலகம் முழுக்க உள்ள சாகச விரும்பிகளின் செல்லம். ஆனால், காஸ்ட்லியான சாகசம். இதை நம்ம ஏரியாவில் முயற்சிசெய்ய, மைசூர் நல்ல இடம். இதற்காக பிரத்யேகப் பயிற்சி எடுத்து, தன்னந்தனியாகவும் தொபுக்கடீரலாம் அல்லது பாரா க்ளைடிங் போலவே இதிலும் Tandem வசதி உண்டு. நல்ல பயிற்சியாளரோடு நம்மைப் பிணைத்துக் கட்டிவிட்டு இறக்கிவிடுவார்கள். அவருடைய உதவியோடு நாமும் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து, பூமிக்கு மேல் துள்ளலாம். 16,000 முதல் 30,000 ரூபாய் வரை இதற்குக் கட்டணம்.