
வளைகுடா நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன கசப்பான செய்திகள்.
ஆயிரமாயிரம் கனவுகளோடு வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், பசியிலும் பட்டியினியிலும் கடந்த பல நாட்களாக அங்கே முகாம்களில் அடைபட்டுத் தவிக்கிறார்கள். இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்து நலனைப் பற்றிய கவலையுடன், சுட்டெரிக்கும் பாலைவன வெயிலில் தங்களின் உயிரைப் பணயம்வைத்து கடுமையாக உழைத்தவர்களுக்குத்தான் இப்போது இப்படியொரு நிலைமை.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துவருவதால், திடீரென ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியிருக்கின்றன வளைகுடா நிறுவனங்கள். இதுவரை இந்தத் தொழிலாளர்களின் உழைப்பாலும் உதிரத்தாலும்தான் தாங்கள் வளர்ந்தோம்... உயர்ந்தோம் என்பதைக் கவனத்தில்கொள்ளாமலே கொடுமையான முடிவை எடுத்திருக்கின்றன. கடந்த பல மாதங்களாகவே அந்த நிறுவனங்கள் இவர்களுக்குக் கொடுக்கவேண்டிய சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்பது அவலத்திலும் அவலம்!
அடுத்த வேளை உணவுக்கே வழி தெரியாமல் கையறுநிலையில் தவிக்கும் தொழிலாளர்களிடம் ‘விமானப் பயணச்சீட்டு வாங்கி வந்து காட்டினால்தான் பாஸ்போர்ட்டைத் திரும்பக் கொடுப்போம்’ என நிறுவனங்கள் கறார்முகம் காட்டுவதாகவும் சொல்கிறார்கள்.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலானவர்களின் வேலைச் சூழல் சிறைச்சாலையைவிட மோசமாக இருப்பதால், அங்கு இருந்து தப்பித்து தாய்நாடு திரும்பவே பலரும் விரும்புகிறார்கள். என்றாலும், மனைவியின் தாலியையோ சோறுபோட்ட நிலத்தையோ அடகுவைத்து விமானப் பயணச்சீட்டுக்கும் இடைத்தரகர்களுக்கும் செலவழித்தவர்களால் அப்படி ஒரு முடிவை சுலபத்தில் எடுக்க முடிவது இல்லை. அதனால் பணிப்பளுவைத் தாங்கிக்கொண்டு, எதிர் கேள்வியே கேட்காமல் கொடுக்கும் சம்பளத்தை மிச்சப்படுத்தித் தாய்நாட்டுக்கு அனுப்பிவந்த தியாக உள்ளம் கொண்டவர்களுக்குத்தான் இப்போது இந்தப் பரிதாப நிலை.
ஏழு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்த இவர்களின் நிலை பட்டினியைத் தொட்டபோதுதான், அது நம் அரசின் காதுகளையே எட்டியுள்ளது. இந்திய அரசு, அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி, அவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. அல்லல்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய நடவடிக்கை என்றாலும் இது மட்டும் போதாது. நியாயமாகக் கிடைக்கவேண்டிய சம்பளப் பாக்கியைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களைத் தாயகம் அழைத்துவருவதற்கான ஏற்பாட்டையும் இந்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். அப்படி தாயகம் திரும்புபவர்களுக்கு உள்நாட்டிலேயே உரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு பேசி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, வேற்றுநாட்டுக்குச் சென்று பஞ்சம் பிழைக்கவேண்டிய அளவுக்கு மோசமான நிலையில் இருக்கும் சாதாரண ஏழை-எளிய மக்கள், உள்ளூரிலேயே பொருளாதாரத் தன்னிறைவுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதே நிம்மதி அளிக்கும் நிரந்தரத் தீர்வு.
பாலைவனங்களில் உழைத்துக் களைத்தவர்களின் வாழ்க்கை, பாலைவனம் ஆகாமல் பாதுகாப்பதே நமது இன்றைய கடமை.