Published:Updated:

அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!
அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!

வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!

“இதோ... இந்த நடை பாதையிலதான் நாங்க படுத்திருப்போம். மழை வந்தா, ஏதாவது கடைக்குக் கீழே ஒண்டிக்குவோம். திடீர்னு போலீஸ்காரங்க வந்து அடிச்சுத் துரத்துவாங்க. அப்பா, பெரும்போதைக்காரர்; என்னோட சின்ன வயசுலேயே செத்துட்டார். அப்பா இறந்த பிறகு, அம்மாவும் போதைக்கு அடிமையாகிட்டாங்க. சிக்னலுக்கு சிக்னல் நின்னு `அம்மா... அய்யா..!'னு கையேந்தி வாங்கியாற காசுல எங்களுக்குச் சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ, அம்மாவுக்கு சரக்கு வேணும். ஒரே ஒரு சொக்கா தான். அதுலயும் ஏகப்பட்ட தையல். பிறந்ததுல இருந்து முடியே வெட்டினது இல்லை. `இப்படி எல்லாம் இருந்தாத்தாண்டா இரக்கப்பட்டு காசு தருவாங்க'னு அம்மா சொல்லும். இந்த வாழ்க்கையில இருந்து மீண்டு, வெளியில வருவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை'' - கண்களில் நீர் ததும்பப் பேசுகிறார் ஜெயவேல்.

50 வருடங்களுக்கு முன்னர், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த குடும்பம் ஜெயவேலுவுடையது. குழந்தைகளைப் பிச்சை எடுக்கச்செய்து குடிப்பதுதான் பெரும்பாலான பெரியவர்களின் தொழில். நாட்டின் குடிமக்கள் என்பதற்கான எந்த அத்தாட்சியும் இவர்களிடம் இல்லை. இப்படி ஒரு சமூகம் இருப்பதாக, அரசின் எந்தப் பதிவேட்டிலும் பதிவுகள் இல்லை. நீண்ட முடி வளர்த்து, கசங்கிக் கிழிந்த உடைகளை அணிந்து, குழந்தைகளை அகோரமாக்கிப் பிச்சை எடுக்கவைத்து, அன்றைய நாளின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியையுமே இலக்காகக்கொண்டு வாழும் இந்தச் சமூகத்தில் பிறந்த ஜெயவேல், இன்று லண்டன் கிளிண்ட்வர் யுனிவர்சிட்டியில் (Glyndwr University) ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் முடித்திருக்கிறார். அடுத்தகட்டப் படிப்புக்காக, இத்தாலிக்குப் பயணமாகும் பரபரப்பில் இருக்கிறார்.

இவரின் அம்மா லட்சுமிக்கு, சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை பிளாட்பாரம்தான் இப்போதும் வீடு. தன் வாழ்நாள் உடைமையான ஒற்றைப் பையை தலைக்கு வைத்துக்கொண்டு, கிழிந்த பாயில் படுத்திருக்கிறார். தன் மகன் எட்டிப் பிடித்திருக்கும் உயரம் பற்றி எதுவும் அந்தத் தாய்க்குத் தெரியவில்லை.

ஜெயவேலின் வாழ்க்கையை மாற்றியவர் உமா. `சிறகு' என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தும் இவர், குழந்தைத் தொழிலாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறார். ஓர் ஆவணப்படம் எடுப்பதற்காக வந்த இடத்தில் ஜெயவேலுவைப் பார்த்த உமா, அவரை தன் அமைப்பின் மூலம் தத்தெடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்.

``நாடோடி சமூகமான எங்க மக்களுக்கு, சோறும் சாராயமும் கண்ட இடம் சொர்க்கம். குழந்தைகளைப் பிச்சை எடுக்கவைக்கிறதுதான்  வாழ்வாதாரம். எனக்கு முன்னாடி யாரும் ஸ்கூல் வாசலைக்கூட மிதிச்சது இல்லை. எனக்கு மூணு அக்கா, ஒரு தம்பி. அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும். அயனாவரம் வாட்டர் டேங்க் பக்கத்துல ரோட்டோரத்துல இருந்தோம். பக்கத்துல இருக்கும் சிக்னல்ல நின்னு, வர்றவங்க...போறவங்ககிட்ட காசு கேட்பேன். கிடைச்ச காசை அம்மாகிட்ட கொடுத்தா, `போயி, சாராயம் வாங்கிட்டு வா'னு அனுப்பும்.

அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!

எங்க மக்களைப் பத்தி  ஏதோ படம் எடுக்கிறோம்னு உமா மேடம் வந்தாங்க. எங்க ஆளுங்க எல்லாம் சேர்ந்து அவங்களை விரட்டினாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்தி, எங்ககூடவே தங்கி, வீடியோ எடுத்தாங்க. எங்க வாடை பட்டாலே முகம் சுளிக்கிற மனுஷங்களைத்தான் நாங்க பார்த்திருக்கோம். ஆனா உமா மேடம், எங்களை அவங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய் சாப்பாடு கொடுத்தாங்க. எங்க மக்களுக்கு அவங்க மேல பெரிய மரியாதை வந்தது.

அவங்கதான் என்னை ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. அதுவும் தனியார் பள்ளி. கிழிஞ்சுபோய் அழுக்குப் படிஞ்ச டவுசரோட, பரட்டைத்தலையோட அலைஞ்ச எனக்கு, முடிவெட்டி, ஷூ, சாக்ஸ், டை எல்லாம் போட்டு, ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டாங்க. என்னைப் பார்த்து என் தம்பியும் ஸ்கூலுக்கு வந்தான். அம்மாவுக்கு, நாங்க ஸ்கூலுக்குப் போறது பிடிக்கலை. சிக்னலுக்குப் போகச்சொல்லி விரட்டும். உமா மேடம் தேடி வர்றப்போ, ரெண்டு பேரையும் ஒளிச்சுவெச்சுடும். ஒருநாள் உமா மேடம் வந்து, என்னை அவங்க வீட்டுக்கே தூக்கிட்டுப் போயிட்டாங்க'' என, சின்னச் சிரிப்புடன் பேசுகிறார் ஜெயவேல்.

``நான் ஜெயவேலுவை `அந்நியன்'னுதான் அழைப்பேன். `ஸ்லுக்குப் போறியாடா?'னு கேட்டவுடனே, `போறேன்'னு சொல்லி, என்கூட ஒட்டிக்கிட்டான். ஆனா, அவன்தான் அந்தக் குடும்பத்தோட வாழ்வாதாரம். அப்பா, அம்மா யாரும் வேலைக்குப் போறது இல்லை. அவங்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே இல்லை. குழந்தைகள் இயந்திரம் மாதிரி... அவங்களை எதற்காகவும் இழக்க விரும்ப மாட்டாங்க. முதல் வேலையா, ஜெயவேலுவைத் தூக்கிக்கிட்டு வந்து என் கூடவே வெச்சுக்கிட்டேன்.

அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!

அவனைப் பார்த்து மத்த பிள்ளைகளும் படிக்க வரும்கிற எண்ணத்துலதான் அப்படிப் பண்ணினேன். ஜெயவேலும் ரொம்ப ஈடுபாட்டோடு படிச்சான். மதிப்பெண்ணை இலக்கா வைக்காம, வாய்ப்புகளையும் அதை எட்டிப்பிடிக்கும் வழிமுறைகளையும் கத்துக்கொடுத்தோம். ஜெயவேலுவோட தம்பி ஆறுமுகமும் இங்கேதான் படிச்சான். ஆனா, அவங்க அம்மா சண்டைபோட்டு அவனைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. ஜெயவேலுவை, நான் அனுப்ப மறுத்துட்டேன். அவனுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு, அப்பப்போ போய் அம்மாவைப் பார்த்துட்டு வருவான்.

பத்தாம் வகுப்புல கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினான். ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு எழுதினான். ஆங்கிலம், கணிதப் பாடங்களில் ரொம்பத் திறமையா இருந்தான். ஜெயவேலு ப்ளஸ் டூ முடிச்சதும், ஜப்பான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்துல 100 சதவிகித உதவித் தொகையோடு என்விரான்மென்டல் சயின்ஸ் படிக்கவும், சுவிட்சர்லாந்துல இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் எலெக்டிரிக்கல் படிக்கவும் வாய்ப்பு வந்தது. அவனுக்கு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்பதுதான் கனவு. அதுக்காக, வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துட்டு, லண்டன் கிளம்பிட்டான். முழுத்தொகையையும் `சிறகு' அமைப்பே கல்விக்கடனாக வழங்கியது. `உன்னோட மக்களை மாத்தணும்னா, நீ வெளிநாட்டுக்குப் போய் படிச்சு, உயர்வான வேலைக்குப் போகணும்'னு சொல்வேன். அதை முழுசா உள்வாங்கிக்கிட்டு, இப்போ பெரிய உயரத்துக்கு வந்திருக்கான் ஜெயவேல்'' எனப் பெருமிதம்கொள்கிறார் உமா.

“நான் வளர வளர, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. எல்லாமே எனக்குப் புதுசா இருந்தது. `நான் எல்லாம் வெளிநாடு போய் படிக்க முடியுமா?'னு மனசுக்குள்ள கேள்வி... `தைரியமா கிளம்பு!'னு சொல்லி அனுப்பிவைச்சாங்க. லண்டன்ல, மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்யலாம். கிட்டத்தட்ட மாதம் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதை வெச்சு சாப்பாடு, தங்கும் செலவைச் சமாளிச்சேன். புராஜெக்ட்ல வித்தியாசமான ஒரு காரைத் தயாரிச்சேன். பெட்ரோல், டீசல், சோலார்னு வெளியில் இருந்து வர்ற எந்த எனர்ஜியும் இல்லாம, டயரோட ரொட்டேட்டிங் எனர்ஜியில் 24 மணி நேரமும் ஓடக்கூடிய கார். அதை இன்னும் மேம்படுத்தணும். இப்போ இத்தாலியோட டாப் ரேங்கிங் யுனிவர்சிட்டியான டோரினா யுனிவர்சிட்டியில் முழு உதவித்தொகையோடு படிக்கப்போறேன்.

எங்க சமூகத்துல எனக்குப் பிறகு நிறையப் பசங்க, படிக்க ஆரம்பிச்சிருக்காங்க; பிச்சை எடுக்கிறதை விட்டுட்டாங்க. அதே சிக்னல்ல இப்போ புத்தகங்கள், துணிகள்னு விற்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப் பேர் ஆட்டோ ஓட்டுறாங்க. எனக்கு இன்னொரு கனவும் இருக்கு. அம்மா இன்னைக்கும் ஒரு துணிமூட்டையைத் தலைக்கு வெச்சுக்கிட்டு பிளாட்பாரத்துலதான் படுத்துக்கிடக்கு. காலம் கைகூடும்போது, ஒரு வீடு கட்டி அம்மாவை அங்கே கூட்டிக்கிட்டுபோய் வெச்சுக்கணும்'' என்னும் ஜெயவேலுவின் கண்கள் முழுக்கக் கனவுகள்.

நல்லது நடக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு