Published:Updated:

இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!
பிரீமியம் ஸ்டோரி
இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

அதிஷா, ஓவியம்: ரவி

இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

அதிஷா, ஓவியம்: ரவி

Published:Updated:
இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!
பிரீமியம் ஸ்டோரி
இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!
இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

னி வேறு பாதை... வேறு சாலை. ஆனால், இலக்கு அதுவேதான். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இரோம் ஷர்மிளா என்கிற இரும்பு மனுஷியின் 16 ஆண்டுகால உண்ணாவிரதம் முடிவுக்கு வந்திருக்கிறது. கின்னஸ் சாதனைக்காகச் செய்யப்பட்ட சாகசம் அல்ல இது. அறத்தின் திசையில் நின்று நீதியை வென்றெடுக்க முனைந்த ஒரு பெண்ணின் தீரச்செயல்.

கானல்நீரை விரட்டுகிற சிறுமியைப்போல, கடல் பச்சை வண்ணம் பூசப்பட்ட சிறிய அறையில்தான் உண்ணாவிரதம் இருந்தார் இரோம் ஷர்மிளா. அவருக்கு இந்திய அரசால் திரவ உணவுகள் குழாய்களின் வழி மூக்கின் மூலம் வலுக்கட்டாயமாகப் புகட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு, ஆண்டுதோறும் ஒருநாள் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்படுவார். இந்திய அரசு அவருடைய போராட்டத்தை ஒடுக்கவே முனைந்தது, அவருடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை.

இத்தனை ஆண்டுகளில் அவரை நிறைத்தது எல்லாமே ஆழ்ந்த தனிமை மட்டுமே. அவர் போராடியதும் இந்திய அரசுக்கு எதிராக மட்டும் அல்ல... அந்தத் தனிமைக்கு எதிராகவும்தான். செல்போனோ, தொலைக்காட்சியோ, இணையமோ, இதமாகப் பேசக்கூடிய இனிய மனிதர்களோ கூட இல்லாத ஒரு வாழ்வுக் காலம். அவருடைய அறையில் எப்போதும் கடிகாரம் இருந்ததே இல்லை.

இம்பாலின் போரோம்பட் காலனியில் 19 பேர் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. ஒன்பது பிள்ளைகளில் கடைக்குட்டி; அப்பாவின் செல்லக்குட்டி. பள்ளிகளில் அப்படி ஒன்றும் பிரமாதமாகப் படிக்கிற முதல் பெஞ்ச் பிள்ளை அல்ல. படிப்பில் பிடிப்பு இல்லை என்றாலும், பள்ளி செல்வது மிகவும் பிடிக்கும். காரணம், அவருடைய தந்தை. அப்பா இரோம் நந்தா கால்நடை மருத்துவமனையில் கம்பவுண்டர். இரோம் ஷர்மிளா விலங்குகளை நேசிக்கக் கற்றுக்கொண்டது அப்பாவிடம் இருந்துதான். பள்ளிக்குச் செல்ல வீட்டில் இருந்து நீண்டதூரம் செல்லவேண்டும். வழி எல்லாம் கதைகளைச் சொல்வார். அவற்றில் மணிப்பூர் போராட்டங்களில் மறைந்துபோன நாயகர்கள் இடம்பெறுவார்கள். அந்தக் கதைகள் இரோம் ஷர்மிளாவை ஆழமாகப் பாதித்தவை.

`ஒருநாள் தோழியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பாலத்துக்கு அருகே ரிக்‌ஷா ஓட்டும் மூவர் பேசிக்கொண்டிருந் தார்கள். அதில் ஒருவனுக்கு, பதினைந்து வயது இருக்கும். அவன் குளிருக்காக தன் முகத்தை ஒரு பழைய துணியால் மூடியிருந்தான். அந்தப் பக்கமாக ஒரு ராணுவ வண்டி வந்தது. அவர்களுக்கு அருகில் நின்றது. திடீரென முகத்தை மூடியிருந்த சிறுவனை ராணுவ வண்டியில் ஏற்றினார்கள்; பிறகு அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். அவனுடைய கதறல் அந்தப் பகுதி முழுக்க எதிரொலித்தது. சில நிமிடங்களில் அவனை அடித்துத் தூக்கி எறிந்துவிட்டு ராணுவத்தினர் கிளம்பிச் சென்றுவிட்டனர். அது என்னை பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது. `ஏன் இப்படி?’ என்ற கேள்வியும் உருவானது' என தன் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியை எப்போதும் நினைவுகூர்கிறார் இரோம் ஷர்மிளா.

இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்திரிகையாளராக ஆகவேண்டும் என விரும்பினார் ஷர்மிளா. அந்த ஆர்வத்தில்தான் அவர் பெண்ணுரிமை, மணிப்பூர் மோதல்கள் குறித்த கருத்தரங்குகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். ஹூவாயேன் லான்பாவோ என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தொடர்ந்து எழுதவும் செய்தார். 2000-ம் ஆண்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அமைப்பு ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார். போராட்டங்களில் கலந்துகொண்டு ராணுவத்தின் வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதுதான் அவர் வேலை.

இம்பாலில் இருக்கிறது மலோம் என்ற இடம். அங்கே 2000-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பேருந்து நிலையத்தில் காத்திருந்த 10 பேரை, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அசாம் ரைஃபிள் பிரிவினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 62 வயது ஒரு பெண்மணி, சினாம் சந்திரமணி என்கிற தேசிய வீரதீரச் செயல் விருதுபெற்ற இளைஞரும்கூட இருந்தனர். ஆனால், இந்தப் படுகொலைகளுக்காக ராணுவத்தினர் யாருமே கைதுசெய்யப்பட வில்லை; விசாரணை நடத்தப்படவில்லை. இந்த மனிதாபிமானமற்ற நிகழ்வு இரோம் ஷர்மிளாவை பெரிய அளவில் பாதித்தது. முதலில் இதற்காக அமைதிப் பேரணி ஒன்றை நடத்தவே ஷர்மிளா திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு அது போதாது எனத் தோன்றியது. படுகொலை நடந்தது ஒரு வியாழக்கிழமை. மணிப்பூரில் பெண்கள் விரதம் இருக்கிற நாள் அது. அன்றைய நாளில் இரோம் ஷர்மிளாவும் விரதம் இருந்தார். ஆனால், எல்லா பெண்களையும்போல அடுத்த நாளில் அவர் தன் விரதத்தை முடித்துக்கொள்ளவில்லை. அந்த விரதம் முடிய 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அரசுக்கு எதிராக ஒரு காட்டு யானையைப்போல வலிமையாக நின்றார் இரோம் ஷர்மிளா. அவருடைய மூக்குகளில் மாட்டப்பட்டிருந்த உணவுக்குழாய், ஷர்மிளாவின் நீண்ட போராட்டத்தின் அழிக்க முடியாத சின்னமாக மாறியது. அது மணிப்பூர் மக்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அடக்குமுறைக்கான சாட்சியாகவும் விளங்கியது.

இரோம் ஷர்மிளாவின் இந்த நீண்ட போராட்டத்தின் வீரியத்தைப் பற்றி விளங்கிக்கொள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டம் குறித்த புரிதல் சற்றே அவசியம். நீங்கள் சாலையில் செல்கிறீர்கள். நீங்கள் தீவிரவாதி என ராணுவம் சந்தேகிக்கிறது அல்லது நீங்கள் தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவர் என நினைக்கிறது. விசாரணை தேவை இல்லை; யாரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை. துப்பாக்கியை எடுத்து உங்கள் நெற்றிப்பொட்டில் வைத்துச் சுட்டுத்தள்ளலாம். உங்கள் வீட்டில் நுழைந்து வீட்டையே உடைத்துச் சோதனை நடத்தலாம். உங்கள் குடும்பத்தையே சிறையில் தள்ளலாம். யாருமே எதிர்த்துக் கேட்க முடியாது. இதுதான் AFSPA என்ற ஆயுதப்படை சிறப்புச் சட்டம். `தடா’,`பொடா’வைவிடவும் இது வலிமையானது; ஆபத்தானது. சட்டத்தை மீறுபவர்களை எந்தவித முன் அனுமதி இல்லாமல் சுட்டுக்கொல்லும் உரிமையை ராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகளுக்கும், இந்தச் சட்டம் வழங்கியிருக்கிறது. எத்தனையோ போராட்டங்கள் இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல எனத் தீர்ப்பளித்து, தனது ஒப்புதலை இந்தச் சட்டத்துக்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம். இதை எதிர்த்துதான் இப்போதும் இரோம் ஷர்மிளா போராடுகிறார்.

ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னர்போல இல்லை இன்றைய வடகிழக்கு மாநிலங்களின் நிலவரம். மணிப்பூர் இளைஞர்கள் பலரும் தென் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியிருக் கிறார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் மேற்படிப்பைத் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டின் பல கல்வி நிறுவனங்களும் அசாமிலும் மணிப்பூரிலும் `ஆள்'பிடிக்க ஏஜென்ட்களை நியமித்திருக்கின்றன. இன்னொருபுறம் ஏழை இளைஞர்கள் சொற்பச் சம்பளத்துக்கு இங்கே வேலைக்காகக் கிளம்பிவருகிறார்கள். சின்னச் சின்ன உணவங்களில் தொடங்கி பியூட்டி பார்லர்களிலும் கட்டட வேலைகளிலும், பனியன் கம்பெனிகளிலும் அவர்கள் தஞ்சம் அடைகிறார்கள். இத்தகைய சூழலில் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கான பொதுமக்கள் கவனமும் பங்களிப்பும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சுருங்கிவிட்டது. மணிப்பூர் மக்களுக்குத் தங்களின் வாழ்வாதாரத் தேவைகளும்... இருத்தலுக்கான போராட்டமும் வேறு என மாறிவிட்டது. முன்னர் வீரியமாகச் செயல்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள்கூட இப்போது வேறு விஷயங்களில் திசைமாறிப் போகத் தொடங்கிவிட்டன.

இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

இத்தகைய ஒரு மோசமான தருணத்தில், எந்த மக்களுக்காக இரோம் ஷர்மிளா இந்த நீண்ட தவத்தை மேற்கொண்டாரோ... அவர்களே ஷர்மிளாவை விமர்சிக்கவும் தொடங்கி
விட்டார்கள். குறிப்பாக அவருடைய காதல் வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் சமீபகாலமாக உச்சத்தை எட்டியது. ஷர்மிளாவின் காதலர் ஆங்கிலோ இந்தியர் டெஸ்மான்ட் கூட்டினோவை, கௌரவக்கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல்கள் விடுத்தனர். மணிப்பூர் மக்கள் இரோம் ஷர்மிளாவை ஒரு போராட்டக் கருவியாக மட்டும்தான் கண்டனர். ஆனால், அந்தக் கருவிக்கும் ஓர் இதயம் உண்டு என்ற உண்மையை யாருமே உணரவில்லை; அவருடைய காதலை யாருமே ரசிக்கவில்லை. அது எத்தகைய மனத்தாங்கலை இரோம் ஷர்மிளாவுக்கு உருவாக்கியிருக்கும்.
`என் போராட்டத்தையும் கருத்தையும் எதிர்ப்பவர்களைவிட, எனக்கு ஆதரவாக நிற்பவர்கள்தான் என்னை அதிகம் காயப்படுத்துகிறார்கள். நான் என் மக்களுக்காகப் போராடுகிறேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கையை நான் வாழவே கூடாது எனச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?’ என தனது சமீபத்திய பேட்டிகளில் வருத்தத்துடன் பேசியிருந்தார். ஓர் எளிய வாழ்க்கையை வாழ்வதற்கான ஏக்கத்தை, அவர் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.

வரலாறு முழுக்க தனி மனிதப் போராட்டங்கள் கவனஈர்ப்பை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன. சங்கரலிங்கனார் தொடங்கி சசிபெருமாள் வரைக்கும் பல முன்னுதாரணங்கள் உண்டு. இந்தத் தனிமனிதப் போராட்டங்களை மக்கள் போராட்டங்களாக மாற்றும்போதுதான், அவை உண்மையான தீர்வுகளை நோக்கி நகரும். மணிப்பூர் மக்களுடைய கடந்தகாலப் போராட்டங்களையே அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இரோம் ஷர்மிளா விஷயத்தில் நிகழாமல்போனது அதுவே.

`எனது போராட்ட பாணியை நான் மாற்றி ஆகவேண்டும். ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தைத் திரும்பப்பெறுதல் என்ற செயல்திட்டத்தை முன்வைத்து நான் தேர்தலில் போட்டியிடுவேன். நான் உயிருடன் இருக்கும்போதே எனது செயல்திட்டம் நிறைவேறுவதைப் பார்க்க விரும்புகிறேன்' என அவர் விளக்கம் அளித்திருக்கிறார். இது நிச்சயம் மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு. மணிப்பூர் விரும்புகிற வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான மாற்றம் இதுதான். ஜனநாயகப் பாதையில் செல்லத் தீர்மானித்திருக்கும் அவர் ஆங் சான் சூகியைப் போலவே அரசியல் அதிகாரத்தை எட்டி, லட்சியங்களை அடையவேண்டும்.

அதற்கு முன்பாக, இரோம் ஷர்மிளா இப்போதுதான் 44-வது வயதில் வாழத்தொடங்கியிருக்கிறார். அவர் இனியாவது தனக்காகவும் வாழட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism