Published:Updated:

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி
பிரீமியம் ஸ்டோரி
வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி
பிரீமியம் ஸ்டோரி
வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி
வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

கஸ்ட் - 22, சென்னைக்கு ஹேப்பி பர்த்டே.  377-வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகிவருகிறது சென்னை மாநகரம். சென்னையின் அடையாளங்களாக இருக்கும் கட்டடங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுவருகின்றன. ஆனால், அந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்கு வியர்வையும் ரத்தமும் சிந்தியவர்கள், சென்னையை சிங்காரச் சென்னையாக்கவும், பெருவழிப்பாதைகள் அமைக்கவும் இடம்கொடுத்த அடித்தட்டு மக்கள், இன்று சென்னையில் இருந்து 30 கிலோமீட்டருக்கு வெளியே வாழ்க்கையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

பழைய மகாபலிபுரம் சாலைக்கு அருகே, அடுக்கிய தீப்பெட்டிகளைப்போல இருக்கிறது செம்மஞ்சேரி குடியிருப்பு. 6,774 வீடுகள். ஆங்காங்கே குளமாகத் தேங்கி நிற்கிறது சாக்கடை. பெரும்பாலான ஆண்களின் விழிகள் மயக்கத்திலேயே உள்ளன. எல்லா பகுதிகளிலும் அடர்ந்த இறுக்கம்.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சியும், தொழில் தேடியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள், சாலையோர வியாபாரிகளாக, மூட்டை சுமப்பவர்களாக, கட்டுமானத் தொழிலாளர்களாக தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டு, நதியோரங்களிலும் சாலையோரங்களிலும் ஒடுங்கிக் கிடந்த இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை, தலைமுறை கடந்தும் மாறவே இல்லை. வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டிய வர்கள், கழிவுகளாகக் கருதி மொத்தமாகக் கொண்டுபோய் இந்தப் பகுதியில் கொட்டப்பட்டிருக்கிறார்கள்.

`செம்மண் ஏரி'தான் செம்மஞ்சேரி. ஒருகாலத்தில் மிகப்பெரிய நீர்நிலையாக இருந்த பகுதி. கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம், எண்ணூர் போன்ற பகுதிகளைப்போல, பெருநகரங்களை கார்ப்பரேட் மயமாக்கும் உலகமயமாக்கல் திட்டத்தின் ஓர் அங்கமாக உருவாக்கப்பட்ட குடிசைவாசிகளின் குடியேற்றப் பகுதி. 2005-ம் ஆண்டு இறுதியில் இருந்து படிப்படியாக இங்கு மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட 1,800 குடும்பங்கள் முதற்கட்டமாக வந்தன. அடுத்து சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம், தி.நகர், கோட்டூர்புரம் உள்ளிட்ட 23 குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியையே தொழில் தளமாகக்கொண்டிருந்த மக்களும் இங்கே இடம் மாற்றப்பட்டார்கள்.

அகன்ற சாலை, பளீர் விளக்குகள், பெரிய பூங்கா என செம்மஞ்சேரியின் வெளித்தோற்றம் பகட்டாகவே இருக்கிறது. ஆனால், உள்ளே சொல்ல முடியாத துயரங்களுடன் மக்கள் வசித்துவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

“இங்கே இருக்கிற எல்லாரும் அன்னன்னிக்கு சம்பாரிச்சு, அன்னன்னிக்குச் சாப்பிடுறவங்க. கொசுக்கடி, சாக்கடை நாத்தம்னு சிரமப் பட்டாலும், நகரத்துக்குள்ள இருந்தப்போ ரெண்டு வேளையாவது சாப்பிட்டோம். இங்கே அதுவும் போச்சு. சொந்தமா காங்கிரீட் வீடு, தொழில் தொடங்க கடன் வசதினு ஆசை காட்டி எங்களை இங்கே குடிவெச்சாங்க. ஆனா, பத்து வருஷத்துல எதுவும் நடக்கலை. `20 வருஷத்துக்கு மாசாமாசம் பணம் கட்டினாத்தான், வீடு சொந்த மாகும்'னு இப்போ சொல்றாங்க. பழைய இடத்துக்கு வேலைக்குப் போகணும்னா, இங்கே இருந்து ரெண்டு மணி நேரம் பஸ்ல போகணும். அதுக்கே 50 ரூபாய் செலவாகுது. இங்கேயே ஏதாவது வேலைக்குப் போகலாம்னா, `செம்மஞ்சேரி'னு சொன்னாவே திருடனைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க. அதனால, பெரும்பாலான ஆண்கள் வேலைக்குப் போறதே இல்லை. பொம்பளைங்கதான் ஏதோ கிடைக்கிற வேலைக்குப் போய் குடும்பத்தை ஓட்டுறோம்'' என வருத்தத்தோடு சொல்கிறார் சிவகாமி. விழுப்புரத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த குடும்பம் சிவகாமியுடையது. பட்டினம்பாக்கத்தில் இருந்தவரை இங்கே துரத்திவிட்டது அரசு.

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

25 ஆயிரம் மக்கள் வாழும் இந்தக் குடியிருப்புக்கு, ஒரே ஒரு தொடக்கப் பள்ளிதான் இருக்கிறது. நெடுங்காலப் போராட்டத்துக்குப் பிறகு, அண்மையில் ஒரு மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார்கள். `30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியரும், ஒரு வகுப்பறையும் இருக்க வேண்டும்' என்கிறது கல்வி உரிமைச் சட்டம். இங்கு இருக்கும் தொடக்கப் பள்ளியில் 1,703 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் 27 ஆசிரியர்களே இருக்கிறார்கள். பள்ளிக்குப் போகாமல் ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்திவிட்டார்கள். அவர்கள் வெகு எளிதாகப் பாதை மாறுகிறார்கள்; குழந்தைத் தொழிலாளர்களாக ஆகிறார்கள். போதை, அவர்களை இலகுவாகப் பற்றிக்கொள்கிறது.

“குடிசைனு சொன்னாவே, அதெல்லாம் மோசமான ஏரியாங்கிற எண்ணம் எல்லோருக்கும் வருது. நகரத்துக்குள்ள இருந்த மொத்தக் குடிசைப் பகுதிகளையும் பெயர்த்து ஒண்ணாக் குவிச்சா என்ன ஆகும்? இங்கே இருக்கிற பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கொடுக்கணும். போதிய அளவுக்கு ஸ்கூல் தொடங்கணும். இது எல்லாம் செய்யாததால, பிள்ளைங்க பஸ் ஏறி ரொம்ப தூரம் போய்ப் படிக்கிறாங்க. சில வருடங்களுக்கு முன்னால், பஸ்ல இருந்து விழுந்து நாலு பிள்ளைங்க இறந்துட்டாங்க. அந்த இழப்பை எதைக்கொண்டு ஈடுசெய்ய முடியும்? இங்கே இருக்கிற ஸ்கூல்ல, குடிக்கத் தண்னிகூட இல்லை. போதிய அளவுக்கு கழிவறை வசதியும் இல்லை. இன்டர்வெல்ல வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க, அதுக்குப் பிறகு ஸ்கூலுக்கே போறது இல்லை.

சென்னையில் மட்டும் கடந்த எட்டு வருஷங்கள்ல 58 பள்ளிகள் மூடப்பட்டிருக்கு. இதுல ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள், இந்த மக்கள் முன்பு வாழ்ந்த பகுதிகள்ல இருந்தவை. இவ்வளவு பள்ளிகள்ல படிச்ச பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து அடைச்சுட்டு, ரெண்டு பள்ளிகளை மட்டும் திறந்தால் என்ன நியாயம்?'' என்று கேட்கிறார் செம்மஞ்சேரி பகுதியில் சமூகப் பணியாற்றும் லில்லி மார்க்கரெட்.

``1,000 குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி இருக்கணும். அந்தக் கணக்குப்படி பார்த்தா, 25 அங்கன்வாடிகள் தேவை. ஆனா, ஏழுதான் இருக்கு. எந்த அரசுத் திட்டங்களும் இந்த மக்களை வந்து அடையுறதே இல்லை. இங்கே இருக்கிற உயர்நிலைப் பள்ளியை கடந்த ஜனவரி மாசம்தான் மேல்நிலைப் பள்ளியா மாத்தினாங்க. ஆனா, ஆய்வக வசதிகள் இல்லாததால், அறிவியல் பிரிவுகள் தொடங்கப்படவே இல்லை. கிராமப்புறப் பள்ளிகள்லகூட இன்னைக்கு ஸ்மார்ட் க்ளாஸ் வந்திடுச்சு. இந்தப் பிள்ளைகளுக்கு அந்த வார்த்தைகள்கூட அறிமுகம் ஆகலை.

குழந்தைத் திருமணம்னு சொன்னா, கிருஷ்ணகிரி, தர்மபுரினு பேசுவாங்க. இங்கே வந்து பார்க்கணும். 15 வயசு, 16 வயசுப் புள்ளைங்க எல்லாம் கையில பிள்ளையோடு நிக்குதுங்க. இங்கே மிகப்பெரிய கலாசாரக் குழப்பம் இருக்கு. இவங்களுக்குத் தரப்பட்டிருக்கும் வீடு ரொம்பவே சின்னது. பெண்கள் உடை மாற்றக்கூட மறைப்பு இல்லை. தம்பதிகளும் குழந்தைகளும் ஒன்றாகவே தங்கியிருக்கும் நிலையில், பிள்ளைகள் தவறான புரிதல்களுக்கு உள்ளாகுறாங்க. நிறையக் குழந்தைத் திருமணங்கள் நடக்க, இதுவும் ஒரு காரணம்.

இதைவிட இன்னும் ஒரு பெரிய பிரச்னை, இளம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள். இந்தப் பெண்களின் வாழ்க்கைச் சூழலைப் பயன்படுத்தி ஏமாற்றி, குழந்தைகளோட விட்டுட்டுப் போயிடுறாங்க. இதை எல்லாம் கவனிக்கவோ, கேட்கவோ யாருமே இல்லை. நல்ல மருத்துவமனைகூட இல்லை. அவசரம்னா  ராயப்பேட்டைக்கும் சென்ட்ரலுக்கும்தான் ஓடணும்'' என ஆவேசப்படுகிறார் மார்க்கரெட்.

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

பெசன்ட் நகர் அருகில் உள்ள ஊரூர்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கு 15 வயதிலேயே திருமணம் முடிந்தது. அம்மா சிறு வயதிலேயே இறந்துவிட, அப்பா குடிக்கு அடிமையாகிவிட்டார். செம்மஞ்சேரியில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்த மணிமேகலை, வினோத்திடம் காதல் வயப்பட்டார். ஒரு மகள். அடுத்து, ஒன்பது மாத மகனை வயிற்றில் சுமந்து இருந்த நேரத்தில், வினோத் சிறைக்குப் போய்விட்டார். மகன் பிறந்து பத்து மாதங்கள் ஆகியும், இன்னும் திரும்பவில்லை. இரண்டு பிள்ளைகளை கையில் வைத்துக்கொண்டு, சிறுசிறு தையல் வேலைகள் செய்து அன்றாடங்களை நகர்த்துகிறார் மணிமேகலை.

“எப்போ பாத்தாலும் போதை... குடிச்சுட்டுப் போட்டு அடிப்பாரு. திடீர்னு ஒரு பெரிய கேஸ்ல போலீஸ் புடிச்சுட்டுப்போயிடுச்சு. அந்த அதிர்ச்சியிலேயே எனக்குப் பிரசவமும் ஆகிடுச்சு. இப்போ உடம்புல அடி விழுகிறது இல்லை. ஆனா, மனசுதான் கிடந்து அடிச்சுக்குது. இந்தப் புள்ளைங்களோட எதிர்காலம் என்ன ஆகுமோனு பயமா இருக்கு'' என அழுகிறார் மணிமேகலை.

ஜோதி, 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். மோகனைத் திருமணம் முடித்தபோது, அவருக்கு வயது 18. மூன்றே வருடங்களில் எல்லாம் முடிந்துவிட்டன. மதுவும், வேறு பல போதை வஸ்துக்களும் மோகனின் உயிரைக் குடித்துவிட, மிஞ்சியது இரண்டு குழந்தைகளும், வாழ்வின் மீதான விரக்தியும்தான்.

“அப்பா, அம்மா பார்த்துதான் கல்யாணம் முடிச்சுவெச்சாங்க. கல்யாணமாகி ஒரு மாசம் கழிச்சுத்தான் இவர் பெரிய போதைக்காரர்னு தெரியவந்தது. என்ன செய்ய முடியும்... சகிச்சுக்கிட்டேன். குடிச்்சுட்டு எங்கேயாவது விழுந்துகிடப்பார். போய்த் தூக்கிட்டுவருவேன். இருந்த நகை, பணம் எல்லாத்தையும் குடிச்சு அழிச்சுட்டார். வெளியில போய் கடன் கேட்க வெட்கப்பட்டுக்கிட்டு நானும் புள்ளைகளும் பட்டினி கிடந்திருக்கோம். கடைசியா ஒருநாள், போதையில சண்டைபோட்டார். கோவிச்சுக் கிட்டு வெளியே போயிட்டேன். வந்து பாக்கும் போது, தூக்கு மாட்டிக்கிட்டு இறந்துபோயிட்டார். எனக்கும் தற்கொலை செஞ்சுக்கலாம்னுதான் தோணுச்சு. ஆனா, இந்த ரெண்டு புள்ளைங் களுக்கும் எனக்கு வாய்ச்ச மாதிரி தப்பான வாழ்க்கை அமைஞ்சுடக் கூடாதே... அதான் மனசை மாத்திக்கிட்டேன்'' என்று வெறுமையாகப் புன்னகைக்கிறார் ஜோதி.

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

உஷாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். முதல் மகள் சித்ராவின் காதல் கணவர், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகள் சுமதி, கணவரைவிட்டு விலகி மூன்று வருடங்கள் ஆகிறது. அவருக்கும் மூன்று பிள்ளைகள். மகன் சதீஷுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை. ஆக, 158 சதுரஅடி அளவு உள்ள வீட்டில், ஏழு குழந்தைகள், ஆறு பெரியவர்கள். 40 வயதுக்குள் உஷாவுக்கு ஏழு பேரன்-பேத்திகள்!

செம்மஞ்சேரியில் இப்படியான சோகங்கள் தளும்பத் தளும்ப நிறைந்திருக்கின்றன.

வெறுமை, ஏழ்மை, தனிமை! - பரிதவிக்கும் செம்மஞ்சேரி

ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது, பன்முகத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். குடிசைகள், அருவருக்கத்தக்கவை அல்ல; அதுவும் நகரின் ஓர் அங்கம்தான். குடிசைவாழ் மக்களை, காங்கிரீட் வீடுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்தான். ஆனால், அது வளர்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையை நசுக்குவதாக இருக்கக் கூடாது.

செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தலித் மக்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், சென்னை நகருக்குள் பல ஆயிரம் ஏக்கர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அனைத்து மக்களையும் சமமாக பாவிக்கும் ஒரு நல்லரசு, அந்த நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு இந்த மக்களுக்கான குடியிருப்பை உருவாக்க வேண்டும். அவர்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். மாறாக, அரசே மக்களை ஒதுக்கிவைத்து நவீன தீண்டாமைக்கு வழிவகுக்கக் கூடாது!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism