Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

செய்யவே கூடாத பாவங்களைக்கூட, அன்றாட வேலையாகச் செய்வது இந்தக் காலத்து இயல்பாகிவிட்டது. உடலுக்கு சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) வேண்டும் என்பதற்காக மாடுகளின் வாழும் உரிமையையே ஒழித்துக்கட்டுவது, அத்தகைய பாவங்களில் ஒன்று. `பாலில் சுண்ணாம்புச்சத்து மிகுதியாக உள்ளது’ என்ற அறிவிப்பால், நாம் பெற்றவை சரிசெய்ய இயலாத நோய்கள்; இழந்தவையோ மீட்க இயலாத செல்வங்கள்.

கன்றுகளுக்கான பாலைச் சுரண்டாமல், மிகக் குறைவாக மட்டுமே பால் பீய்ச்சுவதுதான் நமது மரபு. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர், பால் அருந்தும் வழக்கம் மிகமிகக் குறைவாக இருந்தது. இப்போதுதான் லிட்டர்கணக்கில் பால் வாங்கும் பழக்கம் உள்ளது. அந்தக் காலத்தில், பாலை விலைக்கு விற்பதே பாவம் எனக் கருதினார்கள். நோயுற்றோருக்கு மருந்தாகவும், தவிர்க்க இயலாத சூழல்களில் தாய்ப்பாலுக்கான மாற்றாகவும் பால் பருகப்பட்டது.

தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்கள் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், நமது மரபில் இருந்த அறக்கொள்கைகளை எல்லாம் வீழ்த்திவிட்டு, மாடுகளுக்கு எதிரான எல்லா பாவங்களையும் நியாயப்படுத்திவிட்டது.

`எல்லோருக்கும் பால் உணவு’ என்பது அந்தப் புரட்சியின் மந்திரம். அதை உச்சரித்த வித்தகர்கள், பல்வேறு ஆய்வறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டார்கள். `ஒட்டுமொத்த சமூகத்திலும் சத்துக் குறைபாடு உள்ளது. எல்லோரும் அதிக அளவில் பால் பருகினால்தான் அந்தக் குறை நீங்கும்' என்றும் அந்த அறிக்கைகள் முழங்கின.

நமது சமூகத்தில் இருந்த பெரும்பாலான மாட்டு வகைகள், ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் அளவில்  மட்டும்  பால்  சுரக்கும்  தன்மைகொண்டவை. அந்தக் காலத்தில், மாடு வளர்ப்போர் அதிகமாக இருந்தனர்; பால் சுரப்பு அளவும் தேவைக்கு ஏற்ப இருந்தது. வெண்மைப் புரட்சியின் செயல் திட்டப்படி, ஒரு நாளைக்கு 20 லிட்டர் வரை சுரக்கும் மாட்டு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

அந்த மாடுகள் நம் ஊரில் உள்ள புற்களையும் புதர்களையும் மட்டும் மேய்ந்தால், நோயுற்றுச் செத்துவிழக்கூடியவை. ஆகவே, அவற்றுக்கான தீவன நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் தீவனங்களுக்காக மக்காச்சோளம் போன்ற அயல்நாட்டுப் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. காட்டில் கிடைக்கும் புற்களையும் வைக்கோலையும் மேய்ந்துவிட்டு, அற்புதமான உணவாகிய பாலைச் சுரந்துகொண்டிருந்த நமது பசுக்கள், முற்றிலும் ஒதுக்கித்தள்ளப்பட்டன. முழுக்க முழுக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே உண்டு வாழும் அயல் வகை மாடுகள் போற்றி வளர்க்கப்பட்டன.

`பால் சுரப்பு’ என்பது, இயற்கையாகச் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல். வெண்மைப் புரட்சி எனும் மாய நிகழ்வுக்குப் பிறகு, ‘பால் உற்பத்தி’ என்ற சொல் மிக நேர்த்தியாக நிலைநாட்டப்பட்டது. சீப்பு, உள்ளாடை, குப்பைக்கூடை போன்றவை உற்பத்தி செய்வதைப்போல பாலும் `உற்பத்தி’ செய்யப்பட்டது. எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைக்கப்படுகிறது. ஆனால், இவர்களோ பாலை `உற்பத்தி’ செய்கிறார்கள்.

இந்தச் சொல் மாற்றம் மிகக் கூர்மையானதுதான். ஏனெனில், இவர்கள் பசு எனும் உயிரினத்திடம் இருந்து பாலைப் பகிர்ந்துகொள்ளவில்லை; பசுவின் உடலில் இருந்து பாலைத் தயாரிக்கிறார்கள்.
இயற்கையாக பால் சுரப்பதற்கு, பசுவின் மடியைக் கன்று முட்டி மோதி ஊட்ட வேண்டும். பசுக்களைத் தடவிக்கொடுத்து, அவற்றோடு பேசிக்கொண்டே கன்றுகளை ஊட்டவைத்து, பால் சுரந்ததும் பீய்ச்சத் தொடங்குவது நம் மரபு.

இப்போது பால் சுரப்பதற்குக் கன்றுகளே தேவை இல்லை; பசுக்களின் கழுத்தில் ஓர் ஊசியைக் குத்தினால் பால் சுரக்கிறது. பாலைக் கறப்பதற்கு மனிதர்கள் தேவை இல்லை; இயந்திரங்களே போதும். `பசுவின் கழுத்தில் ஊசி, மடியில் இயந்திரம்’ இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். குப்பைக்கூளங்களை உறிஞ்சி எடுக்கும் இயந்திரம்போல, ஓர் உயிரினத்தின் மடியில் இயந்திரம் பாலை உறிஞ்சுகிறது. இதுதான் ‘பால் உற்பத்தி’ எனும் நவீனத்தின், விபரீதச் சொல்லாடலின் உண்மை முகம். உங்கள் மனதுக்கு இது நியாயமாகத் தெரிகிறதா?

எந்தப் பசுவும் இப்போது உடலுறவுகொள்வது இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபட்டு உயிர்கள் பெருக வேண்டும் என்பது படைப்பு விதி! இரு உயிர்கள் இன்பமாக இருந்தால், அங்கே மேலும் பல உயிர்களை அனுப்பிவைப்பதுதான் படைப்பவரின் குணம். நவீன மேதைகளின் பேராசைச் செயல்களால், மாடுகளின் உடலுறவு கொள்ளும் உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.

பசுக்களின் பிறப்புறுப்பில் விந்து ஊசிகளைச் செலுத்துவதுதான் வெண்மைப்புரட்சியின் புதிய தொழில்நுட்பம். வேதிப்பொருட்கள் அடங்கிய தீவனங்கள்தான் இப்போதைய மாடுகளின் உணவு. அவ்வப்போது செலுத்தப்படும் மருந்து ஊசிகள்தான் அவற்றின் உடல்நலப் பராமரிப்பு. காலையும் மாலையும் கழுத்தில் குத்தப்படும் ஊசிகள்தான் பால் சுரப்புக்கான தூண்டுதல். மடிக்காம்புகளை உறிஞ்சி எடுக்கும் இயந்திரங்கள்தான் இந்தக் காலத்துக் கன்றுக்குட்டிகள். பிறப்புறுப்பில் செலுத்தப்படும் விந்து ஊசிகள்தான் காளைகளின் ஆண்குறிகள்.

இவ்வளவுக்கும் பிறகு உற்பத்தி செய்யப்படும் பாலைத்தான் நீங்கள் பருகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு எல்லாம் உற்பத்திசெய்யப்பட்ட பால், பல நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டு, மேலும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, பல்வேறு `கலப்புகளும் சுத்திகரிப்புகளும்’ செய்யப்பட்டுத்தான் உங்களை வந்தடைகின்றன என்பதையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வீதியில் வாழ்ந்த பால்காரர் பாலில் நீர் கலந்தார் என்பதற்காகத்தான், பாக்கெட் பால் வகைகளைப் போற்றி வளர்த்தீர்கள். இப்போது பாலில் நீர் கலப்பது இல்லை; யூரியா உள்ளிட்ட வேதி நஞ்சுக்களைத்தான் கலக்கிறார்கள்.

இந்த இடத்தில் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில், ‘சுண்ணாம்புச்சத்து நிறைந்த பால் உற்பத்தி பொங்கி வழியும் இந்த நாட்டில், ஏன் எலும்புச்சிதைவு மற்றும் பற்சிதைவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுகிறது?’

ஒரே ஒரு தேநீர் வாங்கித் தருபவரைக்கூட நன்றியோடு பார்க்கும் கூலித் தொழிலாளர்கள்தான், மூட்டைகளைச் சுமக்கிறார்கள்; சாலைகளை வெட்டுகிறார்கள்; சாக்கடைகளை அள்ளுகிறார்கள். `சத்துக்களுக்காக’ பாலை உறிஞ்சி எடுக்கும் சமூகம் மூட்டுவலியுடனும் பல்வலியுடனும் நாட்களை நகர்த்திவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது மூடநம்பிக்கை அல்ல... உண்மையான அறிவியல். மிகக் குறைவான அளவு பால் அருந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் அளவுக்கு வலிமையுடன் இருந்தனர். விடிந்தது முதல் அடைவது வரை பால் பருகும் இந்தக் கால மனிதர்களோ, காலை மாலை நடப்பதைக்கூட பெரும் பயிற்சியாகச் செய்கின்றனர். காரணம், மிக எளிமையானதுதான்... வலுவான பசுக்கள் தரும் பால், வலுவான மனிதர்களை உருவாக்கும். எல்லா வகையிலும் துன்பத்தில் உழலும் பசுக்களின் பால், துன்பங்களைத்தான் தாங்கியிருக்கும். இதுதான் அறிவியல்; இதுதான் அறவியல்.

இந்த அறச் சிந்தனையை நிறுவனங்களால் ஒப்புக்கொள்ள இயலாது. ஏனெனில், பால் எனும் `பொருள்’ மீது பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் செய்கின்றன அந்த நிறுவனங்கள். பால் இப்போது உணவு அல்ல, வணிகப்பண்டம். மண்புழுக்களையும் பிள்ளைப்பூச்சிகளையும் கொலை செய்துவிட்டு விவசாயம் செய்தால் உணவு நஞ்சாகும். கோழிகளைத் துன்புறுத்தினால் இறைச்சி நஞ்சாகும். பசுக்களையும் காளைகளையும் வதைசெய்து பால் கறந்தால் அந்தப் பாலும் நஞ்சே!

மீண்டும் கூறுகிறேன்... இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும்,  கூடிவாழப் படைக்கப்பட்டவை. சக உயிரினங்களை வாட்டிவதைத்து உற்பத்தி செய்யப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனிதர்களுக்கு நன்மை தராது. மனித உடலில் மிகுதியான சுண்ணாம்புச்சத்து சேர்ந்தால், சிறுநீரகங்கள் சீரழியும் சூழல் உருவாகும். சில மணித்துளிகள் கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி எவ்வளவு சிறுநீரக நோயாளிகள் இருக்கிறார்கள்!

ஆண், பெண் ஆகிய இரு பாலினங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவதைக்கூட நவீன அறிவியல் தடுக்கும் என்றால், இதற்கான தண்டனையே கிடைக்காது என எல்லோரும் நம்புகிறீர்களா? வினைப் பலன் என்பது, கடவுளின் கணக்குப் புத்தகத்தில் எழுதப்படுவது அல்ல; நமக்கு நாமே எழுதிக்கொள்ளும் விதி. எந்தச் செயல் செய்தாலும் அதற்கான பலனை நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

ஓர் உயிரினத்தின் உணவு உண்ணும் உரிமை, உடலுறவு உரிமை, தான் ஈன்ற கன்றுக்குப் பால் கொடுக்கும் உரிமையை எல்லாம் மறுப்பது தீவினைகள்தான். இவற்றுக்கான பலன்களையும் இந்தச் சமூகம் அனுபவித்துக்கொண்டுதான் வருகிறது என்பது என் கருத்து.

ஆயம் என்ற சொல்லுக்கு, ‘கூடி வாழும் இடம்’ எனப் பொருள். ஆயர் என்றால், ‘கூடி வாழ்வோர்’ எனப் பொருள். ஆடு, மாடுகளின் பட்டியும், அவற்றை மேய்க்கும் மனிதர்களின் குடில்களும் ஒரே வேலிக்குள்தான் இருக்கும். ஆக, ஆயம் என்பது ஆடு, மாடு, மனிதர் ஆகிய மூன்று உயிரினங்களையும் சேர்த்துக் குறிக்கும் சொல். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயர்களாக வாழ்ந்துள்ளோம். மாடுகளையும் ஆடுகளையும் நமது குடும்ப உறுப்பினர்களாகத்தான் கருதி வாழ்ந்தோம்.

எருதுகள் பூட்டிய வண்டிகளை முல்லை நிலத்துப் பெண்கள் ஓட்டிச் சென்று, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களில் வெண்ணெய், தயிர் விற்றதாக சங்கப் பாடல்கள் குறிக்கின்றன. நமது ரத்தத்தில் பால் தொழில் ஊறியுள்ளது. ஆயிரக்கணக்கான மாடுகளை வளர்த்து, கன்றுகளுக்குக் கொடுத்து, நாமும் பால் பெற்று வாழ்ந்த காலம்தான் வரலாற்றில் நெடியது.

இப்போது நாமும் நன்றாக இல்லை; நம் கால்நடைகளும் நன்றாக வாழவில்லை. இந்த நிலையை மாற்ற இயலும். அயல்வகை மாடுகளின் பாலைப் பருகும் வழக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தரமான வெண்ணெய் விற்பனை செய்வோரைத் தேடிக் கண்டறியுங்கள். தனிப்பட்ட முறையில் பால் விற்பவர்களை ஆதரியுங்கள். அவர்கள் தரும் பால் தரம் இன்றி இருந்தால், அவர்களிடம் நேரடியாகப் பேசுங்கள்.

பால் கொள்முதலின் அளவைக் குறையுங்கள். வீட்டிலேயே தயிருக்கு உறை ஊற்றுங்கள். தனிப்பட்ட முறையில் வெண்ணெய் விற்பனை செய்வோரிடம், வெண்ணெய் வாங்கி வீட்டில் நெய் உருக்கிப் பயன்படுத்துங்கள். இந்த இரு வழக்கங்களையும் நீங்கள் கடைப்பிடித்தால், இந்தச் சூழலில் தலைகீழான மாற்றங்கள் உருவாகும். தேநீர் போன்ற பானங்களில் பால் சேர்த்துப் பருகுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நாட்டுப் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்கத் தொடங்குங்கள். பசுக்களை மட்டும் அல்ல நாட்டுக் காளைகளையும் பாதுகாக்க முன்வாருங்கள். முருங்கைக்கீரையையும் காயையும் ரசமாக வைத்து அன்றாடம் பருகினால், கிடைக்கும் சத்துகளுக்கு அளவே இல்லை.

நமது மரபில் எல்லா உணவுகளும் சத்துப் பெட்டகங்கள்தான். உணவுத் துறையில் உள்ள நவீனத் தொழில் நிறுவனங்களின் பிடியில் இருந்து நமது மரபு உணவுப் பழக்கங்களை மீட்டெடுத்தாலே, நிம்மதியான வாழ்க்கையை வாழ இயலும்!

- திரும்புவோம்...