Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10

`உணவு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட வில்லை என்றால், உணவுப் பஞ்சம் உருவாகியிருக்கும்’ என்ற வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை இந்த வாசகம் இதுவரை உங்களை வந்தடையாவிட்டாலும் இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், கடந்த 60 ஆண்டுகாலமாக நமது உணவுமுறைகளை அடியோடு புரட்டிப்போட்ட வாசகம் இது.

செருப்பு வாங்குவதற்காக கடைக்குப் போகிறீர்கள். மலிவான விலையில் 10 செருப்புகளை வாங்குவீர்களா அல்லது விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஒரே ஒரு செருப்பை வாங்குவீர்களா? எந்தப் பொருளாக இருந்தாலும் எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என்பதுதான் அனைவருக்குமான கருத்து. இப்போது நாம் தெரிந்துகொள்ள இருப்பது செருப்பு, துடைப்பம், குப்பைக்கூடை போன்ற பொருட்களைப் பற்றி அல்ல; உயிர் வளர்க்கும் உணவைப் பற்றி.

நவீனத் தொழில்நுட்பங்கள் புகுத்தப் பட்ட எல்லா உணவுப்பொருட் களும் உற்பத்தியில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒரே ஓர் உணவுப் பொருள்கூட மனிதர்களுக்கான தரத்தில் இல்லை. உங்கள் உணவின் பெரும்பகுதியை நிரப்பும் அரிசிகள் உமி தீட்டப்பட்ட சக்கைகள். உணவு எண்ணெய்களோ, வேதிப் பொருட்களும் பெட்ரோலியப் பொருட்களும் சேர்க்கப்பட்ட திரவங்கள். காய்கறிகளும் கீரைகளும் புழுப்பூச்சிகள்கூட வாழத் தகுதியற்ற நிலத்தில் நஞ்சுகள் தெளிக்கப் பட்டு வளர்ந்த தாவரக் குப்பைகள். கறிக்கோழிகள் எல்லாம் முழுக்க முழுக்க வேதி மருந்துகளால் வளர்க்கப்பட்ட புதிய வகை உயிரிகள். நிலைமையைச் சற்று ஆழ்ந்து கவனித்துப்பாருங்கள்... நமது ஒட்டுமொத்த உணவுச்சூழலும் தனியார் நிறுவனங்களின் பிடியில் உள்ளது.

நீங்கள் உண்ணும் உணவின் உற்பத்தி முறையைப் பற்றிய எந்தத் தகவலும் உங்களுக்குத் தெரியாது. அந்த வகையில், கறிக்கோழிகளை வீட்டிலும் கடைகளிலும் வகைவகையாக உண்டு களிப்போரிடம் நான் பகிர்ந்துகொள்ள சில சேதிகள் உள்ளன.

`பிராய்லர் சிக்கன்' என அழைக்கப்படும் கறிக்கோழிகள், வளர்க்கப்படும்போது அவற்றுக்கு வழங்கப்படும் வேதிப்பொருட்கள், நஞ்சு கலந்த மருந்துகள், செலுத்தப்படும் ஊசிகள், தீவனத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு.

கறிக்கோழிகளை கிராமங்களில் அறிமுகம் செய்வதற்காக அதிகாரிகள் மேற்கொண்ட செயல்கள் எல்லாம், கற்பனைக்கு எட்டாதவை. அதிகாரிகள் பல குழுக்களாக கிராமங்களுக்குள் நுழைந்து, அங்குள்ள மக்களிடம் கறிக்கோழிகளின் `அருமை பெருமைகளை’ எடுத்துக்கூறி, அவர்களிடம் கறிக்கோழிக் குஞ்சுகளை இலவசமாகக் கொடுத்தனர். பின்னர், அந்த மக்கள் வீட்டில் இருந்த நாட்டுக்கோழிகளைப் பிடித்துவந்து ஏதேனும் ஒரு தனி இடத்தில் வைத்து, அழித்தனர்.

எவ்வளவு உன்னதமான பணி!

இவ்வாறு எல்லாம் பல வகைகளில் முயற்சி செய்து, நாட்டுக்கோழிகளை ஏறத்தாழ ஒழித்துக்கட்டின கால்நடைத் துறையும் அதன் துணை அமைப்புகளும். இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் அவர்கள் வைத்துக்கொண்ட அழகிய பெயர், ‘உணவுப் பாதுகாப்பு’. அதாவது, எல்லா மக்களுக்கும் கோழி இறைச்சி கிடைப்பதற்காக அவர்கள் செய்த `அரும்பணி’.

கிராமத்து மனிதர்களுக்கு, புரதமும் தெரியாது...வைட்டமினும் தெரியாது. ஆனால், படித்தவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இவை எல்லாம் விரல்நுனியில் இருக்கும் சேதிகள். `நாட்டுக்கோழிகளைவிட, கறிக்கோழிகளில்தான் அதிகச் சத்துகள் உள்ளன’ என்ற பரப்புரையை இப்போதும் செய்துவருபவர்கள் அதிகம் படித்தவர்கள்தான். இந்த இடத்தில் இரண்டு கேள்விகளை எழுப்புங்கள். இந்தக் கேள்விகளை இறைச்சிக் கடைக்காரரிடம், கறிக்கோழி வளர்க்கும் நிறுவனங்களிடம், அவற்றைப் பரிந்துரைக்கும் மேதைகளிடம் நீங்கள் கேட்கலாம்.

‘கறிக்கோழிகளின் வளர்ப்பில் பயன்படுத்தப் படும் தீவனங்கள், வேதிப்பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களின் பக்கவிளைவுகளை தமிழில் அச்சிட்டு கறிக்கடைகளில் ஒட்டிவைக்க முடியுமா?’ என்பவைதான் அந்தக் கேள்விகள். இவற்றுக்கு அவர்கள் நேரடியாக விடை தர மாட்டார்கள். மாறாக, ‘நாங்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் பாதுகாப்பானவைதான்’ என்ற கருத்தைச் சுற்றிவளைத்துச் சொல்வார்கள். கறிக்கோழிப் பண்ணைகளுக்குள் தாண்டவம் ஆடும் வேதிப்பொருட்கள், ஊசிகளின் பெயர்ப் பட்டியலையும் அவற்றால் விளையும் மிக மோசமான விளைவுகளையும் பட்டியலிட்டு எழுத முடியும்.

எனது விருப்பம், உணவைப் பற்றிய புரிதலை உங்களிடம் உருவாக்குவதுதான். கறிக்கோழி வளர்ப்பு என்பது, மக்களுக்கு உணவு தரும் புனிதச் செயல் அல்ல; மிகக் குறுகிய காலத்தில் அதிகமான பொருள் ஈட்டும் வேட்டைக் களம். ஒரு நாட்டுக்கோழி இயற்கையாக வளர்ந்தால், ஒரு கிலோ எடைக்கு வளர்வதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். இதுதான் கோழிகளின் இயல்பான வளர்ச்சி வேகம். கறிக்கோழிகள் முன்னர் எல்லாம் ஏறத்தாழ 100 நாட்களில் ஒரு கிலோ எடைக்கு வளர்க்கப்பட்டன. அந்த அளவுக்குச் செயற்கைத் தீவனங்கள் அவற்றுக்கு ஊட்டப்பட்டன.

ஓர் உயிரினம் இயற்கைக்கு மாறான வேகத்தில் வளர்க்கப்பட்டால், அது மிக மோசமாக நோய்வாய்ப்படும் என்பது விதி. மனிதர்களில் மிக அதிகமான எடைகொண்டவர்கள், நலம் குன்றியவர்களாக மாறுவதைக் கண்டிருப்பீர்கள். குறைந்தது, 180 நாட்களில் வளரவேண்டிய எடையை 100 நாட்களில் வளர்த்தால், அந்தக் கோழிகள் நோயுற்றுச் சாகவேண்டிவரும். இது அந்தத் தொழிலில் உள்ளோருக்கும் தெரியும். அவர்களைவிட, கால்நடை மருத்துவத் துறைக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். அவ்வாறு நோய்வாய்ப்பட்ட கோழிகளுக்கு எல்லாம் உடனடியாக எதிர் உயிரிகள் (ஆன்டிபயாடிக்ஸ்) செலுத்தப்பட்டன.

காய்ச்சலுக்கு ஆளான எந்த உயிரினத்துக்கும் இவ்வாறான மருந்துகள் கொடுத்தால், காய்ச்சலுக்குக் காரணமான கிருமிகள் முற்றிலும் அழிந்துபோவது இல்லை. மாறாக, அந்தக் கிருமிகளின் செயல்வேகம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கும். இது, நமது மரபுச் சிந்தனை அல்ல; நவீன மருத்துவச் சிந்தனை. அந்த வகையில், காய்ச்சலில் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு மருந்துகள் செலுத்தப்படும்போது, அவற்றின் உள்ளே இருக்கும் கிருமிகள் தங்கள் செயல் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அதே கோழிகளின் உடலில்தான் தங்கியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10

இந்தக் கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்போது, உங்களுக்கு இதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது. ஒரு லட்சம் கோழிகளில் சில நூறு கோழிகளுக்கு மட்டும் காய்ச்சல் வரலாம். அதற்காக எல்லா கோழிகளும் நோயுற்றவை எனக் கூறுவது மூடத்தனம் என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்கு எனது பணிவான பதில் என்னவெனில், ‘ஒரு கோடி கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டாலும், அத்தனை கோழிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தக் காய்ச்சல் மருந்துகள் புகட்டப்படுகின்றன’ என்பதுதான். இதன் மறுபக்கம் என்னவெனில், காய்ச்சல் தாக்காத அல்லது நோய்வாய்ப்படாத கறிக்கோழி என எதுவும் இல்லை என்பதுதான்.

பிறந்தது முதல் இயற்கையாகச் செத்துவிழும் வரை நோய் தாக்குதலே இல்லாத நாட்டுக் கோழிகள் ஓர் ஆயிரத்தை நம்மால் வளர்த்துக் காட்ட முடியும். அதுபோன்ற ஒரே ஒரு கறிக்கோழியைக்கூட இப்போது உள்ள தொழில்நுட்பத்தால் வளர்க்க இயலாது. ஏனெனில், எல்லா கறிக்கோழிகளும் மிகவும் செயற்கையான வேகத்துடன் வளர்க்கப்படுகின்றன. இந்த வேகத்தில் வளரும் உயிரினங்கள் நோயுற்றுத்தான் சாகும்.

அடுத்த தகவலை நீங்கள் கவனமாக உள்வாங்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பில் புதிய பல `சாதனைகள்’ இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது, ‘வெறும் 35 நாட்களில் 1.800 கிலோ எடைக்கு கோழிகளை வளர்க்கும் தொழில்நுட்பங்கள்’. ஆம், இப்போது நீங்கள் உண்டு மகிழும் கோழிகள் யாவும், வெறும் 35 நாட்களில் ஏறத்தாழ இரண்டு கிலோ எடைக்கு வளர்ந்தவை. 35 நாட்களில் இந்தக் கோழிகள் விற்றாக வேண்டும். அவ்வாறு விற்காவிட்டால், இந்தக் கோழிகளின் உடல்நிலை நலிவுறும். இதற்காக, கூடுதலாகத் தீவனங்களும் வேதி மருந்துகளும் தரப்படும்.
அதாவது, இந்தக் கோழிகள் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் இவற்றின் உடல் ரசாயனங்களால் நிரப்பப்படுகிறது. நீங்கள் வாங்கி உண்ணும் கோழி 45 நாட்கள் ஆயுள்கொண்டதாக இருந்தால், அது ஏறத்தாழ இரண்டரை கிலோ வளர்ந்திருக்கும். இந்த வளர்ச்சியை எட்டுவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களும் அதன் ஒவ்வொரு செல்லிலும் திணிக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கோழிகளைப் பற்றிய நியாயமான கேள்விகள் எழுப்பப்படாத மேலை நாடுகளில், மனிதர்களின் உடல் பருமன் மற்றும் சுரப்பிகள் சார்ந்த நோய்கள், கட்டுப்படுத்த இயலாத அளவுக்குச் சென்றுவிட்டன. நமது சமூகத்தைப் பாருங்கள். உடல் பருமனும், தைராய்டு உள்ளிட்ட சுரப்பிகளில் உருவாகும் நோய்களும் முன்னெப் போதும் இல்லாதவகையில் பெருகிவிட்டன.

நாட்டுக்கோழிகள் நோயுற்றால் வேம்பு, மஞ்சள் போன்ற மரபு மருந்துகள் அளிக்கப்படும். அந்த மருந்துகள்யாவும் மனிதர்களுக்குத் தீங்கு இழைக்காதவை. காய்ச்சல் சரியாகாமல்போனால் நாட்டுக்கோழிகள் செத்துவிழும். நமது மரபில் உடலின் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் மருந்துகள் மட்டும் தரப்படும். எதிர்ப்பாற்றலை வளர்க்கவே இயலாத நிலையில் உள்ள கோழிகள் செத்துப்போவது இயல்பானதுதானே!  அந்தக் கோழிகள் மனிதர்களுக்கு உணவாகும் தகுதியற்றவை அல்லவா!

கறிக்கோழிகளுக்குச் செலுத்தப்படும் வேதி மருந்துகள், நோயைத் தீர்ப்பது இல்லை. மாறாக, நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்துகின்றன. ஆகவே, கடைக்கு வரும் கோழிகளில் எது நோயுற்றது, எது நலமானது எனக் கண்டுபிடிக்கும் வாய்ப்பே இல்லை. செயற்கையான வேதிப்பொருட்களால் வளர்க்கப்பட்ட கோழியின் ஒவ்வொரு செல்லிலும் வேதி நஞ்சுக் கழிவு இருக்கும் என்பது ஒருபுறம்.

பெரும்பாலும் நோயுற்றுச் சாகும் நிலையில் இருக்கும் கோழிகளை நீங்கள் உணவாக உண்கிறீர்கள் என்ற கொடுமை மறுபக்கம். இந்த இரு பக்கமும் உங்களுக்குத் தெரிய வேண்டும். கறிக்கோழிகள் எல்லாமே ஊக்க மருந்துகளால்தான் இவ்வளவு விரைவாக வளர்கின்றன என்பது ஊரறிந்த சேதி. இந்த ஊக்க மருந்துகள், கோழியின் உடம்பை வளர்க்கும்... அதை உண்போரின் உடலுக்கு சத்துக்களை மட்டும் வழங்கும் என்பது அந்தத் துறையைத் தாங்கிப்பிடிக்கும் மேதைகளின் அறிவிப்பு. அறிவின்வயப்பட்டுச் சிந்திப்போருக்கு இவை எல்லாம் பாவங்களாகத் தெரியாது. ‘தொழில் வளர வேண்டுமானால் அல்லது நவீன அறிவியல் வளர  வேண்டுமானால் இவற்றை எல்லாம் தவிர்க்க இயலாது’ என தங்கள் தீர்ப்பை அவர்கள் எழுதிவிடுவார்கள்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10

நாம் மனச்சான்றுபடி சிந்திப்போம். இது நியாயம்தானா? நமது உணவு இவ்வளவு மோசமானதாகவும், வெளிப்படைத் தன்மைகளுக்கு வாய்ப்பே இல்லாத வகையிலும் இருக்க வேண்டுமா? நம் பிள்ளைகள் கறிக்கோழிகளை அதிகம் உண்கிறார்கள். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட வகையில் நம்புவதற்கு, இது என்ன அமுதமா? மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் உண்பது முறையற்ற பழக்கம் அல்லவா!

இந்த நிலையை மாற்ற முடியும். அதற்கு நீங்கள் உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். `செயற்கைத் தொழில்நுட்பங்களின் வழியாக வளர்க்கப்படும் எந்த உயிரினத்தையும் உணவாக்க மாட்டேன்’ என முடிவெடுத்துச் செயலாற்றுங்கள். விரைவில் நமக்கு நல்ல கோழி இறைச்சி வழங்கப்படும்.

‘அல்லவை நீக்கினால் நல்லவை பெருகும்’ என்பது படைத்தவரை உணர்ந்தோரின் மந்திரம்!

- திரும்புவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism