Published:Updated:

உதிர்ந்த ‘பவழ மல்லி’!

உதிர்ந்த ‘பவழ மல்லி’!
பிரீமியம் ஸ்டோரி
உதிர்ந்த ‘பவழ மல்லி’!

மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

உதிர்ந்த ‘பவழ மல்லி’!

மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
உதிர்ந்த ‘பவழ மல்லி’!
பிரீமியம் ஸ்டோரி
உதிர்ந்த ‘பவழ மல்லி’!
உதிர்ந்த ‘பவழ மல்லி’!

விஞர் ஞானக்கூத்தன் இறந்து விட்டதாக செய்தி வந்தபோது, மிகுந்த வருத்தமும் வெறுமையும் அடைந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான், அவர் என் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தலைமையேற்றுப் பேசினார். அதுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது என்பதை இப்போது நம்பகூட முடியவில்லை.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருஇந்தளூரில் பிறந்த ஞானக்கூத்தனுக்கு வயது 78. இயற்பெயர் அரங்கநாதன். திருமந்திரம் படித்த பாதிப்பில், தனக்கு `ஞானக்கூத்தன்' எனப் புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். `அன்று வேறு கிழமை', `சூரியனுக்குப் பின்பக்கம்', `கடற்கரையில் சில மரங்கள்'... போன்ற முக்கியமான கவிதைப் புத்தகங்களை தமிழுக்குத் தந்தவர்.

இறந்துவிட்ட ஒரு கவிஞனை நினைவு கூர்வதற்கான வழிமுறை எது, அவனுடனான சம்பவங்களாலா அல்லது அவனைப் பற்றிய தகவல்களாலா அல்லது அவன் விட்டுச் சென்ற தடயங்களாலா? ஒரு கவிஞனை நான் நினைப்பது, அவன் எப்போதோ வேறு எதன் பொருட்டோ எழுதிய வரிகள், வாழ்க்கையின் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தற்செயலாகப் பொருந்தி அதிரவைக்கும்போதுதான் நான் அந்தக் கவிஞனை இறுக அணைத்துக் கொள்கிறேன்.  நான் அப்படி என் வாழ்க்கையில் மானசீகமாக பலமுறை அணைத்துக்கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன்.

`எல்லாம் இறுதியில் பழகிப்போய்விடும் / நினைவில் உள்ளதா / ஏமாற்றத்தின் துரோக முட்கள் / உன்னைக் கிழித்த அம்முதல் நாளை / எப்படி உரக்கக் கூவினாய்! யாரோ / கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய் / எவ்வளவு விரைவில் தெரிந்துகொண்டாய் / பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று / கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப்போய்விடும்’ என்ற ஞானக்கூத்தனின் வரிகளை,  எனது 23-வது வயதில் முதன்முதலாகப் படித்தபோது மனமுடைந்து அழுதேன். என் வாழ்க்கையின் மொத்தச் சாரமாக அந்தக் கவிதை இருந்தது. பிறகு, வாழ்க்கையில் சீக்கிரமே எல்லாவற்றுக்கும் பழகிக்கொள்ளக் கற்றுக்கொண்டேன்.

புத்தகக் காட்சியில் ஒருமுறை ஞானக்கூத்தனைச் சந்தித்தபோது, என்னிடம் சட்டென ஒரு கேள்வி கேட்டார்... `நீங்கள் ஒரு பழைய கால வீட்டில் வாழ்கிறீர்களா?’ என்று. எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர் என் வீட்டுக்கு வந்ததே இல்லை. `ஆம்... நான் பிறந்து வளர்ந்ததும் ஒரு பழங்கால வீடுதான்; நான் சென்னையில் வாடகைக்கு வசிப்பதும் ஒரு பழைய வீடுதான். எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அவர் ‘தற்கொலை தொடர்பான உங்கள் கவிதைகளில் எல்லாம் உத்திரத்தில் தூக்குப்போட்டுக் கொள்வது தொடர்பான படிமம் திரும்பத் திரும்ப வருகிறது. பொதுவாக நகரத்தில் நவீன வீடுகளில் வசிப்பவர்கள் ஃபேனில் தூக்கிட்டுக்கொள்வதைப் பற்றிதான் எழுதுவார்கள்’ என்றார்.

தமிழ்ச் சமூகத்தின் அசட்டுத்தனங்களின் மீதும் பாசாங்குகளின் மீதும் அந்த ஏளனச் சிரிப்பை சிறுகதையில் புதுமைப்பித்தன் இடைவிடாமல் செலுத்தினார் என்றால், ஞானக்கூத்தன் தன் கவிதைகளின் வழியே தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு வாழ்க்கையின் அபத்தங்களை எள்ளி நகையாடினார். சுதந்திர இந்தியாவில் காந்தியம் உருவாக்கிய கனவுகளும் நம்பிக்கைகளும் சிதறுண்டுபோனபோதும், பொருளாதார சமூக நெருக்கடிகளும் ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தபோதும், எல்லா இயக்கங்களின் மீதான நம்பிக்கைகளையும் இந்திய மத்தியதரவர்க்கம் இழக்க ஆரம்பித்தது. திரைப்படங்களாகவும் புனைக்கதைகளாகவும் கவிதைகளாகவும் இந்த நம்பிக்கை வறட்சிப்போக்குகள் 70-களில் இந்தியா முழுக்க வெளிப்பட்டன. அத்தகைய அவநம்பிக்கையின் எள்ளல் குரலை தமிழில் உக்கிரமாக ஒலித்தவர் ஞானக்கூத்தன்.

கீழ்வெண்மணியில் நடந்த படுகொலை குறித்து, ஏராளமான வரிகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. ஞானக்கூத்தன் எழுதிய வெண்மணி குறித்த கவிதையை `இரவிலே பொசுக்கப்பட்ட / அனைத்துக்கும் அஸ்தி கண்டார் / நாகரிகம் ஒன்று நீங்கலாக’ என முடிக்கிறபோது அந்தக் கோபம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்னை உள்பட பல சமூகப் பிரச்னைகளில் ஞானக்கூத்தன் தன் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

ஞானக்கூத்தனின் `பவழமல்லி’ கவிதை தமிழில் எழுதப்பட்ட சிறந்த காதல் கவிதைகளில் ஒன்று... கதை கேட்கப் போய்விடுவாள் அம்மா. மாடிக் / கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத் / தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி / தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடு தூங்கும் / பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல / கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி / கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும் தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத் / தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?’... எனக் கேட்கும் இந்தக் கவிதை, எந்நேரமும் செல்போனிலும் சாட்டிலும் இருக்கும் ஒரு தலைமுறைக்கு என்ன அர்த்தம் கொடுக்கும்? இது ஏதோ சங்ககாலக் கவிதைபோல உள்ளது. இந்தக் கவிதையில் மட்டும் அல்ல, அவருடைய எல்லா கவிதைகளிலும் அவை எழுதப்பட்ட காலம் குறித்த சித்திரங்கள் துல்லியமாக இருக்கின்றன. ஏனென்றால், காலத்தோடும் சமூகத்தோடும் துல்லியமான பிணைப்புகளை ஞானக்கூத்தன் கொண்டிருந்தார்.

 ஞானக்கூத்தன் நவீனத் தமிழ்க் கவிதைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவர் மிகப்பெரிய கெளரவங்களுக்கு உரியவராக இருந்தார். ஆனால், அவர் பெயர் ஒருமுறைகூட சாகித்ய அகாடமி விருதுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. இதை பிற மொழி கவிஞர்களிடம் சொன்னால் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஞானக்கூத்தனின் இறுதிச்சடங்குகளின்போது, அவர் அருகில் நின்றுகொண்டிருந்தேன். அவருடைய மகன் திவாகர், தீச்சட்டியுடன் நின்று கொண்டிருந்தார். தீச்சட்டியின் வாய் ஒரு சிறிய மூடியால் மூடப்பட்டு புகையுடன் கனன்று கொண்டிருந்தது. அந்த மூடியின் மேல் கொஞ்சம் வாய்க்கரிசி வைக்கப்பட்டிருந்தது. என் அருகில் வந்த திவாகர் ‘தீயை, அரிசியை வெச்சு அமுக்குறாங்க சார்’ என்றார்.

பிறகு, ஞானக்கூத்தன் ஒரு சிறிய அமரர் ஊர்தியில் சட்டென ஏறிக்கொண்டு அங்கு இருந்து கிளம்பிப்போய்விட்டார். நான் உச்சி வெய்யிலில் அவருடைய வீடு இருந்த தெருமுனையில் குழப்பத்துடன் நின்றுகொண்டிருந்தேன். இன்னும் எத்தனை ஆசான்களை, முன்னோடிகளை என் கண்ணெதிரே இழக்க நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்?
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism