Published:Updated:

நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்

நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!
நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

நிலம் என்னும் நல்லாள், மனித இனத்துக்கு அருளும் தாய்ப்பால்... நீர்! அந்தத் தாய்மையின் கருணையை மதிக்கத் தவறினோம். நீரின் பாதைகள் தகர்த்தோம். குளங்களை, மைதானங்களாக்கினோம்... ஆறுகளை, கழிவு நீரோடைகளாக்கினோம்... ஏரிகளை, புதுப்புது நகர்களாக்கினோம். பொறுமை விடுத்த நல்லாள், கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தன் பூத நீர்க்கரங்களால் ஒரு சுழற்று சுழற்றியபோது, திக்கற்று நின்றோம்.

அன்று விழுந்த விதை, இப்போது துளிர்க்க ஆரம்பித்து நம்பிக்கை ஊற்றைப் பொங்கச் செய்கிறது. ஆம், ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின் சார்பில் ஏரிகளைச் சீரமைக்கும் வேலைகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பேரழிவு மறக்க முடியாதது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி பகுதிகள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. ‘இத்தகைய கொடுமைக்குக் காரணமே, நீர்நிலைகள் சரிவரப் பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிக்கப்பட்டதும் தான்’ என்பதை அன்றைக்கு உலகமே பேசியது.

இத்தகைய சூழலில் பெருவெள்ளப் பாதிப்புக்கு உடனடி மருந்தாக நிவாரணப் பணிகளில் தானும் பங்கெடுத்த விகடன் குழுமம், நிரந்தர நிவாரணத்தை நோக்கி தன் சிந்தனையைத் திருப்பியது. வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டம் உருவானது. இதற்காக விகடன் குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட, வாசகர்களும் இந்த நல்ல திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் ஆர்வத்தோடு நிதியை அள்ளித் தர... மொத்த நிதி 2.25 கோடியைத் தாண்டியது.

நீரியல் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அடையாறு ஆற்றின் வெள்ளப் பெருக்குக்குக் காரணமாக அமைந்த வண்டலூர் தொடங்கி, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை இந்த ஆலோசனைக் குழுவினர் ஆய்வுசெய்தனர். பெரும்பாலான நீர்நிலைகள் துளியும் பராமரிப்பின்றிக்கிடக்க, ‘பெருமழை பெய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் பல ஏரிகளில் தண்ணீர் இல்லை. தமிழகம் முழுக்கவே பெரும்பாலான நீர்நிலைகள் இப்படித்தான் பராமரிப்பின்றிக்கிடக்கின்றன’ என்று வேதனையை வெளிப்படுத்தினர்.

சென்னை அருகே உள்ள இந்த நீர்நிலைகளில் சிலவற்றை, `நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின் மூலமாகச் சீரமைத்துக் காட்டலாம். இதை ஒரு முன்மாதிரித் திட்டமாகச் செயல்படுத்தலாம். இதேபோல தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை அரசாங்கமும் பிற அமைப்புகளும் முன்வந்து சீரமைக்கும்போது, அடுத்தடுத்த பருவமழைக் காலங்களில் வெள்ள ஆபத்தும் இருக்காது; பாசனநீர் மற்றும் குடிநீர் பிரச்னையும் பெரிய அளவில் தீரும் என முடிவெடுக்கப்பட்டது.

நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

கரைகள் உயர்ந்த கருமக் குட்டை!

சென்னை வண்டலூர்-ஒரகடம் பகுதியில் சில குளங்கள் மற்றும் ஏரிகளின் சீரமைப்புப் பணிகளைக் கையில் எடுத்துள்ளோம். ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புகளும் கைகோத்துள்ளன. இ.எஃப்.ஐ அமைப்பின் மேற்பார்வையில் மண்ணிவாக்கம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் 20 ஆண்டுகளாகப் பராமரிப்பற்ற நிலையில் இருந்துவந்த ‘கருமக் குட்டை’யைத் தூர்வாரி, கரைகளை உயர்த்திப் பலப்படுத்தும் பணி முழுமையாக முடிந்துள்ளது. இதற்கான செலவுத் தொகை சுமார் மூன்று லட்ச ரூபாய்.

சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பாக்கம் ஏரி (71 ஏக்கர்), சிறுமாத்தூர் ஏரி (140 ஏக்கர்) மற்றும் அம்மன் குளம் ஆகிய நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நரியம்பாக்கத்தில் பெரும்பான்மையான நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டபோதிலும், சுமார் 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்த நரியம்பாக்கம் ஏரி, கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கரை உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறியது. அடுத்த மழை வந்தால் தண்ணீர் தேங்குவது கடினம் என்ற சூழலில், தற்போது தூர்வாரிச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. அடையாறு ஆற்றின் உபநிலவடிப் பகுதியாக இருக்கும் இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்யாதவாறு, சாலை ஓரத்தில் 500 மீட்டர் நீளத்துக்கு கரை எழுப்பப்பட்டு வருகிறது. பழுதடைந்த மதகுகளைச் சீரமைக்கவும், ஏரிக்குள் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குழிகள் எடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. கரையைப் பலப்படுத்தி மரங்களை நடும் பணியும் தொடரும்.

தமிழகப் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலமங்கலம் ஏரியைச் சீரமைக்கும் பணி முக்கியமானது. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதமே தமிழகப் பொதுப்பணித் துறை செயலாளருக்குக் கடிதம் அளித்திருந்தோம். தேர்தல் காரணங்களால் அது தள்ளிப்போனது. புதிய அரசு பதவியேற்றவுடன் தமிழக முதலமைச்சருக்கு ஏரிகள் சீரமைப்புக் குறித்து கடிதம் எழுதியிருந்தோம். முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கு இணங்க, பொதுப்பணித் துறையினரின் ஆலோசனைப்படி வண்டலூர்-ஒரகடம் சாலையில் உள்ள பல ஏரிகளைப் பார்வையிட்டோம். இதில் 103 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சாலமங்கலம் ஏரியை முதற்கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த ஏரியைத் தூர்வாரிச் சீரமைப்பதற்கான அனுமதி கிடைத்துவிட்டது. பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கிவிடும்.

சீரமைக்கப்படும் ஏரிகளின் கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், பறவைகள் மற்றும் மனிதர்கள் பயன்பெறும் வகையிலும் பாரம்பர்ய மரக்கன்றுகளை நடவுசெய்வதற்கு கன்றுகளைத் தேர்வுசெய்யும் பணிகளும் தொடர்கின்றன. இதற்கிடையில் சாலமங்கலம், நரியம்பாக்கம் ஏரி மூலம் பாசனம் பெறும் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் குழுக்களை உருவாக்கி அந்தந்த ஏரிகளை அவர்களே தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

‘நிலம்... நீர்... நீதி’ திட்டப் பணிகள் குறித்து விகடன் குழும இதழ்கள் மூலமாகவும், இணையதளத்தின் மூலமாகவும் பகிர்ந்துகொள்வோம்.

நிலம் காப்போம்... நீர் காப்போம்... நீதி காப்போம்!

நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

பாதுகாக்கவேண்டியது எங்க கடமை!

“ஊர் மக்கள் பயன்பாட்டில் இருந்த இந்தக் குட்டை, இடையில பராமரிப்பு இல்லாததால செடி, கொடி, வேலிகாத்தான் எல்லாம் வளர்ந்திடுச்சு. சுத்தி இருக்கிறவங்க கழிவுகளையும் கொட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஒருகட்டத்துல குட்டையே காணாமபோற நிலை. இப்ப நீங்க எடுத்த முயற்சியால குட்டை சுத்தமாகி, எங்களோட முக்கிய நீராதாரம் திரும்பக் கிடைச்சிருக்கு. இனி, இதைப் பாதுகாப்பா வெச்சுக்கிறது எங்களோட கடமை” என்றார் கரசங்கால் தட்சிணாமூர்த்தி நெகிழ்ச்சியோடு.

நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

சொன்னதைச் செய்தீங்க!

நரியம்பாக்கம் ஏரியின் சீரமைப்புப் பற்றி பேசிய சாலமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் பன்னீர் செல்வம், “விவசாயத்துக்கும் நிலத்தடி நீர்மட்டத்துக்கும் இந்த ஏரிதான் எங்களுக்கு ஆதாரம். பல வருஷங்களா தூர்வாராமவிட்டதால, தண்ணி குறைஞ்ச அளவுலதான் பிடிக்குது. மண் மேடு உருவாகிடுச்சு. மதகுகள் பழுதடைஞ்சு ரொம்ப வருஷங்கள் ஆகிடுச்சு. போன வருஷம் பெய்த மழையில கரை வேற உடைச்சுக்கிச்சு. ஏரியைச் சீரமைச்சாதான் எங்களுக்குத் தண்ணிங்கிற நிலையில, வழி தெரியாம புலம்பிக்கிட்டிருந்தோம். `இதைத் தூர்வாரிக் கொடுக்கிறோம்’னு நீங்களாவே முன்வந்தது பெரிய விஷயம். சொன்ன வேகத்துல வேலையையும் ஆரம்பிச்சுட்டீங்க. எத்தனை காலம் ஆனாலும் எங்க ஊர்க்காரங்க இதை மறக்கமாட்டோம்’’ என்று நன்றிப்பெருக்கோடு குறிப்பிட்டார்.

ஏரி சவாரி போலாமே!

‘ஏரி சவாரி’ என்ற பெயரில் பொதுமக்களை நேரடியாக அழைத்துச்சென்று ஏரிகள் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பதோடு, ஏரிகளைச் சுத்தம்செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்திவருகிறோம். இந்தப் பணிகளில் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் இ.எஃப்.ஐ இணைந்து செயல்படுகின்றன.