Published:Updated:

முத்து

முத்து
பிரீமியம் ஸ்டோரி
முத்து

இயக்குநர் ராம், படங்கள்: கே.ராஜசேகரன், பொன்.காசிராஜன்

முத்து

இயக்குநர் ராம், படங்கள்: கே.ராஜசேகரன், பொன்.காசிராஜன்

Published:Updated:
முத்து
பிரீமியம் ஸ்டோரி
முத்து
முத்து

1996 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஏதோ ஒரு மரத்தடியில் `வனம்' என்றொரு கவிதை வாசிப்பு நிகழும். அந்தக் கவிதை வாசிப்பில் எங்கள் கல்லூரி மாணவர்களுடன் வெளியாட்களும் வந்து கலந்துகொள்வது உண்டு. அப்படி ஒரு வெள்ளிக்கிழமையில் எங்கள் வனத்துக்குள் தன் பட்டாம்பூச்சிகளை விற்க வந்தவன்தான் முத்துக்குமார். வாசிப்பு முடிந்ததும் ஒரு டீ குடித்தோம். அடுத்து பேசுவதற்கு எதுவும் இல்லாததுபோல, `இப்படியே ரெண்டு நாள் ஹாஸ்ட்டல்ல தங்கிட்டு, திங்கட்கிழமை போங்களேன்' என்றேன். டீ சூட்டின் உஷ்ஷோடு `சரி' என்றான். ஒருசிலர், நம்மிடம் நட்பாக நிறைய நாட்களை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் முத்துக்குமார், முதல் நொடியிலேயே என்னை நண்பனாக்கிக்கொண்டவன், நான் நண்பனாக்கிக்கொண்டவன்.

அதன் பிறகு எங்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கும். அந்த நாட்களில் அறிவுமதி அண்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்து

அலுவலகத்தில்தான் முத்து இருப்பான். தாம்பரத்தில் இருக்கும் என்னிடம், கோடம்பாக்கம் டு தாம்பரம் செல்லும் ரயில்தான் அவனை பத்திரமாகக் கொண்டுவந்து இணைத்தது. அந்தக் குறுகிய ரயில் பயணத்திலும் முத்துவுக்குப் பிடித்தது, படிக்கட்டுப் பயணம்தான். உள்ளே ஏறியதும் எதிர்ப்பக்கம் சென்று காலை தொங்கப்போட்டு அமர்ந்துகொள்வோம். நகரும், ஓடும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்போம்; எல்லாவற்றையும் பேசுவோம். நல்ல வெயிலோடு இருந்த ஒருநாளில் சில தூறல்களும் விழுந்துகொண்டிருந்த நேரத்தில் சாலையில் சவ ஊர்வலம் ஒன்று சென்றதைப் பார்த்து விளையாட்டாகவோ தீர்க்கமாகவோ முத்து சொன்னான், `மனுஷன் செத்தா எவ்ளோ வெயிலடிச்சாலும் மழை பெய்யும்போலிருக்கு'. ஆகஸ்ட் 14-ம் தேதி, அவன் இறுதிப் பயணத்திலும் வெயிலோடு மழையும் பெய்தது.

முத்துவுக்கு, ஒரு நாடோடியின் மனம் வாய்த்திருந்தாலும்; காடும் குகைகளும் பிடித்திருந்தாலும், நட்சத்திரத்தைப் பார்த்தபடி உறங்குவது அவன் ஆசையாக இருப்பினும் அவனுடைய சாலைகள் எப்போதும் வீட்டில் சென்று முடிபவையே. அம்மா இல்லாத அவன் நெடும் வாழ்க்கையில் இளைப்பாறல் தந்த அத்தனை உறவுகளிடத்தும் பெரும் பிரியத்தையும் மரியாதையையும் எப்போதும் கொண்டிருந்தான். முத்து, ஒரு பிரியமான மகன்; பிரியமான அண்ணன்; பிரியமான பேரன்; பிரியமான அப்பா; பிரியமான கணவன். தன் மகன் மீது அவனுக்கு அவ்வளவு பாசம். மகனை நினைத்து `அப்பா' என்னும் சொல்லுக்குள் நின்றபடி பதற்றமடைந்துகொண்டே இருப்பான். எட்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்த மகளை, தனக்குப் பிறந்த தன்னுடைய தாய் என்றே எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினான். இப்படி உறவுகளின் மீது பிரியத்தை எப்போதும் குவித்துவைத்திருந்த முத்து, ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு பேரனாக, ஓர் அப்பாவாக, ஒரு கணவனாக தனக்கு வாய்த்த காலத்தில் தேவையானதை சரியாகச் செய்துவிட்டுதான் சென்றிருக்கிறான் என நினைக்கிறேன். உறவுகளிடம் கிடைக்கும் சிறு பிரியத்தையும் அவன் ஆராதித்ததும் கொண்டாடியதும் அந்தப் பிரியத்துக்காக எப்போதும் ஏங்கிக்கொண்டே இருக்கும் அவனுடைய இளம்பிள்ளை மனதும் அவன் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்களில் கொட்டிக்கிடக்கின்றன.

முத்து

திரைப்பட வேலை என்பது, கொண்டாட்டங்களும் கூத்துகளும் நிறைந்த ஒரு கேளிக்கைப் பணி என்பதே பொதுப் புத்தியின் பார்வை. வெற்றி பெற்றவர்கள் ஏதோ ராஜா காலத்து இளவரசன் போன்று அந்தப்புரத்தில் வாழ்பவர்கள் என்பதே பெரும்பாலானோரின் எண்ணம். ஆனால், நிஜம் வேறு. 24 மணி நேரமும் போட்டியும், கிடைத்த வாய்ப்பு தவறிவிடுமோ என்ற பதற்றமும், இருக்கும் நிலையைத் தக்கவைக்க வேண்டும் என்ற அவஸ்தையும் பொருளாதார நிலையின்மையும் ஒருசேரக்கொண்ட கொடூரமான பரமபத விளையாட்டு இந்த சினிமா. முத்து என்னிடம் அடிக்கடி சொல்வது, `சுப்பு, கவனமா இருடா. இது உங்கம்மா இல்லை... எங்கம்மா இல்லை... சினிமாடா. தூங்குறப்பகூட கால் ஆட்டிட்டே தூங்குடா. இல்லைன்னா செத்துட்டான்னு சொல்லிடுவாங்க'.

சினிமாவுக்கு அவன் வந்து சேர்ந்த இந்த 17 வருடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறான். கடந்த 12 வருடங்களில் தமிழ் சினிமாவில் அதிகப் பாடல்களை எழுதியது அவன்தான். கண்ணதாசன், வைரமுத்துவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் பாடல் துறையில் அவன் ஒரு சூப்பர் ஸ்டார். ஒவ்வொரு வருடமும் அதைத் தக்கவைக்க அவன் செய்த முயற்சிகள், அடைந்த அழுத்தங்கள் மிகமிகமிக அதிகம். `பாடல் எழுதுவது என்பது, ரிவர்ஸ் கியரில் மலைப்பாதையில் காரில் செல்வது போன்றது' எனச் சொல்வான். அம்மாவைப் பற்றிய பாடல் என்றால், அம்மாவின் நினைவுவரும். உத்திரத்தில் தூக்கில் தொங்கிய அவரின் கால்கள் அவன் கண்களுக்கு முன்வரும். இன்று வரை முத்து தன் தலை உயர்த்தி யாரையும் கண்ணுக்குக் கண் பார்க்காமல் இருக்கும் சுபாவம் அன்று சிறுவனாக அம்மாவின் கால்களைப் பார்த்த அந்த நொடியில் விளைந்ததுதான். இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் கடந்தகால வலிக்குள் அல்லது நினைவுக்குள் சென்று சொல்லும் செய்தியும் எடுத்து வருவதே அவனுடைய வேலை. 12 வருடங்களில் அவன் பாடல் எழுதாத நாள் என்று ஒன்று இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. இந்த வேலை கொடுத்த மனச்சோர்வை, அழுத்தத்தை சமீப வருடங்களில் அடிக்கடி என்னோடு பகிர்ந்திருக்கிறான்.

41 வருடங்களில், 100 வருட உழைப்பை அவன் ஓய்வின்றி செய்தான். அவனுடைய இந்த இறுதி விடைக்குப் பின்னால் இருப்பது அவன் எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்தான்.

அவன் அடைந்த உயரத்தில் அவன் வசிக்கவே இல்லை. கடந்த 15 வருடங்களாக ஒரு தலைமுறை தமிழகத்தின் ஆன்மாக்களை ஆக்கிரமித்த பாடல்களை எழுதியவனாக அவன் வாழவில்லை. மிக எளிமையான வாழ்வின் மீதுதான் அவனுக்கு ருசி. மனிதர்களை சாதி, மதம், மொழி, பணத்தகுதி என்ற பேதம் இல்லாமல், அவரை அவராகவே பார்ப்பதும் பழகுவதுமே அவன் இயல்பு. கம்பீரங்களை உடல்மொழியில் கைக்கொள்ளாத மிகப் பணிவான ஆத்மா. புறஉலகில் பெரும் கூட்டத்தோடு இருந்தாலும் தனியாகவே இருந்தான். சுமைகளை, வருத்தங்களை தனக்குள் பதுக்கிவைத்துக் கொண்டான். கொடுக்கும் கைக்குத் தெரியாமல் எண்ணற்ற உதவிகளை பலருக்கும் செய்திருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை அவன் யாரிடமும் உதவி கேட்டது இல்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் ஒரு நண்பர் அலைபேசியில், `டே... எனக்கு அவன் நிறையச் செஞ்சான்டா, அவனுக்கு நான் எதுவுமே செய்யலைடா. என்னடா பண்றது?' எனக் கேட்கிறார்... அழுகிறார். அவன் பழகிய அநேகரின் அழுகையில் இந்த வார்த்தைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

புத்தகங்கள் நிறைந்த வாழ்க்கை முத்துவினுடையது. எழுதுவதைக்காட்டிலும் வாசிப்பதை அவன் விரும்புவான். `வியத்தலும் இலமே...' என்ற வரிக்கு எதிரானவன் முத்து. தனக்குப் பிடித்த புத்தகத்தை அடுத்தவருக்குப் பரிந்துரைப்பதை ஒரு கடமையாகச் செய்வான். அந்த எழுத்தாளர் எங்கு இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துப் பாராட்டாமல் நிறைவடைய மாட்டான். மனிதர்களை அவர்களின் உடல்மொழியோடும் குணநலனோடும் மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவன். வெகு நுண்ணியக் காரியங்களையும் அவதானிக்கும் ஞானம் பெற்றவன். மனிதன் கண்டு தீட்டிய எல்லா விதிகளுக்கும் அப்பாற்பட்ட பரந்த பார்வையைக் கொண்டவன். ஒரு கவிஞனின் வாழ்வுப்பாணியை இயல்பாகப் பெற்றவன். அவனுடைய கவிதைகளை, எழுத்தை இலக்கிய உலகம் எப்படி மதிப்பிடும், விமர்சிக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவனுடைய வாழ்வு ஒரு கவிஞனுடைய வாழ்வு.

சினிமா பாடல் ஆசிரியர் ஆனது, முத்துவின் வாழ்க்கையில் நடந்த ஒரு விபத்து. அவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. `தமிழில் படம் இயக்கி, பின்னர் இந்திக்குப் போய், ஆங்கிலத்தில் ஒரு படம் இயக்க வேண்டும். உலக இயக்குநர்களுக்கு தண்ணிகாட்ட வேண்டும்' என ஆரம்பகாலங்களில் சொல்லிக்கொண்டிருப்பான். அவனைச் சந்தித்த ஆரம்ப காலத்தில் `சில்க் சிட்டி' என்ற ஓர் ஆங்கில நாவலை காஞ்சிபுரத்தை மையப்படுத்தி எழுதுவதில் ஈடுபட்டிருந்தான். ஆங்கிலத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. எழுத்துக்கான உலக விருதுகளின் மீது கனவு இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் அவன் அடிக்கடி சொன்னது, `சுப்பு... பாட்டு எழுதுறதை நிறுத்திட்டு, படம் இயக்கலாம்னு நினைக்கிறேன். பாட்டு அழுத்துது, மூச்சுவிட முடியல'. பச்சையப்பன் கல்லூரி அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதையும் முடித்திருந்தான். தும்மலைப்போல் நொடியில் வந்த மரணம் சம்பவிக்காமல் இருந்திருந்தால், முத்து ஆங்கிலத்தில் ஒருசில நாவல்களையும், தமிழில் சில திரைப்படங்களையும் வருங்காலத்தில் ஆக்கியிருப்பான்.

20 வயதில் கிடைத்த நட்பு. அகம் புறம் என்ற பேதம் இல்லாமல் பகிர்ந்துகொண்ட தோழமை. இருவரின் அழுக்கும் குற்றமும் வருத்தமும் ஏக்கமும் இருவருக்கும் தெரிந்த, ரகசியங்கள் பேணா உறவு. பெரும்பாலான சமயங்களில் இருவருக்கும் ஒரே மணிபர்ஸ். கேரளக் காடு, மின்சார ரயில், சினிமாவின் தெருக்கள், தெருவோர டீக்கடைகள், திரைப்பட விழாக்கள், பகிர்ந்த புத்தகங்கள், நேசித்த மனிதர்கள் என முத்து என் வாழ்வின் எல்லா கட்டங்களிலும் என்னோடு இருந்தான்.

எனக்கு அறிவுரை சொல்ல விரும்புபவர்கள் மிகக் குறைவு. முத்து வெளிப்படையாகவே சொல்வான். சொந்த அப்பனைப்போல அடிக்கடி பத்திரமாக இருக்கச் சொல்வான். அம்மாவின் வாஞ்சையோடு நேரத்துக்குச் சாப்பிடச் சொல்வான். `அவங்கள ஏன் எதிர்த்துப் பேசுற?' என்பதில் நண்பனின் குரல் கேட்கும். `பைக்குல போறியா... கார்ல போறியா?' என்பதில் பிரியத்தின் பயத்தைக் காட்டுவான். அவனுக்குப் பிரியமானவர்கள் மீது இப்படி ஏதாவது ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கும்.

எனக்கு சினிமாவில் நிறையக் கதவுகளைத் திறந்துவைத்தவன் முத்து. பாலு மகேந்திரா எனும் குரு வாசலை திறந்துவிட்டது, `கற்றது தமிழ்'-க்கு வலுக்கட்டாயமாக யுவனை இழுத்துக்கொண்டு வந்து நின்றது. என்னுடைய குழந்தைகளுக்கு பிரியத்தையும் பரிசுகளையும் கொடுத்து, திக்குமுக்காடவைத்த மாமாவாக இருந்தது. என்னுடைய படங்களுக்கான எல்லா பாடல்களையும் எழுதியது… என எத்தனையோ சொல்லலாம். நட்பில் உயிர்த்தோழன் என்பது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை என்றே நினைத்திருந்தேன். இன்று அவனை எரித்துவிட்டு வந்த பின்புதான் அந்த வார்த்தையின் நிஜம் வெளிச்சமாகக் கசிந்துகொண்டிருக்கிறது.

மரணம், தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்ற அறிவு இருந்தாலும், என் முத்துவின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... நம்ப முடியவில்லை!

முத்து அடிக்கடி என்னிடம் சொன்னதுபோல `இயற்கை கொடூரமானது!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism