Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

`உணவு, படைக்கப்படுகிறது; தயாரிக்கப்படுவது இல்லை’ என்ற கருத்தை உங்கள் முன் வைக்கிறேன். ஓர் உயிரினம் படைக்கப்படும் முன்னரே அதற்கான உணவு படைக்கப்பட்டுவிடுகிறது. எந்த உயிரினமும், பிறந்த பிறகு தனக்கான உணவு எது எனக் குழம்புவது இல்லை. எவற்றை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கட்டளைகள் எல்லா உயிர்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு கரையான்குஞ்சுகூட பிறந்த மறுகணமே தனக்கான உணவைத் தேடி அடைகிறது. ஆனால், மனிதர்கள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கானவர்களாக மாறியுள்ளனர்.

எது நல்ல உணவு, எது மோசமான உணவு என்பது பற்றிய விளக்கங்களும் விவாதங்களும் அதிகரித்துள்ள இந்தச் சூழல், கவலையளிப்பதாக உள்ளது. எவை எல்லாம் இயல்பாகத் தெரிந்திருக்கவேண்டியவையோ அவற்றைப் பற்றி விவாதங்கள் நிகழ்ந்தால், இயற்கையின் அரவணைப்பில் இருந்து மனிதர்கள் விலகிவிட்டதாகப் பொருள். இரவில் இளைப்பாற வேண்டும் என்ற விதியை அறியாதோர் உண்டு. ஆனால், மெத்தைகளின் விலை மற்றும் வகைகளை அறியாதோர் குறைவு. பசித்தால் மட்டும் உண்ண வேண்டும் என்பதை அறியாதோர் அதிகம்; உணவுகளின் சத்துக்களைப் பற்றி அறிந்தோர் அதிகம். இயல்பாக இருக்கவேண்டிய உணர்வுகள் மழுங்கியும், வணிக நோக்க உணர்ச்சிகள் மிகுந்தும் கிடக்கின்றன.

`உணவு கெட்டுப்போதல்’ என்றால், அந்த உணவை நுண்ணுயிரிகள் சிதைக்கின்றன எனப் பொருள். மனிதர்கள் உண்ணத் தகாத நிலைக்கு ஓர் உணவு மாறிவிட்டால், அதைக் `கெட்ட உணவு' என்கிறோம். ஓர் இட்லி உண்ணப்படாமல் தட்டில் இருக்கும்போது அதை நுண்ணுயிரிகள் சிதைத்தால், துர்நாற்றம் வீசுகிறது; இட்லியின் நிறம் மாறுகிறது; வடிவம் சிதைந்துவிடுகிறது. அதை வாயில் வைத்தால் எச்சில் வெள்ளம்போல் சுரந்து குமட்டலுடன் வாந்திவருகிறது. `இது கெட்டுப்போன உணவு’ என்ற தகவல் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது. நாசி, கண், நாக்கு ஆகிய மூன்று புலன்களும், வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளும் கூட்டாகச் சேர்ந்து இந்த முடிவை நமக்குத் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

எந்த உணவும் கெட்டுப்போகத்தான் வேண்டும். அதாவது எல்லா உணவுகளையும் நுண்ணுயிரிகள் சிதைக்கத்தான் வேண்டும். ஓர் உணவுத் துகளை வாயில் வைத்தவுடன் எச்சில் முதல் வயிற்றில் உள்ள எண்ணற்ற சுரப்பிகள் வரை கூட்டாக இணைந்து அதைச் செரிக்கின்றன. செரிமானம் என்பது, நுண்ணுயிரிகளின் சிதைப்புப் பணி.

ஓர் உண்மையை நாம் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும், ‘நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், நமக்கானவை மட்டும் அல்ல; நம் வழியாக கோடிக்கணக்கான நுண்ணுயிரிக் கூட்டத்துக்கானவை’. பசி எனும் உணர்வைத் தூண்டுவதும் உணவைச் செரிப்பதும் அந்தச் சில்லுயிரிகள்தான்.

‘நான்’ என ஒவ்வொருவரும் உணர்வது, எண்ணிலடங்காத சில்லுயிரிக் கூட்டம் வாழும் பேரண்டம் தான். ஆகவே, நமது உணவை முறைப்படுத்தவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. `அண்டமே பிண்டம்’ என்பது ஆசான் திருமூலர் அறிவிப்பு.

இங்கே எல்லாமே உணவுகள்தான். இலைகளுக்கு கதிரவன் வெளிச்சம் உணவு; புழுக்களுக்கு இலை உணவு; பறவைகளுக்கு புழுக்கள் உணவு. காய்ந்த மரம்கூட கரையான்களுக்கு உணவு. நாம் அனைவருமே ஏராளமான புழுக்களுக்கும் சிற்றுயிரிகளுக்குமான உணவுதான். அதனால்தான் கூறுகிறேன், உணவு படைக்கப்படுகிறது... தயாரிக்கப்படுவது இல்லை என்று.

