Published:Updated:

ரியல் ஜோக்கர்ஸ்!

ரியல் ஜோக்கர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ரியல் ஜோக்கர்ஸ்!

மு.நியாஸ் அகமது

ரியல் ஜோக்கர்ஸ்!

மு.நியாஸ் அகமது

Published:Updated:
ரியல் ஜோக்கர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ரியல் ஜோக்கர்ஸ்!
ரியல் ஜோக்கர்ஸ்!

ரு திரைப்படமாகக் கடந்துபோகாமல், நம் உணர்வுகளுடன் உரையாடுகிறது ‘ஜோக்கர்’. இந்தப் படம், நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் ஒன்று, நாம் எப்போதும் நமக்காக உழைக்கும், பேசும், போராடும் மனிதர்களைப் பற்றியது. இந்தத் திரைப்படத்தின் மொழியிலேயே கூறவேண்டும் என்றால், ‘ரியல் ஜோக்கர்ஸ்’ குறித்தானது.

நாம் பலமுறை நமக்காகப் பேசும் மக்களை, களத்தில் நிற்கும் செயற்பாட்டாளர்களை, எள்ளி நகையாடியுள்ளோம்; கொச்சைப்படுத்தி இருக்கிறோம்; தனித்து விட்டிருக்கிறோம். உண்மையில், அந்த ‘ரியல் ஜோக்கர்ஸ்’ என்ன நினைக்கிறார்கள்?

ரியல் ஜோக்கர்ஸ்!

ரமேஷ் கருப்பையா (வயது 38):

அரியலூர் மற்றும் பெரம்பலூர், சிமென்ட் உற்பத்திக்காக சூழலியல் வன்புணர்வுக்குள்ளான பகுதி. அந்தப் பகுதியில் சூழலியல் சார்ந்த பிரச்னைகளிலும், பெரும் நிறுவனங்களுக்கு எதிராகவும் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர் ரமேஷ் கருப்பையா. கடந்த ஐந்து வருடங்களாக தீவிரமான போராட்டக்களத்தில் இருப்பவர். மக்களை ஒன்றுதிரட்டுவது கடினம் எனச் சொல்லப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், 1,000 பேரைத் திரட்டி ஓர் ஊரணியை மீட்க முயற்சி எடுத்தவர். பெரும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக என்ன கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தாலும், அங்கு இருப்பார். எதற்கும் அஞ்சாமல் தன் கருத்தைப் பதிவுசெய்வார்.

“மக்கள் நலனுக்காகப் போராடுவதாகச் சொல்லும் பல தலைவர்கள், மக்களை ஏமாற்றி ‘ஜோக்கர்’ ஆக்கியிருக்கிறார்கள். அதனால்தான் இப்போது மக்கள், அவர்களுக்காக உண்மையாகப் போராடுபவர்களை ஒன்று ஏமாற்றுக்காரர்களாகப் பார்க்கிறார்கள் அல்லது ஜோக்கர்களாகப் பார்க்கிறார்கள். மக்கள் மீது தவறு இருப்பதாக நான் என்றுமே நினைத்தது இல்லை. அவர்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான், நம்மை நகைப்பது. அவர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும். நம் கருத்தைத் திணிக்காமல், அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனை களையும் பெறவேண்டும். அவர்களுக்காக உண்மையாக உழைக்கிறோம் என்கிற நம்பிக்கையைப் பெற வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக நடக்காது. அது ஒரு நீண்ட செயல்பாடு. அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வரைதான் நம்மை ஜோக்கராகத்தான் பார்ப்பார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், நாம்தான் அவர்களுக்குக் கதாநாயகர்கள்” என்கிறார் ரமேஷ் கருப்பையா.

பாலசுப்பிரமணி தர்மலிங்கம் (வயது 34):

புது அலை செயற்பாட்டாளர் பாலசுப்பிரமணி. 22 வயதில் மென்பொறியியல் பணியில் சேர்ந்து, அதில் பல உச்சங்களைத் தொட்டவர். சிறிது காலம் அமெரிக்காவிலும் பணியில் இருந்தார். நான்கு வருடங்களாக தர்மபுரி பகுதியில் சூழலியல், கல்வி ஆகிய தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இவரது முன்முயற்சியில் புனரமைக்கப்பட்டது தான் தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி. இப்போது 200 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் தேங்கும் இடமாக இருக்கும் அன்னசாகரம் ஏரியைப் புனரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

“இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். அது எனக்கு எல்லாம் வழங்கியது. பணம், அதிகாரம், அமெரிக்கப் பயணம் என எல்லாம் கிடைத்தன. ஆனால், நிம்மதி இல்லை. ஒருநாள் வேலையே கொடுங்கனவாக மாறியது. அதனால், ஒரு நன்னாளில் அந்த வேலையை விட்டுவிட்டு ஊர் திரும்பினேன்.

ரியல் ஜோக்கர்ஸ்!

பிறகுதான் தெரிந்தது, ஊரின் நிலையும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எனக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும். அப்படியானால், ஊர் மாற வேண்டும். மோசமான நிலையில் இருக்கும் ஏரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வழிப் பாதைகள் என எல்லாம் புனரமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், நான் எதைத் தேடி என் ஊருக்கு வந்தேனோ, அது கிடைக்கும். அதற்காக வேலை பார்க்கிறேன்.

சின்ன வயதில் நானும் சமூகச் செயற் பாட்டாளர்களைக் கிண்டல் செய்தவன்தான்... ஆதிக்கச் சிந்தனையில் அவர்களை அணுகியவன்தான். அதனால், என்னையும் மக்கள் ஏளனமாகப் பார்க்கும்போது வருத்தமோ, கோபமோ வந்தது இல்லை. கிண்டல் செய்தபோது எல்லாம் தீவிரமாக உழைத்து இருக்கிறேன். பரிகாசம்செய்யும் மக்களுக்கு ஒரு வெற்றியைக் காட்ட வேண்டும். அப்போது, அவர்களும் இணைவார்கள் என நினைத்தேன்... அது நிகழ்ந்தது.

முதலில் குடும்பம் இதை `முட்டாள்தனமான முடிவு' என்றது. என்னை ஏதோ தோல்வி யுற்றவனாகப் பார்த்து அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள். பிறகு, நான் இந்த வாழ்வில் மகிழ்வாக இருப்பதைப் பார்த்து, ஒருகட்டத்தில் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.''

முகிலன் (வயது 49):

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பிரச்னை என்றாலும், அங்கு முதல் ஆளாகப் போய் நிற்பார் முகிலன். 1980-களில் ஈழப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, போராட்டக்களத்துக்கு வந்தவர், இன்னும் உயிர்ப்புடன் போராடி வருகிறார். `செயற்பாட்டாளராக இருப்பதுதான் மனநிறைவைத் தருகிறது' என்று, தான் பார்த்துவந்த பொதுப்பணித் துறை வேலையைத் துறந்தவர். இப்போது கரூர் பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக, தீவிரமாகப் போராடுகிறார்.

“என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. இது சாத்தியமானது, நிச்சயம் என் குடும்பத்தாரால் மட்டும் அல்ல; அதற்கு பல சமூகக் காரணிகளும் இருக்கின்றன. இதை எல்லாம் பெற்றுத்தந்தது, முந்தைய தலைமுறைச் செயற்பாட்டாளர்கள். அவர்களுக்கு நான் எப்படி நன்றி செலுத்துவது? மக்களின் நலனுக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு நன்றி செலுத்த முடியும். அதைச் செய்யாமல் இருப்பது அயோக்கியத்தனம். ஜோக்கராக இருக்கலாம். ஆனால், அயோக்கி யனாக இருக்கக் கூடாது” என்கிறார் முகிலன்.

நித்யானந்த் ஜெயராமன் (வயது 49):

பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைப் பாழ்படுத்திவிட்டு, பலநூறு மக்களை ஊனப்படுத்திவிட்டு, கொடைக்கானலை தன் கொடூரமான கரங்களால் கீறிவிட்டு, எந்த இழப்பீடும் வழங்காமல் தப்பிச் சென்ற யுனிலீவரைப் பணியவைத்ததில் நித்யானந்த் ஜெயராமனுக்கு முக்கியப் பங்கு உண்டு. இப்போது எண்ணூர் அனல்மின் நிலையத்துக்குக் கரி எடுத்துச் செல்ல கன்வேயர் அமைப்பதற்காக, அங்கே கொசஸ்தலை ஆற்றை மறித்து எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்படும் சாலைப் பணிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிவருகிறார்.

“நான் அமெரிக்காவில் ஊடகவியல் படித்துவிட்டு, சர்வதேசப் பத்திரிகைகளில் வேலைபார்த்தேன். அங்கே மக்களுடன் உரையாடும்போது, அவர்கள் எழுப்பிய கேள்விகள்தான் என்னை ஒரு  செயற்பாட்டாளராக மாற்றியது. வெறும் பிரச்னைகளை ரிப்போர்ட் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஜனநாயகம் உண்மையாக வலுப்படுவது, அரசு என்ன சொல்கிறதோ, அதற்குக் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்பவர்களால் அல்ல... அதைக் கேள்வி கேட்பவர்களால்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, ‘அமைதியா இருங்க... அரசு சொல்றதைக் கேட்டுக்கங்க’ என்பதுதான் இந்தியக் கலாசாரமாக இருக்கிறது. இதைத்தான் நம் பள்ளிகளும் சொல்லித் தருகின்றன. அதனால்தான் மக்களுக்காகப் பேசுபவர்கள், போராடுபவர்கள் ஜோக்கர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இது, நிச்சயம் மக்களின் பிழை அல்ல.

நாம், அவர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும்; அநீதிகளை விளக்க வேண்டும். அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றால், நிச்சயம் நம்மை ஜோக்கர்களாகப் பார்க்க மாட்டார்கள்” என்கிறார் நித்யானந்த்.

ரியல் ஜோக்கர்ஸ்!

பாரதி கண்ணன் (38):

10  வருடங்களாக, தமிழகப் போராட்டக்களத்தில் இருப்பவர் பாரதி கண்ணன். கல்லூரிக் காலத்திலேயே மாணவர்களைத் திரட்டி, தனியார் கல்லூரிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கக் காரணமாக இருந்தவர். தொடர்ந்து மிதிவண்டிப் பயணம் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு மக்களுக்கு மாற்று அரசியல் குறித்தும், அரசின் தவறான கொள்கைகள் குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தி இருப்பவர்.

“வில்லனாக இருப்பதைவிட ‘ஜோக்கர்’ஆக இருப்பதில் தவறு இல்லைதானே? நிச்சயம் பல உதாசீனங்களைச் சந்தித்திருக்கிறேன். வீட்டில் உள்ளவர்களே, ‘இவன் பிழைக்கத் தெரியாதவன்’ என்று பேசி இருக்கிறார்கள். திருடனாக இருப்பதைவிட பிழைக்கத் தெரியாதவனாக இருப்பது மேல்தான்.

தமிழகத்தில், பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறேன்; பல ஆயிரம் மக்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்களுடன் பேசியதை வைத்துச் சொல்கிறேன், செயற்பாட்டாளர்களை `ஜோக்கர்களாக' மக்கள் பார்ப்பது எதுவும் தற்செயலானது அல்ல. அதன் பின்னால் ஒரு நுண்ணரசியல் இருக்கிறது. சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தும் அரசியல் அது. ‘எது எக்கேடு கெட்டா என்ன... நீங்க வாழ்றதுக்கான வழியைப் பாருங்க!’ என்கிறார்கள். மக்களும் அதுதான் சரி என நினைக்கிறார்கள். என்னிடம் ஓர் எளிய கேள்வி இருக்கிறது. அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள், `எல்லாம் கேடு கெட்டுருச்சுன்னா... நீங்க மட்டும் எப்படி நிம்மதியா வாழ முடியும்?' என்று அர்த்தமான கேள்வியை எழுப்புகிறார் பாரதி கண்ணன்.

இங்கு இருப்பவர்கள் சாம்பிள்கள் மட்டுமே. வீதியெங்கும் இதுபோன்ற ரியல் ஜோக்கர்கள் இருக்கிறார்கள். நம் தெரு சரியாக, நம் வீட்டுக் குழாயில் தண்ணீர் வர, நாம் இரவில் கொசுக்கடி இல்லாமல் தூங்க இந்த ரியல் ஜோக்கர்கள்தான் காரணம். ஆம், அவர்கள் ஜோக்கர்கள்தான். மகிழ்ச்சியைத் தருபவன்தான் ஜோக்கர் என்றால், நம் தலைமுறையும் அடுத்த தலைமுறையும் மகிழ்ந்திருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் ஜோக்கரே!