உணவு என்றால் சிதைக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் உண்ணப்படாத எந்த உணவும் கெட்டுப்போக வேண்டும். இந்த விதியை மிகச் சமீபமாக மாற்றி எழுதினார்கள் நவீன வணிகர்கள். தயாரிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னரும் உண்ணும் வகையிலான உணவு வகைகள் இப்போது பெருகியுள்ளன. அவை நல்ல மணத்துடன், நிறத்துடன் உள்ளன. அவற்றை வாயில் இட்டால், சுவையாகவும் உள்ளன. நாசி, கண், எச்சில் போன்ற நமது பாதுகாப்புக் கவசங்களை எல்லாம் மிகத் திறமையாக ஏமாற்றிவிட்டு உள்ளே நுழைகின்றன. இவை எல்லாம் ‘கெடாத உணவுகள்’ என நீங்கள் நம்புகிறீர்களா? இவை, கெடாத உணவுகள் அல்ல; நுண்ணுயிரிகள்கூட உண்ணத் தகாத உணவுகள்.

உணவில் உயிர் இருக்க வேண்டும். அப்படி  இருந்தால்தான் அதை உண்பதற்கு பிற உயிர்கள் வந்து சேரும். ஒன்று, மனிதர்கள் உண்ண வேண்டும் அல்லது சிற்றுயிர்கள் உண்ண வேண்டும். இதுதான் படைக்கப்படும் உணவின் இலக்கணம். இப்போதைய வணிக உணவுகளில், உயிர் இல்லை... வேதிப்பொருட்கள் உள்ளன. அந்த வேதிப்பொருட்கள்தான் உணவின் உள்ளும் புறமும் நிறைந்து, எந்த உயிரினமும் உண்ணத்தகாத வகையில் உணவைப் பாதுகாக்கின்றன. வணிகப்படுத்தப்படும் எல்லா உணவுகளும் ‘பதப்படுத்திகள்’ (preservatives) சேர்க்கப்பட்டவைதான்.

இப்போது உள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமான சொல், ‘அலமாரி ஆயுள்காலம்’ (Shelf Life) என்பதுதான். தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை எவ்வளவு காலத்துக்கு அலமாரிகளில் வைத்து விற்க முடியும் என்ற சிந்தனைதான் அந்த நிறுவனங்களின் பொருளாதாரத்தை முடிவெடுக்கவைப்பதில் முதன்மையானது. இதற்காக, அவர்கள் தயாரிக்கும் உணவுகளில் விதவிதமான பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் இயற்கையாக உண்ணத்தகாத வேதிப்பொருட்கள். வழக்கம்போல, இவற்றை எந்த அளவுக்குச் சேர்க்கலாம் என்ற சட்டங்கள் உள்ளன. சட்டம் மிகவும் முக்கியமானது அல்லவா!

எல்லா நிறுவனங்களும் ‘சட்டத்துக்கு உட்பட்டு’ வேதிப்பொருட்களைக் கலப்பதாக வைத்துக்கொண்டாலும், அந்த வேதிப்பொருட்களால் உருவாகும் உடல் நோய்களைக் கணக்கிடுவதற்கான முறையான ஏற்பாடுகள் இங்கு இல்லை. நவீன அறிவியல், தரவுகளையும் ஆய்வு களையும் முன்வைக்கும். அவை பெருநிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பவை. ஆகையால், இறுதிக்கும் இறுதியான உண்மையை சாமானியர்களால் கண்டறியவே முடியாது.

எளிமையான ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சத்துணவை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏதோ ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சத்துக்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. புரதம், சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் பல்வேறு ஊட்டங்கள் இருப்பதாகப் பட்டியல் உள்ளது. `இதில் குறிப்பிடப்பட்டுள்ள புரதச்சத்து, எந்தப் பொருளில் இருந்து எடுக்கப்பட்டது?' என்பதுதான் கேள்வி.

பாம்பு, தேள் ஆகியவற்றின் நஞ்சுகூட புரதம்தான். சுண்ணாம்புச் சத்து, மாட்டு எலும்புகளிலும் உள்ளது; முருங்கைக் கீரையிலும் உள்ளது. இவற்றில் எதில் இருந்து எடுக்கப்பட்ட புரதமும் சுண்ணாம்புச் சத்தும் வணிக உணவுகளில் சேர்க்கப் படுகின்றன என உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால், நிச்சயமாக நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா!

உங்கள் கண்களில் சத்துப் பட்டியல் தெரிகிறது. நம் மூளைக்குள், ‘உணவு என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது’ என்ற நவீன அறிவு ஏற்கெனவே புகுத்தப்பட் டுள்ளது. ஆகவே, நீங்கள் அடிப்படை யான சில கேள்விகளைக்கூட கேட்கத் தவறுகிறீர்கள்.

நீங்கள் போற்றிப் பாடியவாறு வாங்கும் அந்த வணிக உணவுகளை, எறும்புகளும் ஈக்களும் சீண்டுவதே இல்லை என்பதைப் புரிந்துகொள் ளுங்கள். அவை எல்லாம் படைப்பின் கட்டளைகளை மதித்து வாழ்பவை. எங்கள் வீட்டில், பல்வேறு இனிப்பகங்களில் வாங்கப்பட்ட இனிப்புகளை மேசை மீது திறந்து வைத்திருந்தோம். பல நாட்களாகியும் எறும்புகள் அவற்றைச் சீண்டவே இல்லை. எங்கள் உறவுகளின் இல்லங்களில் சமைக்கப்பட்ட இனிப்புகளை மேசையில் வைத்தால், ஒரு மணி நேரத்துக்குள் எறும்புகள் வந்துசேர்கின்றன.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

நமது உணவை எறும்புகளுடன் பகிர்ந்துகொள்ள நாம் படைக்கப்பட்டுள்ளோம். உணவு உண்ணும்போது ஒரு பருக்கை சிந்தினாலும் அதைச் சிதைக்க எறும்புகள் வந்து சேரும். மீதம் உள்ள உணவை காகங்களும், நாய் மற்றும் பூனைகளும் நம்மோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலில் காகங்களுக்கு உணவு தந்துவிட்டு பிறகு உண்ணும் உன்னதமான மரபின் பிள்ளைகள் நாம். இப்போது உள்ள உணவை எறும்புகள்கூட உண்ண முடியவில்லை.

வெளியே கெட்டுப்போகாத உணவு, வயிற்றின் உள்ளே செரிக்காது. செரிமானம் என்பது, உண்ணும் உணவு மலமாக வெளியேறும் இயந்திரச் செயல் அல்ல; ஒவ்வொரு துகளும் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலின் எல்லா செல்களுக்கும் ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்படும் பெரும் நிகழ்வு. நுண்ணுயிரிகள் நிரம்பிய ஒரு பேரண்டத்துக்கு வழங்கப்படும் ஆற்றல்தான் உணவு. எந்த நுண்ணுயிரியும் சிதைக்க இயலாத வகையில் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவு, கெடாமல் இருக்கிறது என மகிழ்கிறீர்கள். அதே உணவு வயிற்றுக்குள் மட்டும் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் என எப்படி நம்புகிறீர்கள்?

நவீன உணவுப் பழக்கத்தினால், ஒவ்வொரு செல்லிலும் செயற்கையான வேதித் துகள்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல் இல்லாத நபர்களே குறைவு எனும் வகையில் மனித உடல்களில் மலம் தேங்கியுள்ளது. செரிமானம் இல்லாத உடலில்தான் மலம் கட்டும். மலம் கட்டிய உடலில்தான் எல்லா நோய்களும் வந்து தங்கும். வணிக உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்த பிறகே நோய்களின் எண்ணிக்கை பெருகியது என்பதை மறக்காதீர்கள்.

மழலைகள், சிறுவர் ஆகிய இரு பிரிவினருக்கான உணவு வணிகம், ஒரு மதம்போல பரவிவிட்டது. இதன் தீங்குகளைப் பற்றிய கேள்வியே எழாத வகையில் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. அவர்களிடம் இருக்கும் பேராயுதம், `சத்து’ எனும் மாயவலைதான். சத்துப் பட்டியலைக் காட்டி உங்களை வீழ்த்துகிறார்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9

உலகின் எவ்வளவு பெரிய மேதையின் உணவுக் கண்டுபிடிப்பும் நமது மரபு உணவுகளைவிட சத்து நிறைந்தது அல்ல. நம்மிடம் அரிசியில் பல்வேறு வகைகள், சிறுதானியங்களில் ஏராளமானவை, கீரைகள், காய்கறிகள், மீன்கள், நண்டுகள், இறைச்சிகள் எனக் கணக்கிட இயலாத வகையில் சத்துணவுகள் உள்ளன. நமது மரபு உணவுகளை மட்டும் முறையாக உட்கொண்டாலே உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்கும். உணவை, சமைத்து உண்ணப் பழகுங்கள்; வாங்கி உண்ணாதீர்கள். முறுக்கு, அதிரசம், சீடை போன்ற நொறுக்குத்தீனிகளை வீட்டிலேயே சமைக்கத் தொடங்குங்கள்.

நமது மரபில் முன்னோருக்கு உணவு வைக்கும் சடங்குக்கு, ‘உணவு படைத்தல் / படையல்’ எனப் பெயர். எவ்வளவு நுட்பமான சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்!

- திரும்புவோம்...